நேற்று ஒரு படம் பார்த்தேன். அதில் வந்த ஒரு டயலாக்--”அளவு சாப்பாடு 50 காசு, முழு சாப்பாடு ஒரு ரூபாய்.” இதை கேட்டவுடன் காதில் தேன் பாய்ந்தது போல் இருந்தது. அப்புறம் தான் தெரிந்தது காதில் தேன் பாய்ந்தால் அது பிசு பிசுப்பாக அல்லவா இருக்கும். காதில் எளிதாக எறும்பு போய் கடித்து விடாதா ? ஆனாலும் கேட்டவுடன் மனதில் ஒரு சந்தோஷம் ,ஆஹா அந்த காலம் தான் மீண்டும் வந்து விடாதா? என்று. அப்பொழுது என் தந்தை தொலைபேசியில் அழைத்திருந்தார். எதை எதையோ பற்றி பேசிக்கொண்டிருந்த அவர் கூறினார்,” என்னமா ஆஸ்பத்திரியில் ஒரு வெஜிடபிள் பிரியாணி எழுபது ரூபாய்க்கு விற்கிறார்கள். ரொம்ப காஸ்ட்டிலிமா,”என்றார். கேட்டவுடன் நான் சிரித்து விட்டேன். அவர் வடிவேல் ஸ்டைலில் ஷாக் ஆகிவிட்டார். எழுபதுகளில் இருக்கும் அவர் உணரவில்லை , போகிற போக்கை பார்த்தால் எழுபது ரூபாய் கொடுத்தால் சாப்பாடாச்சும் இப்பொழுது கிடைக்கிறதே, இன்னும் சிறிது காலத்தில் அவரின் பேரப்பிள்ளைகளுக்கு அது கிடைக்குமா என்பது சந்தேகமே என்ற உண்மையை! அரிசி முதல், காய்-கறி வரை பிளாஸ்டிக் ஆகி போய்கொண்டிருக்கும் காலத்தில் நாம் உழண்று கொண்டு இருக்கிறோம் என்ற உண்மையும் அதில் அடக்கம் !!
அதே படத்தில் வேறு ஒரு டயலாக்-”இந்த நாட்டில் இல்லை என்பதே இல்லாமல் போக வேண்டும்” என்று. கேட்டவுடன் சிரிப்பாகத்தான் வந்தது. இந்த நாட்டில் சில விஷயங்கள் இல்லாமலே போய் வருடங்கள் பல ஆகிவிட்டது. சுயநலம் இல்லா தலைவர்களும் பொதுநலம் பேணும் மக்களும் இல்லாமல் போய்விட்டார்கள். இப்பொழுது இதில் பல விஷயங்கள் சேர்ந்து விட்டது--மாசு இல்லா காற்று, சுத்தமான தண்ணீர், சத்தான உணவு(உண்மையான உணவு என்று கூட கூறலாம்). என் தங்கை கூறினாள்,”அக்கா முட்டை வாங்க கூட பயமா இருக்கு. பிளாஸ்டிக் முட்டைனு சொல்றாங்க.எதை தான் வாங்கி சாப்பிடுவது. பயமில்லாமல் எதை தான் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பது என்று தெரியவில்லை,”என்று கூறினாள். நான் சொன்னேன்,”வெந்ததை திண்றுவிட்டு வேங்கடா என்று கூறவேண்டியது தான், வேறு என்ன செய்ய முடியும் நம்மால்?”
பழம் பெருமை பேசி காலத்தை வீணாக்காதீர்கள் என்று கூறுகிறார்களே, ஆனால் பழம் காலத்தை நினைக்கையில் வயிறு நிறையாவிட்டாலும் மனதாவது நிறைகிறதே!!நிகழ் காலத்தில் நம் மனமும் வயிறும் நிரம்பித்தான் வழிகிறது --எல்லா வித கழிவுகளாலும்........சுத்தமான உடலோடும் மனதோடும் வாழ நாம் வேறு கிரகத்தில் பிறந்து இருக்கலாம் என்று அஞ்சலி பாப்பா மாதிரி ஆசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நம்மை புடுச்ச கிரகம் இங்க வந்து பிறந்துட்டோம்.... எத்துனை நம்மாழ்வார்கள் பிறந்து மடிந்தால் என்ன? இந்த பூமி மக்கித்தான் போகப்போகிறது நம் உடலையும், மனதையும் போல........
No comments:
Post a Comment