Thursday, September 9, 2010
ஜுனியர் ஜோடி நம்பர் 1
ஓடி விளையாடு பாப்பா--நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா,
கூடி விளையாடு பாப்பா--ஒரு
குழந்தையை வையாதே பாப்பா.
காலை யெழுந்தவுடன் படிப்பு--பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு --என்று
வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.........................
“ஸ்ருதி, ரிஷி மணி எட்டாகுது. சாப்பிட வாங்க. சாப்டுட்டு ஒன்பது மணிக்கெல்லாம் படுங்க. அப்போதான் நாளைக்கு சீக்கிரமாக எழுந்திருக்க முடியும்” என்று நான் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தேன். “அம்மா ப்ளீஸ் டென் மினிட்ஸ், ஃபைவ் மினிட்ஸ்” என்று சாக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருவரும் ஒற்றுமையாக இருக்கும் நேரம் டிவி பார்க்கும் நேரம் ஒன்று தான். அந்த நேரத்தில் பார்க்கையில் பாசமலர் சிவாஜி,சாவித்திரி தோற்றுவிடுவார்கள். மற்ற நேரங்களில் மூன்றாம் உலகப்போர் மயம் தான். என்ன தான் அப்படி பார்க்கிறார்கள் என்று நானும் சென்று பார்த்தேன். “அம்மா நீங்களும் வாங்க. ஜூனியர் ஜோடி நம்பர் 1 பாருங்க. எல்லோரும் எப்படி நல்லா டான்ஸ் ஆடுறாங்க தெரியுமா? என்று கூறிய என் மகள் என்னையும் அந்த “இடியட் பாக்ஸ்” முன் உட்கார வைத்தாள். கொஞ்சம் நேரம் அமைதியாக இருக்கலாம் என்று நானும் பார்க்க ஆரம்பித்தேன். பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆறு வயது முதல் குழந்தைகள் பாட்டுக்கேற்ப ரசனையுடன் நடனமாடியது அழகாக இருந்தது. மறுநாளும் அதே நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தது. இப்படியே இரண்டு வாரங்கள் தொடர்ந்து பார்த்தேன். யார் ஜெயிப்பார்கள் என்ற ஆர்வம் எனக்குள்ளும் தொற்றிக்கொண்டது. ஒரு நாள் அந்த நிகழ்ச்சியைப் பற்றி யோசித்து பார்க்கையில் பல உண்மைகள் புலப்பட்டது.
ஜூனியர் ஜோடி நம்பர் 1 என்பது சிறுவர்களுக்கான நடன போட்டி. அதில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஜோடியாக நடனமாட வேண்டும். அவர்களின் நடனத்தை பார்த்து யார் சிறந்த ஜோடி என்று தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் குழு. இதில் ஜெயிப்பவர்களுக்கு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகள். இதில் கலந்து கொள்பவர்களுக்கும் பரிசுகள். எல்லாவற்றுக்கும் மேலாக உலகம் முழுதும் அவர்களை தொலைக்காட்சியில் காண இயலும். நம் எல்லோருக்கும் நம் முகம் டிவியில் தோன்றினால் மகிழ்ச்சிதானே? கல்யாண வீட்டு வீடியோவில் கூட நாம் போஸ் கொடுப்போம். இப்படி இருக்கையில் எந்த பெற்றோருக்குத்தான் தன் பிள்ளையை தொலைக்காட்சியில் பார்க்க ஆசையிருக்காது. அதுவும் உலகம் முழுதும் பார்க்கப்படுவார்கள் என்றால் டபுள் மகிழ்ச்சிதானே? முதலில் இந்த நிகழ்ச்சியின் பாசிடிவ் விஷயங்களை யோசித்தேன். முதலாவதாக நிகழ்ச்சியில் பங்கு பெறும் குழந்தைகள் நன்றாக ஆட , நேர்த்தியாக ஆட கற்றுக் கொள்கிறார்கள். இரண்டாவது, ஒரு சிலருக்கு தன்னம்பிக்கை கூடுகிறது. மூன்றாவது, கடினமாக உழைக்க கற்றுக் கொள்கிறார்கள். சக போட்டியாளருடன் சகஜமாக பழகும் வாய்ப்பு கிட்டுகிறது. மனதை கஷ்டப்படுத்தும் விமர்சனங்களை கூட பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டது போல நடிக்க கற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிகழ்ச்சியினால் என்ன என்ன பாதிப்புக்குள்ளாகிறார்கள் இக்குழந்தைகள் என்பதையும் நான் எண்ணிப்பார்க்க தவறவில்லை. கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயதில் இவர்களிடம் நடுவர்கள், “ உங்கள் ஜோடி கெமிஸ்டரி நன்றாக உள்ளது” , என்று கூறுகிறார்கள். அதன் அர்த்தம் புரிகிறதா இக்குழந்தைகளுக்கு என்று எனக்கு புரியவில்லை. புரியாமல் இருப்பதே மேல் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எல்லாம் புரிந்தது போல் தலை ஆட்டுவார்கள் இந்த பொம்மலாட்ட குழந்தைகள். “ஆட்டுவிப்பார் யார் ஒருவர் ஆடாதாரோ கண்ணா? பால்ய திருமணம் ஒழிக்கப்பட்டுள்ள காலகட்டத்தில் பால்ய ஜோடிகள் திரையில் எப்படி அங்கீகரிக்கப்படுகிறது?? இதை காணும் பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்கிறார்கள். இப்படி பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கலாமா?
ஆடுவது காதல் பாடல்களுக்கு . அதற்கு நடுவர்களாக அரியாசனத்தில் வீற்று இருப்பவர்கள்,” உங்கள் எக்ஸ்ப்ரெஷன் சூப்பர்”, என்பார்கள். ஆறு வயதுக்கும் , பத்து வயதுக்கும் எப்படி காதல் பற்றி உணர்வுகளை புரிந்து அரிந்து, முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வர முடியும்? ஆனால் இந்நிகழ்ச்சியில் இவை நடக்கிறது. அவர்கள் அந்த உணர்வுகளை உணர்ந்து வெளிகொணர வைக்கப்படுகிறார்கள். டிவி, சினிமா , இன்டர் நெட் என்று பார்ப்பதால்தான் இந்நாட்களில் பல குழந்தைகள் சிறு வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறார்கள் என்பது மருத்துவ ரீதியாக நீரூபிக்கப்பட்டிருக்கிறது. Puberty is advanced to younger age these days due to over exposure. பிஞ்சிலேயே பழுத்து விடுகிறார்கள். இப்படி இருக்கும் காலகட்டத்தில் நடன நிகழ்ச்சி என்ற பெயரில் குழந்தைகளை காதல் பாட்டுகளுக்கு உணர்ச்சி பொங்க ஆட வைப்பது என்னைப் பொருத்த வரையில் கண்டிக்கத்தக்கது. இதற்காக choreography என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படும் நடன அசைவுகளும் அபத்தம். Some of the dance movements are so obscene. எப்படித்தான் தங்கள் குழந்தைகளை இப்படி கெடுக்க பெற்றோருக்கு மனம் வருகிறதோ தெரியவில்லை. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள். உங்கள் நிறைவேறாத ஆசைகளை அவர்கள் மூலம் தீர்த்துக்கொள்ளப் பார்க்காதீர்கள். அவர்களுக்கும் ஆசைகள் உண்டு. அவர்களுடைய உலகம் கள்ளம் கபடமற்றது அதில் சேற்றை வாரி இரைத்து அசிங்கப்படுத்தாதீர்கள். The children loose their childhood innocence with such exposure.
சிறு வயதில் இப்படி போட்டிகளில் கலந்து கொண்டு அவர்கள் பணம் சம்பாதிக்கும் கருவி ஆகிவிடுகிறார்கள். இதுவும் ஒரு வகையில் குழந்தை தொழில் தான்(child labour) . இதற்கும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். சிறு வயதிலேயே பணம் சம்பாதிக்க வழி தெரிந்துவிடுவதால் அவர்களுக்கு படிப்பின் மீது கவனம் குறையும் வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் தங்களுக்கு பெருமை சேர வேண்டும் என்ற காரணத்திற்காக பலிகடாவாக குழந்தைகளை பயன் படுத்துகிறார்கள். அவர்கள் வெறும் நிகழ்காலத்தை யோசிக்கிறார்கள். எதிர்காலத்தை மறந்து விடுகிறார்கள். போட்டி, போட்டி, போட்டி, ஜெயிக்க வேண்டும், ஜெயிக்க வேண்டும், என்ற மந்திரமே ஓதப்படுகிறது. இப்படி போட்டி சூழலிலேயே வளர்ந்தால் பிற்காலத்தில் எல்லாமே ஒரு போட்டியாகத்தான் பார்ப்பார்கள். எதிலும் , எல்லாவற்றிலும் ஜெயித்தாக வேண்டும் என்று போதிப்பது பெரும்பாலும் நம் நாட்டில்தான். இதனால் தான் நம் சமுதாயமே ஒரு போட்டி மனப்பான்மை உடைய சமுதாயமாக இருக்கிறது. எதிலும் நம்மால் எளிதில் திருப்தி அடைய முடிவதில்லை.
பிராக்டீஸ் (practice) என்ற பெயரில் அச்சிறு மொட்டுக்கள் கசக்கப்படுகிறார்கள். பெற்றோர்கள் அவர்களின் உடல்வலியை உணர்வதாக தெரியவில்லை. ஒரு நிமிடம் அக்குழந்தைகளின் வலியை உணர்ந்தால் இப்படி அவர்களை இரவு ,பகல் பாராது வாட்டி வதைக்க மாட்டார்கள். படிப்பு ஒரு புறம், டான்ஸ் ஒரு புறம் என்று அவர்களுக்கு எவ்வளவு மன உளைச்சல். உடலளவிலும் பாதிப்படைகிறார்கள். இதில் நான் இன்னொன்றும் கவனித்து இருக்கிறேன். நிகழ்ச்சியில் பங்கு பெறும் குழந்தகளைவிட அவர்களின் பெற்றோர் மிகுந்த டென்ஷனகாக காணப்படுகிறார்கள். சிலர் கை பிசைந்து கொண்டே இருப்பார்கள். எளிதாக உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். எல்லா ரியாலிட்டி ஷோவிலும் இது தான் நடக்கிறது.
சூப்பர் சிங்கர் ஜுனியர் என்றொரு நிகழ்ச்சி முன்பு நடந்தது. அது ஒரு பாட்டு பாடும் போட்டி. அதில் ஐந்து வயது சிறுவனை அவனைவிட பெரிய குழந்தகளுடன் போட்டி போடச் செய்து அழகு பார்க்கிறார்கள். Ofcourse he is a child prodigy. ஆனால் நரம்பு தெரிக்க அந்த குழந்தை கஷ்டமான பாடல்களை தேர்வு செய்து கஷ்டப்பட்டு பாடும் பொழுது கோபத்தில் என் நரம்பும் தெரிக்கும். என் கோபமெல்லாம் பெற்றோர் மீது தான். அந்த பாலகன் பாடும் பொழுது தன் தந்தையை பார்த்துக்கொண்டே பாடுவான். “அப்பா நான் ஒழுங்காக பாடுகிறேனா? தப்பு செய்திருந்தால் மன்னிக்கவும்” என்று பயம் கலந்த அவன் பார்வை ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும். அவன் பாடும் பொழுது அவன் தந்தை கயிற்றின் மேல் நடப்பவரை போல் முழி பிதுங்கி அமர்ந்திருப்பார். பெற்றோரை திருப்திபடுத்த வேண்டுமே என்ற கட்டாயத்திற்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். இதற்காக முகம் சுழிக்காமல் மிக மிக கடினமாக உழைக்கிறார்கள். பெற்றோரின் கோபதாபங்களையும் இவர்கள் எதிர் கொள்ள வேண்டி உள்ளது.
பள்ளிகளும் தங்கள் பள்ளிக்கு இப்படிபட்ட நிகழ்ச்சிகள் மூலம் பெயர் கிடைக்கிறது என்ற காரணத்தினால் attendance பற்றி கவலைபடாமல், படிப்பை பற்றி கவலைப்படாமல் இக்குழந்தைகளை ஊக்கப்படுத்துகிறார்கள். தொலைகாட்சி நிறுவனங்களும் வருமானம் என்ற நோக்கிலேயே இம்மாதிரியான நிகழ்ச்சிகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்களை கேட்டால் “பார்த்து ரசிக்க ஆட்கள் இருக்கும் பொழுது ரசிகர்களின் ரசனைக்கேற்ப படைப்பது தான் எங்கள் வேலை” என்று தங்கள் தரப்பு நியாயத்தை மனசாட்சியை விற்று கூறுகிறார்கள்.
பள்ளிகளிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் ஆடுகிறார்கள், பாடுகிறார்கள். ஆனால் அங்கு எல்லோர் முன்னிலையிலும் அவர்கள் விமர்சிக்கப்படுவதில்லை. உலகெங்கும் தொலைகாட்சியில் பல கோடி மக்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் அக்குழந்தைகளை ஆட விட்டு நிறை குறைகளை எல்லோர் முன்புப் விவாதிப்பது, விமர்சிப்பது ஆலோசனை கூறுவது என்பது அக்குழந்தைகளை உயிரோடு தோளுரிப்பு செய்வது போன்றது. பெரியவர்களான நாமே நம்மை யாரேனும் குறை கூறிவிட்டால் சட்டென்று ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் இல்லாமல் இருக்கிறோம் . எல்லோர் முன்பும் இப்படி கூறிவிட்டார்களே என்று எத்தனை குழந்தைகள் அழுகின்றன, தலை குணிந்து நிற்கின்றனர். இதனை ஏன் பெற்றோர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? குழந்தைகளுக்கு அவமானம் என்றால் அது அவர்களுக்கும் தானே? மனரீதியில் அவர்கள் பாதிப்புள்ளாகிறார்கள். சிலர் தங்கள் தன்னம்பிக்கையை இழக்கலாம்.
படிக்க வேண்டிய வயதில் இப்படி ஆடல் பாடல் என்று கவனத்தை சிதற விடுகிறார்கள். நடனத்திற்காக பாடல்களை மனப்பாடம் செய்யும் நேரம் பாடங்களை படிக்கலாம். வாழ்க்கையில் கலை, விளையாட்டு எல்லாம் தேவைதான். ஆனால் படிப்பை பணயம் வைத்து சிறு வயதில் மற்றவற்றில் போட்டி போடுவது எவ்வளவு தூரம் பயனுள்ளதாக இருக்கு?. கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம். திறமைகளை வெளிக்கொணர இவையெல்லாம் ஒரு பாதை தான். ஆனால் இதுவே வாழ்க்கைபாதை ஆகி விடமுடியாது. படிப்புக்கும் இம்மாதிரியான நிகழ்ச்சிக்கும் சரிசமமாக நேரம் ஒதுக்கவும் முடியாது. They cannot do justice to their studies. அவர்களின் கவனம் முழுதும் ஆடல் பாடலில் லயித்துவிடும்.. அப்படியே அவர்களில் சிலர் இரண்டிலும் சிறந்து விளங்கினால் அதற்காக அவர்கள் எவ்வளவு பாடு பட வேண்டும். இப்படி ஜெயித்து வருவதினால் எதிர்காலத்தில் என்ன பயன்??
எல்லாமே உலகமயமாகி போன இக்காலத்தில் கல்வி அறிவு மிக மிக முக்கியம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. குழந்தைகளை நேர்வழியில் இட்டுச்செல்வது பெற்றோரின் கடமை. எத்தனையோ பேர் சிறு வயதில் புகழின் உச்சியில் இருந்துவிட்டு பின் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறார்கள். இப்படி பட்ட நிகழ்ச்சிகள் மூலம் சிறு வயதில் limelight க்கு வருவதினால் நிஜ வாழ்க்கையின் அழகினை, நிதர்சனத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள். சிறு வயதில் புகழ் பெறுவதால் அதை அவர்களுக்கு கையாள தெரிவதில்லை. குருவி தலையில் பனங்காயை வைத்தது போன்று ஆகிவிடுகிறது. தாங்கள் உபயோகப்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் உணரும் வயதும் இல்லை.
”தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்”
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். ”ஒரு தந்தை தன் மகனுக்கு செய்யும் பெரிய உதவி யாதெனில், அவனைக் கற்றோர் அவையில் முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலேயாகும்”. நாம் நம் குழந்தைகளை குழந்தை பருவத்தை அனுபவிக்க விடவேண்டும். அவர்களை மனித நேயம் மிக்க மனிதர்களாக வளர உதவ வேண்டும். இதுவே நம் கடமை.
இப்படியாக பலவாறு யோசித்து நான் இனி இந்நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முடிவு செய்தேன். குழந்தைகள் தங்களை வருத்திக்கொண்டு நம்மை சந்தோஷப்படுத்துவதை என்னால் ஏற்கமுடியவில்லை.எனவே இப்படிபட்ட நிகழ்ச்சிகளுக்கு நம் ஆதரவை கொடுக்காமல் இருப்பதே நம்முடைய எதிர்கால சந்ததியருக்கு நாம் செய்யும் நற்செயல். மலரட்டும் இம்மொட்டுக்கள் அப்பழுக்கில்லா மலர்களாக......... பாரதியின் பாட்டுக்கேற்ப அவர்கள் குழந்தைபருவத்தை சந்தோஷமாக கழிக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
கெமிஸ்டரி, பிசிக்ஸ் என்றால் என்ன என்று தெரியாத வயதில் இவர்களிடம் நடுவர்கள், “ உங்கள் ஜோடி கெமிஸ்டரி நன்றாக உள்ளது” , என்று கூறுகிறார்கள். அதன் அர்த்தம் புரிகிறதா இக்குழந்தைகளுக்கு என்று எனக்கு புரியவில்லை.
ரசித்து சிரித்து நொந்து போய் விட்டேன். பல நாட்கள் இதைப் பற்றி எழுத வேண்டும் நினைத்த விசயங்கள் இது,
jodi no1 eppavume paarka maaten.. ippa junior singer stop panni romba naal aachu..
kastama irukku antha payana parkkaraappa
//ரசித்து சிரித்து நொந்து போய் விட்டேன்.// இது சிரிக்கவேண்டிய விஷயமல்ல வருத்தப்படவேண்டிய விஷயம்.
கீதா அவர்களே,
கீதா Cafe என்கிற உங்கள் Blog பெயரைப் பார்த்ததும், சென்னை பாண்டி பஜாரில் கீதா கஃபேவில் கல்லூரி நாட்களில் சென்று சாப்பிட்ட நினைவு வந்தது. உங்கள் வீட்டு சமையலையும் Cafe அளவில் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (நகைச்சுவைக்காக).
CEO, Ravichandran family என்று கூறியுள்ளமையையும் இரசித்தேன். ஆனால் The Boss என்கிற எண்னம் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். (மீண்டும் நகைச்சுவைக்காக).
