Friday, January 18, 2019

மறுப்பக்கம்

மறுப்பக்கம்
காலை வெயில் உடம்பிற்கு நல்லதாம். எல்லோரும் கூவினார்கள் கேட்கவில்லை. டாக்டர் சொன்னவுடன் வேறு வழியின்றி நேற்று காலை வீட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு ,என் உப்பரிகையை விட்டு கீழே இறங்கிச் சென்றேன். வெயில் கண்களை கூசும் அளவிற்கு சுல்லென்று அடித்தது. கையில் இருந்த கைதொலைப்பேசியை தடவியபடியே அங்கும் இங்குமாக மெதுவாக நடந்து கூலியில்லாமல் வெய்யிலின் சேவையை பெற்றுக்கொண்டேன். இந்த ஞானோதயம் முன்னமே வந்து இருந்தால் வலியில் இருந்து தப்பித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என தோன்றியது. வலி வந்த பின் சூரிய நமஸ்காரம். எட்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி வர அலுப்பு. அது மட்டுமா, சிங்கப்பூர் வெயில் காலை வெயிலாக இருந்தாலும் கொளுத்தி எடுத்துவிடும். இதற்கு பயந்தே இறங்கமாட்டேன்.
வெய்யிலில் நடந்தபடியே போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். காலையில் எல்லோரும் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். நானோ வேளை வெட்டி இல்லாதவள் போல் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்தேன். முடித்துவிட்டு வீடு திருப்பினால் அங்கு மலைப்போல் வேலை எனக்காக கைவிரித்து காத்துக்கிடக்கும். அருகில் இருந்த புள்வெளியில் ஒரு அழகாக சிறிய குருவி ஒன்று புற்களுக்கிடையே தன் காலை உணவை தேடிக்கொண்டிருந்தது. இப்படியும் அப்படியுமாக கொத்தி கொத்தி எதையோ சந்தோஷமாக தின்றுக்கொண்டிருந்தது.
அப்பொழுது ஒரு கருப்புவெள்ளை பூனை பதுங்கி பதுங்கி புல்லோடு புல்லாக மெதுவாக வந்து சிறிது தூரத்தில் அமர்ந்தது. நல்லா கொழு கொழு என்று இருந்தது. நம்மைப்போலவே பூனைக்கும் வெய்யில் தேவை படுகிறது போல என்று நினைத்துக்கொண்டே நான் குருவியையும், புனையையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். மெதுவாக அந்தப் பூனை நகரத்துவங்கியது. இதை கவனிக்காத குருவி தன் வயிற்றை நிரப்புவதில் குறியாய் இருந்தது. இந்த காட்சியை நான் கைதொலைப்பேசியில் படம் பிடிக்க முயன்றேன். என் மூளைக்கு தெரிந்தது, ”ஆஹா இந்த பூனை குருவியை பிடிக்கத்தான் இப்படி மெதுவாக நகர்கிறது என்று”. கண் இமைக்கும் நேரத்தில் தாவி அந்த குருவியை அப்பூனை கவ்வியது. அடுத்த நொடி அப்புல் தரையில் சில உதிர்ந்த இறகுகளே கிடந்தன. குருவியை கவ்விய பூனை நொடிப்பொழுதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அடியில் சென்று எங்கோ மறைந்து போனது.
உதிர்ந்து கிடந்த இறகுகளை பார்த்த எனக்கு மனம் பட பட என அடித்துக்கொண்டது. நான் ஏன் இப்படி முட்டாள் போல் நடந்து கொண்டேன்? அப்பூனை குருவியைத்தான் பிடிக்க வருகிறது எனத்தெரிந்தும் ஏன் நான் குருவியை விரட்டாமல் அந்த நிகழ்வை படம் பிடிக்க முயன்றேன்? ஒருவேளை அந்த பூனையினால் அக் குருவியை பிடிக்க முடியாது என்ற குருட்டு நம்பிக்கையா? அல்லது என்னுள் இருந்த மனிதம் மறைந்து ஓர் உயிர் போகப்போவதை ரசிக்கும் அரக்க உணர்வு மேலோங்கியதா? இது தான் என் மறுபக்கமோ? அப்பூனையின் முயற்சி தோல்வியுரும் என்றே என் அடிமனதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். அதன் திறனை குறைத்து எடைப்போட்டது என் முட்டாள்தனம். என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. அந்த குருவின் உயிர் போனதற்கு நானும் ஓர் காரணம் ஆகிவிட்டேன்.என் பாவ மூட்டையில் மேலும் சுமையை அறிந்தே ஏற்றி விட்டேன்.
மனதில் குற்ற உணர்வுடனும், அநுதாபத்துடனும் கார்களுக்கு அடியில் குனிந்து பார்த்தேன். தன் காலை விருந்தை எடுத்துக்கொண்டு எங்கு போய் மறைந்ததோ அந்த பூனை? ஒரு வேளை தன் குட்டிகளுக்காக வேட்டை ஆடியதோ தெரியவில்லை. அப்படி என்றால் ஓர் தாயாக அதன் செயல் மன்னிக்கப்படலாம். ஆனான் கண் முன்னே ஓர் உயிர் போகப் போவதை தடுக்க முயலாத நான் ??? என் மனசாட்சியே என்னை மன்னிக்காத பொழுது வேறு எங்கு சென்று நான் மன்னிப்பு கேட்பது? என் தலைக்கு மேல் உயர சொர்க்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அக்குருவியின் ஆன்மாவிடம் மன்னித்து விடு என்று கேட்பதை தவிர வேறு வழி தெரியாமல் கனத்த மனதுடன் நான் எட்டாம் மாடிக்கு மின் தூக்கியில் உயர போனேன்.மனம் மட்டும் கீழே கிடந்த உதிர்ந்த சிறகுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது.......

No comments: