நான் புத்தன் அல்ல!!
இரண்டு நாட்களுக்கு முன் விசாக தினம் வந்தது. நம்முடைய விசாக நட்சத்திர தினத்தை தான் பெளத்த மதத்தை சேர்ந்தவர்கள் விசாக தினமாக கொண்டாடுகிறார்கள். புத்தர், பிறந்ததும், ஞானம் பெற்றதும் , இறந்ததும், இந்த நாளில் தானாம். காலையில் வானொலியில் “புத்தம், சரணம் , கச்சாமி”,,,, என்று ஒலித்துக் கொண்டிருந்தது. சரி இன்று ஒரு நாளாவது நாமும் புத்தரைப் போல் பொறுமையாக, அமைதியாக, பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்து பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே அடுக்களைக்குள் சென்றேன்.
அங்கு நான் பார்த்த காட்சி என் ஒரு நிமிட தவ நினைப்பை அறுத்தெறிந்து விட்டது. ஒருவன் வரவால், ஒன்பது பேரை நான் மீண்டும் கழுவி , சுத்தம் செய்ய வேண்டி இருந்தது. ஆம் , நான் முந்தின இரவு கழுவி , காயவைத்திருந்த பாத்திரங்களின் மேல் ஒரு கொழு கொழு , அடர்ந்த காப்பி கொட்டை நிற கரப்பான்பூச்சி தன்னிச்சையாக , அழையா விருந்தாளியாக, ஓடி விளையாடி கொண்டிருந்தது.
அதை பார்த்ததும் வந்ததே எனக்கு கோபம்! உடனே ஹிட் கரபான்பூச்சி கொல்லி மருந்தை கையில் எடுத்தேன். எதிரி ஒருவன் என் மண்ணில் , என்னிடம் வசமாக மாட்டிக்கொண்டான் என்ற நினைப்பு எனக்கு. என் கையில் இருந்த ஹிட் எனக்கு குறி பார்த்து எதிரியை தாக்கும் ஏவுகனையாய் தோன்றியது. உணர்ச்சி வசப்பட்டு உடனே அந்த ஏவுகனையை ஓடிக் கொண்டிருந்த கரப்பான்பூச்சி மேல் பாய்ச்சாமல், சாதுர்யமாக அதனை முதலில் பாத்திரக்கூடையில் இருந்து கீழே இறங்கும் படி செய்தேன். ஏனென்றால் , பாத்திரக்கூடையில் இருக்கும் பொழுது அடித்து வீழ்த்தி விட்டால் பாத்திரம் முழுவதும் மருந்து நாற்றம் அடிக்கும். மேலும் அதனை சுத்தம் செய்வது அவ்வளவு எளிது அல்ல. அது மட்டுமா, நான் மருந்தை அடிக்கும் பொழுது அது லாவகமாக எங்காவது ஓடி ஒளிந்து கொண்டால் எப்படி கண்டு பிடித்து வீழ்த்துவது?
கீழே வந்த கரப்பானை நெருங்கி நின்று குறி வைத்து ஹிட் மருந்தை அதன் மீது அடித்தேன். முதல் வீச்சிற்கு அது சாயவில்லை. மேலே மருந்தின் காற்று பட்டவுடன் குடு குடு என்று தப்பித்து ஓட ஆரம்பித்தது. நானா விடுவேன்? அது ஓடிய இடமெல்லாம் துரத்தி, துரத்தி, என் மூக்கை பிடித்துக் கொண்டு , மருந்தை அதன் மீது அடித்தேன். எங்கே மருந்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக என் மீது ஏறி விடுமோ என்ற பயம் வேறு. ஒரு வழியாக அது ஓடி தப்பிக்க முற்பட்ட பொழுது குப்புற விழுந்து விட்டது. குப்புற விழும் கரப்பானால் மீண்டும் திரும்பி படுக்க முடியாதாம். அதன் வீழ்ச்சி அங்கே தான் ஆரம்பமாகிறது. அது கை கால்களை ஆட்டியபடி திரும்ப முயற்சித்துக் கொண்டிருந்தது.
அப்படியே விட்டிருந்தால் அது சிறிது நேரத்தில் இறந்து இருக்கும். ஆனால் என்னுள் இருந்த ”அன்னியன்” அதை ஏற்க என்னை விடவில்லை. உடனே அதனை ”கொல் கொல்” என்று என் கொலை வெறியை தூண்டி விட்டது. மீண்டும் ஒரு முறை குப்புறக்கிடந்த கரப்பான் மீது மருந்தை அடித்து அது துடி துடித்து சாகும் வரை பொறுமையாக ( விசாக தினத்தன்று பொறுமையை கடைபிடித்தாகி விட்டது)காத்திருந்து பின் அதை குப்பையில் தூக்கி போட்டேன். அந்த குப்பை தொட்டியே அதன் சவக்குழி ஆனது. யார் துனையும் இல்லாமல் எதிரியை தனியாக எதிர் கொண்டு வீழ்த்திய சந்தோஷம் ஒரு புறம் இருந்தாலும், ஆஹா நமக்குள் இப்படி ஓர் கொலை வெறியா என்று ஒரு வித கசப்புணர்வை உணர்ந்தேன். ஓர் உயிர் போவதை, அதுவும் துடி துடித்து சாவதை என்னால் எப்படி இப்படி ரசிக்க முடிகிறது? அப்படி என்ன அதன் மீது எனக்கு தீராப்பகை? ஒரு வேளை அந்த கரப்பான் என் வீட்டிலேயே வளர்ந்து இப்படி திரிந்திருந்தால் நான் மன்னித்திருப்பேனோ என்னவோ ?ஆனால் அது அடுக்கு மாடி குடியிருப்பில் எந்த வீட்டு குளியல் அறையில் இருந்து என் வீட்டுக்கு கழிவு நீர் குழாய் வழியாக வந்ததோ என்ற அருவருப்பு என்னை கோபங்கொள்ள வைத்து ஒரு கொலைகாரியாக , அதுவும் விசாக தினத்தன்று ஒரு கொலைகாரியாக மாற்றி விட்டது. என் கோட்டைக்குள் வந்த ஓர் எதிரியை எப்படி நான் மன்னித்து விடுவது? ஒரு வேளை நான் அப்படி அதை உயிர் தப்ப விட்டு இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அது ஒரு பெரும் படையாக அல்லவா உருவாகி இருக்கும்!
ஒருவன் நல்லவனாக இருப்பதும், கெட்டவனாக மாறுவதும் அவனவன் கையில் இல்லை போலும். நம்முடைய சந்தர்ப்ப சூழ்நிலைகளே அதனை நிர்ணயம் செய்கின்றது என்பதற்கு இதுவே சாட்சி.புத்தனுக்கு வாய்த்த சந்தர்ப்ப சூழ்நிலை அவனை புத்தனாக வாழ வழிசெய்தது. நமக்கு வாய்க்கும் சந்தர்ப்பம் யாவும் நம்மை வழி மாறி போகச்செய்கிறது. அன்று மட்டும் அந்த கரப்பான் பூச்சி என் கண்ணில் படாமல் இருந்திருந்தால் நான் ஒரு நாளாவது புத்தனாக வாழ்ந்திருப்பேன்...என்னடா இவள் , எவ்வளவு வெட்டியாக இருந்தால் ஒரு கரப்பான் பூச்சியை கொன்றதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து இப்படி எழுதி நம்மை கொல்கிறாள் என்று நினைக்கிறீர்களா? புன்பட்ட மனதை புலம்பித்தானே தீர்க்க வேண்டும்......
No comments:
Post a Comment