Tuesday, January 22, 2019

HOARDING......

HOARDING......
வெளியூரில் உள்ள மகளிடம் கேட்டேன்-” உனக்கு என்ன பொருள் வாங்கி வைக்க வேண்டும்? “என்று.அதற்கு அவள் கூறினாள்-” Mama I don”t want anything. I have everything I need. Last week I saw a you tube video in which a Japanese lady said how to de clutter the house. So I decided I won’t hoard things hereafter and would de clutter my room." எனக்கு கேட்க ஆச்சரியமாக இருந்தது. எனக்கு ஏன் இந்த அறிவு வர மறுக்கிறது?
Hoarding என்பது பொருட்களில் மட்டுமல்ல பல ரூபங்களில் நம்மை பேய்பிடியாய் பிடித்து ஆட்டுகின்றது. இருக்கும் புத்தகங்களை படிக்காமல் மேலும் மேலும் வாங்கி சேர்ப்பது. அதற்கு அறிவை வளர்த்துக்கொள்ளத்தானே இதனை செய்கிறேன் என்ற சப்பைக்கட்டு வேறு. பார்க்கும் சமையல் குறிப்பையெல்லாம் சேகரித்து வைத்துக்கொள்ளுதல். தெரிந்த சாம்பாரையும், ரசத்தையுமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமாக மனநிலைக்கு ஏற்றவாறு சமைக்கும் எனக்கு எதற்கு இத்தனை சமையல் குறிப்பு? அடுத்தது துணி பைத்தியம். அலமாரியில் இருப்பதையே ஒழுங்காக மடித்து வைத்து போட்டுக்கொள்ள நேரமும் இல்லை , போக வர இடமும் இல்லை. இதில் புது fashion என்று பார்ப்பதை எல்லாம் வாங்கி பத்திரமாக வைத்துக்கொள்வது.. மெஷின் தான் துணி துவைக்கிறது என்றாலும், அதனை காயவைத்து, மடித்து அவரவர் அலமாரியில் வைப்பதற்குள் ஒரு ராமாயணமே பாடிவிடுவேன். போட்டு பழசான துணியை விட பார்த்தே பழசான துணிதான் அதிகம். நம்மில் பலரை இந்த hoarding வலைக்குள் சிக்க வைப்பதே "SALE" என்ற வார்த்தை தான். விற்பவன் என்னவோ காசு வாங்காமல் சும்மா விற்பதைப் போல் வாங்கி வைத்து விடுகிறோம். அப்படி வாங்கும் பல பொருட்கள் வீட்டில் சும்மாவே தான் தூங்கி கொண்டிருக்கும்.
. Pinterest, Instagram, FB , whatsappல் பார்க்கும் கைவிணை பொருட்கள் செய்வது எப்படி, வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி, சிகை அலங்காரங்கள் செய்வது எப்படி, முக அலங்காரம் செய்வது எப்படி, நகை டிசைன், சாமி பாடல்கள், சுலோகங்கள் என்று எதை பார்த்து பிடித்து போனாலும் அதனை சேமித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் வேறு. நூறு விஷயங்களை save செய்து வைத்து இருந்தால் அதில் ஒன்றிரண்டு விஷயங்களைக்கூட திரும்பி பார்ப்பது கிடையாது. பொருட்களில் துவங்கி, பாடல்கள், செய்திகள், நண்பர்கள், என்று பல நிலைகளில் இந்த hoarding வியாதி நம்மில் பலபேரை வாட்டி வதைக்கிறது. இப்பொழுது கைத்தொலைப்பேசி காமிரா வேறு வசதியாய் போனது. ஜாக்கெட் டிசைன் , கோலம், பிடித்த ஓவியங்கள், கோவில் சுவற்றில் பார்க்கும் சுலோகங்கள், கோவில் சாமி சிலைகள் என்று எல்லாவற்றையும் படம் பிடித்து தள்ளி விடுகிறோம். அத்தனையும் சேமிப்பு வங்கியில் இருப்பது போல் பத்திரமாக இருக்கிறது.
என் அப்பா கூறுவார், less luggage more comfort. இந்த அறிவு எனக்கு எப்பொழுதுதான் வரப்போகிறதோ? என் மகளுக்கு சீக்கிரமே வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வரும் சந்ததியர் கட்டாயம் நம்மைப் போன்று சாமான்களைக்கட்டிக் கொண்டு வாழ்க்கையின் பாதி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக. முன்பை விட இப்பொழுது impulsive buying குறைந்து விட்டதுதான். அதற்கு காரணம் ஞானோதயம் அல்ல சுத்தம் செய்ய முடியாத நிலை. வயதாக ஆக கொஞ்சமாக சாமான்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ ஆசை வருகிறது. நடைமுறையில் எப்பொழுது சாத்தியப்படுமோ ? பொருட்களை மட்டுமல்ல,
ஆசைகளையும், கோபங்களையும், வெறுப்புக்களையும், வக்கிரங்களையும், hoarding செய்வதை விட்டு ஒழிக்க பழக வேண்டிய காலம் வந்து விட்டது.
பிகு: இன்று மனசாட்சியின் குத்துதலுக்கு உட்பட்டு பல நாட்களாக காத்துக்கிடந்த பேண்ட்டை ஒரு வழியாக எடுத்து மடித்து தைத்து விட்டேன். இப்படி பல வேலைகள் வீட்டில் hoard செய்யப்பட்டு என் தீண்டலுக்காக காத்துக்கிடக்கிறது. கண்டும் காணாமல் இருப்பதை விட தினம் ஒரு சிறு முயற்சியாவது செய்ய வேண்டும் என்ற முடிவுடன் என் தையல் வேலை இன்று இனிதே முடிந்தது.

Friday, January 18, 2019

மறுப்பக்கம்

மறுப்பக்கம்
காலை வெயில் உடம்பிற்கு நல்லதாம். எல்லோரும் கூவினார்கள் கேட்கவில்லை. டாக்டர் சொன்னவுடன் வேறு வழியின்றி நேற்று காலை வீட்டு வேலையை அப்படியே போட்டுவிட்டு ,என் உப்பரிகையை விட்டு கீழே இறங்கிச் சென்றேன். வெயில் கண்களை கூசும் அளவிற்கு சுல்லென்று அடித்தது. கையில் இருந்த கைதொலைப்பேசியை தடவியபடியே அங்கும் இங்குமாக மெதுவாக நடந்து கூலியில்லாமல் வெய்யிலின் சேவையை பெற்றுக்கொண்டேன். இந்த ஞானோதயம் முன்னமே வந்து இருந்தால் வலியில் இருந்து தப்பித்துக்கொண்டு இருந்திருக்கலாம் என தோன்றியது. வலி வந்த பின் சூரிய நமஸ்காரம். எட்டாவது மாடியில் இருந்து கீழே இறங்கி வர அலுப்பு. அது மட்டுமா, சிங்கப்பூர் வெயில் காலை வெயிலாக இருந்தாலும் கொளுத்தி எடுத்துவிடும். இதற்கு பயந்தே இறங்கமாட்டேன்.
வெய்யிலில் நடந்தபடியே போவோர் வருவோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். காலையில் எல்லோரும் அவசர அவசரமாக அலுவலகங்களுக்கு போய்க்கொண்டிருந்தார்கள். நானோ வேளை வெட்டி இல்லாதவள் போல் சூரியக்குளியல் எடுத்துக் கொண்டிருந்தேன். முடித்துவிட்டு வீடு திருப்பினால் அங்கு மலைப்போல் வேலை எனக்காக கைவிரித்து காத்துக்கிடக்கும். அருகில் இருந்த புள்வெளியில் ஒரு அழகாக சிறிய குருவி ஒன்று புற்களுக்கிடையே தன் காலை உணவை தேடிக்கொண்டிருந்தது. இப்படியும் அப்படியுமாக கொத்தி கொத்தி எதையோ சந்தோஷமாக தின்றுக்கொண்டிருந்தது.
அப்பொழுது ஒரு கருப்புவெள்ளை பூனை பதுங்கி பதுங்கி புல்லோடு புல்லாக மெதுவாக வந்து சிறிது தூரத்தில் அமர்ந்தது. நல்லா கொழு கொழு என்று இருந்தது. நம்மைப்போலவே பூனைக்கும் வெய்யில் தேவை படுகிறது போல என்று நினைத்துக்கொண்டே நான் குருவியையும், புனையையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். மெதுவாக அந்தப் பூனை நகரத்துவங்கியது. இதை கவனிக்காத குருவி தன் வயிற்றை நிரப்புவதில் குறியாய் இருந்தது. இந்த காட்சியை நான் கைதொலைப்பேசியில் படம் பிடிக்க முயன்றேன். என் மூளைக்கு தெரிந்தது, ”ஆஹா இந்த பூனை குருவியை பிடிக்கத்தான் இப்படி மெதுவாக நகர்கிறது என்று”. கண் இமைக்கும் நேரத்தில் தாவி அந்த குருவியை அப்பூனை கவ்வியது. அடுத்த நொடி அப்புல் தரையில் சில உதிர்ந்த இறகுகளே கிடந்தன. குருவியை கவ்விய பூனை நொடிப்பொழுதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார்களுக்கு அடியில் சென்று எங்கோ மறைந்து போனது.
உதிர்ந்து கிடந்த இறகுகளை பார்த்த எனக்கு மனம் பட பட என அடித்துக்கொண்டது. நான் ஏன் இப்படி முட்டாள் போல் நடந்து கொண்டேன்? அப்பூனை குருவியைத்தான் பிடிக்க வருகிறது எனத்தெரிந்தும் ஏன் நான் குருவியை விரட்டாமல் அந்த நிகழ்வை படம் பிடிக்க முயன்றேன்? ஒருவேளை அந்த பூனையினால் அக் குருவியை பிடிக்க முடியாது என்ற குருட்டு நம்பிக்கையா? அல்லது என்னுள் இருந்த மனிதம் மறைந்து ஓர் உயிர் போகப்போவதை ரசிக்கும் அரக்க உணர்வு மேலோங்கியதா? இது தான் என் மறுபக்கமோ? அப்பூனையின் முயற்சி தோல்வியுரும் என்றே என் அடிமனதில் நம்பிக்கை கொண்டிருந்தேன். அதன் திறனை குறைத்து எடைப்போட்டது என் முட்டாள்தனம். என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருந்தது. அந்த குருவின் உயிர் போனதற்கு நானும் ஓர் காரணம் ஆகிவிட்டேன்.என் பாவ மூட்டையில் மேலும் சுமையை அறிந்தே ஏற்றி விட்டேன்.
மனதில் குற்ற உணர்வுடனும், அநுதாபத்துடனும் கார்களுக்கு அடியில் குனிந்து பார்த்தேன். தன் காலை விருந்தை எடுத்துக்கொண்டு எங்கு போய் மறைந்ததோ அந்த பூனை? ஒரு வேளை தன் குட்டிகளுக்காக வேட்டை ஆடியதோ தெரியவில்லை. அப்படி என்றால் ஓர் தாயாக அதன் செயல் மன்னிக்கப்படலாம். ஆனான் கண் முன்னே ஓர் உயிர் போகப் போவதை தடுக்க முயலாத நான் ??? என் மனசாட்சியே என்னை மன்னிக்காத பொழுது வேறு எங்கு சென்று நான் மன்னிப்பு கேட்பது? என் தலைக்கு மேல் உயர சொர்க்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அக்குருவியின் ஆன்மாவிடம் மன்னித்து விடு என்று கேட்பதை தவிர வேறு வழி தெரியாமல் கனத்த மனதுடன் நான் எட்டாம் மாடிக்கு மின் தூக்கியில் உயர போனேன்.மனம் மட்டும் கீழே கிடந்த உதிர்ந்த சிறகுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டது.......