Monday, August 30, 2010

பசி பலவிதம்

     காலை 6.30.  ட்ரிங்,ட்ரிங் என்று அலாரம் அடித்தது.  தலையில் ஒரு தட்டு தட்டி அதனை அமைதி படுத்திவிட்டு சில நிமிடங்கள் படுக்கையில் கிடந்தேன்.  அடித்து எழுப்பிய அலார கடிகாரத்தின் மேல் கோபம் கோபமாக வந்தது.  இது ஏன் தான் இப்படி சரியான நேரத்திற்கு வேலை பார்க்கிறதோ என்ற கோபம்.  பின் திறக்க மறுத்த விழிகளை கசக்கியபடி எழுந்து உட்கார்ந்தேன்.  கைகளை விரித்து பார்த்து “கடவுளே இன்று நாள் நன்றாக இருக்கட்டும்.  எல்லோரையும் நன்றாக வை”  என்று வாய்க்குள் முனுமுனுத்தபடி கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு எழுந்தேன்.  சோம்பலாக இருந்தாலும் கடமை உணர்வுடன் என் போர்வையை மடித்து வைத்துவிட்டு பல்துலக்கச் சென்றேன்.

     பல் துலக்கி, முகம் கழுவி நான் திருப்பதியாம் என் அடுப்பறையில் நுழைந்தபொழுது மணி 6.45.  காலை டிபன் என்ன, மதியம் யாவருக்கும் லஞ்ச் பாக்ஸ் என்ன என்று யோசித்து ஒரு வழியாக சமையலை தொடங்கினேன்.  காலையில் வெங்காயம் நறுக்கி சமையல் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை.  கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அரிந்து முடித்தேன்.  வாணலியை அடுப்பில் ஏற்றியபொழுது மணி ஏழு.  ஆஹா பிள்ளைகளை எழுப்ப வேண்டிய நேரம் ஆகிவிட்டதே என்று அடுப்பை சிம்மரில் வைத்துவிட்டு அவர்களை எழுப்பச் சென்றேன்.  “குட்டீஸ் மணி ஏழு இன்னும் ஐந்து நிமிடங்களில் எழுந்து விடுங்கள்,” என்று கூறிவிட்டு ஏசியை ஆணைத்துவிட்டு என் வேலையை தொடர சென்றேன்.


      பாதி சமையலில் திரும்பவும் அவர்கள் அறைக்குச் சென்று,”மணி 7.15 ஆகிவிட்டது.  பள்ளிக்கு கிளம்ப நேரமாகிவிடும்.  எழுந்து கிளம்புங்கள்”, என்று மீண்டும் சேவலைப் போல் கொக்கரித்துவிட்டு அடுக்களைக்குள் சென்றேன்.  ஒரு வழியாக 7.20க்கு குழந்தைகள் இருவரும் எழுந்து,  பல் துலக்கி பின் காலை கடன்களை முடித்து பள்ளிக்கு தயாரானார்கள்.  7.50க்கு சாப்பாட்டு மேசையில் இருவருக்கும் இரண்டு துண்டு ரொட்டியை தட்டில் வைத்து சாப்பிடுங்கள் என்று கூறினேன்.  எட்டு மணிக்கு என் பன்னிரண்டு வயது மகள் சாப்பிட்டு முடித்தாள்.  என் எட்டு வயது மகனோ,”அம்மா, ஏன் இவ்வளவு காலை உணவு தருகிறீர்கள்? இப்பொழுதுதானே பால் குடித்தேன்.  அதற்கு மேல் இரண்டு பிரட் சிலைஸ் வேறா? நான் எப்படி சாப்பிடுவேன்? பிரட்டில் அந்த ஓரங்களை நறுக்கி விட்டுத்தாருங்கள்.  I don't like to eat the crust." என்று வியாக்கானம் பேசிமுடித்தான்.  அவனை சாப்பிட வைப்பதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.  என் தந்தை கூறுவது என் நினைவிற்கு வந்தது.  “அவனவன் நொய்க்கு அழுகிறான் நீங்கள் நெய்க்கு அழுகிறீர்கள்,” என்பார். 


     இரண்டு மணி நேரம் பம்பரமாக சுற்றி வேலைபார்த்ததால் எனக்கு சிறிது ஓய்வு தேவைபட்டது.  என் அறையில் “மெயில் செக்” செய்யலாம் என்று சன்னலோரமாக அமர்ந்தேன்.  மழை வருவது போல் இருந்ததால் சிறிது நேரம் அந்த மேகக்கூட்டங்களை பார்த்து ரசித்தபடி அமர்ந்திருந்தேன்.  அப்பொழுது நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிருத்தும் இடம் அருகில் ஒரு 43 வயது மதிக்கத்தக்க ஒரு இந்திய ஆடவர் நின்று கொண்டிருந்தார்.  அவர் தோளில் ஒரு கருப்பு நிற “பேக் பேக்” தொங்கி கொண்டிருந்தது.  எண்ணெய் என்ன என்பதை பார்த்திராத அவர் தலை முடி வரண்டு காணப்பட்டது.  கரும் பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்தார்.  அவருடைய கருத்த தேகத்தை அது மேலும் கருமையாக்கி காட்டியது.  அந்த சீருடையை அவர் துவைத்து பல நாட்கள் ஆகியிருக்கும் போல் இருந்தது. தோட்ட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.  ஏன் அங்கு நின்று கொண்டு அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு புரியவில்லை.  சுற்றி முற்றி பார்த்த அவர் யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அவசர அவசரமாக சில அடிகள் எடுத்து வைத்தார்.


    அவர் சென்ற திசையில் என் கண்கள் சென்றது.  அங்கு புல்லில் சில ஊதுபத்திகள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தது.  அதன் அருகில் இரண்டு ஆரஞ்சு பழங்களும் ஒரு ரொட்டி பாக்கெட்டும் இருந்தது.  புல்லின் மேல் திறந்தபடி கேக் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது.  அவையாவும் பேய்களுக்காக சீனர்களால் படைக்கப்பட்ட உணவு.  ஆகஸ்ட் மாதம் பேய்கள் மாதம் என்று அவர்கள் கொண்டாடுவார்கள்.  உயிரோடு இருக்கும் பொழுது செய்கிறார்களோ இல்லையோ இறந்த பின் ஆவியாய் சுற்றும் ஆவிகளுக்கு பலவகையான உணவுகளை வைத்து படைப்பார்கள்.  பேய்கள் அந்த உணவை சாப்பிடும் என்பது அவர்களின் ஐதீகம்.  பேய்களை அப்படி குஷிபடுத்துகிறார்களாம்.  சிலர் பொய்யான காகித காசுகளை எரிப்பார்கள்.  அவை பேய்களை சென்று அடையுமாம்.  அதை வைத்து எந்த கடையில் என்ன வாங்கும் பேய்கள் என்பதனை யான் அறியேன் பராபரமே.  நான் கடவுளை தவிர யாரையும் நம்புவது கிடையாது.  காசென்றால் பேயும் பிணமும் வாய் பிளக்கும் என்பதை இதை வைத்துத்தான் கூறினார்களோ?  நம் ஊரில் வருடத்திற்கு ஒரு முறை இறந்தவர்களுக்கு ஆடி அமாவாசையில் நமக்கு பிடித்தவிற்றை சமைத்து வைத்து படைத்து பின் நாமே ஒரு கட்டு கட்டுவது வழக்கம். 

     சுற்றிலும் நோட்டமிட்ட அந்த ஆடவர் சில நொடிகள் படைக்கப்பட்ட அந்த உணவின் அருகில் நின்றார்.  நம் ஊரில் இப்படி பட்ட இடங்களை மிதிப்பதற்கோ தொடுவதற்கோ கூட பயப்படுவார்கள். எங்கே பேய்கள் நம்மை பிடித்துக் கொள்ளுமோ என்ற பயம்.   பின் மீண்டும் ஒரு முறை யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு அங்கிருந்த ரொட்டி பாக்கெட்டை கடகடவென எடுத்து தன் பேக்பேக்கில் வைத்து திணித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.  சில அடிகள் நடந்த அவருக்கு என்ன தோன்றியதோ மீண்டும் சுற்றி சுற்றி பார்த்துவிட்டு அந்த இடத்திற்கு மீண்டும்  சென்றார்.  ஒரு வேலை பேய்களுக்கான உணவு என்று நினைத்து எடுத்த ரொட்டியை வைத்து விட போகிறார் என்று காத்திருந்தேன்.  அங்கு சென்ற அவர் ஒரு நொடியில் அங்கு இருந்த இரு ஆரஞ்சு பழங்களையும் எடுத்து வேகமாக பையில் வைத்து திணித்தார்.  அங்கிருந்த கேக் துண்டுகள் புல்லின் மேல் இருந்தபடியால் விட்டுச்சென்றார்.  பின் யாரும் தன்னை பார்க்கவில்லை என்ற நிம்மதி ஒரு புறம் , சரி இன்றைக்கு நமக்கு ஒரு வேலை உணவு கிடைத்துவிட்டது. அந்த காசு மிச்சம் என்ற நிம்மதி ஒரு புறம் என்று ஒரு பெருமூச்சுடன்  தன்  வேலையை தொடங்க நடக்கலானார்.  அவருக்கு கடைசி வரை நான் பார்த்துக் கொண்டிருந்தது தெரியாது.


    உணவின்றி உடையின்றி இவர்கள் படும் பாடு மனதை கனக்கச்செய்தது.  பசி பத்தும் அறியாது.  பேய் உணவானால் என்ன பசிக்கு பேதமில்லை.  இப்படியெல்லாம் வெளிநாடுகளில் வந்து கஷ்டப்பட்டு தன் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் படும் பாடு இவர்களின் குடும்பத்தாருக்கு எங்கே தெரியப்போகிறது. ஊருக்கு செல்லும் பொழுது கசங்காத துணிகளை அணிந்து செல்லும் இவர்கள் இங்கு கசங்கிய துணியாய் வாழ்க்கையில் போராடுவது மனதை நெருடுகிறது.  அவரை அழைத்து ஒரு வேலை உணவாவது கொடுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்து உடை மாற்றி  வாசலுக்கு சென்று பார்த்த பொழுது அவர் எங்கோ சென்று மறைந்திருந்தார்.  அவர் விட்டுச்சென்ற கேக் துண்டுகள், எரிந்து முடிந்த ஊதுபத்தி குச்சிகள் எல்லாம்  எடுத்து குப்பையில் போட்டபடி போய்க்கொண்டிருந்தார் மற்றொரு சீனத் தொழிலாளி.  கனத்த மனத்துடன் மீண்டும் என் வேலையை தொடர நான் வீட்டிற்குள் சென்றேன்.  ஜாம், வெண்ணெய் தடவிய பிரட்டை சாப்பிட பிடிக்காமல் சலித்துக்கொண்டு பள்ளிக்குச் சென்ற மகன் கண் முன் தோன்றினான்.  வரட்டு ரொட்டிகளை திருப்தியுடன் சாப்பிடப்போகும் அந்த ஆடவரும் கண் முன் தோன்றினார். “I don't like to eat the crust" என்று என் மகன் கூறியது மீண்டும் என் காதுகளில் ஒலித்தது.  மனதின் ஒரு ஓரத்தில் ஏனென்று தெரியாத ஒரு குற்ற உணர்வு தலை தூக்கியது.  ஆம் பசி பலவிதம் தான்.

14 comments:

ஜோதிஜி said...

இது அணைவருக்கும் சென்று அடைய வேண்டிய விசயங்கள். Google Buzz ல் இணைத்துள்ளேன்,

Geetha Ravichandran said...

ஜோதிஜி----உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Its really nice one

Geetha Ravichandran said...

Ezhini--thank u very much for ur comments.

priya.r said...

நல்ல சமுக சிந்தனை உள்ள பகிர்வு
உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொள்ள
முடிந்தது
பாவம்;எட்டு வயது குழந்தைக்கு என்ன
தெரியும் ;
அந்த பெரியவருக்கு ஒரு வேளை உணவு கொடுக்கலாம்
என்று நினைத்த உங்கள் நல்ல உள்ளத்துக்கு ஒரு
பாராட்டு!

Geetha Ravichandran said...

Priya---thanks Priya.

Ani said...

மறுக்கப்பட முடியாத உண்மை... அருமையாக எழுதி இருகிறீர்கள்...

Thekkikattan|தெகா said...

very touching ... i feel so terribly sorry for that guy :((

வாழ்க்கை மனிதர்களை எப்படியெல்லாம் பொரட்டி போட்டு விடுகிறது. அந்த மனிதரும் குழந்தைப் பயலாக இருக்கும் பொழுது அவருடைய பெற்றோர்கள் எப்படி ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பார்கள். இன்று எந்த நிர்பந்தம் அவரை இப்படி பேய் உணவை சாப்பிட்டு, மூன்றரை டாலரை சேமிக்க எண்ணச் செய்தது.

ம்ம்ம்ம்.... அங்கே சுத்தி இங்கே சுத்தி, நம்ம நாட்டு அரசியல் வாதிங்க சரியில்லைங்க.

Geetha Ravichandran said...

Anitha--Tks Ani for ur comments.

Thekkikattan----Tk u for visiting my blog. ஒவ்வொரு மனிதரும் மனசாட்சியுள்ள மனிதராக மாறினால் தான் இப்படி பட்ட அவலங்கள் களையப்படலாம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( ம் கொஞ்ச நாள் முன்ன ஒரு வீடியோ சுற்றிக்கொண்டிருந் தது.. அதனைபோன்றே இருக்கிறது.. உணவகங்களில் சில வீடுகளில் குப்பைக்கு செல்லும் உணவுகளே அதிகம்..

Geetha Ravichandran said...

முத்துலட்சுமி----வருகைக்கு நன்றி. ஆம் மனதுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியது.

Kanchana Radhakrishnan said...

Nice post Geetha.

Geetha Ravichandran said...

Kanchana--- Thanks for ur comments.

priya.r said...

//காலையில் வெங்காயம் நறுக்கி சமையல் செய்வது போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி அரிந்து முடித்தேன்.//

கீதா ! எப்படி இருக்கறிங்க !! நலம் தானே!,
ஒரு சின்ன சமையல் குறிப்பு
வெங்காயத்தை நீரில் கழுவி பின் அரிந்தால்
கண்களில் எரிச்சல் மிகவும் குறைவாக இருக்கும்.