என் வார பிராஜக்ட்!!
இன்று வெள்ளிக்கிழமை.என்னுடைய வார ப்ராஜக்ட் செய்யும் நாள். என்னடா இவள் வாரா வாரம் அப்படி என்ன ப்ராஜக்ட் செய்கிறாள் என்று நீங்கள் நினைப்பது என் மனக்கண்ணுக்குத் தெரிகிறது. வெள்ளிக்கிழமையானால் இட்லிக்கு மாவு அரைக்கும் ப்ராஜக்ட் தான் என் வார பிராஜக்ட். என் அப்பா ஒரு முறை என்னிடம் ,” ஏம்மா, உங்க வீட்ல யாரக்கேட்டாலும் ப்ராஜக்ட் பண்றேன் , ப்ராஜக்ட் பண்றேனு சொல்றாங்க. அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்துகிட்டு ரவியும் ப்ராஜக்ட் மாமானு சொல்றார், ஏழாவது படிக்கிற உன் பையனக் கேட்டாலும் ப்ராஜ்க்ட் செய்றேன் தாத்தானு சொல்றான், உன் பொண்ணும் ப்ராஜக்ட் செய்றேன் தாத்தானு சொல்றா, அப்படி என்னதாமா அவங்க எல்லாரும் அந்த கம்ப்யூட்டர்ல பண்றாங்க?” என்று கேட்டார். பதில் சொல்ல எனக்கு தெரியவில்லை. “ஆமாம்பா நான் கேட்டாலும் அதை தான் சொல்லுவாங்க , என்ன செய்யறாங்கனு எனக்கும் தெரியாது,”என்று கூறினேன். அன்று பெயர் வைத்தேன் வார வாரம் இட்லி அரைக்கும் வேலை என் ப்ராஜக்ட் என்று.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து செய்யும் ப்ராஜக்ட் தான் கடினமானது என்று இல்லை. வாராவாரம் இட்லிக்கு மாவு அரைப்பதும் அதைப்போன்றே கடினமான ஒன்று தான். என்ன இந்த ப்ராஜக்டில் நானே ப்ராஜக்ட் மேனேஜர், நானே டீம் லீட் . ஆல் இன் ஆல் அழகு ராணி நான் மட்டுமே. ப்ராஜக்ட் ப்ரோபோசல் போல் முதல் நாள் இருந்தே நான் நாளைக்கு மாவு அரைக்கப் போறேன், மாவு அரைக்கப் போறேன் என்று தனிக் காகமாய் கரைவேன். கேட்பார் யாரும் இல்லை. அது வேறு கதை. மறு நாள் மறக்காமல் அரிசி, உளுந்து கழுவி ஊற வைக்கவேண்டும். அதில் வெந்தயமும் சேர்த்து ஊற வைக்க மறந்துவிடக்கூடாது. ஊற வைத்ததை சாயங்காலம் மறக்காமல் க்ரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். சில நாட்கள் மறந்து போய் ப்ரிஜ்ஜில் வைத்துவிட்டு மறுநாள் காலை அரைத்ததும் உண்டு. க்ரைண்டரில் போடுவதற்கு முன் அந்த க்ரைண்டரை வேறு கழுவ வேண்டும். உளுந்தை முதலில் அரைத்துவிட்டு, பின் அரிசியை போட்டு அரைக்கவேண்டும். உளுந்து பொங்கி நுரைத்து வேறு இருக்கவேண்டும். ஒரு வழியாக அரைத்த மாவில் உப்பை போட்டு கரைத்து வைக்க வேண்டும். நானும் இருபது வருடங்களுக்கு மேலாக இந்த ப்ராஜக்ட்டை விடாமல் செய்து கொண்டுதான் இருக்கிறேன் ஆனாலும் இந்த கரைத்து வைக்கும் வேலை எனக்கு பிடித்ததே இல்லை. கையை அரை முழம் அளவிற்கு மாவின் உள்ளே விட்டு கரைக்க வேண்டும். கை முழுக்க மாவு பூசிக்கொள்ளும். கையில் போட்டு இருக்கும் வளையலை கூட கழற்றி வைத்துவிடுவேன். கரண்டி கொண்டு கரைக்கலாம் என்று நினைத்தால் அப்படி செய்யக்கூடாது. நம் உடம்பின் சூடு பட்டால் தான் மாவு புளிக்கும் என்று அம்மா கூறிவிட்டாள். கரைத்த மாவை பெரிய பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
மறுநாள் பொங்கிவரும் பொழுது பாத்திரத்திற்கு வெளியில் வழிந்து விடாதபடி பாத்திரம் பெரிதாக இருப்பது நல்லது. இல்லையென்றால் பொங்கி வழிந்த மாவை வேறு வழித்து எடுத்து சுத்தம் செய்யவேண்டி வரும். நல்ல வெய்யில் காலம் என்றால் மாவு நன்றாக புளித்துவிடும். காலை எழுந்தவுடன் மறக்காமல் அதை எடுத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து அடுத்த சில நாளுக்கு பாதுகாத்து வைக்கவேண்டும். மழைக்காலம் என்றால் பொங்காது . அரைத்து வைத்த மாவு அப்படியே அடக்க ஒடுக்கமாக ஊற்றி வைத்த அளவிலேயே இருக்கும்.
மாவு தான் ரெடி ஆகிவிட்டதே என்று நிம்மதியாக இருக்க முடியாது. யார் அந்த கிரைண்டரை கழுவுவது?. அந்த குழவியை எடுத்து அதில் உள்ள மாவை வழித்துவிட்டு அந்த சின்ன அடுப்படி சின்க்கில் கழுவுவது சிறு இடத்தில் கர்ணம் அடிப்பதற்கு சமம். முன்பெல்லாம் குழவி ஒன்று மட்டுமே இருக்கும். இப்பொழுது இரண்டு , சில க்ரைண்டரில் மூன்று கூட இருக்கிறது. என் பாட்டி குழவியை நார் வைத்து எளிதாக கழுவி விடுவாள். இப்பொழுது இருக்கும் குழவியையோ ப்ரஷ் வைத்து இண்டு இடுக்கெல்லாம் கழுவ வேண்டி இருக்கிறது.
நான் சிறுமியாக இருந்த பொழுது ஆட்டுக்கல் இருந்தது. குழவியை மட்டும் வெளியில் எடுத்து கழுவினால் போதும். ஆட்டுக்கல்லில் தண்ணீர் ஊற்றி கழுவி , அந்த தண்ணீரை முகர்ந்து வெளியில் ஊற்றிவிடுவோம். ஆட்டுக்கல் வீட்டுக்கு வெளியில் தான் இருக்கும். இப்பொழுது க்ரைண்டரை அடுப்பு மேடையிலேயே வைத்துக் கொள்கிறோம். இடம் இல்லை என்றால் மாவு அரைத்தப்பின் அதனை ஒரு கப்போர்டில் வைத்து விடுகிறோம். மாவு அரைத்தப்பின் அந்த ட்ரம்மையும் கழற்றி , கழுவ வேண்டும். வீட்டில் உள்ளவர்களை உதவிக்கு கூப்பிட்டால்,”என்ன ரொம்ப அலுத்துக்கற, நீயா மாவாட்டற , ஸ்விட்ச்சைப் போட்டால் அது தானாக் சுத்துது,”என்பார்கள். அது தானாகத்தான் சுற்றுகிறது ஆனால் நாமும் அவ்வப்பொழுது தண்ணீர் போதுமானதாக இருக்கிறதா, மாவு ஒழுங்காக அரைபடுகிறதா, குழவி சுத்துகிறதா, என்று தலையை கவிழ்த்து பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். ஆர்வக்கோளாரில் கொஞ்சம் அதிகமாக அரிசி ஊறவைத்து விட்டால் இரண்டு முறை போட்டு எடுக்க வேண்டும். இதில் க்ரைண்டர் சூடாகாமல் வேறு கவனமாக இருக்க வேண்டும். க்ரைண்டர் சுற்றும் பொழுது மாவு சரியாக அரைபடுகிறதா என்று உள்ளே கையை விட்டு பார்க்கும் பொழுது விரல்கள் அரைபட வாய்ப்புக்கள் அதிகம். மிக்க கவனம் அவசியம். கழுவிய குழவி , ட்ரம்மை காயவைத்து மீண்டும் க்ரைண்டரில் வைத்து மூடி வைக்கவேண்டும். இல்லையேல் பல்லியின் குடியிருப்பாகிவிடும்.
இட்லி மாவு மட்டும் இல்லை என்றால் பல பேருக்கு கை உடைந்த மாதிரி .காலையில் என்ன டிபன் செய்வது என்று தெரியாது. கையை பிசைந்து கொண்டே இருப்பார்கள். ஆபீஸ், ஸ்கூல் என்று புறப்பட எல்லோரும் தயாராகி கொண்டிருக்கும் காலை கலேபரத்தில் இட்லி அல்லது தோசை தான் எளிதான டிபன். இதனால் தான் எவ்வளவு வேலை இருந்தாலும் வாரம் ஒருமுறை மாவு அரைக்கும் ப்ராஜக்டை நான் கைவிடுவதே இல்லை. போதாக்குறைக்கு சீரியல் சாப்பிடாதீர்கள், ப்ரெட் சாப்பிடாதீர்கள் என்று வேறு உபதேசங்கள் பொழிந்த வண்ணம் இருக்கின்றன. விருந்தாளி வந்தால் கூட மாவு இருந்துவிட்டால் தம்பி உடையான் படைக்கு அஞ்சான் போல ஒரு தனித் தெம்பே வந்துவிடும்.
இவ்வளவு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு வாரமும் ப்ராஜக்ட்டை முடித்தால், காலையில் சாப்பிட வரும் பொழுது ,”இன்னைக்கு என்ன இட்லியா தோசையா,?”என்று குடும்பத்தில் உள்ள பல முகங்கள் சலிப்புடன் சுளிக்கும். மாவு அரைக்க நான் சலித்துக்கொள்வது இல்லை! ஒரே ப்ராஜக்ட்தான் ஆனால் ஒவ்வொரு நாளும் ப்ராஜக்ட் ரிலிஸ் வேறு வேறு உருப்பெறும். ஒரு நாள் இட்லி, ஒரு நாள் தோசை, ஒரு நாள் ஊத்தப்பம், ஒரு நாள் மசாலா தோசை, ஒரு நாள் பனியாரம் என்று பல ரூபங்கள் எடுக்கும்.
இந்த ப்ராஜக்டை நான் செய்வதற்கு எனக்கு எந்த விதமான அப்ரைசலும் இருந்தது கிடையாது. பொதுவாக வீட்டில் உள்ள க்யூ.டி டிபார்ட்மெண்ட் இட்லியையும் தோசையையும் க்வாலிடி ரிஜக்ட் செய்துவிடும். சரவணபவன் ஹோட்டல் தோசை, இட்லி போல் இல்லை. அங்கே சட்னியே அத்துனை விதம் இருக்கும் என்ற குறை.காலையில் உள்ள அவசரத்தில் வெந்தது பாதி வேகாதது பாதியாக கொடுக்காமல் முழுவதும் வெந்து கொடுக்கிறேனே என்று நினைப்பது இல்லை. என்ன புலம்பினாலும் இந்த வாரமும் என் ப்ராஜக்டை வெற்றியுடன் முடித்துவிட்டேன்!நானும் பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம் “நானும் ப்ராஜக்ட் செய்கிறேன்”என்று!!!!!
1 comment:
ப்ராஜெக்ட் ரிப்போர்ட் மிகவும் அருமை, தொடர்ந்து ஒரே வேலையை செய்பவர்களை பார்த்தால் கும்பிட தோன்றுகிறது. வீட்டில் அம்மா செய்வதை கவனித்திருக்கிறேன், ப்ராஜெக்ட் product நம்ம கிட்ட வரும் போது அது சரியில்ல இது சரியில்லனு சொன்னதுண்டு. இப்போதுதான் தெரிகிறது அதன் பின் உள்ள நுணுக்கமான வேலைகள். இனி வீட்டில் ப்ராஜக்ட்டில் பங்கெடுக்கலாம் என்று முடிவெடுதுள்ளேன்.
Post a Comment