Saturday, December 23, 2017

இதயத் துடிப்பு!









இதயத் துடிப்பு!
ஊருக்கு போய்விட்டு வந்து பார்க்கிறேன், என் வீட்டு சுவர் கடிகாரத்தின் இதயம் இப்பொழுதோ அப்பொழுதோ என்று துடித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளின் ஆயுளையும் தன் துடிப்பின் மூலம் குறைக்கும் அதன் இதய முள் எப்பொழுது நிற்கப்போகிறதோ என்று என் இதயத்துக்குள் ஒரு பதைபதைப்பு. அதன் துடிப்பு நின்று விட்டால் நாட்களின் ஆயுள் ஒன்றும் கூடப்போவதில்லை. அதன் இதயம் நாற்பத்தி நான்கிற்கும் நாற்பத்தி ஐந்திற்கும் நடுவில் துடித்துக்கொண்டிருக்கிறது. எமனின் பாசக்கயிற்றின் சுருக்கு இன்னும் அதன் இதயத்தை நெருக்கவில்லை போலும்!உடலின் மற்ற பாகங்கள் யாவும் ஓரிடத்தில் நின்றுவிட இதயம் மட்டும் வாழ ஆசைப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆசை என் கண்களுக்கு மட்டுமே தென்படுகிறது. வீட்டில் உள்ள யாவர் கண்களிலும் அது தென்படவில்லை. அது ஏனோ என்று எனக்கு தெரியவில்லை. யாராவது ஒருவர் அதற்கு புத்துயிர் கொடுப்பார் என்று நானும் இரண்டு நாட்கள் காத்து இருந்தேன். சத்தமில்லா அதன் துடிப்பின் வலி எனக்கு மட்டுமே புரிந்த மொழிஆனது. எட்டா உயரத்தில் இருந்தாலும் என் கால் உதவி பத்தாது என்று நாற்காலியின் உதவியோடு கடிகாரத்தை உடல் நலமில்லா குழந்தையென மெதுவாக தூக்கி உடலை திருப்பி ஆள்காட்டி விரல் நீட்டமே இருந்த பாட்டரியை அதன் முதுகில் திணித்து மீண்டும் இதயம் துடிக்கச்செய்தேன். மறுகணமே எல்லா பாகங்களும் உயிர் பெற்றன. மெதுவாய் கவனத்தோடு மீண்டும் அதன் இடம் சேர்த்தேன். அஃறினையோ, உயர்தினையோ ஒன்றிற்கு உயிர் கொடுக்கும் பொழுது இருக்கும் சந்தோஷம் அளவிடமுடியா ஆனந்தம்.

No comments: