Wednesday, February 15, 2017

நானே நானா? யாரோ தானா??

டிசம்பர் ஐந்து ஆரம்பித்தது எனது தொலைகாட்சி பித்து! ஆம் ஜெயலலிதா மாண்டது முதல், வர்தா புயல், பின் ஜல்லிக்கட்டு அதன் பின் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ் நாட்டு அரசியல் நாடக மேடையில் நடக்கும் நாடகம் என்று, என்னை தொலைகாட்சி கட்டிப்போட்டு விட்டது. இந்த பதினைந்து நாட்களாக நான் நானாகவே இல்லை. என் வீட்டு சோபா வாய் இருந்தால் அழுதுவிடும் . அந்த அளவிற்கு உட்கார்ந்தே தேய்த்திருக்கிறேன். இருபத்தி நாண்கு மணி நேரமும் தொலைக்காட்சி முன் தான். தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே அலைபேசியில் வாட்ஸ் ஆப் செய்திகளை வேறு பார்த்துக்கொண்டிருந்தேன். முகநூலையும் விடவில்லை. என்னவோ என் வீட்டில் முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறி கொண்டிருப்பதை போன்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன்.


மனதில் எப்பொழுதும் ஒரு படபடப்பு . என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ என்ற தவிப்பு. வீட்டில் ஒரு வேலையும் நடக்கவில்லை. காலையில் சாப்பாடு என்று எதையாவது கிண்டி வைத்துவிட்டு சோபாவில் அமர்ந்து விடுவேன். இந்த இரண்டு வாரங்களில் நான் செய்த உப்புமா போல் வேறு எப்பொழுதும் நான் செய்தது கிடையாது. அவசரத்திற்கு கை கொடுக்கும் மா உப்புமா என்பது உண்மையாகி போனது.. பள்ளி செல்லும் மகன் மாலை வருவதால் இன்னும் வசதியாக போனது. கணவரும் இரவு தான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவார். . சாயங்காலம் அவர்கள் வீடு திரும்பியபோது கூட தொலைகாட்சி பார்ப்பதை நிறுத்தவில்லை. அது ஏதாவது பிதற்றிக்கொண்டேதான் இருந்தது. நல்ல வேலை நான் தமிழ் நாட்டில் இல்லை. இருந்திருந்தால் மாற்றி மாற்றி சேனல் மாற்ற வேண்டி இருந்திருக்கும். அந்த குறை தெரியாமல் இருக்க என் அன்பு தோழிகள் என்னை தொலைபேசியில் அழைத்து நடப்பவை பற்றி அப்டேட் செய்து வந்தார்கள். வீட்டு வேலை தங்கிப்போனது, குளியல் தள்ளிப்போனது. மகனின் படிப்பு பற்றிய கவனிப்பு பின் வாங்கியது. அவன் படித்தானா அல்லது அவனது கைபேசியில் நேரத்தை செலவிட்டானா என்று வாட்ச்வுமன் வேலையை செய்யவில்லை. அவனும் இது தான் சந்தர்ப்பம் என்று சந்தோஷமாக இருந்தான்.  கோவிலுக்குப் போவது தடைப்பட்டது.

தொலைபேசியில் ஊருக்கு அழைத்து பேசினாலும் நலம் விசாரிப்புகள் மறைந்து  அரசியல் பற்றிய பேச்சுத்தான். வெளிநாட்டில் இருக்கும் என் மகளிடம் கூட பேசுவது குறைந்தது. பொதுவாக வீட்டில் யாவரும் வெளியில் சென்றப்பின் நான் உணரும் தனிமையை நான் உணர மறந்தேன். அது தான் எந்நேரமும் தொலைகாட்சியில் ஒரு பத்து பேர் கூவிக்கொண்டே இருக்கிறார்களே.  நான்  என்னவோ பெரிய அரசியல் விமர்சகர்  மாதிரி என்னை நம்பி என் அன்பு தோழிகள் வேறு எனக்கு போன் செய்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டார்கள். இந்த நாடகத்திற்கு முன்பு அமெரிக்க ட்ரம்பின் நாடகத்தை பார்த்துக் கொண்டிருந்த நான் தாய் மொழி நாடகம் இருக்கும் பொழுது இது எதற்கு  வேற்று மொழி நாடகம் என்று அதை பார்ப்பதையும் நிறுத்திவிட்டேன். வீட்டில் கிண்டல், கேலிகள் குறைந்தது. தோழிகளுடன் ஆன ஆரோக்கியமான, மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான பேச்சுக்கள் காணாமற் போயின. அன்பர் தினத்தன்று கூட வாழ்த்துக்கள் பறிமாறிக்கொள்ள மறந்தேன். அன்பர் தினத்தன்று வழக்கமாக குடும்பத்தாருக்கு பிடித்தவை சமைத்து சேர்ந்து உண்ணுவது வழக்கம். ஆனால் இம்முறை சிகப்பாக ஏதாவது செய்து வைத்தால் போதும் என்று பீட்ரூட் பொரியல் செய்து வைத்தேன். அதை பார்த்த மகன் வேண்டா வெறுப்பாக முகம் சுழித்தான். நான் அதை கூட கண்டு கொள்ளவில்லை. சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவதை விடுத்து தொலைகாட்சி முன் அமர்ந்து  மூன்று வேலை உணவும் உண்ணப்பட்டது.


மனதில் ஒரு அமைதி இன்மை. நடக்கும் நாடகங்களை பார்க்கும் பொழுது இனம் தெரியாத கோபம், வெறுப்பு, ஆத்திரம். மக்களை இவ்வளவு முட்டாள்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்களே என்ற பரிதவிப்பு. இதற்கு யார் தான் முற்றுப்புள்ளி வைக்க போகிறார்கள் என்ற ஏக்கம். எப்பொழுதும் ஒருவித தலை பாரம், மனதும் சேர்த்துத்தான். வாட்ஸ் ஆப்  மட்டும் இல்லாவிட்டால் இவ்வளவு தூரம் மனம் சஞ்சலப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. மாறி மாறி வந்த தொலைபேசி அழைப்புகள் எனக்குள் இருந்த கோபத்தை இன்னும் சூடேற்றிக் கொண்டிருந்தது. ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? என் கையாலாகாதனத்தின் மேல் , என் மேல் எனக்கே கோபம் வந்தது. வேடிக்கை பார்க்கத்தானே முடிகிறது !


இப்படி தொலைகாட்சியை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பதால் என்ன பயன்? தொலைபேசியில் ஆதங்கத்தை பகிர்தலால் என்ன பயன்? வாயில் வரக்கூடாத வார்த்தைகள் வந்துவிடுமோ என்ற அச்சம் தான் மிச்சம். இரண்டு வாரங்கள் முடிந்த பின்னும் நாடகங்கள் முடிந்த பாடில்லை. இப்படியே போனால் நம் பொழப்பு என்னாவது என்று பயமாய் உள்ளது. இதற்கெல்லாம் யாரை குற்றம் சொல்வது? தொல்லை தரும் தொலைகாட்சி செய்திகளையா? செய்தித்தாள்களையா? வாட்ஸ் ஆப் செய்திகளையா?  அவர்களின் வேலை செய்திகளை பரப்புவது மற்றும் வியாபார நோக்கம். ஆனால் நான் ஏன் என்னை மறந்து அதில் லயித்து போயிருந்தேன். என்னுடைய இந்த லயிப்புத்தான் அவர்களின் மூலதனம். அவர்களின் வியாபார பசிக்கு நான் இரையாகிறேன். இரவு நேரங்களில் சரியான தூக்கம் கூட இல்லை. எங்கே நாம் தூங்கும் நேரம் நமக்கு தெரியாமல் ஏதாவது நடந்து விடுமோ என்ற நினைப்பு. அதற்கு ஏற்றாற்போல் ப்ரேக்கிங் நியூஸ் என்று நொடிக்கு முன்னூறு தரம் செய்திகளை வாரி வழங்கி கொண்டிருந்தார்கள்.



இந்த அரசியல் சதுரங்கத்தில் நாம் பகடைக்காயாய் ஆகிறோம் என்று அறிந்திருந்தும் என்னால் அந்த சிலந்தி வலையில் இருந்து மீளமுடியவில்லை. அவர்களின் வியாபார உத்தியின் வெற்றி இது தான். யாருடன் நான் எவ்வளவு நேரம் பேசினாலும் சரி, விடாமல் சுடச் சுடச் செய்திகளை தெரிந்து வைத்துக்கொண்டிருந்தாலும் சரி அதனால் எனக்கென்று ஒரு ஆதாயமும் இருக்கவில்லை. நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களின் நடிப்பை தொடர்ந்து கொண்டு தான் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள். இதில் நஷ்டம் எனக்குத்தான். என் வீட்டு உலையில் நான் தான் அரிசியை கழுவி போடவேண்டும் . யாரும் எனக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. என்ன ,ஊருடன் ஒத்து வாழ் என்பதை போல் எல்லோருக்கும் தெரிந்த ,அறிந்த செய்திகள் எனக்கும் தெரியும் என்ற ஒரு உப்பு சப்பு இல்லாத நிம்மதி. அதை நிம்மதி என்றும் சொல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த இரண்டு வாரங்களாக சரியான சாப்பாடு இல்லை, தூக்கம் இல்லை. செய்திகளை கேட்டும், பார்த்தும், அதனைப்பற்றி பேசியும் மன உளச்சல் மட்டும் இல்லை உடல் அசதியும் தொற்றிக்கொண்டது. வழக்கமாக நான் பார்க்கும் தொலைகாட்சி சீரியல்களை கூட நான் பார்க்கவில்லை. என் இரவு நேர நடைப்பயிற்சி தடைப்பட்டது. கடைக்குக் கூட போகவில்லை(தேவை இல்லா சாமான் வீடு வந்து சேரவில்லை என்ற ஒரு நல்ல விஷயம் இது). பேசி பேசி வாய் , தாடை வலித்தது. கேட்டு கேட்டு காது வலித்தது.  இப்படியே போனால் நான் பித்து பிடித்து அலைய வேண்டியது தான் என்று ஒரு முடிவிற்கு வந்தேன்.



நேற்றுடன் எல்லாம் முடியும் என்று எதிர் பார்த்தேன் . ஆனால் மீண்டும் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்ந்து இன்று முதல் என் வேலைகளை வழக்கம் போல் தொரடலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். என்ன நாளை வேறு எதாவது ஒரு அதிர்ச்சி செய்தி தாக்காமல் இருந்தால் சரி...... மனித மனம் குரங்கு தானே ?? அது என்ன செய்யும் ? வெறும் வாய்க்கு அவல் கிடைத்தால்  மெல்லத்தான் தோன்றுகிறது.



அதெல்லாம் சரி நான் இப்படி என்னை மறந்து இந்த நிகழ்வுகளை கவனிப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன். என் சமூகத்தின் மேல் இருக்கும் அக்கறையா? அரசியல்வாதிகளின் மேல் இருக்கும் வெறுப்பா, அதிர்ப்தியா? என் மக்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்ற எதிர்ப்பார்ப்பா? ஊழல்வாதிகள் ஒழிந்துவிடுவார்கள் என்ற கனவா? மக்கள் புரட்சி வெடிக்காதா என்ற எண்ணமா? நல்லதோர் சமூக மாற்றம் தோண்றுமா என்ற தேடலா? எம்மக்களை வழிநடத்த புதியதோர் தலைவன் ஒருவனை தேவதூதன் அனுப்பி வைப்பான் என்ற சிந்தனையா? அதிகாரவர்க்கத்தின் மேல் உள்ள பொறாமையா? நியாய தர்மம் எப்படியும் நிலை நாட்டப்பட வேண்டும் என்ற பிராத்தனையா? இன்னும் எவ்வளவு தூரம் நம்மை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்க்கப்போகிறார்கள் என்ற பொறுமையா? இல்லை எல்லாவற்றிற்கும் மேல் வேலை வெட்டி இல்லாமல் நான் இருப்பதாலா? ஆக்கபூர்வமாக செயல் பட அறியாததாலா? இத்துனை கேள்விகளுடன் நான் எனக்கே ஒரு சுய பரீட்ச்சை வைத்துக்கொண்டு இருக்கிறேன். புதியதோர் உலகம் ஒன்று தோன்றும் என்ற என் நம்பிக்கை மட்டும் என்னுள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு தான் இருக்கிறது.... எந்த ராஜா எந்த பட்டணம் போனால் எனக்கென்ன?????கூட்டி கழித்து பார்த்தால் என்னால நீ கெட்ட உன்னால நான் கெட்டேன் கதை தான்........

No comments: