Saturday, May 5, 2018

வாசிப்புப் பயணம்


ஒரு வழியாக இன்று நூலகம் சென்று வந்தேன். எனக்காக நூலகம் சென்று எத்துனை வருடங்கள் ஆகின்றன என ஞாபகம் இல்லை. வாசித்தல் பொருத்த வரை என் வாழ்வில் திமு , திபி என இரண்டு காலமாகப்  பிரிக்கலாம். இந்நேரம் நீங்கள் திமு, திபி க்கு அர்த்தம் கண்டு பிடித்திருப்பீர்கள். ஆமாம், திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் தான். திருமணத்திற்கு முன் பொட்டலம் கட்டி வரும் காகிதம் கூட விடமாட்டேன். எல்லாவற்றையும் படித்துவிட்டுத் தான் கிழிப்பேன்.திருமணத்திற்குப் பின் எந்த காகிதம் கிடைத்தாலும் கிழித்து துடைப்பதோடு சரி.

குழந்தைகள் என்று ஆனப்பின் அவர்களை நூலகம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். அவர்களோடு சேர்ந்து Fairy tales  முதல், bedtime  கதைகள், தாமஸ் எஞ்சின் கதைகள், Barbie கதைகள் , விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், குழந்தைகளுக்கான, இராமயணம், மகாபாரதம் என்று அவர்களுக்கு பிடித்தமான புத்தகங்களுடனே என் பயணமும் தொடர்ந்தது. எனக்கென்ற விருப்பு வெறுப்பு இல்லாமல் போனது. அவர்களுக்கு படித்து காண்பிப்பதிலேயே என் வாசித்தல் ஆசை நிறைவேறியது. ஒரு சில வருடங்களில் அவர்களாகவே படிக்க ஆரம்பித்தப் பின் என் வாசித்தல் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கணவரும், குழந்தைகளும் புத்தகப் புழுக்கள். குழந்தைகளை புத்தக உலகிற்கு அறிமுகப்படுத்தி அதில் அவர்களுடன் சில வருடங்கள் பயணித்த என்னால் அவர்களைப்போல் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக முடியவில்லை. காரணம் அவர்களுக்கு நினைத்த பொழுது சாப்பாடும் மற்ற பிற தேவைகளும் தானாக நடந்தது. எனக்கு அப்படி இல்லை. கணவர் கூறுவார், “வீட்ல இவ்ளோ புக்ஸ் இருக்கு இல்ல படிச்சா என்ன?” என்று. அதற்கு நான்,” நான் படிக்க ஆரம்பிச்சா வீட்டு வேலையை யார் செய்வாங்க? நீங்கல்லாம் போடுற குப்பையை யார் சுத்தம் செய்யறது? யார் சமைப்பா, துணி துவைப்பா, பாத்திரம் கழுவா?”என்று  என் இராமயணத்தை  ஆரம்பிப்பேன். ஏண்டா இவளை வாசிக்க சொன்னோம் என்று அவரும் பேசாமல் இருந்து விடுவார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் ஒரு புத்தகப் புழு. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது. பல நாட்கள் வேலை முடிந்து வீடு வரும் அப்பா கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு,”கீதா நீ வந்து சாப்பாடு எடுத்து வைமா. உன் அம்மா IAS examக்கு  படிக்கிறா,” என்று கிண்டலும் கோபமுமாக கூறுவார். பல நாட்கள் பால் பொங்கியதும், சட்டி காய்ந்து தீய்ந்த கதைகளும் உண்டு. என் அம்மாவால் அப்படி புத்தகத்துள் லயித்து போய்விட முடியும். எங்கள் வீட்டுக்கு இப்பொழுது வந்தாலும் என் கணவர் அம்மாவிற்கென்று புத்தகங்களை எடுத்து கொடுப்பார். இருவரும் பேசும் ஒரே பொது விஷயம் புத்தகங்களைப் பற்றியதே. ஆனால் என்னால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. என்னை ஒரு பெரிய குடும்ப இஸ்திரியாக நான் காட்டிக்கொள்ள முற்படுகிறேனா??அப்பொழுதெல்லாம் புத்தகம் ஒன்றே பிரதான பொழுது போக்கு அம்சமாக இருந்தது. இப்பொழுதுதான் ஆயிரம் பொழுது போக்கு அம்சங்கள் கொட்டி கிடக்கின்றதே!


என் உள் மனதிற்கு தெரியும் இதெல்லாம் ஒரு சப்பக்கட்டு காரணம் தான் என்று. உண்மையில் எனக்கு வாசித்தலில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அக்கடா என்று எந்தவித சிந்தைனையும் இன்றி உட்காரவே பிடித்திருந்தது. வருடங்கள் உருண்டோடின. வீட்டில் ஒரு சிறு நூலகமே உருவானது. என் வேலை புத்தகங்களை துடைத்து வைப்பதும், ”எதற்கு இத்துனை புத்தகங்களை வாங்கி இடத்தை அடைக்கிறீர்கள்”, என்று ஆதங்கப்படுவது மட்டும் தான்.

எங்காவது பயணம் செய்யும் போதெல்லாம் நானும் ஒரு புத்தகத்தை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். ஆனால் ஒரு பக்கம் கூட படிக்காமல் பத்திரமாக திரும்பி எடுத்து வந்துவிடுவேன். அது எனக்கு ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி அல்லது security blanket  மாதிரி என்று கூட கூறலாம்.  நாள் தவறாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தேன் . ஆனால் அதில் வரும் செய்திகள்  முக்கால்வாசி மனதிற்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், எது உண்மை எது பொய் என்று தெரியாததாலும் அதை வாசிப்பதையும் விட்டு விட்டேன்.

வயது ஆக ஆக கண்ணாடி இல்லாமல் படிப்பதும் சிரமமாக ஆனது. வாட்ஸ் ஆப் வந்ததிலிருந்து கண் இன்னும் மோசமானது தான் மிச்சம். சில வரிகளே படிக்கும் பொறுமை. அதிகமாக இருந்தால் வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நான் ஏதோ இப்படி எல்லாம் கிறுக்குவதால் சிலர் நான் வாசிக்கும் பழக்கம் உள்ளவள் என்று தவறாக நினைத்துக்கொண்டு கேட்பார்கள். அவர்களிடம், “ நான் எழுதுவது என் உணர்வுகளை , என் எண்ணங்களை வெளி கொணர்வதற்கே. மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று நான் ஒன்றும் நிறைய புத்தகங்கள் வாசிப்பவள் அல்ல. நான் ஒரு காலி பெருங்காய டப்பா,”என்று உண்மையை ஒத்துக் கொள்வேன். சிறு வயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை என் குழந்தைகளுக்குள் கடத்தியப்பின் நான் அதைப்பற்றி மறந்தே போனேன்.

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடைய என் தோழிகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் கூட இருக்கும். இவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று நினைப்பேன். நான் சோம்பேறி என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் இடம் தராது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நான் எழுதுவதையே நான் திரும்பி படிக்க மாட்டேன். பல தோழிகள் நல்ல புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பார்கள். நான் படிக்காமல் அவர்களிடம் அதைப்பற்றி கேட்டே தெரிந்து கொள்வேன். புத்தகங்களைப் பற்றி ரொம்ப பேசுபவர்கள் மத்தியில் நான் மெளன சாமியாரினி ஆகி விடுவேன். Silence is the best response  என்று கடைப்பிடிப்பேன்.

முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது எங்காவது mallக்கு சென்று சுத்திவிட்டு வருவேன். இப்பொழுது அதிலும் நாட்டம் இல்லை. பேசாமல் வீட்டில் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. சரி வீட்டில் இருந்து கொண்டு என்னதான் செய்வது என்று தோன்றியது. தொலைகாட்சியில் வரும் தொடர்களைப் பார்க்கவும் இப்பொழுது பொறுமை இல்லை. இருக்கும் நேரம் வாட்ஸ் ஆப்பில் மூழ்கி போவதாகவே இருந்தது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவ்வப்பொழுது வரைய ஆரம்பித்தேன். அதையும் எவ்வளவு நேரம் தான் செய்வது. பேசாமல் நாம் மீண்டும்  வாசித்தல் பழக்கத்தை பழக்கிக் கொண்டால் என்ன என்று தோன்றியது.

என் பள்ளித்தோழிகளிடம் யாருக்கெல்லாம் வாசிக்க ஆசை என்று கேட்டேன். என்னைப் போலவே நிறைய பேருக்கு அந்த பழக்கம் விட்டுப் போயிருந்தது. ஒரு சிலர் அதை விடாமல் செய்து கொண்டு இருந்தார்கள். முதலில் சிறு கதையில் ஆரம்பிப்போம் என்று நானும் என் தோழிகள் சிலரும் முடிவு செய்தோம். எடுத்த உடனே நாவல் படிக்க ஆரம்பித்துவிட்டால் ஒழுங்காக செய்ய மாட்டோம். தினம் ஒரு சிறு கதையாவது படிக்க ஆரம்பிப்போம் என்று நினைத்து சுஜாதாவின் சிறு கதைகள் படிக்க முடிவு செய்தோம். ஆன்லைனில் படிக்கலாம் என்றால் அந்த வெளிச்சம் கண்ணுக்கு எரிச்சலைத் தந்தது. முப்பது நாட்கள் தினம் ஒரு கதை என்று படித்துவிட்டோமேயானால் பின்னர் நமக்கு வாசிக்கும் பழக்கம் மீண்டும் வந்துவிடும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். சில தோழிகள் நல்ல கதைகளை பரிந்துரை செய்தார்கள். படிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சிலர் புல்லெட் ட்ரெயின் வேகத்தில் போனார்கள். நான் மட்டும் கூட்ஸ் வண்டி வேகத்திலேயே இருந்தேன்.

முதல் மூன்று நாட்கள் நான் தினம் ஒரு கதை என்று படுக்க போகுமுன் Ipadல்  வாசித்தேன். நான்காம் நாள் என் வேதாளம் முருங்கைமரம் ஏறி விட்டது. Ipadயை கையில் பிடித்துக் கொண்டு படிப்பது கடினமாக இருப்பது போல் தோன்றியது. மேலும் அதில் scroll செய்து செய்து படிப்பது வேறு பிடிக்கவில்லை. எனவே நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம் என்று நினைத்து இன்று காலை முதல் புறப்பட ஆரம்பித்தேன். “வீட்ல இவ்வளவு புக்ஸ் இருக்கறப்ப எதுக்கு நீ லைப்ரரி போற,” என்றார் கணவர். ”வீட்டில் இருக்கும் புத்தகம் என்றால் இரண்டு நாட்கள் புரட்டிவிட்டு தூக்கி போட்டு விடுவேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்தால்  படித்து முடிக்க வேண்டுமே என்ற ஒரு  commitment இருக்கும் ”,என்றேன். எத்துனையோ முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை பையில் இருந்து கூட எடுக்காமல் திருப்பி கொடுத்ததுண்டு. இம்முறை அப்படி செய்யக்கூடாது என்று ஒரு சபதம் எடுத்து இருக்கிறேன்.வழக்கமாக ஓரிரு பக்கங்கள் புரட்டிய உடனேயே தூங்கிப் போவேன். சில நேரம் தூக்கம் வராவிட்டால் ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு சில வரிகள் படித்தால் போதும் , உடனே தூங்கி போவேன்.   என் கணவர் எனக்கு நேர் எதிர். நல்ல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டார்.

காலை வேலையை முடித்து விட்டு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் மதிய உணவு வேளை வந்துவிட்டது. மதிய உணவு முடித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன். அது முடிந்தவுடன், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று உறக்கம் வந்தது. சாயங்காலம் போகலாம் என்றால் டீ நேரம். அதோடு அக்னி நட்சத்திரம் முதல் நாள் வேறா வெயில் பின்னி எடுத்தது. வெயில் தாழ்ந்து போகலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் தோழியிடம் இருந்து போன் வந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அந்த போன் கச்சேரி ஒரு மணி நேரம் நடந்தேறியது. மனதிற்குள் ஒரு வைராக்கியம். இன்று எந்நேரம் ஆனாலும் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வரவேண்டும் என்று. அப்படி இப்படி ஒரு ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்.

நூலகம் அடைந்த பொழுது மணி ஏழரை இருக்கும். உள்ளே நுழைந்த எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எந்த புத்தகத்தை எடுப்பது என்றே பிடிபட வில்லை. சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு அங்கு இருக்க வில்லை. நூலகத்தில் பலர் புத்தகங்களில் மூழ்கி கிடந்ததை பார்க்கையில் எனக்கு என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. பலர் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் புத்தகத்தில் ஊன்றி இருந்தார்கள். எனக்கு  வாசிக்கும் பொழுது concentration இருப்பதே இல்லை. படிக்கும் போதே ஆயிரத்தெட்டு சிந்தனைகள்- என்ன சமைப்பது, மகள் சாப்பிட்டு இருப்பாளா, காய்கறி வாங்க எப்போது போவது என்று மூளைக்குள் ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். . சில நேரம் என்ன வாசித்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வராது. கதையை மறந்து விடுவேன். கதாபாத்திரங்களை மறந்து போவேன்.   நான் சிறிது நேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். பின் எனக்கு பரிச்சயமான வைரமுத்து, மற்றும் ஜெயமோகனின் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் ஆங்கில புத்தகம் ஒன்றையும், இரண்டு சமையல் புத்தங்களையும் எடுத்துக் கொண்டேன். நூலகத்தின் உள் இருக்கும் பொழுது அப்படி ஒரு அமைதியான மன நிலை. அந்த புத்தகங்களை தொட்டு பார்க்கும் பொழுதே அப்படி ஒரு சுகம். பக்கங்களை புரட்டிய பொழுது நானும் புத்திசாலி என்ற ஒரு எண்ணம் தோன்றியது. இதை எப்படி இத்துனை வருடங்கள் அனுபவிக்காமல் விட்டுவிட்டேன்?

எப்படியோ இன்றைக்கு என் mission accomplished. வெற்றிகரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்தாகி விட்டது. புத்தகங்கள் பையில் இருந்து வெளியில் வந்தாகி விட்டன. என் நூலகப் பயணம் பற்றி பதிவும் எழுதியாகிவிட்டது. . இத்தோடு இல்லாமல் ஒழுங்காக இந்த புத்தகங்களை  படித்து முடிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்தித்து என் வாசிப்பு பயணத்தை புதிதாய் தொடங்க இருக்கின்றேன்.

 காலையில் இருந்து “நான் லைப்ரரி போறேன் நான் லைப்ரரி போறேன் என்று தண்டோரா வேறு  அடித்து விட்டேன்.  மகன் வேறு, “ லைப்ரரிக்கு  volunteering செய்ய போறியாமா,”என்று வேறு கேட்டு மானத்தை வாங்கி விட்டான். அவனைப் பொறுத்த வரை நூலகத்திற்கு நான் சென்றாலும் அது  புத்தகங்களை அடுக்கி வைக்கும் வேலைக்குத்
தான்  என்று  முடிவு செய்து இருந்தான். “இல்லை , நான் வாசிக்க புத்தகங்களை எடுத்து வந்து இருக்கிறேன்,”என்று கூறியவுடன் அவனுக்கு ஒரே ஆச்சரியம். “எங்கே காட்டு,” என்று நான் எடுத்து வந்த புத்தகங்களை பார்த்து நான் சொல்வது உண்மை என்று உறுதி செய்து கொண்டான். எடுத்து வந்த புத்தகங்களை படிக்கா விட்டால் மகனின் கிண்டலுக்கு நான் ஆளாகி விடுவேன். அதற்காகவாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் படிப்பது போன்று நடிக்கவாவது செய்ய வேண்டும்!!!

Wednesday, May 2, 2018

என் கடன் பணி செய்து கிடப்பதே !






நேற்று உழைப்பாளர் தினத்திற்காக நான் உழைபாளர் சிலையின் படத்தை வரைந்து என் தோழிக்கு அனுப்பி வைத்தேன். அதைப் பார்த்துவிட்டு அவள்,”நான் உனக்கு ஒரு டாக்குமெண்டரி வீடியோ அனுப்பி வைக்கிறேன். அதைப் பார்த்தப் பின் உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எழுதி அனுப்பு,” என்றாள். கூடவே,”முதல் பத்து நிமிடங்களுக்கு மேல் உனக்கு அது எதைப்பற்றியது என்பதை தெரிந்து கொள்ள ஆகாது. அதற்கு மேல் உன்னால் அந்த வீடியோவை பார்க்க முடியாது,”என்றாள்.

சரி அப்படி என்னதான் வீடியோ அது என்று பார்க்க ஆவலாக இருந்தேன். அவளும் அந்த வீடியோவை அனுப்பி வைத்தாள். அந்த டாக்குமெண்டரியின் பெயர்,”கக்கூஸ்”. இந்த வார்த்தையை என் வாயால் உச்சரிக்கக்கூட நான் கூச்சப்படுவேன். டாய்லெட், ரெஸ்ட் ரூம் என்று சொல்லியே பழக்கமாகி விட்டது.  இதை பார்ப்பதா இல்லை வேண்டாமா என்ற ஒரு குழப்பம் . சரி, இவ்வளவு சொல்லி இருக்கிறாளே பார்த்துவிடுவோம் என்று அந்த லிங்கை திறந்து பார்க்க ஆரம்பித்தேன். முதல் காட்சியே என் வயிற்றை குமட்டச்செய்தது. அந்த டாக்குமெண்டரி துப்புறவு பணி செய்பவர்களைப் பற்றியும், அவர்களின் அவல நிலை பற்றியும், கழிப்பிடங்கள் பற்றியும், குப்பைக்கூளங்கள் பற்றியும், துப்புறவு பணி செய்பவர்களின் வாழ்க்கை, அவர்களின் சுகாதார பிரச்சனைகள், வேலையிலும், வேலை இடத்திலும் அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சணைகள்  மற்றும் அபாயகரங்கள் பற்றியும்  எடுக்கப்பட்டிருந்தது.

முதல் பத்து நிமிடங்கள் பார்த்தப் பின் என்னால் அதில் வரும் காட்சிகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. முழுவதுமாக பார்க்க நம்மால் முடியுமா ? என்ற சந்தேகம். பார்க்க முடியாவிட்டால், கேட்டாவது  மட்டும் பார்ப்போம் , அதில் அப்படி என்னதான் சொல்கிறார்கள் என்று முடிவு செய்து எதையோ வரைந்த படி கேட்க ஆரம்பித்தேன். அப்பப்பா, என்ன கொடுமை, என்ன கொடுமை!இந்த வாழ்க்கையில் நான் எவ்வளவு கொடுத்து வைத்தவள் என்பதை  அந்த நொடி உணர்ந்தேன். பல எண்ண ஓட்டங்கள் எனக்குள் ஓட ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்கு மேல்  ஒடிய அந்த முழு டாக்குமெண்டரியை அவ்வப்போது பார்த்தும்,  கேட்டும் முடித்தேன். அதற்குள் நடு ராத்திரி பன்னிரண்டரை  ஆகிவிட்டது. தூங்க சென்ற என்னால் கண்களை மூடிக்கொள்ள முடிந்ததே தவிர தூங்க முடியவில்லை. அந்த காட்சிகள் சம்மட்டியை வைத்து என் தலையில் அடிப்பது போன்று மீண்டும் மீண்டும் என் கண்களுக்குள்ளும், மூளைக்குள்ளும்  விவரிக்க முடியாத ஒரு வித அவஸ்தயை உண்டு பண்ணியது. கனத்த மனத்தோடு சில மணி நேரத்திற்குப் பின் தூங்கி விட்டேன்.

காலை எழுந்தவுடன் மீண்டும் அதைப்பற்றிய நினைவுகளே. மனித கழிவுகளையும், குப்பைகளையும் சுத்தம் செய்வோர் எவ்வளவு பாவப்பட்டோர் என்று எனக்கு உறுத்தியது. நானும் அவர்களின் இந்த இழிநிலைக்கு என்னை அறியாமல் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருக்கிறேன் என்பதை நினைக்கும் பொழுது என் மனம் அழுத்தத்தை உணர்கிறது. சிறு வயதாக இருந்த பொழுது எங்கள் வீட்டு செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வருபவர்களை பார்த்து இருக்கிறேன். மனம் கஷ்டப்படும். அவர்கள் வேலையை முடித்து விட்டு போகும் வரை மூக்கை மூடிக்கொண்டு, சன்னல், கதவுகளை சாத்திக்கொண்டு வீட்டிற்குள்ளேயே அமர்ந்து இருப்போம். ஒரு வாரம் வரை கொல்லப்பக்கத்திற்கு போவதை தவிர்த்து விடுவோம். சுத்தம் செய்துவிட்டு போனவர்களின் நிலை எப்படி இருந்திருக்கும் ? அவர்களின் நிலை பற்றி யோசித்தது கிடையாது. இப்பொழுது நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய இப்பொழுதெல்லாம் மெஷின் வந்துவிட்டது என்று நினைத்து இருந்தேன். அவர்களுக்கு விடிவு காலம் பிறந்து விட்டது என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டு இருந்தேன். செப்டிக் டாங்க் சுத்தம் செய்ய வேண்டுமானால் மெஷின் இருக்கலாம் ஆனால் நாம் அன்றாடம் போடும் குப்பைகளையும், அடைத்துக் கொள்ளும் பாதாள சாக்கடைகளையும், ஆஸ்பத்திரி கழிவுகளையும், பொது கழிப்பிடங்களையும், ரயில் வண்டி பாதைகளையும், இன்னும் எத்தனை எத்தனையோ  குப்பைகளையும் இன்று வரை மனிதர்களே கைகளைக் கொண்டு சுத்தம் செய்கிறார்கள் என்று பார்த்த பொழுது என் அறிவீனம் என்னை சாட்டையால் அடித்தது.  இதற்கெல்லாம் விடிவு காலமே வராதா என்று ஆதங்கமும், அழுகையும் சேர்ந்தே வருகிறது. இந்த மனித மெஷின்களின் இந்த நிலைக்கு என்ன காரணம், யார் காரணம் என்று யோசிக்கிறேன்.

சுத்தத்திற்கு பெயர் போன சிங்கப்பூரிலும் குப்பைகளை வகைப்படுத்துவது மனிதர்களே. ஆனால் அவர்களுக்கென்று கையுறைகள், காலணிகள், முககவசங்கள் எல்லாம் தரப்படுகிறது. குப்பைகளை கையாளும் முறை கற்பிக்கப்படுகிறது. அதற்கான கருவிகளும் , தேவையான உபகரணங்களும் தரப்படுகிறது. அவர்களுக்கும் கஷ்டம் தான் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவைப் போல வேறெந்த நாட்டிலும் பொது இடங்களில் , வெட்ட வெளிகளில் குப்பைகளையோ, கழிவுகளையோ போடுவதோ,இல்லை வெட்ட வெளிகளை கழிப்பிடமாகவோ உபயோகப்படுத்துவதும் இல்லை. இந்த நிலை எதனால் ஏற்பட்டது?

சுத்தத்திற்கு பெயர் போனவர்கள் நாம் . ஒரு காலத்தில் வெளியில் சென்று விட்டு வீடு வருபவர்கள் கால் ,கையை சுத்தம் செய்து விட்டு வரவேண்டும் என்று வீட்டு வாசலிலேயே தண்ணீர் குவளை இருக்கும் . செருப்பு என்பது வீட்டுக்கு வெளியில் மட்டுமே பயன் படுத்துவோம். முன்னங்கால்களை மட்டும் கழுவினால் பத்தாது சனி விடாது , குதிகால்களிலும் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டுத்தான் வீட்டிற்குள் வரவேண்டும் என்ற ஐதீகம் எல்லாம் நமக்கு உண்டு. இந்த சுத்தம் பற்றி நாம் பேசுவது எல்லாம் நம் வீட்டிற்குள் மட்டுமே. வெளி இடங்களையும், பொது இடங்களையும், நம் வீட்டின் வேலியை தாண்டி சந்து , பொந்து என்று மற்ற எல்லா இடங்களையும் சுத்தமாக நாம் வைத்துக் கொள்ள நமக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதே இல்லை. என் வீடு சுத்தமாக இருந்தால் போதும் என்ற சுயநலம். என் வீடு நாறாதிருக்க என் வீட்டு குப்பையை வெளியில் தூக்கிப் போடும் நான் அதை சுத்தம் செய்பவர்களைப்பற்றி கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பதே இல்லை.

துப்புறவு தொழிலாளர்களும் மனிதர்களே, அவர்கள் ஒன்றும்  அருவருப்பு உணர்வும், அசிங்க உணர்வும் இல்லாத ஜடங்கள் இல்லை. துப்புறவு பணியாளர்கள் இல்லாமல் செய்ய முடியாது. ஆனால்  அவர்களின் வேலை பளுவை, அவர்களின் கஷ்டத்தை குறைக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்று நான் சிந்தித்து பார்த்தேன். பல விஷயங்கள் எனக்கு தோன்றியது.  துப்புறவு தொழிலாளர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இதில் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் , அவர்களை கண்டு ஒதுங்கி போவது அவர்களை மதிக்காமலோ அல்ல அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்ற எண்ணம் கொண்டோ அல்ல. அவர்கள் துப்புறவு வேலை செய்வதால், வேலை செய்யும் பொழுது அவர்கள் சுத்தமாக இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் குப்பைகளை கையாள்வதால் அவர்கள் அழுக்காக இருப்பார்கள். அவர்களுக்கு சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இருக்காது. எனவே அவர்களிடம் இருந்து கொஞ்சம் விலகி இருப்போம் என்ற எண்ணத்தினால் இருக்கலாம். குப்பையை சுத்தம் செய்பவர்களை அந்த குப்பை வண்டியிலேயே அமரவைத்து கூட்டிச் செல்வார்களாம். பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ஆள் எடுப்பதற்கு சில தகுதிகள் உண்டாம். அது என்னவென்றால், அவர் நன்றாக குடித்துவிட்டு பாதாள சாக்கடையில் உள்ளே சில நிமிடங்கள் தம் பிடித்து இருக்க முடிந்தால் அவருக்கு வேலை உண்டாம். இந்த கொடுமைகள் இன்றும் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன.

இன்னும் பல நெஞ்சை உலுக்கும் உண்மைகள் அந்த வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. வீடியோவை பார்க்கும் நமக்கே இப்படி வயிற்றை பிரட்டுகிறதே  இந்த வேலையை  தினம் தினம் பார்ப்பவர்களுக்கும், சுத்தம் செய்பவர்களுக்கும் மனநிலை எப்படி இருக்கும். சிலர் சொல்கிறார்கள், “எங்கள் குழந்தைகள் எங்கள் கையால் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்,” என்று. ஆனாலும் குடும்பத்திற்காகவும், வயிற்றுப் பசிக்காகவும் எல்லா அசிங்கங்களையும் சகித்துக் கொண்டு அவர்கள் தங்களை இத்தொழிலுக்கு அர்பணித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டில் முதலில் சுத்தத்திற்கான பாட திட்டம் வகுக்கப்பட வேண்டு. சிறு வயது முதலே சுத்தமாக இருக்க அறிவுறுத்தப்படவேண்டும். தான் மட்டும் சுத்தமாக இருத்தல் பத்தாது , நம்முடைய சுற்றுப் புறத்தையும் எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலே, சுத்தம் செய்பவர் வேறு யாரோ தானே , நமக்கென்ன , நம்முடைய வேலை குப்பையை தூக்கிப்போடுவது. என் வீட்டு வேலை ஆள்தானே என் கழிவறையை சுத்தம் செய்கிறார், நான் ஏன் அதை சுத்தமாக வைத்து விட்டுத்தான் வரவேண்டும், “ என்பது போன்ற எண்ணங்களை மாற்ற வேண்டும். துப்புறவு வேலை செய்பவர் அருவெறுப்பு படாவண்ணம் நம் வீட்டு குப்பையை நாம் ஒழுங்காக போட வேண்டிய இடத்தில், மூட்டையாகவோ, ப்ளாஸ்டிக் கவரிலோ, போட்டு கட்டி போடவேண்டும். கறிமீன் கழுவுகள், sanitary napkin, diaper , முதலியவைகளை தூக்கி போடும் பொழுது ஒழுங்காக ஒரு கவரில் போட்டு குப்பைத்தொட்டியில் போட வேண்டும். குப்பைகளை அகற்ற  அரசாங்கமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பொது மக்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு முயற்சியினால் மட்டுமே இப்பிரச்சனைகள் களையப்பட முடியுமே தவிர வேறு எப்படியும் இதனை சரி செய்ய இயலாது.

என் பிள்ளைகளிடம்,”வேறு ஒருவர் அசிங்கமாக விட்டு விட்டு வரும் பாத்ரூமை உங்களால் நிம்மதியாக உபயோக படுத்தவோ, சுத்தம் செய்யவோ முடியுமா? அடுத்தவர்கள் டாய்லெட்டை அசிங்கமாக விட்டுச்சென்றால் உங்களுக்கு கோபம் வருமா வராதா? அப்படி இருக்க நீங்கள் அப்படி ஒரு நாளும் விட்டு விட்டு வரக்கூடாது. வீட்டு வேலையாள் அசிங்கப்பட்டு இந்த வேலையை செய்தால் அந்த பாவம் நம்மைத்தான் வந்து சேரும். அவர்களும் மனிதர்களே. நாம் உபயோகபடுத்திவிட்டு அசிங்கமாக டாய்லெட்டை விட்டு விட்டு வந்தால் அது நமக்கு அசிங்கம்,எனவே ஒவ்வொரு முறையும் எந்த இடமாக இருந்தாலும் சரி , வீடானாலும், ஹோட்டலானாலும் சரி, பள்ளியானாலும்,பொது  கழிப்பிடமானாலும்  நீங்கள் டாய்லெட் உபயோகபடுத்திவிட்டு வரும் பொழுது சுத்தமாக இருக்கிறதா என்பதை பார்த்து விட்டு வாருங்கள்,”என்று கூறுவேன்.

இந்த வீடியோவை பற்றி என் மகனுக்கு சொன்னேன். அவனையும் பார்க்க சொல்லி இருக்கிறேன். அவனும் தெரிந்து கொள்ளட்டும் . இப்பணி செய்பவர்களின் கஷ்டம் ,நஷ்டம், தியாகம் என்ன என்பதை. மேலும், நமக்கெல்லாம் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையின் அருமையும் தெரிந்து கொள்ள முடியும். ஒரு நேரம் ஏண்டா இதைப்பார்த்தோம் என்று தோன்றுகிறது. Ignorance is a bliss  என்றும் நினைக்கத் தோன்றுகிறது. நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் எதற்கு இதெல்லாம் தலைக்கு ஏற்றிக் கொண்டு அவதிபட வேண்டும் என்றும் தோன்றியது. ஆனால் , நாம் ஒவ்வொருவருக்கும் சமுதாய பொறுப்புணர்ச்சி என்று சிறிதேனும் இருத்தல் அவசியம். அதற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைத்து பார்க்க வேண்டுமே தவிர , கண்களை மூடிக்கொண்டு கற்பனை உலகில் வாழ்வதால் பயனில்லை. நிதர்சனம் கசக்கத்தான் செய்யும் எட்டிக்காயைப் போல்!இனியாவது துப்புறவு தொழிலாளர்களின் கஷ்டம் அறிந்து பொது இடங்களை அசிங்கமாகவோ, குப்பைகளை கண்டபடி தூக்கி போடாமலோ  இருக்க முயற்சிப்போம். ஏனெனில் அவர்களும் ஆறறிவு பெற்ற மனிதர்களே ! அவர்களுக்கும் குடும்பம், குழந்தைகள் உண்டு. அவர்களும் சுகாதாரமாக நோயற்று வாழ வேண்டும். அவர்கள் இல்லையெனில் நாம் அனைவரும் குப்பைமேடுகளில் தான் கால் வைக்க நேரிடும்! மனிதர்களை மனிதர்களாக மதிப்போம்.

Sunday, April 29, 2018

சித்ரா பெளர்ணமி!

Image result for picture of a full moon


சித்திரை மாதம் பிறந்ததிலிருந்தே சித்ரா பெளர்ணமிக்காக  காத்து இருந்தேன். சித்திரை என்றாலே அழகரும், வைகையும், மீனாட்சி -சுந்தரேசுவரரும் , திருவிழாக்களும் , பள்ளி விடுமுறையும், உறவினர் வருகையும், சுற்றுலாவும் ஞாபகத்திற்கு வராமல் இருப்பதில்லை. அழகர் வைகையாற்றில் இறங்குவதை நேரில் பார்த்தது இல்லைதான். ஆனாலும் அது நடக்கும் சித்திரை மாதத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. வைகை வேண்டுமானால் வற்றிப்போய் இருக்கலாம் ,ஆனால் நினைவுகள் இன்று வரை வற்றிப்போகவில்லை.

சித்திரை மாதத்தில் ஊரெங்கும் திருவிழா எடுப்பதும், நாடகங்கள் போடுவதும், குல தெய்வங்களுக்கு பொங்கல் வைப்பதும் என்று கலை கட்டிவிடும். இப்பொழுது எல்லாம் இவை நடக்கின்றனவா என்று தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து வருடங்கள் பல ஆகிவிட்டதால் அதிகம் இவைப்பற்றிய செய்திகள் காதில் விழுவதில்லை. சித்திரை மாத பாதியில் பள்ளிகள் விடுமுறை விட்டுவிடுவார்கள்.  சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது ஒரு பெரிய திட்டமாகவே தீட்டப்படும். சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பார்க்காமல் வெட்ட வெளியில் விளையாடிய காலம் உண்டு. என் அம்மா,”ஊரு வெயில் எல்லாம் உன் தலையில தான் கொளுத்துது. அடிக்கற வெயில் வீணாக கூடாதுன்னா இப்படி ஆட்டம் போடுற,”என்று சத்தம் போடுவதும் உண்டு. அதற்காக எந்த விதத்திலும் ஆட்டப்பாட்டத்தை குறைத்துக்கொண்டது கிடையாது. பத்து தெரு தள்ளி விளையாடினாலும் மகள் பத்திரமாக வீடு திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது பெற்றோருக்கு. அப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட குழந்தைகளை குறிவைக்கும் ராட்சச கூட்டம் இருக்கவில்லை. 

இந்நாட்களில் விடுமுறை என்றாலே சொந்தபந்தங்கள் ஒன்று கூடுவது குறைந்து ஏதாவது holiday destinationனுக்கு போகலாம் என்று கிளம்பிவிடுகிறோம். யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் யாரும் நம்மை அப்படி வேண்டி விரும்பி அழைப்பதும் இல்லை . இதில் குழந்தைகளுக்கு peer pressure வேறு. ”விடுமுறைக்கு எந்த ஊருக்கு சென்றாய்?” என்பது போக இப்பொழுதெல்லாம் ”எந்த நாட்டிற்கு சென்றாய் ?”என்பதாகிவிட்டதாம். இதனால் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்லவேண்டிய கட்டாயத்திற்கு சில பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள்.

சித்ரா பெளர்ணமியை பற்றி பேச வந்துவிட்டு மாட்டை எங்கெங்கோ ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொருங்கள் மாட்டை கொண்டுவந்து கட்டிவிடுகிறேன். சித்ரா பெளர்ணமி என்றாலே எனக்கு சில விஷயங்கள் டக்கென்று ஞாயபகத்திற்கு வரும். ஒன்று கட்டுச்சோறு , இரண்டாவது  கோவலன், மாதவி  . இந்த நாளில் தான் இந்திர விழா கொண்டாடப்பட்டதாம்.   இதை தவிர வேரெதுவும் எனக்கு தெரியாது. பொதுவாகவே பெளர்ணமி நிலவு என்றாலே எனக்கு அலாதி பிரியம் உண்டு. சரி இந்த நாளுக்கு அப்படி என்ன விஷேசம் என்று தெரிந்து கொள்ளலாமே என்று என் தோழிகளிடம் கேட்டேன். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும்?  எந்த மாதிரி உணவு செய்து உண்ண வேண்டும்? என்றெல்லாம் கேட்டேன். இதில் இருந்தே தெரியவில்லையா வயதாகி கொண்டு போகிறதென்று!

ஒரு தோழி ,” அன்று எங்கள் வீட்டில் சங்கர நாராயணா பூஜை செய்வோம் ,” என்று கூறினாள். “அப்பூஜை எப்படி செய்வது ,”என்று கேட்டேன். அதற்கு அவள்,” நான் செய்வது கிடையாது. என் அம்மா செய்வார்கள். எனக்கு நேரம் இருப்பது இல்லை அதனால் சாதாரணமாக பூஜை செய்வதோடு சரி,”என்று கூறினாள். ஆமாம் , அவள் ஒரு மருத்துவர். அவளுக்கு நேரம் இருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு நேரம் இருந்தும் விளாவாரியான பூஜை செய்யும் அளவிற்கு எனக்கு பொறுமையும் இல்லை, அப்படியே செய்தாலும் என் மூளைக்குள் இருக்கும் ஆயிரம் சிந்தனைகளை என்னால் மூட்டை கட்டி அவ்வளவு எளிதில் ஓரமாக வைத்து விட முடியாது. மனமும், நினைவும் குரங்காம்சம் எனக்கு. 

