பழசும் புதுசும்
புதிய துடைப்பம் வாங்கி வந்தவுடன் கூட்டிப்பார்த்த பொழுது தான் தெரிந்தது இத்துனை நாள் தேய்ந்து போன பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு எப்படி கூட்டி பெருக்கினேன் என்று! அப்பொழுதெல்லாம் அம்மா கூறுவாள், “ நீ இந்த சந்திரமதி கூட்டல் கூட்டுவதற்கு பதில் கூட்டாமலே இருக்கலாம், “ என்று. அப்படித்தான் நானும் இவ்வளவு நாட்களாக பழைய துடைப்பத்தை வைத்துக்கொண்டு நானும் கூட்டுகிறேன் என்று பேருக்காக, மேலாக கூட்டி இருக்கிறேன். புது துடைப்பம் வந்தவுடன் நம் வீட்டிலா இவ்வளவு குப்பை என்றுஆச்சரியப்படுமளவிற்கு இருந்தது. . வாழ்க்கையிலும் அப்படித்தான்! பழசே சிறந்தது என்று நாம் கிணற்றுத்தவளையாய் இருந்து விட கூடாது. புதுமையை ஏற்றுக்கொள்ளும் மனப்போக்கு எப்பொழுதும் இருத்தல் அவசியம். பழம் பெருமை பேசிக்கொண்டு அதையே பிடித்து தொங்கி கொண்டிருந்தால் நமக்கே தெரியாமல் நிறைய குப்பைகளை நம் வீட்டிலும், நாட்டிலும், மனதிலும் , வாழ்விலும் , நாம் சேர்த்துக் கொண்டே தான் இருப்போம். பழசை மறக்கக்கூடாதுதான் அதற்காக அதுவே உகந்தது என்று வாழ்க்கையில் பிடிவாதமாக இருக்கக்கூடாது. பழையன கழிதலும், புதியன புகுதலும் தான் முன்னேற்றத்தை நோக்கி மனித குலம் பயனிப்பதற்கான வழி. புதியதை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதனை தேவைக்கேற்ப பயன் படுத்தவும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். பயன் படுத்தாத புதியதும் ஒரு நாள் இத்துப்போன பழையதாகிவிடும். பழைய பஞ்சாங்கத்தை வைத்துக்கொண்டு இன்றைய கால நிலையை தீர்மானிக்க முடியாது. இன்றைய சூழ்நிலைக்கு தகுந்த புது பஞ்சாங்கமே இன்றைய நிலவரத்தை எடுத்துக் கூறும். பழையது ஒரு வழிகாட்டியே. அதுவே வழியாகாது! வாழ்விலும் சரி, அரசியலிலும் சரி, அறிவியலிலும் சரி, அறிவாற்றலிலும் சரி, கொள்கையிலும் சரி, கோட்பாடுகளிலும் சரி, உறவிலும் சரி, கல்வியிலும் சரி, வாழ்வின் எல்லா திசைகளிலும் புதுமையை இன்முகத்தோடு வரவேற்போம். பழமையை போற்றுவோம், புதியதை கொண்டாடுவோம்!
பிகு:எதை எதையோ கிறுக்கும் போதெல்லாம் படிக்காத கணவர் இந்த பதிவை உடனே படித்து விட்டு, “ இப்போ என் பர்ஸ்க்கு என்ன வேட்டு வைக்க இந்த பீடிகை போடுற? உன் வார்ட்ரோப் எதாவது மாத்த போறியா? என்று கேட்டு வைத்தார். ”நல்லதுக்கே காலம் இல்லை,” என்று ரொம்ப நல்லவளாக நடித்துவிட்டு நகர்ந்து விட்டேன். குறவனுக்கு தெரியுமாம் குறத்தி போடும் வேஷம்......
No comments:
Post a Comment