Monday, March 26, 2018
”பித்து”
சமீப நாட்களாக எனக்கு பிடித்திருப்பது (என் குடும்ப உறுப்பினர்கள் கூற்றுப்படி) கோலப் பித்து. ஆம் ! புதிதாக நான் ஒரு ஸ்லேட் வாங்கினேன். வாங்கியது என்னவோ அன்றைய வேலைகளை எழுதி வைத்தாவது செய்யலாமே என்ற நல்ல எண்ணத்தில் தான். இதில் என் தோழி உமாவும் கூட்டு. இருவருமாக ஆளுக்கொரு ஸ்லேட் வாங்கி வந்தோம். சில நாட்கள் அதில் அன்றைய சமையல் முதல் என்ன என்ன வேலைகள் செய்ய இருக்கிறது என்பது வரை எழுதி வைத்தேன். சமையல் எழுதியபடி நடந்தது. ஆனால் அந்த to-do list டுட்டுடூ ஆனது. அது எழுதியது எழுதியதாகவே இருந்தது. அதை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு குற்ற உணர்வு. அதற்காக உடனே எழுதியபடி செய்ய துவங்கினேன் என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்து விடாதீர்கள். என் தோழியிடம் கேட்ட பொழுது தான் தெரிந்தது இருவரும் ஒரே படகில் பயணித்தோம் என்று.
சரி ஸ்லேட் வாங்கியாகிவிட்டது அதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று ஒரே யோசனை. சின்ன சின்ன சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். நான் சிறுமியாக இருந்த பொழுது என் சின்ன அத்தை அழகழகாக சிக்கு கோலம் போடுவார்கள். அதுவும் வாசல் நிறைய புள்ளி வைத்து போடுவார்கள். அந்த சாணம் தெளித்த வாசலில் வெள்ளை கோலமாவில் புள்ளி வைத்து போடும் சிக்கு கோலம் வசீகரமாக இருக்கும். எனக்கு பார்த்து ரசிக்க தெரிந்ததே தவிர போட தெரியவில்லை. நமக்கு தெரிந்த கோலம் எல்லாம் ஸ்டார், பூ, பொங்கல் பானை அவ்வளவு தான். காலம் போன கடைசியில் ஸ்லேட்டில் சிக்கு கோலம் போட்டு பழக ஆரம்பித்தேன். இதுவும் ஒரு அனுபவமாகவே இருக்கிறது.
சாதாரணமாக நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் காலைவணக்கம் செய்தி அனுப்புவது வழக்கம். வெட்டியாக இருப்பதால் தான் இதனை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் கணவரின் வாதம். அதற்காக நான் அந்த பழக்கத்தை விடவில்லை. அதை நெருங்கியவர்களுக்கு அனுப்பும் பொழுது ஒரு சந்தோஷம். வெறும் குட் மார்ணிங் என்று அனுப்புவதற்கு பதில் ஒரு கோலம் போட்டு அனுப்பினால் என்ன என்று தோன்றியது. அடுக்குமாடி குடியிருப்பின் சிறு வாசல்களில் போடுவதெற்கென்றே அழகிய சிறு சிறு புள்ளிக் கோலங்கள் நெட்டில் உள்ளன. அவற்றைப் பார்த்து ஸ்லேட்டில் வரைந்து குட் மார்ணிங் என்று எழுதி அனுப்ப ஆரம்பித்தேன். வீட்டு வாசலில் போட்டால் பேப்பர் போடுபவர் ஏதோ சபதம் எடுத்ததைப் போல் தினம் தினம் கோலத்தின் மேலேயே செய்தித்தாளைப் போட்டுவிட்டு போகிறார். இப்படி ஸ்லேட்டில் போட்டு படம் பிடித்து அனுப்புவதால் பல பேர் பார்க்க முடிகிறது. பல நண்பர்கள் அதை ரசித்தார்கள். அழகிய இமோஜிகள் அனுப்பி வாழ்த்தி, உற்சாகப்படுத்தினார்கள். சில நண்பர்கள் என் ஸ்லேட் கோலத்தைப் பார்த்து வாசலில் போட ஆரம்பித்தார்கள். வாழ்க்கையே ஒருவரை ஒருவர் பார்த்து கத்துக் கொள்வதுதானே!
நான், ”என் நண்பர்கள் என் கோலம் அழகாக இருக்கிறது என்று பாராட்டினார்கள்”, என்று உற்சாகத்துடன் கூறினால் என் கணவர்,”நீதான் உனக்குனு ஒரு ஜால்ரா கோஷ்டிய வச்சு இருக்கியே,”என்று சர்வ சாதாரணமாக கூறிவிடுவார். நான் பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சமாட்டேன் என்று எனக்கு நானே கூறிக்கொண்டு என் கோலப்பித்தை தொடர்ந்தேன்.
முதல் சில நாட்கள் வீட்டில் வைத்தே ஸ்லேட்டை படம் பிடித்து அனுப்பினேன். என் தோழி அங்கை என்பவர் மிக அழகாக பல விஷயங்களை படம் பிடித்து அனுப்புவாள். அவளின் புகைப்படங்கள் கண்ணை கவர்பவையாக இருக்கும். அவளைப் பார்த்து நானும் படம் எடுக்க கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு வருகிறேன். என் இன்னொரு தோழி பூஜா படம் எடுக்கும் போது ஃபோனை எப்படி பிடித்து எடுத்தால் அழகாக வரும் என்று சொல்லிக்கொடுத்தாள். எப்படி எடிட் செய்வது என்பதெல்லாம் நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.
வீட்டுக்குள் படம் எடுத்து போர் அடிக்கிறதே என்று சில நாள் கீழே சென்று புள்வெளியில் ஸ்லேட்டை வைத்து படம் எடுத்து அனுப்பினேன். அன்று எனக்கு ஒரு யோசனை. புல்லில் வைத்து எடுப்பதற்கு பதில் நீச்சல் குளத்தில் ஸ்லேட்டை மிதக்கவைத்து எடுத்தால் என்ன என்று தோன்றியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. நான்,, கோலம் போட்ட ஸ்லேட், மழைதூரல் பட்டு அழிந்து விட்டால் மறுபடியும் கோலம் போட சாக்பீஸ் , துடைக்க ஒரு டிஷ்யூ பேப்பர் எல்லாம் எடுத்துக் கொண்டு நீச்சல் குளம் நோக்கிச் சென்றேன்.பெரியவர்கள் நீந்தும் நீச்சல் குளத்தில் எடுக்கலாம் என்று முதலில் யோசித்தேன். ஸ்லேட்டை மிதக்கவிடும் முயற்சியில் நான் உள்ளே விழுந்துவிட்டால் ,அச்சோ நமக்கு நீச்சலும் தெரியாது, மழைத்தூறும் காலை வேலை, ஞாயிற்றுக் கிழமை வேறு, யாரும் அந்த காலை நேரத்தில் காப்பாற்றக்கூட வரமாட்டார்களே! நான் கீழே சென்றது கணவருக்கோ, மகனுக்கோ தெரியவும் தெரியாது. இருவரும் இழுத்து மூடிக்கொண்டு தூங்கி கொண்டிருந்தார்கள். தண்ணீருக்குள் விழுந்தால் ஸ்லேட்டைப்போல் நானும் சில நொடிகளில் மிதக்க நேரிடும். என் உயரத்திற்கு நீச்சல் குளத்தின் மிகவும் குறைந்த ஆழத்தில் நான் விழ நேர்ந்தாலும் ஜல சமாதிதான்.
எனவே அந்த யோசனையை கைவிட்டு விட்டு, குழந்தைகள் விளையாடும் நீச்சல் குளத்தில் ஸ்லேட்டை மிதக்கவிட்டு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்தேன். அதன் ஆழம் என் உயரத்திற்கு ஏற்றதாக இருக்கும். கனுக்காலுக் கொஞ்சம் மேல் தான் தண்ணீரின் அளவு. உள்ளே இறங்கினாலும் முட்டிக் கூட நனையாது. மெதுவாக கீழே குணிந்து ஸ்லேட்டை தண்ணீரில் மிதக்க விட்டேன். கையில் இருக்கும் ஃபோன் மழைத்தூரலில் நனைந்துவிடுமோ என்று வேறு கவலை. அந்த நீல நிற தண்ணீரில் ஒரு சிறு படகைப்போல் என் ஸ்லேட் கோலத்தோடு
அழகாக மிதந்தது. மழைத்தூரல் பட்டுவேறு கோலம் அழியத் துவங்கியது. உடனே ஸ்லேட்டை எடுத்து அழிந்த இடங்களை மீண்டும் வரைந்து மெதுவாக மிதக்கவிட்டு படம் பிடித்தேன்.
யாரும் பார்ப்பதற்கு முன் நனைந்த ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு வேக வேகமாக வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்தவுடன் கணவர் கையில் ஆவி பறக்கும் காப்பியுடன்,”காலையில எங்க போன?”என்று கேட்டார். நான் என் ஸ்லேட்டை பெருமையாக காண்பித்து,”நான் ஸ்விம்மிங் பூல்ல ஸ்லேட்டை மிதக்கவிட்டு போட்டோ எடுத்தேன் தெரியுமா,”என்றேன்.உடனே அவர்,” அடிப்பாவி, ஆரம்பிச்சுட்டியா ?”என்றார். எதை நான் ஆரம்பித்துவிட்டேன் என்று நான் கேட்கவில்லை. எதற்கு நாமாகவே நாக்கில் இருக்கும் சனியை வெளியில் இழுத்துவிட வேண்டும் என்ற நல்ல எண்ணம். எடுத்த படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்த்தேன். ஆஹா இது என்ன பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகி போய்விட்டதே!, என்று மனம் நொந்து போனேன். படத்தை பார்த்தால் நான் எதிர்ப்பார்த்தது போல நீச்சல் குளத்தில் எடுத்ததை போல் வரவில்லை. ஏதோ பாத்ரூம் டைல்ஸில் வைத்து எடுத்தது போல் இருந்தது. நீச்சல் குளத்தின் தரையில் பதித்திருந்த நீல நிற டைல்ஸ் அசிங்கமாக படத்தில் தெரிந்தது. எனக்கே பிடிக்கவில்லை. உடனே ஸ்லேட்டை ஒரு தலையணை மீது வைத்து படம் பிடித்து என் குட்மார்னிங் மெசேஜை எல்லோருக்கும் அனுப்பி வைத்தேன்.
சிறிது நேரம் கழித்து என் மகன் எழுந்து வந்தான். அவனிடம் நான் எடுத்த படத்தை காண்பித்து ,”ரிஷி இது எப்படி இருக்கு என்றேன்?” அதற்கு அவன்,”அம்மா , what is this new obsession of yours?"என்றான். ”நல்லா உங்கம்மாவ கேளுடா இப்போ புதுசா இந்த கோலப் பித்து பிடிச்சு இருக்கு அவளுக்கு,”என்றார் கணவர் . நான் முறைத்து பார்த்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன். அவன் மிகச் சாதாரணமாக இக்கேள்வியை கேட்டுவிட்டு போய்விட்டான். ஆனால் நான் அதனை நாள் முழுதும் அசைப்போட்டுக்கொண்டே இருந்தேன். இவர்கள் கூறுவது போல் இது என்ன புது பித்து எனக்கு?, கொஞ்சம் நாள் சமையல் பித்து, கொஞ்சம் நாள் படம் வரையும் பித்து, கொஞ்சம் நாள் வீட்டை சுத்தம் செய்யும் பித்து, கொஞ்சம் நாள் புத்தகம் வாசிக்கும் பித்து! இப்பொழுது கோலப்பித்து! ஆக மொத்தத்தில் ஏதோ ஒரு பித்து என்னை ஆட்டுவித்துக்கொண்டே இருக்கிறது. இது எனக்கு மட்டும் தானா? ஏன் இவர்களுக்கு இல்லையா?
மகன், சில வருடங்கள் கார் மேல் பித்தாகி இருந்தான், சில வருடங்கள் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் பித்தாக இருந்தான், சில வருடங்கள் தாமஸ் ட்ரெயின் பித்தாக இருந்தான், சில வருடங்கள் பென் டென் பித்தாக இருந்தான், சில வருடங்கள் ட்ரான்ஸ்பார்மர்கள்.இப்படி சில சில வருடங்கள் ஏதோ ஒன்றின் பால் அவனின் ஈர்ப்பு இருந்திருக்கிறது. கணவரும், சில காலம் பேலியோ டையட், சில காலம் சைக்கிள் பித்து, சில காலம் யோகா பித்து, சில காலம் படப்பித்து என்று இருந்திருக்கிறார், இப்பொழுதும் இருக்கிறார். அவர்கள் ஒரு செயலுக்கு அடிமையாகும் பொழுது அது “ஈடுபாடு” என்று பெயரிடப்படுகிறது. இதுவே இருபது ஆண்டுகளுக்கு மேல் தன் ஆசைகளை மூட்டைக் கட்டி வைத்து விட்டு, தன் சுயம் மறந்து அவர்களின் பித்துக்களுக்கெல்லாம் உயிர் கொடுத்த நான் இப்பொழுது எனக்காக , எனக்கு பிடித்த விஷயத்தை நான் செய்ய முயற்சிக்கும் பொழுது அது “பித்து, அப்செஷன்”என்று பழிக்கப்படுகிறது.
நான் வரையும் படங்களை, எடுக்கும் புகைப்படங்களை, போடும் கோலங்களை பார்த்துவிட்டு என் தந்தை என் அம்மாவிடம்,”பாவம், அவளுக்கு ரொம்ப போர் அடிக்குது போல.என்ன செய்யறதுனு தெரியாம ஏதாவது செஞ்சுகிட்டு இருக்கா”, என்றாராம். அவருக்கும் புரியவில்லை என் தேடல் எது என்பது. அவருக்கு தெரியவில்லை வீணாக பொழுதை கழிக்காமல், வெட்டிக் கதை பேசாமல், ஊர் வம்பு இழுக்காமல், என்னை நானே பிசியாக வைத்துக்கொள்ள நான் கற்றுக்கொண்டு வருகிறேன் என்று.
என் விருப்பங்கள் , என் திறமைகள் என்ன என்பதே எனக்கு மறந்து போய் காலம் பல ஆகிவிட்டது. இப்பொழுது அரை கிணற்றைத் தாண்டும் வயதாகிவிட்டது. இப்பொழுதுதான் நான் யார், எனக்கு என்ன பிடிக்கும், என்ன செய்தால் எனக்கு சந்தோஷம் , என்னவெல்லாம் என்னால் செய்ய முடியும் என்று நான் எனக்கு நானே கேட்டுக்கொண்டு தேட ஆரம்பித்திருக்கிறேன். என் தேடலின் வழியில் என்னை தாங்கிப் பிடிப்பவர்களின் துணை எனக்கு தூணாய் தோன்றுகிறது. இந்த தேடல் என்னை இளமையாக உணரச்செய்கிறது. இந்த கற்றலில் நான் செய்யும் தவறுகள் என்னை பின்வாங்க செய்யவில்லை. புதுப் புது விஷயங்களை தேடத் தூண்டுகிறது. என் ரசிகையாய் என்னையே மாற்றுகிறது.
பிள்ளைகள் நாளை நம்மை விட்டு சென்றப்பின் அந்த வெற்றிடத்தை நிறப்ப, எனக்கு நானே பொழுதை கழிக்க தெரிந்திருக்க வேண்டும். தனித்தனி தீவுகளாக வாழும் இக்கால கட்டத்தில் யாரையும் சார்ந்து இல்லாமல் நமக்கு நாமே துணையாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தான் நான் என்னுள் என்னை தேடுகிறேன். அந்த தேடல் அழகாக இருக்கிறது, புது அனுபவமாகவும் இருக்கிறது. நீங்களும் என்னுடன் கைகோர்த்து உங்களை தேட ஆரம்பியுங்கள். சேர்ந்தே நாம் பயணிக்கலாம்!!!! பயணம் இனிதாக அமையும்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment