சாது மிரண்டால்....
அது என்ன அப்படி ஒரு சொல்லக் கூடாத வார்த்தையை நான் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. ஞாயிறு மதியம் சாப்பிட வந்த மகன்,” அம்மா மதியம் என்ன சமையல் ?, என்று கேட்டான்.” காலண்டரில் கிருத்திகை என்று பார்த்த ஞாபகத்தில் அன்று சைவம் சமைத்திருந்தேன். நான்,”மதியம் சாப்பாட்டிற்கு, சாம்பார், பாவக்காய் வறுவல், பீட்ரூட் பொரியல் “, என்று நயமாக, மெதுவாக கூறினேன். உடனே அவன் அழுத்தமாக,”அம்ம்ம்ம்ம்மாமா I HATE YOUUU......”, என்று கூறிவிட்டு நகர்ந்து விட்டான். எனக்கு ஒரு நொடி,உச்சந்தலையில் யாரோ நறுக்கென்று ஓங்கி ஒரு குட்டு வைத்ததை போன்று இருந்தது. அப்படி என்ன நாம் செய்யக்கூடாத செயலை செய்து விட்டோம், அல்லது, சொல்லக்கூடாத வார்த்தையை சொல்லி விட்டோம் , இப்படி இந்த பய புள்ள என்னை வெறுக்கும் அளவிற்கு? என்று நொந்து கொண்டே சாப்பாட்டை மேசையில் எடுத்து வைத்தேன்.
மனம் அப்படியே வருடங்கள் பின்னோக்கி சென்றது. திருமணத்திற்கு முன்பு வரை நான் பாகற்காயை தீண்டியது இல்லை. பிடிக்காத காய்கறி வரிசையில் பல இருந்தன. உருளையை தவிர வேரெதுவும் உருண்டோடி சென்று ஆசையாய் சாப்பிட்டதில்லை. அம்மா எப்பொழுதும் வசைப் பாடி கொண்டே இருப்பாள்,” நீ இப்படி எந்த காய் கறியும் சாப்பிடாம தான் வளரவே மாட்ற,” என்று. அன்று அது புத்திக்கு ஏறவில்லை. நாள் முழுதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பேனே தவிர ஒரு நாளும் அம்மாவை நான் உன்னை வெறுக்கிறேன் என்று கூறியது இல்லை. (உங்களுக்கு மட்டும் ரகசியமாக ஒன்று கூறுகிறேன்- அம்மாவை மனதிற்குள் அமைதியாக திட்டியது உண்டு!) .
என் குழந்தைகள் பிறந்த பின் அம்மாவின் வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கத்துவங்கின. எங்கே நம் பிள்ளைகள் நம்மைப் போல் வளராமல் போய் விடுவார்களோ என்ற நினைப்பில் எப்படி எல்லாம் அவர்களுக்கு காய்கறிகளை கொடுக்க முடியுமோ அப்படி எல்லாம் உள்ளே திணித்து விடுவேன். பாவம் அவர்களும் வேறு வழியில்லாமல் முழுங்கி விடுவார்கள். என் தோழி கூறுவாள்,”கீதா, பிரியாணி செய்யறப்ப இப்படி காரட் பொரியல் செஞ்சு கொடும படுத்தறது நீயா தான் இருப்ப,” என்று. “தட்டுல இருக்கற மீன் வறுவல் உனக்கு தெரியவில்லையா?”என்று எனக்கு நானே வக்காலத்து வாங்கிக்கொள்வதும் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை அதுவுமாக இப்படி சாம்பாரும் , பாகற்காயும் கொடுத்து மகனை இம்சை அரசி போன்று இம்சித்தது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், அவன் கூறிய வார்த்தைகள் ரொம்பவும் என்னை புண்படுத்தவில்லை என்பதே நிஜம். ஏனென்றால், இக்கால பிள்ளைகள் தாங்கள் மனதில் நினைத்ததை யோசிக்காமல் வெளியில் கொட்டி விடுகிறார்கள். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவது இல்லை. மேலும், அவர்கள் உபயோகிக்கும் பல வார்த்தைகள் ஆகட்டும், வாக்கியங்கள் ஆகட்டும் அதன் உள் அர்த்தம் உணர்ந்து அவர்கள் பேசுவதில்லை. பேச்சு வழக்கில் அவர்கள் அதனை கொட்டி விடுகிறார்கள். நாள் முழுதும் ஏதும் பேசாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டு இருந்த என்னைக்காட்டிலும், மனதில் பட்டதை பொட்டென போட்டு உடைத்து விட்டு அடுத்த நொடி கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு நகரும் மகன் பரவாயில்லை என்றே தோன்றுகிறது. கோபத்தில் கொட்டப்படும் வார்த்தைகளை எடுத்து , வடிகட்டி ஆராயாமல் விட்டு விட்டால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்படலாம். ஆனால் நாம் தான் அவற்றை முறையாக பொறுக்கி எடுத்து, சீவி, சிங்காரித்து அர்ச்சிக்க துவங்குகிறோமே!
எப்படியோ பாகற்காயை உள்ளே தள்ளி ஆகிவிட்டது. மகனை சந்தோஷப்படுத்த,”ரிஷி, சாயங்காலம் உனக்கு மில்க் ஷேக் செய்து தருகிறேன்,” என்று ஒரு பிட்டை போட்டு அவனுடன் ராசி ஆகிவிட்டேன்.சாப்பிட்டப்பின் துடைத்து சுத்தம் செய்து முடித்து விட்டு எதற்காகவோ காலண்டரை பார்த்த பொழுது தான் தெரிந்தது கார்த்திகை ஞாயிறு இல்லை திங்கள் அன்று என்று. ஆஹா, நாளைக்கும் சைவமா, இது தெரிந்தால் ரிஷி நம்மை,”I will KILL YOUU .......”, என்று சொல்லுவானே என்று நினைத்துக் கொண்டே, “சரி நாளைய கதையை நாளைக்கு சமாளித்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து,திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதியாக இருக்க முடிவு செய்து விட்டேன். நாளை அந்த முருகனே காக்க வேண்டும். அரோகரா!!!!
No comments:
Post a Comment