Saturday, May 5, 2018
வாசிப்புப் பயணம்
ஒரு வழியாக இன்று நூலகம் சென்று வந்தேன். எனக்காக நூலகம் சென்று எத்துனை வருடங்கள் ஆகின்றன என ஞாபகம் இல்லை. வாசித்தல் பொருத்த வரை என் வாழ்வில் திமு , திபி என இரண்டு காலமாகப் பிரிக்கலாம். இந்நேரம் நீங்கள் திமு, திபி க்கு அர்த்தம் கண்டு பிடித்திருப்பீர்கள். ஆமாம், திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் தான். திருமணத்திற்கு முன் பொட்டலம் கட்டி வரும் காகிதம் கூட விடமாட்டேன். எல்லாவற்றையும் படித்துவிட்டுத் தான் கிழிப்பேன்.திருமணத்திற்குப் பின் எந்த காகிதம் கிடைத்தாலும் கிழித்து துடைப்பதோடு சரி.
குழந்தைகள் என்று ஆனப்பின் அவர்களை நூலகம் அழைத்துச் செல்ல ஆரம்பித்தேன். அவர்களோடு சேர்ந்து Fairy tales முதல், bedtime கதைகள், தாமஸ் எஞ்சின் கதைகள், Barbie கதைகள் , விக்ரமாதித்யன் கதைகள், தெனாலி ராமன் கதைகள், குழந்தைகளுக்கான, இராமயணம், மகாபாரதம் என்று அவர்களுக்கு பிடித்தமான புத்தகங்களுடனே என் பயணமும் தொடர்ந்தது. எனக்கென்ற விருப்பு வெறுப்பு இல்லாமல் போனது. அவர்களுக்கு படித்து காண்பிப்பதிலேயே என் வாசித்தல் ஆசை நிறைவேறியது. ஒரு சில வருடங்களில் அவர்களாகவே படிக்க ஆரம்பித்தப் பின் என் வாசித்தல் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கணவரும், குழந்தைகளும் புத்தகப் புழுக்கள். குழந்தைகளை புத்தக உலகிற்கு அறிமுகப்படுத்தி அதில் அவர்களுடன் சில வருடங்கள் பயணித்த என்னால் அவர்களைப்போல் புத்தகம் படிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக முடியவில்லை. காரணம் அவர்களுக்கு நினைத்த பொழுது சாப்பாடும் மற்ற பிற தேவைகளும் தானாக நடந்தது. எனக்கு அப்படி இல்லை. கணவர் கூறுவார், “வீட்ல இவ்ளோ புக்ஸ் இருக்கு இல்ல படிச்சா என்ன?” என்று. அதற்கு நான்,” நான் படிக்க ஆரம்பிச்சா வீட்டு வேலையை யார் செய்வாங்க? நீங்கல்லாம் போடுற குப்பையை யார் சுத்தம் செய்யறது? யார் சமைப்பா, துணி துவைப்பா, பாத்திரம் கழுவா?”என்று என் இராமயணத்தை ஆரம்பிப்பேன். ஏண்டா இவளை வாசிக்க சொன்னோம் என்று அவரும் பேசாமல் இருந்து விடுவார். எனக்கு ஞாபகம் இருக்கிறது. என் அம்மாவும் ஒரு புத்தகப் புழு. புத்தகத்தை கையில் எடுத்துவிட்டால் சுற்றி என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரியாது. பல நாட்கள் வேலை முடிந்து வீடு வரும் அப்பா கையில் புத்தகத்தோடு அமர்ந்திருக்கும் அம்மாவை பார்த்துவிட்டு,”கீதா நீ வந்து சாப்பாடு எடுத்து வைமா. உன் அம்மா IAS examக்கு படிக்கிறா,” என்று கிண்டலும் கோபமுமாக கூறுவார். பல நாட்கள் பால் பொங்கியதும், சட்டி காய்ந்து தீய்ந்த கதைகளும் உண்டு. என் அம்மாவால் அப்படி புத்தகத்துள் லயித்து போய்விட முடியும். எங்கள் வீட்டுக்கு இப்பொழுது வந்தாலும் என் கணவர் அம்மாவிற்கென்று புத்தகங்களை எடுத்து கொடுப்பார். இருவரும் பேசும் ஒரே பொது விஷயம் புத்தகங்களைப் பற்றியதே. ஆனால் என்னால் மட்டும் ஏன் அப்படி இருக்க முடியவில்லை. என்னை ஒரு பெரிய குடும்ப இஸ்திரியாக நான் காட்டிக்கொள்ள முற்படுகிறேனா??அப்பொழுதெல்லாம் புத்தகம் ஒன்றே பிரதான பொழுது போக்கு அம்சமாக இருந்தது. இப்பொழுதுதான் ஆயிரம் பொழுது போக்கு அம்சங்கள் கொட்டி கிடக்கின்றதே!
என் உள் மனதிற்கு தெரியும் இதெல்லாம் ஒரு சப்பக்கட்டு காரணம் தான் என்று. உண்மையில் எனக்கு வாசித்தலில் நாட்டம் இல்லாமல் போய்விட்டது. வீட்டு வேலையை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அக்கடா என்று எந்தவித சிந்தைனையும் இன்றி உட்காரவே பிடித்திருந்தது. வருடங்கள் உருண்டோடின. வீட்டில் ஒரு சிறு நூலகமே உருவானது. என் வேலை புத்தகங்களை துடைத்து வைப்பதும், ”எதற்கு இத்துனை புத்தகங்களை வாங்கி இடத்தை அடைக்கிறீர்கள்”, என்று ஆதங்கப்படுவது மட்டும் தான்.
எங்காவது பயணம் செய்யும் போதெல்லாம் நானும் ஒரு புத்தகத்தை என் கைப்பையில் எடுத்துச் செல்வேன். ஆனால் ஒரு பக்கம் கூட படிக்காமல் பத்திரமாக திரும்பி எடுத்து வந்துவிடுவேன். அது எனக்கு ஒரு தற்காப்பு ஆயுதம் மாதிரி அல்லது security blanket மாதிரி என்று கூட கூறலாம். நாள் தவறாமல் செய்தித்தாள் படித்துக் கொண்டு இருந்தேன் . ஆனால் அதில் வரும் செய்திகள் முக்கால்வாசி மனதிற்கு அழுத்தத்தை கொடுப்பதாகவும், எது உண்மை எது பொய் என்று தெரியாததாலும் அதை வாசிப்பதையும் விட்டு விட்டேன்.
வயது ஆக ஆக கண்ணாடி இல்லாமல் படிப்பதும் சிரமமாக ஆனது. வாட்ஸ் ஆப் வந்ததிலிருந்து கண் இன்னும் மோசமானது தான் மிச்சம். சில வரிகளே படிக்கும் பொறுமை. அதிகமாக இருந்தால் வாசிக்க பொறுமை இருப்பதில்லை. நான் ஏதோ இப்படி எல்லாம் கிறுக்குவதால் சிலர் நான் வாசிக்கும் பழக்கம் உள்ளவள் என்று தவறாக நினைத்துக்கொண்டு கேட்பார்கள். அவர்களிடம், “ நான் எழுதுவது என் உணர்வுகளை , என் எண்ணங்களை வெளி கொணர்வதற்கே. மற்றபடி நீங்கள் நினைப்பது போன்று நான் ஒன்றும் நிறைய புத்தகங்கள் வாசிப்பவள் அல்ல. நான் ஒரு காலி பெருங்காய டப்பா,”என்று உண்மையை ஒத்துக் கொள்வேன். சிறு வயதில் எனக்கு நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அந்த ஆசையை என் குழந்தைகளுக்குள் கடத்தியப்பின் நான் அதைப்பற்றி மறந்தே போனேன்.
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் உடைய என் தோழிகளை பார்த்தால் எனக்கு ஆச்சரியமாகவும் சில நேரங்களில் பொறாமையாகவும் கூட இருக்கும். இவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று நினைப்பேன். நான் சோம்பேறி என்பதை ஒத்துக் கொள்ள என் மனம் இடம் தராது. இதில் என்ன ஒரு விஷயம் என்றால் நான் எழுதுவதையே நான் திரும்பி படிக்க மாட்டேன். பல தோழிகள் நல்ல புத்தகங்களை எனக்கு பரிந்துரைப்பார்கள். நான் படிக்காமல் அவர்களிடம் அதைப்பற்றி கேட்டே தெரிந்து கொள்வேன். புத்தகங்களைப் பற்றி ரொம்ப பேசுபவர்கள் மத்தியில் நான் மெளன சாமியாரினி ஆகி விடுவேன். Silence is the best response என்று கடைப்பிடிப்பேன்.
முன்பெல்லாம் நேரம் கிடைக்கும் பொழுது எங்காவது mallக்கு சென்று சுத்திவிட்டு வருவேன். இப்பொழுது அதிலும் நாட்டம் இல்லை. பேசாமல் வீட்டில் இருப்பதே மேல் என்று தோன்றுகிறது. சரி வீட்டில் இருந்து கொண்டு என்னதான் செய்வது என்று தோன்றியது. தொலைகாட்சியில் வரும் தொடர்களைப் பார்க்கவும் இப்பொழுது பொறுமை இல்லை. இருக்கும் நேரம் வாட்ஸ் ஆப்பில் மூழ்கி போவதாகவே இருந்தது. ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்று நினைத்து அவ்வப்பொழுது வரைய ஆரம்பித்தேன். அதையும் எவ்வளவு நேரம் தான் செய்வது. பேசாமல் நாம் மீண்டும் வாசித்தல் பழக்கத்தை பழக்கிக் கொண்டால் என்ன என்று தோன்றியது.
என் பள்ளித்தோழிகளிடம் யாருக்கெல்லாம் வாசிக்க ஆசை என்று கேட்டேன். என்னைப் போலவே நிறைய பேருக்கு அந்த பழக்கம் விட்டுப் போயிருந்தது. ஒரு சிலர் அதை விடாமல் செய்து கொண்டு இருந்தார்கள். முதலில் சிறு கதையில் ஆரம்பிப்போம் என்று நானும் என் தோழிகள் சிலரும் முடிவு செய்தோம். எடுத்த உடனே நாவல் படிக்க ஆரம்பித்துவிட்டால் ஒழுங்காக செய்ய மாட்டோம். தினம் ஒரு சிறு கதையாவது படிக்க ஆரம்பிப்போம் என்று நினைத்து சுஜாதாவின் சிறு கதைகள் படிக்க முடிவு செய்தோம். ஆன்லைனில் படிக்கலாம் என்றால் அந்த வெளிச்சம் கண்ணுக்கு எரிச்சலைத் தந்தது. முப்பது நாட்கள் தினம் ஒரு கதை என்று படித்துவிட்டோமேயானால் பின்னர் நமக்கு வாசிக்கும் பழக்கம் மீண்டும் வந்துவிடும் என்று முடிவு செய்து ஆரம்பித்தோம். சில தோழிகள் நல்ல கதைகளை பரிந்துரை செய்தார்கள். படிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களிலேயே சிலர் புல்லெட் ட்ரெயின் வேகத்தில் போனார்கள். நான் மட்டும் கூட்ஸ் வண்டி வேகத்திலேயே இருந்தேன்.
முதல் மூன்று நாட்கள் நான் தினம் ஒரு கதை என்று படுக்க போகுமுன் Ipadல் வாசித்தேன். நான்காம் நாள் என் வேதாளம் முருங்கைமரம் ஏறி விட்டது. Ipadயை கையில் பிடித்துக் கொண்டு படிப்பது கடினமாக இருப்பது போல் தோன்றியது. மேலும் அதில் scroll செய்து செய்து படிப்பது வேறு பிடிக்கவில்லை. எனவே நூலகம் சென்று புத்தகம் எடுத்து வந்து படிக்கலாம் என்று நினைத்து இன்று காலை முதல் புறப்பட ஆரம்பித்தேன். “வீட்ல இவ்வளவு புக்ஸ் இருக்கறப்ப எதுக்கு நீ லைப்ரரி போற,” என்றார் கணவர். ”வீட்டில் இருக்கும் புத்தகம் என்றால் இரண்டு நாட்கள் புரட்டிவிட்டு தூக்கி போட்டு விடுவேன். நூலகத்திலிருந்து எடுத்து வந்தால் படித்து முடிக்க வேண்டுமே என்ற ஒரு commitment இருக்கும் ”,என்றேன். எத்துனையோ முறை நூலகத்திலிருந்து எடுத்து வந்த புத்தகங்களை பையில் இருந்து கூட எடுக்காமல் திருப்பி கொடுத்ததுண்டு. இம்முறை அப்படி செய்யக்கூடாது என்று ஒரு சபதம் எடுத்து இருக்கிறேன்.வழக்கமாக ஓரிரு பக்கங்கள் புரட்டிய உடனேயே தூங்கிப் போவேன். சில நேரம் தூக்கம் வராவிட்டால் ஏதாவது புத்தகத்தை எடுத்து ஒரு சில வரிகள் படித்தால் போதும் , உடனே தூங்கி போவேன். என் கணவர் எனக்கு நேர் எதிர். நல்ல புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் முடிக்கும் வரை தூங்க மாட்டார்.
காலை வேலையை முடித்து விட்டு போகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள் மதிய உணவு வேளை வந்துவிட்டது. மதிய உணவு முடித்துவிட்டு போகலாம் என்று நினைத்தேன். அது முடிந்தவுடன், உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று உறக்கம் வந்தது. சாயங்காலம் போகலாம் என்றால் டீ நேரம். அதோடு அக்னி நட்சத்திரம் முதல் நாள் வேறா வெயில் பின்னி எடுத்தது. வெயில் தாழ்ந்து போகலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் தோழியிடம் இருந்து போன் வந்தது. அப்புறம் கேட்க வேண்டுமா? அந்த போன் கச்சேரி ஒரு மணி நேரம் நடந்தேறியது. மனதிற்குள் ஒரு வைராக்கியம். இன்று எந்நேரம் ஆனாலும் நூலகம் சென்று புத்தகம் எடுத்து வரவேண்டும் என்று. அப்படி இப்படி ஒரு ஏழு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினேன்.
நூலகம் அடைந்த பொழுது மணி ஏழரை இருக்கும். உள்ளே நுழைந்த எனக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. எந்த புத்தகத்தை எடுப்பது என்றே பிடிபட வில்லை. சுஜாதாவின் சிறுகதைகள் தொகுப்பு அங்கு இருக்க வில்லை. நூலகத்தில் பலர் புத்தகங்களில் மூழ்கி கிடந்ததை பார்க்கையில் எனக்கு என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. பலர் அவர்களை சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியாமல் புத்தகத்தில் ஊன்றி இருந்தார்கள். எனக்கு வாசிக்கும் பொழுது concentration இருப்பதே இல்லை. படிக்கும் போதே ஆயிரத்தெட்டு சிந்தனைகள்- என்ன சமைப்பது, மகள் சாப்பிட்டு இருப்பாளா, காய்கறி வாங்க எப்போது போவது என்று மூளைக்குள் ஒரு நாடகம் அரங்கேறிக்கொண்டே இருக்கும். . சில நேரம் என்ன வாசித்தேன் என்பதே எனக்கு நினைவுக்கு வராது. கதையை மறந்து விடுவேன். கதாபாத்திரங்களை மறந்து போவேன். நான் சிறிது நேரம் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தேன். பின் எனக்கு பரிச்சயமான வைரமுத்து, மற்றும் ஜெயமோகனின் புத்தகங்களை எடுத்துக் கொண்டேன். பின் ஆங்கில புத்தகம் ஒன்றையும், இரண்டு சமையல் புத்தங்களையும் எடுத்துக் கொண்டேன். நூலகத்தின் உள் இருக்கும் பொழுது அப்படி ஒரு அமைதியான மன நிலை. அந்த புத்தகங்களை தொட்டு பார்க்கும் பொழுதே அப்படி ஒரு சுகம். பக்கங்களை புரட்டிய பொழுது நானும் புத்திசாலி என்ற ஒரு எண்ணம் தோன்றியது. இதை எப்படி இத்துனை வருடங்கள் அனுபவிக்காமல் விட்டுவிட்டேன்?
எப்படியோ இன்றைக்கு என் mission accomplished. வெற்றிகரமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீடு வந்தாகி விட்டது. புத்தகங்கள் பையில் இருந்து வெளியில் வந்தாகி விட்டன. என் நூலகப் பயணம் பற்றி பதிவும் எழுதியாகிவிட்டது. . இத்தோடு இல்லாமல் ஒழுங்காக இந்த புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்தித்து என் வாசிப்பு பயணத்தை புதிதாய் தொடங்க இருக்கின்றேன்.
காலையில் இருந்து “நான் லைப்ரரி போறேன் நான் லைப்ரரி போறேன் என்று தண்டோரா வேறு அடித்து விட்டேன். மகன் வேறு, “ லைப்ரரிக்கு volunteering செய்ய போறியாமா,”என்று வேறு கேட்டு மானத்தை வாங்கி விட்டான். அவனைப் பொறுத்த வரை நூலகத்திற்கு நான் சென்றாலும் அது புத்தகங்களை அடுக்கி வைக்கும் வேலைக்குத்
தான் என்று முடிவு செய்து இருந்தான். “இல்லை , நான் வாசிக்க புத்தகங்களை எடுத்து வந்து இருக்கிறேன்,”என்று கூறியவுடன் அவனுக்கு ஒரே ஆச்சரியம். “எங்கே காட்டு,” என்று நான் எடுத்து வந்த புத்தகங்களை பார்த்து நான் சொல்வது உண்மை என்று உறுதி செய்து கொண்டான். எடுத்து வந்த புத்தகங்களை படிக்கா விட்டால் மகனின் கிண்டலுக்கு நான் ஆளாகி விடுவேன். அதற்காகவாவது படிக்க ஆரம்பிக்க வேண்டும். வேறு வழி இல்லை என்றால் படிப்பது போன்று நடிக்கவாவது செய்ய வேண்டும்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment