Monday, January 15, 2018

பறவையாய் ஓர் பிறவி



கொட்டும் மழையில்
சன்னல் ஈர இரும்பு விளிம்பில்
தாவங்கொட்டையை நிறுத்தி
அந்த சில்லென்ற ஈரக்காற்றை
உணரும் பொழுது
கண்களும் சேர்ந்து உணர்ந்து
கலங்குகிறது!
நாசியில் நுழைந்து,
தொண்டை குழிவழி
ஈரக் காற்று
மனதை ஈரமாக்குகிறது!


கீழே ஓர் அழகிய மைனா
முழுமையாய் நனைந்து
புல்லில் அழகாய்
கால் பதித்து நடந்து
புல் இடுக்கில்
தலை தூக்கும் புழுவை
அழகாய் கொத்தி விழுங்குகிறது!


அடுத்த நொடி,
சிறு விமானம் என
மேலெழும்பி புல்லின் மேலே
டேக் ஆஃப் செய்து
 அடுத்து
சிறு நீலக்கடல் போல்
இருக்கும் நீச்சல் குளம்
மேல்
தன் அழகு தெரிகிறதா
என்று பார்த்துக்கொண்டே
சிறகடித்து பறக்கிறது!


அடுத்த சில நொடியில்
அருகில் இருக்கும்
தென்னை மரத்தை
குருவாய் நினைத்து
வலம் வந்து
கீழே இருக்கும்
பச்சை புல்விரிப்பில்
தரையிரங்குகிறது!


வெட்ட வெளியில்
ஆனந்த தாண்டவம்
ஆடும் மைனாவின்
சுதந்திரம் மட்டும்
நான்கு சுவற்றுக்குள்
சுவாசிக்கும் எனக்கு
 மட்டும் கிட்டுமானால்?
அடுத்த பிறவி என்று
உண்டென்றால்
நானும் பிறக்க வேண்டும்
பறவையாய்!!!


No comments: