Tuesday, July 9, 2019

ஜிகர்தண்டா மீன்ஸ்( means)????


Image result for jigarthanda picture

ஜிகர்தண்டா மீன்ஸ்( means)????
இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தேன். நல்ல பிரியாணி சாப்பாடு. ஒரு கட்டு கட்டிவிட்டு, பின் இனிப்பு பரிமாறும் இடத்திற்கு சென்றேன். வித விதமான இனிப்புகள். அதில் ஒன்று ஜிகர்தண்டா. பார்த்ததுமே எச்சில் ஊறியது. ஒரு கப் ஜிகர்தண்டாவை எடுத்துக்கொண்டு அங்கேயே நின்று ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனை முடித்துவிட்டு மீண்டும் இன்னொரு கப் சாப்பிடும் பேராசை!.
இப்பொழுதெல்லாம் ரொம்பவும் இனிப்பாக இருக்கும் பதார்த்தங்களை சாப்பிட முடிவதில்லை. வயசு கோளாறா அல்லது வயிறு கோளாறா என்று யோசிக்க வைக்கும் நிலமை. அதுவும் வெள்ளை சக்கரை உடம்புக்கு நல்லதில்லை என்று எல்லா மூலை(ளை)யிலும் கூப்பாடு வேறு. அதனாலேயே சக்கரை அளவை குறைத்து சாப்பிட்டு பழகியாகிவிட்டது.
பத்தாததற்கு எனக்கு ஒரு தோழி இருக்கிறார். அவர் மிகவும் கம்மியாக சக்கரை சாப்பிடும் வழக்கம் உடையவர். அவர் வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் எனக்கு ஆசையாக இஞ்சி டீ போட்டு கொடுப்பார். இஞ்சி நிறைய போடுவார் ஆனால் சக்கரையை அளவாக, அதுவும் மிகவும் அளந்தே போடுவார். எனக்கு பத்தாது தான். ஆனால் பழகிக் கொண்டேன். நாவின் ருசி நாம் பழக்கும் பழக்கத்திற்கு உட்படும் ஒன்று தானே!! அதுவும் உடம்பிற்கு உகந்தது அல்ல என்று தெரிந்த பின் அதை குறைத்துக்கொள்ள பழகி விட்டேன். சிறு வயதில் என்னவோ எறும்பு மாதிரி சக்கரை நோக்கியே என் தேடல் இருக்கும். இப்பொழுதும் பிடிக்கும் ஆனால் திகட்டும் இனிப்புக்கள் பிடிப்பது இல்லை.
ஆனால் அன்றோ ஜிகர்தண்டாவை பார்த்தவுடன் எனக்குள் இருந்த சிறுமி விழித்துக்கொண்டு ”சாப்பிடு சாப்பிடு” என்று அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். அதற்கு நான் உடன் பட்டு விட்டேன். அதுவும் ருசியான பாய் வீட்டு பிரியாணிக்குப் பின் ஜிகர்தண்டா எவ்வளவு ருசியாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள். ”வா , வா” என்று என்னை அழைத்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது அந்த இடத்திற்கு இரு வேற்று மொழி இளைஞர்கள் வந்தார்கள். அங்கே ஜிகர்தண்டா பரிமாறிக் கொண்டிருந்தவரிடம் , “இது என்ன? என்று கேட்டார்கள். அவர் நம்மூர் மதுரைகாரர் போல். உடனே அவர்,” ஜ்ஜிகர்தண்டா” என்றார். ”ஜ்” ஐ சற்றே அழுத்தத்துடன். அந்த இளைஞர்கள் நம் வடிவேலைப்போல், “நான் ஜாக் ஆகிட்டேன்” , என்பதைப்போல் ஆச்சர்யத்துடன், பரிமாறியவரைப் பார்த்து,” வாட்? திஸ் இஸ் சிக்கன்?” என்றனர் . அதற்கு பரிமாறுபவர்,” இல்லை , இல்லை இது ஜிகர்தண்டா”, என்றார், சிறிய புன் முறுவலுடன். அருகில் இருந்த என் ஜிகர்தண்டாவை ருசித்துக்கொண்டே இந்த உரையாடலை கவனித்துக் கொண்டிருந்தேன். பின் அந்த இளைஞர்கள்,” ஓ, திஸ் இஸ் சிக்கன் இன் ஐஸ்?” என்றார்கள். கேட்டதோடு இல்லாமல் கப்புக்குள் தலையை விடாத குறையாக எங்கடா இதில் சிக்கன் பீஸே கானோம் என்று குணிந்து பார்த்து கண்களாலேயே ஆராய்ந்தார்கள். அய்யய்யோ கதை கெட்டுச்சு என்பதை போல் அந்த பரிமாறுபவர், “இல்லை இல்லை, திஸ் , ஐஸ், மில்க், மிக்ஸ்.ஜிகர்தண்டா. நோ சிக்கன் ஐஸ். ஒன்லி, ஐஸ், மில்க் மிக்ஸ்,” என்றார் அவருக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில்.
ஜிகர்தண்டாவிற்கு இப்படி ஒரு அவலம் நேர்ந்துவிட்டதே என்ற வருத்தம் அவருக்கு. ஜிகர்தண்டாவிற்கென்று ஒரு வரலாறே இருக்கிறது என்பது அந்த இளைஞர்களுக்கு எப்படித் தெரியப்படுத்த முடியும்.. ஜிகர்தண்டா விற்கும் கடைகளில் மொய்க்கும் ஈக்களைப்பற்றி என்ன தெரியும்! பால், நன்னாரி சிரப், பால் கோவா, வென்னிலா எஸன்ஸ், ப்ரெஷ் க்ரீம், சக்கரை,பாதாம் பிசின் எல்லாம் சேர்த்து செய்த கலவை அது என்று எப்படி விளக்குவார் அந்த பரிமாறுபவர். அப்படியே விளக்கினாலும், பாதாம் பிசின் என்றால் என்ன என்று கேட்டு தொலைத்து விட்டால்? அவர் பாடு திண்டாட்டமாகி விடாதா?
அவர் கொடுத்த விளக்கம் ஏதோ புரிந்த மாதிரியும், புரியாத மாதிரியும் இருந்த அந்த இளைஞர்கள், ஆளுக்கு ஒரு கப் ஜிகர்தண்டாவை கையில் எடுத்துக்கொண்டு, இதில் என்ன தான் இருக்கிறது பார்ப்போம் என்பதைப் போல அங்கிருந்து நகர்ந்து சென்றார்கள். பரிமாறியவர் கொஞ்சமாக இழுத்து மூச்சு விட்டு விட்டு, அடுத்து வந்தவர்களாவது இது என்ன என்று கேட்காமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தபடி தன் வேலையை செய்யத் துவங்கினார். ஜிகர்தண்டா சிக்கன் ஆன கூத்தை பார்த்து கொண்டிருந்த நான், என் ஒரு கப் ஜிகர்தண்டாவை முடித்தது கூட உணராமல் வெறும் கப்பை வாயில் வைத்து அன்னாத்தி குடிக்க முயன்று கொண்டிருந்தேன். அதனைப் பார்த்த பரிமாறுபவர்,” அக்கா, இன்னொரு கப் வேணுமா ?”என்று கேட்க, கொஞ்சமாக அசிங்கப்பட்டவளாக,”இல்லை, இல்லை, போதும் “, என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து, கேக் வைத்திருந்த இடத்தை நோக்கி போனேன்........

No comments: