அம்மா, நீயும் ஓர் சராசரி தாய் தான். பத்து மாதம் சுமந்து பெற்றாய். பால் ஊட்டினாய், சீராட்டினாய், தூக்கம் துறந்தாய், உன் பசி மறந்து என் பசி போக்கினாய், பிள்ளைகளுக்காக உன் தேவைகளை குறைத்துக்கொண்டாய், பார்த்து பார்த்து பேணினாய், நான் நோய் வாய்ப்பட்ட பொழுது துடிதுடித்தாய், நல்லது கெட்டதை போகிற போக்கில் சொல்லிக்கொடுத்தாய். இவை யாவும் நீ செய்ததில் எனக்கு எந்த வித ஆச்சரியமும் இல்லை. இவை யாவும் காலம் காலமாக எல்லா தாயும் தன் குழந்தைகளுக்கு செய்வது தான். இவை எல்லாம் மீறி ”நீ யார்? ” அப்படி என்ன நீ செய்து விட்டாய்? ஆம் நீ ஒரு குடத்தில் இட்ட விளக்கு!
உன்னை அறியாமல் உன்னில் இருந்த பலவற்றை உன் அணுமூலம் என்னுள் கடத்தினாய். நீ கவிதை எழுதினாய். அப்பொழுது வீட்டில் இருந்த யாருக்கும் அவற்றை படிக்க நேரம் ஒதுக்க தெரியவில்லை. அதை மெச்சி கொண்டாட நாங்கள் நினைத்ததும் இல்லை. கல்வி அறிவு சிறிதெனினும் நீ புத்தகப் புழுவாய் படித்துக்கொண்டே இருந்தாய். அந்த உன் அணுவின் வீச்சம் என்னில் மட்டுமல்லாது என் பிள்ளைகளுக்குள்ளும் செல்லும் அளவிற்கு சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கிறது. மிக பெரிய ஓவியமாக இல்லாவிட்டாலும் உன் எண்ணங்களை ஓவியமாய் தீட்டினாய். வீட்டில் இருந்த வேண்டாத காகிதங்களுக்கு ஒரு புத்துயிர் தந்தாய்.
நீ, நூலும் ஊசியும் கொண்டே ஓர் துணியிலேயே வண்ணமிகு தோட்டத்தை வளரச்செய்தாய். சமையல் என்று வந்து விட்டால் நீ எப்பொழுதும் ஆராய்ச்சி மாணவியாய் உருமாறுவாய். அக்கலையில் உன் கண்டு பிடிப்புக்கள் யாவும் என்றுமே வாய்க்கும், வயிற்றிற்கும் மட்டுமல்லாது கண்களுக்கும் வசீகரமாணவை தான். உன் மெல்லிய குரலில் ஒலித்த இசையாவும் ”குரலோவியம்” தான். இன்று வரை என் பிள்ளைகளின் திகட்டாத தாலாட்டும் அது தான். ஏனோ தெரியவில்லை இதில் மட்டும் நான் குயிலுக்கு பிறந்த மயிலாகி போனேன். வாசலில் நீ போடும் கோலத்தில் கூட வெள்ளை மயில் ஆடிவரும். கொத்து கொத்தாய் உன்னிடத்தில் ஊற்றெடுக்கும் உன் திறமையாவும் திராட்சை கொத்தாய் வாசலிலே கோலமாகும்.
உன் குடிலே உன் கோவிலென இருந்து விட்டாய். உனை தேடி வந்தோரை கொண்டாடி மகிழ்ந்தாய். ஊர் வம்பு பேசாமல் ஒதிங்கியே வாழ்ந்தாய். பார்ப்பவை யாவையிலும் அழகு கலையை புகுத்தி விட்டாய். உன்னை அறியாமல் என் ரசனையை கூட்டிவிட்டாய்! நீ சிலந்தி வலைபோல் நூல் கொண்டு பின்னிய அந்த ”க்ரோஷா” கலை மட்டும் இன்று வரை எனக்கு கைவசப்படவில்லை.
இத்தனை சொத்துக்கும் சொந்தக்காரி நீ . அத்துனை சொத்தையும் எனக்கு மட்டுமா எழுதி கொடுத்தாய், என் மகளுக்கும் அல்லவா எழுது கொடுத்து இருக்கின்றாய். ஏழேழு கடல் தாண்டினாலும், ஏழேழு பரம்பரைக்கு பின்னும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாத , பங்கு கேட்க முடியாத அழியா சொத்தல்லவா!அத்துனையும் எழுதி கொடுத்து விட்டு , உரிமை கொண்டாடாமல் மேலும் இச்செல்வங்களை பெருக்கிக்கொள்ள ஊக்கம் அளிக்கின்றாய், மகிழ்ச்சியுடனேயே இருக்கின்றாய். உன்னிடம் இருந்த வரையில் எல்லா சொத்தையும் அமைதியாய் அனுபவித்தாய். என்னிடம் வந்தப்பின் ஊர் மெச்ச வேண்டும் என்று எனக்கு நானே சர விளக்கு தொங்கச் செய்து பறைசாற்றுகின்றேன்.
இத்துனை காலங்கள் ஆனது உன் ஒளியை நான் உணர. காலங்கள் கடந்தாலும் ஒளியின் தன்மைதான் மாறுமோ? தேனின் சுவை தான் மாறுமோ?அன்று உன்னை கொண்டாட தெரியவில்லை. நீயும் அதை உணர்த்த வில்லை. இன்றோ என் மகளுக்கு அதனை புரிய வைத்து அன்னையின் புகழ் பாட கட்டளை இடுகின்றேன். நீ மட்டும் குடத்தில் இட்ட விளக்காய் வாழ்ந்து விட்டாய் . என்னை குன்றின் மேல் இட்ட விளக்காய் ஆக ஊக்குவித்தாய். உன் துணையோடு வாழும் காலம் வரை வாழ வேண்டும் என அந்த ஆண்டவனை வேண்டுகின்றேன்.
அனைவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment