Saturday, September 28, 2019

மரம் தேடி



Image may contain: plant

மரம் ஒன்றைத்
தேடித் தேடி
அலைந்தேன்
சற்றே இளைபாற!
கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை
ஒன்றுகூட காணவில்லை!
கிடைத்த செடி நிழலில்
சற்றே ஓய்வெடுத்தேன்!
கூட பறந்து வந்த காதலியை
செடி நிழலில்
கூடி வாழலாம்
என்று ஆசையாய்
அழைத்தேன்!
“யாரும் பார்க்கா வண்ணம்
உயரமான மரக்கிளையில்
இலைகள் மறைத்திடவே
கூடி மகிழ்வதே இன்பம்!
அப்படி
கொஞ்சி குலாவிடத்தான் ஆசை!
சன்னல் விளிம்பினிலே
தொங்கும் செடி நடுவே
பயந்து பயந்து
காதல் மொழி பேச
எனக்கு சற்றும் விருப்பமில்லை!
என் கனவு கூடு கட்ட
இந்த செடி போதாது !
நாம் மகிழ்ந்து உறவாட
இந்த இடம் பத்தாது”என்றாள்!
“கூடி வாழ மனம் இருந்தால்
செடி நிழலும் சொர்கமடி”என்றேன்!
“நீயும் நானும் வேண்டுமானால்
செடி நிழலில் வாழ்ந்திடலாம்!
பின்னாளில் என்
குஞ்சுகளுடன்
கொஞ்சி விளையாட,
உண்டு மகிழ்ந்திட,
இன்பமாய் தூங்கிட,
இந்த இடம் போதாது “
என்றே சொல்லி
சொர்க்கம் காண மறுத்து
பறந்தே போய் விட்டாள்!
தனியாய் தவிக்கின்றேன்
துடியாய் துடிக்கின்றேன்!
உங்கள் குடி பெருக்க
உம் மக்கள் சுகமாய் வாழ
மரம் வெட்டி
காடு அழித்து
வீடுகட்டி விட்டீர்கள்!
மரம் இன்றி எங்கள் காதல் வாழ்வதெப்படி?
எங்கள் குலம்
தழைப்பதெப்படி?
வாழத்தான் ஆசைபடுகிறோம்
வழிதான் தெரியவில்லை!!
வழியேதும் தெரிந்திருந்தால்
உடனே சொல்லுங்கள்!
பறந்து சென்ற காதலியை
அழைத்து வந்து குடிபுகுவேன்!
குடிபுகுந்த சில மாதத்தில்
குருவி குஞ்சு
பேரன் பேத்திகளை
அன்பாய் பரிசளிப்பேன்!

Fit Bit

மூக்கணாங்கயிறு போட முடியலனு இத வாங்கி கட்டிவிட்டாரோ?Fit Bit வாங்கி தரேன் Fit bit வாங்கி தரேனு bitஉ போட்டப்பவே நான் சுதாரிச்சுருக்கனும். நம்மல உத்கார விடாம இருக்கத்தான் இந்த லாடத்த கையில கட்டச் சொல்லி ஆசையாய் வாங்கி தந்தது தெரியாம போச்சு இந்த பயபுள்ளைக்கு! ஆசை வார்த்தைக்கு மயங்கி இப்படி வேலில போற ஓணான புடுச்சு காதுல விட்ட கணக்கா இருக்கு. மாமியார் பக்கத்துல இல்லாத குறையை தீத்துடுச்சு. கொஞ்ச நேரம் அசந்து மசந்து உட்கார்ந்தா உடனே 50 step more 75 steps more அப்படீனு சொல்லி எழுப்பி நடக்க வச்சுருது. எத்தனை நாளைக்கு இதோட பேச்ச கேப்பேனு தெரியல! வர வர மாமியா கழுத போல ஆனாலாம் கதை சீக்கிரமே அரங்கேறும் !!! அப்படி ஆனா அதுக்கு கம்பேனி பொருப்பில்ல...

Sunday, September 8, 2019

எழுந்துவிடு விக்ரமா!

எழுந்துவிடு விக்ரமா!
அந்த ஆதித்யன்
நிழல் படாத இடத்தின்
ரகசியம் அறிய
விக்ரமாதித்தியனாய்
சிவன் அருளாலே
உன்னை அனுப்பி வைத்தோம்!
சுகமாய் நீ புலம் பெயற
கவனமாய் மறுவீடு
அனுப்பி வைத்தோம்!
நீண்ட தூர பயண களைப்பில்
நீ வீடுபேறு அடையும் முன்னர்
சற்றே உறங்கி விட்டாய்!
உன் உறக்கம் கேட்ட உடன்
கோடி கண்கள் ஒளி இழந்ததடா!
உன்னை ஆண்டு பல சுமந்து
கவனமாய் பெற்றெடுத்த
பெற்றோரும்
நீறு பூத்த நெருப்பாய்
கண்ணீர் வடிக்கின்றார்!
ஆண்டுகள் பதினாங்கு
காட்டில் வாழ்ந்த ராமனே
நாடு திரும்பி வந்துவிட்டான்!
பதினாங்கே நாட்கள் தான்
உன்னை நாங்கள்
சந்திர மண்டலத்திற்கு
ஆசையாய் அனுப்பி வைத்தோம்!
கோபிக்காமல் சீக்கிரமே
எழுந்துவிடு விக்ரமா!
தந்திரமாய் சென்ற வேலை முடித்துவிடு!
இருட்டை கண்டு பயம் கொள்ளாதே!
அந்த கருப்பு வெறும் நிறமே!
நீ ஒளிந்து விளையாடியது போதும்
ஒளி கொண்டு எழுந்துவிடு!
நீ பார்க்கும் காட்சிதனை
ஓயாமல் அனுப்பிவிடு!
சுகமாய் நீ அங்கு இருக்கின்றாய்
என்று படம் மூலம் சொல்லி விடு!
உன் ஒருவன் உயிர் நாடியில்
ஒரு தேசமே உயிர்த்தெழுமே!