Monday, August 28, 2017

காய்ந்த கிளை




சாலை ஓரத்தில்
தனியாய் கிடந்தது
 ஒரு காய்ந்த  கிளை.
பூவும் இல்லை
இலையும் இல்லை,
காயும் இல்லை,
பழமும் இல்லை.
அதில் சிறு உயிர்
ஒட்டிக்கொண்டிருப்பதற்கான
ஓர் அறிகுறியும் இல்லை.
யாரின் பாதம்
முதல் படுமோ
அவரிடம் மிதிபடும்
அவலம்.
உதைத்து தள்ள
மனமில்லாமல்
கையில் எடுத்து
கண்ணருகில் வைத்து
அதன் ஒப்பனையில்லா
அழகை ரசித்தேன்.
விட்டுவர மனமின்றி
என் வீட்டிற்கு
என்னுடனே எடுத்து வந்தேன்.
அதன் தேகம் நிறம்
மறைத்திருந்த
 மண்ணை
தண்ணீர் விட்டு
கழுவினேன்.
சூடான சூரியன்
தன் கதிர் கொண்டு
ஈரம் காயச்செய்தான்.
ஊறிப்போன குச்சிகள்
மிடுக்காய் நிமிர்ந்தன.
அதன் பின்னே
அதன் நிஜ அழகு
மிலிர்ந்தது
இரண்டொரு நாள்
ஆனப்பின்
பித்தளைப் பூ ஜாடி
ஒன்றுக்குள்
அழகாக நிற்கச்செய்து
என் வீட்டில்
ஓர் இடமளித்தேன்.
என் வீட்டு
கண்ணாடிக் கூண்டுக்குள்
பல காலம் அடைப்பட்டு
சுதந்திரமாய் அமர்ந்திடவே
இடம் தேடி களைத்திருந்த
பல வண்ணக் குருவிகளை
அக்கிளையில் அமரச்செய்தேன்.
குருவிகள் அமர்ந்தப்பின்
காய்ந்த கிளையும்
பச்சையாய் தெரிந்தது.
உயிரில்லா குருவிகளும்
உயிர் பெற்று ஒளிர்ந்தது.
ஓர் மரத்தின்
காய்ந்த  குச்சிகளே
உயிரில்லா குருவிகளுக்கு
உறைவிடமாய் ஆன பொழுது,
மறித்தப் பின்
மரம் மட்டுமல்ல
மனிதனும்
பயனாகலாம்
மனமிருந்தால்!
பல உயிர்களில்
மீண்டும் வாழலாம்
உறுப்புகளாய்.......


No comments: