நான் வாழ்ந்த போது
நீ வந்திருந்தால்
வாசல் வரை வந்து
வரவேற்றிருப்பேன்
நான் இறந்தபின் வந்துவிட்டாயே !!
என் வாழ்வில்
பங்கு பெற ஆசையில்லா
உனக்கு, என் சாவில்
பங்கு கொள்வதில்
என்ன பயன்?
ஊருக்கு பயந்தா,
உறவுக்கு பயந்தா,
வந்தாய்?
உயிர் இருந்தபொழுது
பாசமாக அணைக்காத நீ
உயிர் நீத்த என் கூட்டை
அணைத்து
எந்த பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறாய்??
மூச்சிருக்கும் போது
நம் உறவே உதிர்ந்தபின்
இன்று மூச்சடங்கிய நான்
நீ போடும் இந்த
ஒற்றை மாலைக்கா
எழப்போகிறேன்??
நீ விடும் கண்ணீர்
உனக்கு வேண்டுமானால்
பாவ மன்னிப்பாய் இருக்கலாம்
எனக்கு அது
வெறும் உப்புக் கரைச்சலே!!
மனம் மக்கி
வருடங்கள் பல மடிந்தன!
உடல் மட்டுமே
இப்பொழுது பாக்கி!!!
நம் இரத்த பந்த உறவே
பொய்யாகி போன நிலையில்
எந்த பந்தத்தை புதுப்பிக்க
இன்று வந்தாய்??
சாவு வீட்டில்
புதிப்பிக்கப்படும் உறவுகள் மேல்
எனக்கு நம்பிக்கை இல்லை
ஏனெனில் அந்த உணர்வுகளில்
மெய்யில்லை!!
என்னைப் போலவே
நம் உறவும் மடிந்ததாகவே
இருக்கட்டும்!!
No comments:
Post a Comment