ரசித்து பார்த்தது:
நேற்றும் சாங்கி ராமர் அழகாகவே அலங்கரிக்கப்பட்டிருந்தார். என்றைக்குமே அவரின் அழகிற்கு குறைவில்லைதான். நேற்று பிரதோஷம் ! பிள்ளையார் , உயர்ந்து நிற்கும் ஹனுமன், சிவன், பார்வதி, என்று எல்லோருக்கும் அழகான அலங்காரம். ஒவ்வொரு சந்நிதியாக கும்பிட்டபடி ராமர் சந்நிதிக்கு வந்தேன். அங்கு கண் மூடி ஓரிரு நிமிடங்கள் என் பிராத்தனையை முடித்து விட்டு கண் திறந்து பார்த்த பொழுது என் எதிரில் ஒரு முப்பது , முப்பத்தி மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார். அவர் பார்க்க சிரித்த முகமாக , அழகாக இருந்தார். மேல் பாதி உடம்பு சற்றே முன்னோக்கி குனிந்தும் , குனியாதாது மாதிரியும், இரு கரங்களையும் குவித்தபடி நின்று கொண்டிருந்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. அது அவரின் கண்களில் பிரபலித்தது. உதடுகள் ஏதோ முனுமுனுத்தபடி இருந்தன. அருகில் அவரின் கணவர் அவர்களின் இரண்டு வயது குழந்தையை தூக்கி வைத்துக்கொண்டிருந்தார்.
இந்த பெண்மணி சிரித்தபடியே ராமரை பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார். கண்டிப்பாக அவர் ஏதும் கோரிக்கை வைக்கவில்லை. அவரின் கண்களில் ஒரு பரவச நிலை தெரிந்தது. ராமரை அவர் ஆசையாக பார்த்தார். அவர் ராமரிடம், “ராமா உன் கண்கள் ஏன் இவ்வளவு அழகாக இருக்கிறது? உன் உதடுகள் எப்படி இப்படி ஒரு வசீகரிக்கும் புன்முறுவல் பூக்கின்றது? உன் உடையின் நிறம் மிக அழகாக உள்ளது, உன் பூ மாலையும், பூ அலங்காரமும் கண்களுக்கு விருந்தாய் இருக்கிறது’” என்று ராமரின் அழகை அவருக்கே வர்ணித்தது போல் இருந்தது. அப்பெண்மணியின் உதட்டில் தவழ்ந்த புன்னகை சிறிதளவு கூட மாறவில்லை. அருகில் யார் இருக்கிறார்கள், தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்ற கவலை இல்லை. அவர் பார்வையில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு ஐந்து நிமிடங்கள் சிரித்த முகத்துடனே ராமரை கண்கொட்டாமல் பார்த்து , ராமர், சீதா, லக்ஷ்மனன், ஹனுமன் சகிதமாக அனைவரின் அழகையும் தனக்குள் உள்வாங்கி மனதில் நிறுத்திக்கொண்டு மகிழ்வாக அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.அவருக்கும் , அந்த ராமருக்கும் இடையே இருந்த உறவை என்னால் காணமுடிந்தது. நானும் அவரைப்போலவே சில நிமிடங்கள் மனதில் இருந்த எல்லா எண்ணங்களையும் துடைத்துவிட்டு ராமரின் அழகை ரசித்தேன்.
எனக்கு என்ன ஆச்சரியமாக இருந்தது என்றால், பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் பலர் , நான் உட்பட ஒரு வித கோரிக்கையுடனேயோ அல்லது பிராத்தனை பலித்ததுக்கான நன்றியை தெரிவிப்பதற்காகவோதான் செல்கிறோம். சில நேரங்களில் கடவுளிடம் சண்டைப் போடுவதற்கும், கோபித்துக் கொள்வதற்கும் கூட கோவிலுக்கு செல்பவர்கள் இருக்கிறார்கள்..சந்நிதியில் அழுபவர்களை பார்த்து இருக்கிறேன்.சாமி வந்து ஆடியவர்களை பார்த்து இருக்கிறேன். சாமியை பார்த்து மனம் உருகி பாடுபவர்களை பார்த்து இருக்கிறேன் . ஆனால் சத்தமின்றி மெளனமும் இன்றி ஒருவித ரகசிய உடன்படிக்கையில் கடவுளுடன் உறவாடிஅந்த அழகிய உடல் மொழியை யாரிடத்திலும் நான் கண்டதில்லை .நான் சில கோவில்களில் நூற்றியெட்டு சுற்று சுற்றுபவர்களைப் பார்த்திருக்கிறேன். மாரதானில் ஓடுபவர்களைப்போல் கடமைக்காக சுற்றுவார்கள். பக்கத்து வீட்டுக்காரன் விரதம் இருக்கிறார் என்று விரதம் இருக்கிறவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். என் குடும்பத்தாருடன் நான் கோவிலுக்கு போகும் போதெல்லாம் எனக்கு பத்திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தான் கொடுப்பார்கள். அதற்குள் நான் ஜெட் வேகத்தில் என் “டெம்பிள் விசிட்டை” முடித்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் இன்று நான் பார்த்த அந்த பெண்மணி அமைதியாக , எந்த வித வேண்டுதலும் இன்றி ராமரின் அழகை ரசிப்பதற்காகவே கோவிலுக்கு வந்தது போல் இருந்தது. ”சாமி கும்பிடும்போது கண்களை மூடிக்கொள்ளாதீர்கள். நன்றாக கண் திறந்து சாமியை பார்த்து கும்பிடுங்கள்”’ என்று நான் எங்கோ படித்திருந்தேன். நான் பொதுவாகவே சாமி கும்பிடும்பொழுது கண்களை மூடிக்கொள்வேன். அப்பொழுது தான் மனம் ஒரு நிலையில் இருக்கும் . வேறு எங்கும் வேடிக்கை பார்க்காது என்பதற்காக அப்படி செய்வேன். இப்பொழுதெல்லாம் ஒரிரு நிமிடங்கள் கண்களை திறந்து வைத்துக் கொண்டே சாமி கும்பிடுகிறேன். அப்படி செய்யும் பொழுது ஒருவித நிறைவு. அந்த பெண்மணியைப் போல் அமைதியாக கடவுளின் அழகை பார்த்து ரசித்து , அதை அவரிடமே பகிர்ந்து கொண்டது கிடையாது. இனி கோவிலுக்கு போகும் பொழுது கடவுளை அங்குலம் அங்குலமாக ரசித்து பார்க்க வேண்டும் என்று எனக்குள் எண்ணிக்கொண்டேன். மனிதன் மட்டுமல்ல கடவுளும் அவரின் அழகை வர்ணித்து “நீ அழகாய் இருக்கிறாய்”, என்று கூறினால் மயங்காமல் இருக்க வாய்ப்பில்லை!! ராமரின் உருவம் மனதில் அன்று பதியவில்லை. அந்த பெண்மணியின் அமைதியான தோற்றமும், ரசிக்கும் கண்களும், புன்முறுவல் பூத்த இதழ்களும், கூப்பிய கரங்களுமே என் மனதில் அன்று பதிந்தது!!
No comments:
Post a Comment