அகதியாய் அலையுது
ஒர் இனம் !
இல்லை அவருக்கு
ஒர் புகலிடம்!
சாமானியனின் உயிர்க் காற்றை
உறிஞ்சி உயிர் வாழ்ந்து
பழகிப்போன ஒரு கூட்டம்,
காற்றை உறிஞ்சி
வாழப் பழகிக்கொள் என்கிறது!!
கடல் மீன்கள் இல்லை இவர்கள்
உப்பு நீர் பருகி வாழ
புழு பூச்சியும் இல்லை இவர்கள்
சாக்கடை நீர் குடித்து உழல!
கிருமியும் இல்லை இவர்கள்
விஷத் தண்ணீரில் தாகம் தீர்த்துக்கொள்ள!
மனிதனடா! இவனும் உன் சக மனிதனடா,
இதை உணர்வாயா அதிகார வர்க்கமே!
இன்று இவன் தண்ணீர் இன்றி மடிந்தால்
நாளை நீயும் மடிவாய்!
இது யாவர்க்கும் பொதுவே!
நீ பணத்தை கரைத்து
குடிக்க நினைத்தாலும்
அதற்கும் உனக்கு வேண்டும் தண்ணீர்!
இவன் வயலும் , வயிறும்
வறண்டு போனது!
வாழ்வும், நிலையும் தான்
தாழ்ந்து போனது!
வற்றாத ஜீவநதியும்
வற்றிப்போனது!
இவனின் ஜீவனும்
உடல் விட்டுப் பிரிந்தது!
பூமித்தாயை விட்டு
ஏனடா கடல் தாய்க்கு
தண்ணீரை தாரை வார்க்கிறாய்?
ஐந்து அறிவு கொண்ட
ஒட்டகமே தனக்குள்ளே
தண்ணீர் சேமிக்க அறிந்து இருக்கையில்
ஆறறிவு கொண்ட மனிதனே
நீ மட்டும் ஏன் இந்த
சூட்சுமத்தை கற்க மறுக்கிறாய்?
அடுத்த பிறவியில் ஒட்டகமாய்
பிறக்க நினைக்கிறாயா?
இல்லை இப்பிறவியிலேயே
கூடு விட்டு கூடு பாய விழைகிறாயா?
தண்ணீர்ப் பந்தல் வைத்து
தாகம் தீர்த்த இனம் வழி வந்தவர்
இன்று தண்ணீர் பாக்கெட்டில்
தாகம் தீர்த்துக் கொள்கிறார்!
இளநீரும் இங்கு
முதுமை அடைந்தது!
பசுவின் மடியும்
காய்ந்து போனது!
தாய்ப்பாலும்
வற்றிப் போனது!
தண்ணீர் வேண்டி
யாகம் ஒரு புறம்,
மணல் மீது
மோகம் மறுபுறம்!
வாழும் பூமியில் இல்லா நீரை
வேற்று கிரகத்தில் தேடுகிறான்!
தனி ஒருவனுக்கு
உணவில்லை எனில்
ஜகத்தினை அழித்திட
கூறினான் முண்டாசு கவி!
தனி ஒருவனுக்கு
தண்ணீர் இல்லை என்றால்
யாரை அழிப்பது ?
புறட்சி ஒன்று வெடித்தால் மட்டுமே
மறையும் இங்கு இந்த வறட்சி!
No comments:
Post a Comment