சாதா vs ஸ்பைசி ஆம்லெட்
ஒரு வெங்காய ஆம்லெட் போட்டு எடுத்துட்டு வா--இது ஒரு ரகம்
நல்லா சின்ன வெங்காயத்த நைசா , பொடிசா நறுக்கி, அதுல கொஞ்சம் பச்ச மொளகாய பொடிசா, பல்லுல படாதமாதிரி நறுக்கி போட்டு, கொஞ்சமா மஞ்சதூள், கொஞ்ச தூக்கலா மெளகு பொடி, பொடியா நறுக்கன கொத்தமல்லி சேத்து, அளவா டேபிள் சால்ட் சேத்து, நல்லா பெசஞ்சி அப்புறமா தனியா அடிச்சு வச்சுருக்க ரெண்டு முட்டய , அதுல சேத்து, ஒரு டேபிள் ஸ்பூன் பால் சேத்து வேகமா எல்லாத்தையும் அடிச்சு, சூடான தோச கல்லுல, ஊத்தி, சுத்திவர கொஞ்ச நெய் ஊத்தி மெதமான சூட்ல வேக வச்சு, லைட்டா திருப்பி போட்டு ஒடனே எடுத்து ஒரு ஸ்பெஷல் ஆம்லெட்ட தட்ல வச்சு வேகமா எடுத்துட்டு ஓடி வா பாக்கலாம்........... இது ஒரு ரகம்
வாழ்க்கையும் இப்படித்தான். ருசியை கூட்டுவதும் , குறைப்பதும் நம் கையில் தான் இருக்கிறது......இல்லை இல்லை, வார்த்தை ஜாலத்திலும் தான் அது பொதிந்து இருக்கிறது....வார்த்தைகளின் மாய விளையாட்டிற்கு நாம் சில நேரம் அல்ல பல நேரம் மயங்கித் தான் போய் விடுகிறோம். ஒருவரது வார்த்தை விளையாட்டு மற்றவரின் பலவீனமாகவும் பலமாகவும் , தூண்டு கோலாகவும், துணையாகவும், அரவணைப்பாகவும்,பழியாகவும், எப்படியும் மாறலாம் சூழ்நிலைக்கேற்றபடி. ஜாக்கிரதையாகத் தான் விளையாட வேண்டி இருக்கிறது வார்த்தை விளையாட்டை.......விளையாட பயந்து மெளனியாக போனால் வாழ்க்கை ருசிக்காது. சாதா ஆம்லெட் ஆகிவிடும். நமக்கு தேவை ஸ்பைசி ஆம்லெட்... ருசித்துத் தான் பார்ப்போமே......வாய் இருக்கற புள்ளைக்கு கிடைக்குமாம் ருசியான ,ஸ்பைசி ஆம்லெட்....இந்த வித்தை எப்படி பட்டது என்றால், காலை உணவிற்கு பழங்கஞ்சி என்று சொல்வதற்கும், I have fermented day old rice , rich in anti oxidants and probiotics என்பதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் போன்றது....
No comments:
Post a Comment