நமக்கு ஏற்றமாதிரி  இராமயணம் மாதிரி நீண்டதாக இல்லாமல், திருக்குறள் மாதிரி சிக்கென்று சீக்கிரமாக சுருக்கமாக ஆனால் அதே பயன் தரக்கூடிய பூஜை ஏதாவது இருக்கா என்று கேட்டேன். அதற்கு என் மற்றொரு தோழி, “ சித்ரா பெளர்ணமி அன்று தான் சித்திர குப்தர் பிறந்தார். அன்று சக்கரைப் பொங்கலும், தயிர் சாதமும் செய்து வைத்து, புது நோட்டு புது பேனா வைத்து சாமி கும்பிட வேண்டும்.  அப்பொழுது, “மலையதன்னை பாவத்தை கடுதனையாக எழுதி எனக்கு அருள் புரி,” என்று சித்ரகுப்தரை வேண்ட வேண்டும் என்று கூறினாள். ”முன்பெல்லாம் கொத்தோடு மாங்காயும், குலையோடு தேங்காயும் வைத்து பூஜை செய்வோம். இப்பொழுதெல்லாம் அதற்கு எங்கே போவது. இப்படி செய்தால் போதும் ,”என்றும் கூறினாள். இது எனக்கு மிக எளிதான ஒன்றாக தோன்றியது. ஒரே ஒரு சந்தேகம் மட்டும் தோன்றியது. நோட்டு வைப்பது நம்முடைய பாவ புண்ணிய கணக்கை புது கணக்காக எழுதுவதற்கு. அப்போ வீட்டுக்கு ஒரு நோட்டா, இல்லை ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு நோட்டா ?? பரவாயில்லை ஒரு நோட்டை குடுப்ப பாவ புண்ணிய வரவு செலவு நோட்டாக அவர் வைத்துக் கொள்ளட்டும் இல்லையென்றால்  சித்ர குப்தரே ரொம்ப குழம்பி விடுவார் என்று முடிவு செய்தேன். 

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. இன்றோ ஞாயிற்றுக்கிழமை. காமாட்சி, மீனாட்சி இல்லாமல் சாப்பாடு வீட்டில் இருப்பவர்களுக்கு இறங்காது. இப்பொழுது நான் எப்படி இவர்களை சக்கரைப் பொங்கலுக்கும், தயிர் சாதத்திற்கும் சம்மதிக்க வைப்பது? முதலில் சித்ரா பெளர்ணமியை பற்றி ஒரு க்ளாஸ் எடுத்தேன். சித்ர குப்தர் யார்,  அவர் தொழில் என்ன என்பதெல்லாம் போகிற போக்கில் எனக்கு தெரிந்த ஓரிரு விஷயங்களை சொன்னேன். அப்புறம் இன்று எப்படி சாமி கும்பிட வேண்டும், எதற்காக புது நோட்டும் பேனாவும் வைத்து வணங்க வேண்டும் என்று எல்லா கதையும் கூறி , இன்று சைவ உணவு தான் செய்யப்போகிறேன் என்ற குண்டை தூக்கி போட்டேன். கணவர் அவ்வளவாக அதிர்ச்சி அடையவில்லை. மகன் தான், you disappointed me amma,” என்று சற்றே சுனக்கமாக கூறினான். நானும் , தேங்காய் சாதம், சக்கரைப்பொங்கல், தயிர் சாதம், அவரைக்காய் பொரியல், தேங்காய் துவையல் என்று செய்தேன். இந்த மாதிரி சாப்பாடு செய்தால் சித்ர குப்தருக்கே போர் அடித்து புது நோட்டில் நம் பாவக்கணக்கில் ஏதாவது எழுதி விடுவாரே என்று நினைத்து கொஞ்சம் மசால் வடையும் செய்தேன். சாமியும் குளிரும், வீட்டில் உள்ள ஆசாமிகளும் குளிரும்!

செய்த உணவை சாமிக்கு வைத்து சூடம் காண்பித்து நெய்வேத்தியம் செய்வதற்குள் மகனின் கை மசால் வடையை நோக்கி சென்றது. “சிறிது நேரம் பொறுடா, சித்ர குப்தரே இன்னும் இதை பார்த்து இருக்க மாட்டார். அவர் பார்க்கட்டும் அப்புறம் நீ சாப்பிடலாம்,”என்று கூறி அடக்கி வைத்தேன். நெய்வேத்தியம் செய்தப் பின் எல்லோரும் அமர்ந்து மதிய உணவை உண்டோம். பெளர்ணமி நிலவொளியில் உண்ண வேண்டியதை உச்சி வெயிலில் வீட்டிற்குள் அமர்ந்து உண்டோம். வெயிலும் பளீரென்று தான் இருந்தது . என்ன நிலவொளி போல் குளுமையாக இல்லை அவ்வளவுதான். தென்னை கீற்றிடை வரும் நிலவொளியாக இல்லாமல் சன்னல் திரைச்சீலை வழி வந்த சூரிய வெளிச்சமா இருந்தது. சித்ரா பெளர்ணமி கொண்டாட்டம் இனிதே முடிந்தது! 

இம்மாதிரி பண்டிகைகளே நம்  வாழ்க்கையை ருசியாக்குகின்றன. இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியமே இல்லாமல் ஒரே சீராக போவது போல் இருக்கும். கடிகாரம் மட்டும் இல்லை, நாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம் . ஆனாலும் இது போன்ற நம்முடைய பழக்க வழக்கங்களை ஓரளவாவது செய்வதால் நமக்கு வாழ்வின் மீது ஒரு பிடித்தம் ஏற்படும். ஒரு எதிர்பார்ப்பு உண்டாகும். நேரம் இல்லை என்ற காரணத்தினால் இப்படி பட்ட சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைப்பதால் நம்முடைய சந்ததியருக்கும் நம் பழக்க வழக்கங்கள் தெரியாமல்  போகும் . அது மட்டுமில்லாமல் நமக்கும் இவை ஒட்டிய அழகிய நினைவுகளும் மறைந்து போகும். முடிந்த வரை நம்மால் முடிந்தவரை இவற்றை பின்பற்றுவதால் நம்முடைய கலாச்சாரம் மட்டுமல்ல, நம்முடைய சந்தோஷங்களும் காக்கப்படும்.

சாயங்காலம் உலா வரப்போகும் பெளர்ணமி நிலாவை பார்க்க காத்துக்கிடக்கிறேன் , அழகிய நினைவுகளோடு!!!!