Saturday, April 11, 2015

மாற்றம்

சூரியன் உதிக்கும் முன்
எழுந்து, நீராகாரம் குடித்து,
ஏரு தூக்கி
வயல் நோக்கி
கால் நடை போட்டு
உழுது விட்டு
கம்பங் கூழும்
பச்சை வெங்காயமும்  உண்டு
உடலுக்கு உரம் சேர்த்து
களைத்துப் போய்
மாலை வீடு வந்து
திண்ணையில் பழங்கதை பேசி
இருட்டிய உடன் உணவு உண்டு
உடன் தூங்கினான் என் பாட்டன்.

சூரியன் விழித்தவுடன்
தானும் விழித்து
உடலுக்கு வலு சேர்க்க
நடை பயிற்சி செய்து
செய்தித்தாள் வாசித்து
டிகிரி காப்பி அருந்தி
இரண்டு இட்டிலியும் 
கெட்டிச் சட்டினியும் உண்டு
பை தூக்கி
வேலைப் பார்க்க
அலுவலகம் சென்று
மாலை வீடு திரும்பி
பிள்ளைகளுடன் 
பேசி மகிழ்ந்து
எட்டு மணிக்கு
பசி தீர்த்து,
பத்து மணிக்கு
உறங்கச் சென்றான்
என் தந்தை.

சூரியன் நன்றாக
உதித்தப் பின்
கண் கூசுகிறதென்று
திரைச்சீலையை நன்றாக 
இழுத்து விட்டு
போர்வையால் முகத்தை மூடி
தூங்கியது பத்தாது என்று
இன்னும் அரைமணி நேரம் 
உறங்கி
பின், அவசர, அவசரமாக
பாதி வெந்த சீரியலை
முழுங்கி விட்டு
அலுவலகம் சென்று
இரவு உறங்கும் நேரம் 
வந்தப் பின் 
வீடு திரும்பி
தொலைக்காட்சி முன் 
அமர்ந்து
தட்டில் இருப்பது
என்ன என்று
அறியாமல் எடுத்து விழுங்கி
தூங்கும் பிள்ளைகளை
தொட்டு முத்தமிட்டு
பேய்கள் வெளிவரும்
நேரம் பார்த்து
உறங்கச் செல்கிறோம்
நாம். 
உடல் பயிற்சியிலும்
அட்டவனை
மனைவி , மக்களுடன்
பேசி மகிழவும்
அட்டவனை
உண்ணும் உணவிலும்
அட்டவனை .


இதற்கெல்லாம் மகுடம்,
என் பிள்ளையோ,
சூரியன் தலைக்கு மேல்
வந்தவுடன் எழுகிறான்
தொலைபேசி ஒன்றிலேயே
உலக வேலையை
முடிக்கிறான்
நடை பயில மறக்கிறான்
உரையாட மறுக்கிறான்
திரையை பார்த்தே
வாழ்க்கையை வாழ்கிறான்
தவறி மனிதர்களை 
நேரில் பார்த்தால்
வேற்று கிரகவாசியென
தவிர்க்கிறான்........

2 comments:

ஜோதிஜி said...

CEO, Ravichandran Family

இது தான் ஹைகூ

திண்டுக்கல் தனபாலன் said...

சரி தான்...!