Friday, March 15, 2019

நம்பிக்கை





நம்பிக்கை
வாழ்க்கையே நம்பிக்கை தானே! கருவில் வளரும் குழந்தை நலமாக , சந்தோஷமாக உலகில் வலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அந்த நம்பிக்கை இல்லாவிடில் பல உயிர்கள் கருவிலேயே மடியும். இதில் ஆண் பெண்னென எந்த பேதமும் இல்லை.
யுத்தம் அழித்த மண்ணில் இன்னும் மானுடம் வாழ்வதும் ஏதோ ஒரு நம்பிக்கையில் தான்.வெளி விடும் மூச்சை அடுத்த நொடி உள்ளிழுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் மனிதன் வாழ்க்கை ஓடுகிறது. பெற்ற குழந்தை ஒழுங்காக வளரும் என்ற நம்பிக்கை, வெளி சென்ற கணவன் நலமாக வீடு திரும்புவான் என்ற நம்பிக்கை, நோய் கொண்ட உடம்பு நலமாகும் என்ற நம்பிக்கை, தவறு செய்தோர் திறுந்துவார் என்ற நம்பிக்கை, கருத்த மேகம் மழை பொழியும் என்ற நம்பிக்கை, புயலுக்கு பின் அமைதி வரும் என்ற நம்பிக்கை, மழித்த தலையில் மீண்டும் முடி வளரும் என்ற நம்பிக்கை, விதைத்த விதை செடியாக வளரும் என்ற நம்பிக்கை, இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மை வழி நடத்துவது நம்பிக்கை மட்டுமே. இந்த நம்பிக்கையை மட்டும் நாம் கைவிட்டால் வாழ்வு மட்டுமல்ல இவ்வுலகமே சூன்யமாகிவிடும்.
இவ்வுலகில் நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல விஷயங்கள் தினம் தோறும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கிறது. நாம் எதன் மீது ஈடுபாடு கொண்டுள்ளோம் என்பதை பொருத்தே அமைகிறது நம் வாழ்க்கை. நாம் எதை சுகிக்க வேண்டும் எதை ரசிக்க வேண்டும் எதை ஒதுக்கி தள்ள வேண்டும் என்பதனை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். குழந்தையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதா இல்லை கொடூரனின் குதூகளிப்பை பார்த்து ரசிப்பதா என்பது நம் மனதை பொருத்தது.
எனக்கு இவ்வுலகின் மேல் நம்பிக்கை இருக்கிறது. மூன்றாம் உலக யுத்தம் வராது என்ற நம்பிக்கை இருக்கிறது. மீண்டும் எம்மண்ணில் இருக்கும் ஏரி , குளம் யாவும் நிரம்பும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என் நண்பர்கள் மேல், உறவுகளின் மேல் நம்பிக்கை இருக்கிறது. என்னை சுற்று நடக்கும் நல்லவற்றை காந்தமாக் இருந்து நான் இழுத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாசற்ற காற்றும், செழிப்பான மண்ணும், கலங்கமில்லா மனமும் கொண்ட மனிதர்கள் வலம் வருவர் எங்கெங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்றளவும் இருக்கிறது.என்னுடைய இந்த எல்லா நம்பிக்கையும் நிஜமாக நான் என்ன செய்ய வேண்டும்? ஆம் என் நம்பிக்கை நினைவாக நான் முதலில் நல்ல தூய உள்ளம் கொண்ட மானிட ஜென்மமாக மாற வேண்டும். என்னை நானே மாற்றிக்கொள்ள என்னால் இயலவில்லை என்றால் வேறு எதையும் மாற்றவோ, எவரையும் மாற்றவோ எனக்கு எந்த தகுதியும் இல்லை. முதல் மாற்றம் நானாகவே இருக்க வேண்டும் . முயன்று தான் பார்க்கலாமே!

No comments: