Wednesday, November 8, 2017

சாக்லெட் ருசி

சாயங்காலம் ஆறு மணி இருக்கும். நானும் என் தோழியும் நடைப்பயிற்சி முடிந்து வீடு நோக்கி  எங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு மிக அருகில் வந்துகொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் ஒரு சீனத் தாய் தன் இரண்டு குழந்தைகளை கூட்டிக்கொண்டு எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தார். அதில் ஒன்று ஆண், ஒன்று பெண் குழந்தை. ஆண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும். தனியாக விட்டால் ஓடிவிடும் என்பதனால்  அக்குழந்தையை தன் ஒரு கையில்  பிடித்துக்கொண்டும், மறு கையில் சில பைகளை பிடித்துக் கொண்டும் வந்து கொண்டிருந்தார். 

அவருக்கு பின்னால் சில அடிகள் தூரத்தில் அப்பெண் குழந்தை நடந்து வந்துகொண்டிருந்தது. அதற்கு ஒரு மூன்று வயது இருக்கும். இரண்டு  குழந்தைகளுக்குமான இடைவெளி மிக குறைவாகவே எனக்குப்பட்டது. அப்பெண் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போல் இருந்தது. பள்ளிச் சீருடையில் இருந்தது. அழகாக இரண்டு சிண்டு போட்டு இருந்தது. நெற்றியில் சில முடிகீற்றுக்கள் விழுந்து கண்களை அவ்வப்பொழுது மறைத்தது.  முதுகில் புத்தகப்பை மாட்டப்பட்டிருந்தது.நம் ஊர் போன்று சுமையானது கிடையாது அப்பை. அக்குழந்தை தூக்கக்கூடிய சுமையே. எங்களை கடந்து சென்ற போது  அக்குழந்தையை நான் மிக அருகில் பார்த்தேன். அதன் கையில் சாக்லெட் இருந்தது. அதை அது சாப்பிட்டுக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தது. வாய் முழுதும் சாக்லெட் அப்பி இருந்தது. நாக்கும் , பற்களும் காப்பிக் கொட்டை நிறத்தில் இருந்தத்டு. வாயின் இரு ஓரங்களிலும் சாக்லெட் பூசப்பட்டு இருந்தது. இரு கைகளாலும் சாக்லெட்டை கீழே விழாதவாறு பிடித்துக்கொண்டு ரசித்து ,நக்கிக் கொண்டே வந்தது. அவ்வப்பொழுது அதன் புத்தகப் பையின் வார், அக்குழந்தையின் தோள் நழுவி கீழே வரும். அதனை தன் சாக்லெட் பிடித்த கைகளைக் கொண்டு மேல் எடுத்து விடமுடியாததால் தன் தோள்பட்டையை மேல் தூக்கி பை கீழே விழாதவாறு கவனமாக நடந்து கொண்டிருந்தது. நெற்றியில் விழுந்த முடிகீற்றையும் தன் முழங்கை கொண்டே பின் தள்ளியது.

முன் நடந்து கொண்டிருந்த அம்மா, பின் நடப்பவைப் பற்றி கொஞ்சம் கூட ஏதும் அறிந்தமாதிரி தெரியவில்லை. அவர் மகனை பிடித்துக்கொண்டு , எப்படியும் மகள் தன் பின்னே நடந்து வந்து கொண்டிருப்பாள் என்ற நம்பிக்கையில் போய் கொண்டிருந்தார். அக்குழந்தைக்கோ சாலையில் போகும் யாரும் தன்னை பார்ப்பார்களே என்ற கூச்சமோ, நாச்சமோ இருக்கவில்லை. சாலையில் ஏதாவது கிடக்கிறதா, தன் எதிரில் யாரும் வருகிறார்களா, தன் பின்னே சைக்கிள் மணி ஓசை ஒலிக்கிறதா என்ற எந்த கவனமும் இருக்கவில்லை. அது தான்  குழந்தை மனம் போலும்.  கருமமே கண்ணாயிரமாக அழகாக சாக்லெட்டை சாப்பிட்டபடி லாடம் போட்ட குதிரை போன்று தன் அம்மாவின் பின்னால் நடந்து கொண்டிருந்தது.. அக்காட்சி பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது.

இதை பார்த்து மகிழ்ந்த சில நொடிகளில் நான் என் தோழியிடம் ,”இதுவே நம் பிள்ளைகள் என்றால் இப்படி சந்தோஷமாக பார்த்து ரசிப்போமா? உடனே,” எப்படி பூசி வச்சு இருக்க பாரு, சாக்லெட் சாப்பிடாதனா கேக்கறியா, வீட்டுக்குப் போனப்புறம் சாப்டா என்ன? இப்போ உன் கையை , வாயை எப்படி கழுவி விடுவேன்? ரோட்ல போறவங்க எல்லாம் உன்னை வேடிக்கை பாக்கறாங்க பார்? “ என்றெல்லாம் ஒரு பிரசங்கமே நடத்தி இருக்க மாட்டோமா?,” என்றேன். அவரும் ,”அமாம் , அமாம் நீங்க சொல்றது சரிதான்,”என்று என் சொற்களை ஆமோதித்தார்.

சில தினங்களுக்கு முன் தான் ஹாலோவீன் திருவிழா முடிந்திருந்தது. நல்ல வேளை என் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டார்கள். இல்லையென்றால் ட்ரிக் ஆர் ட்ரீட் என்ற பேரில் ஒரு பை நிறைய சாக்லெட் வீடு வந்து சேரும். அதில் வேறு பங்கு பிரியல் , ட்ரேடிங் நடக்கும். ஒரு வாரத்திற்கு சாயங்காலம் சிற்றுண்டி அந்த சாக்லெட் தான். சண்டை வேறு நடக்கும். எனக்கு பிடித்த சாக்லெட்டை யார் எடுத்தது என்று ரகளையே நடக்கும். வீடு முழுதும் சாக்லெட் காகிதம் எந்நேரமும் கண்ணில் படும். இப்பொழுது அக்காட்சிகள் எல்லாம் நம் வீட்டில் இல்லை என்று சந்தோஷப்படுவதா அல்லது பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள் என்று நினைப்பதா ?


 ஒன்று மட்டும் இன்றும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. எப்பொழுதாவது பத்தாவது படிக்கும் என்  மகனின் முதலை வாய் போன்று திறந்தே இருக்கும் புத்தகப் பையின் உள்ளே கைவிட்டு பார்க்க நேர்ந்தால் அதில் சாக்லெட் காகிதம், பிஸ்கெட் காகிதம் என்று இருக்கத்தான் செய்கிறது. அம்மாவிற்கு தெரியாமல் ஒளித்து வைக்கும் இடம் அதுதான். ஆனால் அது சரியாக என் கண்களில் தான் அகப்படும். சில நேரம் துவைத்து வரும் பள்ளி சீருடையின் பாக்கெட்டில் இருக்கும். ஊரார் பிள்ளை வாய் முழுதும் பூசிக்கொண்டு சாக்லெட் சாப்பிடுவதை ரசிக்கும் நான் என் வீட்டில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்வது எதனால்? சாக்லெட் சாப்பிட்டால் பூச்சிப்பல் வரும், சாப்பிட்டப்பின் வாய் கொப்பளித்தாயா? சாக்லெட் சாப்பிட்டால் முகத்தில் பரு வரும் என்று ஒவ்வொரு வயதிற்கும் சாக்லெட் ஏன் சாப்பிடக்கூடாது என்று ஒரு  காரணத்தை கண்டு பிடித்து வைத்திருக்கிறேன்.

ஒரு முறை என் தந்தை எங்களை கடலூரில் இருக்கும் இ.ஐ.டி பாரி சாக்லெட் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே அவரின் நண்பர் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். நிறுவனத்தை சுற்றிப் பார்த்த பொழுது அவர்கள் என்னிடமும் என் தங்கையிடமும்,” ஃபாக்டரிக்குள் நீங்கள் எவ்வளவு சாக்லெட் வேண்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் வெளியில் எடுத்துச்செல்லக் கூடாது,” என்றார்கள். ஆசை யாரை விட்டது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போல் முடிந்தமட்டும் வாய் நிறைய சாக்லெட்டை வைத்து அடைத்துக் கொண்டோம். ஆனாலும் ஆசை விடவில்லை. சில எக்லெர்ஸ் சாக்லெட்டை (பேப்பர் கிடையாது) எடுத்து சட்டைக்குள் போட்டுக் கொண்டேன். ஃபாக்டரி முழுதும் சுற்றிப்பார்த்துவிட்டு வீட்டிற்கு போகும் நேரம் வந்ததும் சட்டைக்குள் இருந்த சாக்லெட் பிசு பிசுக்க ஆரம்பித்தது. அதுவரை ஃபாக்டெரி முழுதும் அதிகமான ஏசி ஆதலால் சாக்லெட் உருக வில்லை. வெளியில் வந்தது தான் . எல்லாம் உருக ஆரம்பித்து சட்டையில் அங்கும் இங்குமாக ஒட்டிக் கொண்டு என்னை காட்டிக் கொடுக்க சாட்சியாய் நின்றது. இதை பார்த்த எங்கள் டிரைவர்,” பாப்பா, இப்போ பாரு உன்ன உள்ள புடுச்சு வச்சுக்க போறாங்க,”என்று வேறு பயமுறுத்தினார். எங்கே அங்கு இன்னும் சிறுது நேரம் நின்றால் , விடை பெற்றுக்கொள்ள காத்துக்கொண்டிருக்கும் என் தந்தையின் நண்பரிடம் மாட்டிக்கொண்டு விடுவோமோ என்று பயம். திருடனுக்கு  தேள் கொட்டியது போல்,”அம்மா வா சீக்கிரமா காருக்கு போகலாம், எனக்கும் கால் வலிக்குது,” என்று ஏதோ சாக்கு போக்கு கூறி காரில் சென்று அமர்ந்து கொண்டேன்.  வீட்டிற்கு சென்ற உடன் உடையை மாற்ற கழற்றினால் உடல் முழுதும் ஒரே பிசு பிசுப்பு.  சாக்லெட் உருகி உடல் முழுதும் பூசி இருந்தது. மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல், மெதுவாக குளியல் அறை சென்று குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டேன். சாக்லெட் எல்லாம் வீனாகி போனதே என்ற சோகம் வேறு. மறுநாள் அம்மா துணி துவைக்க துணியை எடுத்த பொழுதுதான் அதில் உலா வந்த  எரும்புகள் மூலம் என் குட்டு உடைந்தது.

நான் சிறுமியாக இருந்த பொழுது என் தாய் கடைக்கு போய்விட்டு வரும் பொழுதெல்லாம் தங்க நிற காகிதம் சுற்றிய வட்டமான அந்த தங்க காசு போன்ற சாக்லெட் வாங்கி வருவார். அதனை பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்து, ருசித்து, நாக்கிற்கும் மேல்வாய்க்கும் நடுவில் வைத்து சிறிது நேரம் அநுபவித்து சாப்பிடும் பொழுது ஏதோ காணக்கிடைக்காதது கிடைத்தது போன்ற மகிழ்ச்சி ஏற்படும். அதுமட்டுமல்ல அதை நிஜ தங்க காசை மென்று சாப்பிடுவது போன்று நிதானமாக ரசித்து விழுங்கியதுண்டு. எனக்கு இரண்டரை வயது ஆகும் வரை சாக்லெட் என்றால் என்ன என்றே தெரியாதாம். அதன் பிறகு வீட்டிற்கு வந்த யாரோ வாங்கி வந்து ருசி காட்டி விட்டார்களாம். அதன் பின் நான் ருசி கண்ட பூனை ஆகிவிட்டேனாம்.

இப்பொழுதெல்லாம் அந்த ருசியின் பால் இருந்த மோகம் என்னவாயிற்று என்று தெரியவில்லை. எப்பொழுதாவது தான் சாக்லெட் சாப்பிடும் ஆசை வருகிறது. அதுவும் உடம்பிற்கு நல்லது நல்லது என்று எல்லோரும் கூவக்கேட்ட டார்க் சாக்லெட்டை ஏதோ வேண்டா வெறுப்பாக சாப்பிடுவேன். பல ஆண்டுகளாக ரசித்து ருசித்த பல உணவுகளின் மேல் இருந்த ஆர்வம் குறைய குறையத்தான் ஆஹா நமக்கு வயதாகிறது என்ற நிதர்சனத்தை உணரமுடிகிறது.   சிறு வயதில் பிடித்த பல உணவுகள் இப்பொழுது பிடிப்பதில்லை. இப்பொழுதெல்லாம் வயிற்றிற்கு எது உகந்ததோ அது தான் நாக்கிற்கு ருசி சேர்க்கிறது. இதனை உணரும் பொழுது குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த சில உணவுகளை குழந்தையாக இருக்கும் பொழுது உண்டு மகிழட்டும் . எப்படியும் ஒரு வயதிற்கு அப்புறம் இதை சாப்பிடக்கூடாது, அதை சாப்பிடக்கூடாது என்று ஆகிவிடும் என்று தோன்றுகிறது. ஒன்று நிச்சயம், அமிர்தமே ஆனாலும் அளவிற்கு மீறினால் நஞ்சாகிவிடும்.

No comments: