Saturday, October 17, 2015

தனிமை.....



வானம்
நிலவு
சூரியன்
பனை மரம்
ரோஜா
இவை யாவும்
ஒருமையிலும்
தனிமையிலும்
அழகு,
மனிதர்கள் மட்டும்
இதில் விதி விலக்கு........

Monday, October 12, 2015

குற்றமா?

வெளியில் வைத்து
அடை காத்தால்
மனித கழுகுகள்
கொத்திவிடும் என
பத்து மாதமும்
என்னுள் வைத்து
அடைகாத்தேன்.

நீ பூமியில் வந்து
விழுந்த நாள் முதல்
கண்விழித்து பாதுகாத்தேன்.
என் உலகம் நீயே ஆக
உலாவந்தேன்.

உன் குரலே நான்
ரசிக்கும் இசையானது.
என் கைப்பிடித்து
நடந்த போது உன் 
பிஞ்சு கைகளே
என் ஊன்று கோலானது.

உன்னுடன் விளையாடிய போதெல்லாம்
நானும் ஒரு குழந்தையேனேன்.

நட்சத்திரங்களுக்குள்
நீ நிலவாய்
ஜொலித்திட கனாக்கண்டேன்.

நீ ஏறிய படிக்கற்கள்
சரியா வண்ணம் 
தாங்கிப் பிடித்தேன்.

நீ கொண்டு வந்த
பரிசுக்கோப்பைகளை
கண்டு வானுயரம்
உயர்ந்து
பின் நிலம் வந்தடைந்தேன்.

நான் படிக்க முடியாததை
நீ உன் குறிக்கோளாய்
தெர்ந்தெடுத்த பொழுது
வியப்புற்றேன், ஆச்சரியப்பட்டேன்.

என் கனவை உன்னுள்
நானறியாமல் விதைத்துவிட்டேன்.
அதை நினைவாக்க 
நீ விழைந்த போது
என்னை மறந்தேன்.

இத்தனையும் ஒரு புறம் இருக்க,

உன் பாதை நோக்கி
தேசம் விட்டு,
என் கூட்டை விட்டு
நீ செல்லும்
நாள் வந்த போது,

விழியோரம் நின்ற
கண்ணீரை அணை போட்டு
தடுத்து விட்டு
பொய்யாக உதட்டோரம்
சிரிப்பை மலரச்செய்து
போய் வா மகளே
என்று வழியனுப்பி
வீட்டுக்கு வந்தவுடன்

அணை திறந்த வெள்ளமாய்
கண்ணங்களில்
கண்ணீர் 
கரைபுரண்டோட,
உன் புகைப்படம்
தடவி,
உன் படுக்கை தழுவி,
உன் வாசனை
வரும் என
உன் ஆடை முகர்ந்து
இந்த ஐந்து வருடமும்
எப்படி நகரும்
என காத்து இருக்க 
அறியாமல்
தூக்கம்
கண்களை தழுவாமல்
இரவு பகல் 
பாராமல் காத்து இருக்கின்றேன்...

தாயானது
குற்றமா?

உன்னை பெண் புலியாய்
வளர்த்தது
என் குற்றமா?

என் கனவை
உனக்குள் திணித்தது
என் குற்றமா?

இறக்கை முளைத்த பின்னும்
என் கூட்டுக்குள்ளேயே
உன்னை வைத்துக்கொள்ள
ஆசைப்படுவது 
என் குற்றமா?

எது குற்றம்?
என் மகளாக மட்டுமே
இருந்துவிடு என்ற 
பெருங்குற்றம்
புரியாதவைரையில்
தாய்மை பிறவியில்
யாதும் 
நியாயமே!!!

Saturday, April 11, 2015

மாற்றம்

சூரியன் உதிக்கும் முன்
எழுந்து, நீராகாரம் குடித்து,
ஏரு தூக்கி
வயல் நோக்கி
கால் நடை போட்டு
உழுது விட்டு
கம்பங் கூழும்
பச்சை வெங்காயமும்  உண்டு
உடலுக்கு உரம் சேர்த்து
களைத்துப் போய்
மாலை வீடு வந்து
திண்ணையில் பழங்கதை பேசி
இருட்டிய உடன் உணவு உண்டு
உடன் தூங்கினான் என் பாட்டன்.

சூரியன் விழித்தவுடன்
தானும் விழித்து
உடலுக்கு வலு சேர்க்க
நடை பயிற்சி செய்து
செய்தித்தாள் வாசித்து
டிகிரி காப்பி அருந்தி
இரண்டு இட்டிலியும் 
கெட்டிச் சட்டினியும் உண்டு
பை தூக்கி
வேலைப் பார்க்க
அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பி
பிள்ளைகளுடன் 
பேசி மகிழ்ந்து
எட்டு மணிக்கு
பசி தீர்த்து,
பத்து மணிக்கு
உறங்கச் சென்றான்
என் தந்தை.

சூரியன் நன்றாக
உதித்தப் பின்
கண் கூசுகிறதென்று
திரைச்சீலையை நன்றாக 
இழுத்து விட்டு
போர்வையால் முகத்தை மூடி
தூங்கியது பத்தாது என்று
இன்னும் அரைமணி நேரம் 
உறங்கி
பின், அவசர, அவசரமாக
பாதி வெந்த சீரியலை
முழுங்கி விட்டு
அலுவலகம் சென்று
இரவு உறங்கும் நேரம் 
வந்தப் பின் 
வீடு திரும்பி
தொலைக்காட்சி முன் 
அமர்ந்து
தட்டில் இருப்பது
என்ன என்று
அறியாமல் எடுத்து விழுங்கி
தூங்கும் பிள்ளைகளை
தொட்டு முத்தமிட்டு
பேய்கள் வெளிவரும்
நேரம் பார்த்து
உறங்கச் செல்கிறோம்
நாம். 
உடல் பயிற்சியிலும்
அட்டவனை
மனைவி , மக்களுடன்
பேசி மகிழவும்
அட்டவனை
உண்ணும் உணவிலும்
அட்டவனை .


இதற்கெல்லாம் மகுடம்,
என் பிள்ளையோ,
சூரியன் தலைக்கு மேல்
வந்தவுடன் எழுகிறான்
தொலைபேசி ஒன்றிலேயே
உலக வேலையை
முடிக்கிறான்
நடை பயில மறக்கிறான்
உரையாட மறுக்கிறான்
திரையை பார்த்தே
வாழ்க்கையை வாழ்கிறான்
தவறி மனிதர்களை 
நேரில் பார்த்தால்
வேற்று கிரகவாசியென
தவிர்க்கிறான்........