எவ்வளவு?? எவ்வளவு??
பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்சை எல்லாம் முடிந்தாகி விட்டது. இனி எல்லா பெற்றோரும் பரீட்சை முடிவிற்காக காத்திருக்க ஆரம்பித்து விடுவார்கள். படித்து பரீட்சை எழுதிய பிள்ளைகள் பரீட்சை முடிவிற்காக காத்திருக்கிறார்களோ என்னவோ பெற்றோர்கள் ஆவலுடன் எதிர் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் மட்டுமா எதிர்பார்பார்கள். உற்றார் உறவினர், அக்கம் பக்கத்து ஆண்டி அங்கிள்கள் என்று சுற்று வட்டாரமே எதிர்பார்க்கும். அப்பாடா முடிந்தது சனி என்று பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். முடிவு என்னாகுமோ ஏதாகுமோ என்று லப்டப் லப்டப் என்று அடிக்க ஆரம்பிப்பது பெற்றோர்கள் இதயமே. ஏனென்றால் அவர்கள் பல பேருக்கு பதில் சொல்ல வேண்டி இருக்குமே. உன் பிள்ளை எவ்வளவு மதிப்பெண் என்று எல்லோரும் கேட்கப்போகும் கேள்விக்கு தலை நிமிர்ந்து பதில் சொல்வதற்காவது தன் பிள்ளை நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று டென்ஷனோடு வலம் வருவார்கள்.
ஒரு முறை பள்ளி பரீட்சை முடிந்து மதிப்பெண்கள் வாங்கி வந்த என் மகளிடம் அவள் மதிப்பெண்களை பார்த்துவிட்டு அதோடு என் திருவாயை மூடாமல்,” உன் மற்ற தோழிகள் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்து இருக்கிறார்கள்?” என்று கேட்டு விட்டேன். உடனே அவள் சூடான சட்டியில் இட்ட சோளமாய் பொரிந்து தள்ளி விட்டாள். “ அவர்கள் எவ்வளவு வாங்கி இருந்தால் உங்களுக்கு என்ன? அது எவ்வகையில் உங்களுக்கு முக்கியமானது? என் மதிப்பெண் எவ்வளவு என்று கேட்க உங்களுக்கு உரிமை உண்டு, என் தோழிகளின் மதிப்பெண்களைப்பற்றி கேட்க உங்களுக்கு உரிமையும் இல்லை நீங்கள் அதை கேட்கவும் கூடாது . அப்படியே கேட்டாலும் நான் கூற மாட்டேன்,” என்று பதில் கேள்விகளால் என்னை துளைத்தெடுத்து விட்டாள். நானும் யுத்தத்தில் புறமுதுகு காட்டியவளாய் ஓடி ஒளிந்து விட்டேன்.
சில மாதங்கள் கழித்து என் தோழி ஒருவரின் மகன் பள்ளி கடைசி வருடம் தேர்ச்சி பெற்றான். என் தோழி எனக்கு தொலைபேசியில் அழைத்து மகிழ்ச்சியுடன் அந்த செய்தியை பகிர்ந்து கொண்டாள். நான் பேசிக்கொண்டிருந்த பொழுதே என் மகள் சைகையில் அவர்களிடம் அவர்கள் மகன் எவ்வளவு மதிப்பென்கள் என்று கேட்காதே என்று கூறினாள். நானும் அதனை புரிந்து கொண்டு ஒன்றும் கேட்கவில்லை. பேசி முடித்து தொலைபேசியை வைத்தப்பின்,” அம்மா எங்கே அவர்கள் மகன் எவ்வளவு மதிப்பென்கள் எடுத்து இருக்கிறான் என்று நீங்கள் கேட்டு விடுவீர்களோ என்று நான் பயந்து கொண்டே இருந்தேன் . நல்ல வேளையாக நீங்கள் கேட்க வில்லை. யாரிடமும் அவர்களின் பிள்ளை எவ்வளவு மதிப்பென் பெற்றிருக்கிறார் என்று கேட்காதீர்கள். அது நாகரீகமான செயல் இல்லை. அவர்களாக கூறினார்கள் என்றால் கேட்டுக்கொள்ளுங்கள் இல்லை என்றால் அமைதியாக வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு வைத்து விடுங்கள். அவர்கள் பிள்ளை சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் அது அவர்களுக்கு எவ்வளவு தர்ம சங்கடமாக ஆகிவிடும், ‘என்று கூறினாள். அவள்்கூறிய வார்த்தைகளில் ஆழ்ந்த அர்த்தமும் நியாயமும் இருந்தபடியால் அன்றிலிருந்து நான் யாரிடமும் அவர்களின் பிள்ளைகளின் மதிப்பெண்களை கேட்பதில்லை.
எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தாலும் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவர்தம் பெற்றோருக்கே தெரியும். அடுத்தவர் பிள்ளைகளின் மதிப்பெண்களைப்பற்றி கேட்டு நம் மதிப்பினை குறைத்து கொள்ளாமல் இருக்க நாம் பழக வேண்டும். அடுத்தவரை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்காமல் , அடுத்தவர்களின் பிள்ளைகளின் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நம் வேளையை பார்க்க கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே சமூகம் என்ன சொல்லும் என்று பல பெற்றோர்கள் கவலை அடையாமல், தன் பிள்ளைகள் மேல் தங்களின் மன அழுத்தத்தை செலுத்தாமல் பிள்ளைகளுடன் இனக்கமாக , அமைதியுடன் பரீட்சை முடிவுகளை எதிர் கொள்ள வழிவகுக்கும் என நான் நம்புகிறேன்.
No comments:
Post a Comment