இந்த பதிப்புப் பற்றி:
என் குடும்ப CEO முழுநேரப் பணியாக செய்வது தொலைக்காட்சிகளில் வரும் சீரியல்கள் அத்தனையும் ஒன்று விடாமல் பார்ப்பதுதான். சிறுவர்கள் நிகழ்ச்சியையும் பார்த்து நிறைய முறை எங்கள் பிள்ளைகளுக்குக் காட்டி "இது எப்படி இருக்குப் பார். அவர்கள் எவ்வளவு நன்றாக ஆடுகிறார்கள் பார். நீங்களும் அப்படி வரணும்" என்று குழந்தைகளுக்குச் சொல்வாள். என்னையும் பார்க்கச்சொல்லி கேட்பாள். ஒரு சில முறைகள் அதைப் பார்த்தது உண்டு. அந்த குழந்தைகளின் திறமை கண்டு பாராட்டுவேன். இருந்தாலும் மனதுக்குள் எதோ இடிக்கும். என்னவென்று சரியாகத் தெரியாது. ஒருவேளை நம் பிள்ளைகள் இது போல் டிவியில் வரவில்லையென்கிற ஏக்கமோ என்று கூட நினைப்பதுண்டு. உங்கள் கட்டுரை என் மனதுக்குள் இருந்த விஷயத்தை வெளிக் கொண்டு வந்தது. குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடாமல் இப்படி ஆடல், பாடல், போட்டி என்று வறுத்தெடுப்பது எப்படி சரியாக இருக்க முடியும். சிறுவர்களுக்கும் நிறைய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் எல்லாம் இப்படிப் போன்ற போட்டிகள் வைத்து குழந்தைகளை கஷ்டப் படுத்துவதில்லை.
இதில் நிறை விஷயங்களை பெற்றோர்களுக்கு கூறி இருக்கிறீர்கள். குழந்தைகள் குழந்தைகளாக இருக்க வேண்டும். அவர்கள் சிறு வயதில் அனுபவித்து இரசிக்க வேண்டியதை இரசித்து வாழ வேண்டும். குழந்தைகள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். Email, facebook என்று online மூலம் அதிக நேரம் செலவிடும் இந்த காலத்தில், குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு நேரத்தையும் போட்டி போட்டி என்று செலவிடாமல், நண்பர்களுடனும், மற்ற ஆட்களுடனும் நேரில் பேசி, பழகி, Interpersonal relationship-ஐ வளர்த்துக்கொள்ள நாம் சொல்லித் தர வேண்டும்.
நல்ல பதிப்பு கீதா அவர்களே!
well said geetha ,
chemistry ,physics,attidtude, josh,lip movement .idhellam kettu kaadhu pulichu pochu.idhaiyellam parkaradha vittu roma naalachu.only the irresponsible parents are to be blamed.paavam andha appavi pinjugal.
ரொம்பச் சரியா சொல்லிருக்கீங்க. குழந்தைகளுக்கு அழகே குழந்தைத்தனம்தான். இயல்பு மீறிய குழந்தைகள் கலவரப்படுத்தவே செய்கிறார்கள். ரியாலிட்டி ஷோக்களோட ரியாலிட்டி இதுதான்.
Venkat--tks for ur comments.
CEO means in my house cleaning, eccentric officer .(just maitain this secret )THere are three bosses bossing me around in my house.
As u said we have to interact with our children more and give them a secured feeling. Interpersonal relationships are very important.Happy to knw many share my views.
Jothiji,LK,Robin,Denzil---happy to know that u all feel the same. tks.
வெல் செட் கீதா
இதுவும் ஒரு சமுக சிந்தனை உள்ள பதிவு தான்பா
இதில் உள்ள நிறை குறைகளை தெளிவாக குறிபிட்டு
சொல்லி இருக்குறீர்கள்
பெற்றோர்களும் ;இந்த நிகழ்ச்சியை நடத்தும்
தொலை காட்சி நிறுவனங்களும் இதை
புரிந்து கொண்டு நடப்பார்கள் என்று நம்புவோம்
நல்ல பகிர்வு !
அளித்த கீதாம்மாவுக்கு நன்றி & வாழ்த்துக்கள்
ப்ரியா--பிசி ஷெட்யூலிலும் வருகை தந்ததுக்கு நன்றி ப்ரியா.
மிகவும் தேவையான அருமையான பதிவு.
"மலரட்டும் இம்மொட்டுக்கள் அப்பழுக்கில்லா மலர்களாக......... "- குழந்தைகளை குழந்தைகளாய் இருக்க செய்வதில் நமக்கு (சமுதாயத்திற்கு) முக்கிய பங்குண்டு. நீங்க குறிப்பிட்டுள்ளது போல இந்த மாதிரி நிகழ்சிகளை நாம் ஆதரிக்காமல் இருப்பது தான் வருங்கால சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெரும் உதவி. நல்ல பதிவு. நன்றி
Theja ammaa--அழகான பெயர் உங்கள் குழந்தைக்கு. ஆதரவுக்கு மிக்க நன்றி.
தங்களது கட்டுரை மிகவும் அருமையாக உள்ளது. தேர்ந்த கட்டுரை யாளரைப் போல் கோர்வையாக , நேர்த்தியாக, உங்களது கருத்துக்களை தெரியப்படுத்தி உள்ளீர்கள். கட்டுரையில் தாங்கள் வெளிப்படுத்தி உள்ள மனக்குமுறல்கள் மிகவும் பொருத்தமானவை. ஆனால் மிக மிக துரதிர்ஷ்டமான உண்மை இத்தகைய வெறி தந்தையர்களை விட தாய்மை உணர்வு கொண்டிருக்க வேண்டிய தாய்மார்களிடம் தான் அதிகமாக உள்ளது. தனது குழந்தை கொடுமைப் படுத்தப் படுவதை பார்த்து கண் கலங்க வேண்டிய பெண்கள் தான் இந்த கொடுமையில் அதிகம் ஆர்வம் கட்டுகிறார்கள் என்பது கசப்பான உண்மை. அது மட்டும் அல்ல. திரை அரங்குகளில் குழந்தைகள் கூட அமர்ந்து பார்க்கத் தயங்கும் அருவருக்கத்தக்க நடனங்களைக் கூட கலை என்ற பெயரில் நமது வீட்டு குழந்தைகளை ஆடும்படி வற்புறுத்துகிறோம். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் எட்டு வயது பெண் குழந்தை அர்த்தம் உணராமல் திரைப் பாடல் ஒன்றிக்கு ஆபாசமான உடல் அசைவுகளுடன் நடனமாட , நடுவர் நன்றாக ஆடினாலும் இந்த வயதிற்கு இத்தகைய பாடலை உனக்கு தேர்வு செய்து கொடுத்தவர் யார் என்று வினவ, அரங்கமே அதிர்ந்து போகும் வகையில் 65 வயது பாட்டி எழுந்து நான் தான் எனது பேத்திக்கு இந்த நடனத்தை கற்றுத் தந்தேன் என்று கூறியதுடன், மேடையில் தானே அந்த நடனத்தையும் ஆடி காட்டியபோது, வாயடைத்து போனேன். இந்த உலகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது? மேலை நாட்டவர்கள் நமது நாட்டுப் ப்பையும், கலாச்சாரத்தையும் போற்றி வரும் நிலையில் , நாமோ அவர்களது உளுத்துப் போன கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வருகிறோம். தங்கள் கட்டுரை பலரின் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவதாக உள்ளது. மனம் கனிந்த வாழ்த்துக்கள். ஒரு வேண்டுகோள். அடுத்தக் காற்றில் இருந்து ஆங்கிலச் சொற்களை தவிர்க்கப் பாருங்கள். குறைந்த பட்சம் தமிழ் வார்த்தைகளில் எழுதி அடைப்புக் குறிக்குள் ஆங்கில வார்த்தையை எழுதுங்கள்.
வாழ்த்துக்களுடன்,
ஜெயச்சந்திரன் சுவாமிநாதன்
Post a Comment