Tuesday, January 31, 2017

அக்னி குஞ்சுகளே!!

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”
-----பாரதியார்
பொது நலம் என்று வந்துவிட்டால்
சுயநலம் கடலடி என்று நிரூபித்துவிட்டான் தமிழன்!
பொது நலத்திற்காக கடல் நுரையென பொங்கி விட்டான்!
இலக்கு ஒன்றாக இருக்குமானால் குறி என்றும் தப்பாது! இலக்கு பலவாயின் எய்தவனே குறியாவான்!
உணர்வீர் இதனை இத்தருணம்!
உணர்வு பூர்வ எழுச்சி உணர்ச்சி பூர்வமானதாக மாறினால்
எழுச்சியில் தாழ்ச்சியே ஏற்படும்!
வார்த்தையில் கண்ணியம், செய்கையில் கட்டுப்பாடும் அவசியம்!
வசை பாடுவதால் அது இசையென ஆகாது!
பொங்கும் பால் வரம்புக்குள் இருக்கும் வரை பயன்படும்
கீழே சிந்தினால் யாருக்கும் பயனில்லை!
எய்தவன் அங்கிருக்க அம்பை குறை கூறி பயன் என்ன என்று யாரும் போக மாட்டார்கள். குத்திய அம்பை எடுத்து முறித்து போடவே முயற்சிப்பர்.
உங்களின் இலக்கை நோக்கி செல்லுங்கள் , யாருடைய இலக்கிற்கும் ஆளாகாதீர்கள்.
வாக்கினிலே சுத்தம் வேண்டும்!
செய்கைதனில் உயர்ச்சி வேண்டும்!
மனிதர்களை மதித்தல் வேண்டும்!
வயதிற்கான மரியாதை வேண்டும்!
சின்னப்பிள்ளை இட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது என்றாக்கி விடாதீர்கள்!
ஒவ்வொரு அடியாக எடுத்து வையுங்கள். இது உங்களின் முதல் அடி . முதல் படி கால் பதியாமல் கடைசி படி அடைதல் முடியாது. முதல் அடி ஆணித்தரமானதாக இருக்க வேண்டும். அதில் தடுமாற்றம் ஏற்பட்டால் மீண்டும் தரையில் விழுந்து விடுவோம்.
பொறுமை காத்து இருங்கள். அவர்களுக்கும் கால அவகாசம் கொடுங்கள். நிச்சயம் நன்மை உண்டாகும்!

தமிழண்டா!!

சட்டிக்குள் இருக்கும் நண்டுகள் அல்ல தமிழன், 
ஒரு பருக்கை ஆனாலும் தன் இனத்தை
கூவி அழைத்து பகிர்ந்துண்ணும் 
 காகைகள் என்பதனை
உலகிற்கு பறைசாற்றியாகிவிட்டது. 
விருந்தும் மருந்தும் நாண்கு நாட்களுக்குத்தான்!
உண்டது விருந்தோ மருந்தோ,
அதன் பயனை சிறிது காலம்
காத்திருந்துதான் உணரவேண்டும்.
இன்று முளைத்த காளானாகி போகாமல்,
ஆலம் விழுதுகளாய் படர்ந்து
தாய் மரத்திற்கு பளு சேருங்கள்.
இன்று விதைத்த விதையை
இன்றே அறுவடை செய்ய நினைத்தால்
அதில் மிஞ்சுவது பதரே !
காத்திருந்து அறுவடை செய்யும்
நெல்லே வீடு வந்து சேரும்.
அதுவே விளைநெல்லாய் மாறும்!
தேவை இங்கு குருதி சிந்தா உறுதி!
எரி நட்சத்திரம் அல்ல நீங்கள் !
நீங்கள்வழிகாட்டும் துருவ நட்சத்திரம்!
 அப்பனுக்கு சுப்பனாக இருந்தது சரிதான்
சுப்பனும் அப்பனாவான் என்பதை மறவாதீர்!
அனுபவம் தவிர்த சிறந்த ஆசான் இவ்வுலகில் இல்லை,
அவ்வாசான் கைப்பற்றி பொருள் உணர்ந்து,
நிலை உணர்ந்து
தன் நிலை மறவாமல்
அடுத்த அடி எடுத்து வையுங்கள்!
தாய் திருநாட்டை சிதறாமல் காத்திடுங்கள்!!

Friday, January 20, 2017

வீரத்தமிழா!!

அறம் வழி என ஆனப் பின்
உயிரே போயினும்
தரம் தாழாதே
தடம் மாறாதே 
மறத்தமிழா!
பரமே வரினும்
அறமே வரம் என
கரம் குவித்து கேள் வீரத்தமிழா!!
நீ நடத்துவது
மெளனப் போராட்டம் ஆயினும்
புவிதோறும் ஒலிக்கும்
உன் வீர முழக்கம்.......
கை கொண்டு
கண், காது, வாய் மூடி
நிற்கும் அற்பனுக்கும்
சீக்கிரமே புரிந்துவிடும்
உன் ஒலி மழைத்துளி அல்ல
கடல் அலையின் ஓயா ஒலியென.....
உன் லட்சியமும், பாதைகளும்
ஒன்றெனவே இருக்கட்டும்
ஒற்றுமை தான் வானளாவ ஓங்கட்டும்......
அறம் மட்டுமே ஆயுதமென
சூளுரைதான் எடுத்துவிடு...
சீக்கிரமே உன் யாகம்
பலித்துவிடும்...
இரவும் தான்
விடிந்துவிடும்......
அதுவரையில் அமைதியாய்
போராடு என் வீரத்தமிழா....

Friday, January 13, 2017

பொங்கல் நினைவலைகள்..........

இதோ வந்துவிட்டது பொங்கல்.... என் மனம் பின் நோக்கி பயணம் செய்ய தொடங்கி விட்டது........

ஜனவரி மாதம் வந்தாலே மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பது பொங்கல் திருநாளைத்தான். அதுவும் மாட்டுப் பொங்கல் என்றால் மனதில் அலாதி சந்தோஷம்.  டவுனில் வளர்க்கப்பட்ட நாங்கள் கிராமத்திற்கு போவது என்பது வருடம் ஒருமுறை வரும்  பொங்கலுக்குத்தான். சொந்த பந்தங்களை பார்க்கக் கிடைப்பதும் அப்பொழுதுதான்.


 மாட்டுப்  பொங்கல் என்றால் என் மனதில் ஒரு தனி மகிழ்ச்சி. ஏனென்றால் அன்றைக்கு மாட்டுக்கு பொங்கல் வைப்பது என் வேலை. நான் வைக்கும் பொங்கலை மாடு மட்டும் தான் சாப்பிட முடியும் என்பது ஒரு புறம் இருந்தாலும், நமக்கென்று நம்மை நம்பி ஒரு பெரிய வேலையை ஒப்படைத்து விட்டார்களே என்ற இருமாப்பு. பொங்கல் செய்வது என்பது நானாக இருந்தாலும் அடுப்பை பற்ற வைத்து எரிய வைத்து கொடுப்பதெல்லாம் என் சித்தப்பா பிள்ளைகள்தான். டவுனில்  இருந்து   வருவதாலும் வீட்டிற்கு முதல்  பேத்தி என்பதாலும் எனக்கு தனி கவனிப்பு. நமக்கென்று ஒரு பானை கிடைத்து விட்டது என்று நானும் விடாமல் கிண்டி கொண்டே இருப்பேன், பொங்கல் கூழாகும் வரை . புகையில் நின்று பழக்கம் இல்லாததால் கண்கள் எரியும். ஆனாலும் கண்களை கசக்கியபடி விடாமல் கிண்டுவேன்.


மாடுகள் குளிக்கும் அதே குளத்தில் கரையில் நின்று குளித்த காலமும் உண்டு. இன்று வீட்டில் இருக்கும் நாண்கு பேருக்கும் தனித் தனி குளியல் அறை... சித்தப்பாக்கள், அண்ணன்கள், தம்பிகள் என்று எல்லோருடனும் மாட்டுக்கு புல் அறுக்க போன அனுபவமும் உண்டு. எங்கே நான் கையை அறுத்துக் கொள்வேனோ என்று எப்பொழுதும் என் அம்மா பயப்படுவாள். எனவே எனக்கு மட்டும் ஒரு சிறு கூடை,சிறு அறுவாள் . நான் ஒன்றும் புல் அறுத்தது கிடையாது. . எல்லோருடனும் சென்று விட்டு அவர்கள் வீடு வரும் பொழுது ஒவ்வொருவர் கூடையிலிருந்தும் ஒரு பிடி புல் எடுத்து என் கூடையில் நிரப்பிக்கொண்டு பந்தாவாக வீடு வந்து சேருவேன்.



செங்கல் உடைத்து, பொடியாக்கி கோலம்  என்ற பெயரில் கிறுக்கல்கள்  பல வரைந்த  நாட்களை எப்படி மறக்க இயலும்.  நான் போட்ட கோலம் யாவும் ஒன்று நட்சத்திரமாக இருக்கும் இல்லையேல் ஏதாவது ஒரு நேர் கோடு, அறுகோனம், முக்கோனமாகவே இருக்கும். ஊரில் உள்ள அத்தைகள் யாவரும் ,சானம் தெளித்து கூட்டிய  பெரிய வாசல் முழுதும் சிக்குக் கோலம் போடுவதை  வாய் பிளந்து  குத்துக்கால் போட்டு உட்கார்ந்து பார்ப்பேன். பின் என் பங்கிற்கு Happy Maatu Pongal என்று எழுதுவேன். வீட்டு சாமி கும்பிடுவதற்காக பனியாரம், வடை செய்ய எங்கள்  ஆத்தா ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டும் பொழுது  அவருக்கு உதவுவது போல்   சிறிது நேரம் ஆட்டம் போடுவேன். குளவியை சுற்றுவது  என் வேலை. அதுவும் பத்து நிமிடங்கள் தான். அதற்குள் யாராவது விளையாட கூப்பிடுவார்கள். ஓடி விடுவேன். அன்று ஒரு நாள் மட்டும் யார் வீட்டில் வேண்டுமானாலும் சாப்பிடலாம் .


ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் பொழுதும்  தெருவில் ஏதாவது இரு  குடும்பங்களுக்குள் பேச்சு வார்த்தை இருக்காது. போன வருடம் எதிரியாக இருந்தவர்கள் இந்த வருடம் நட்பாகி இருப்பார்கள். இது எழுதப்படாத நியதி. ஆனால் எல்லோர் வீட்டு குழந்தைகளும் ஒன்றாக விளையாடுவார்கள். . மாடுகளை  குளிப்பாட்டி, பொட்டு வைத்து, மாலையிட்டு அழகு படுத்துவதே ஒரு கலைதான். எனக்கு எப்படியும் ஒரு கன்றுக்குட்டியோ அல்லது ஆட்டுக்குட்டியோ காத்து இருக்கும் பொட்டு வைத்து  பூ வைக்க. சாமி குப்பிடுவதற்காக கொட்டு கொட்டுவதற்கு ஒரு தட்டையும் குச்சியையும் மதியம் முதலே ஏற்பாடு செய்வோம். “பழைய தட்டை எடுத்துட்டு போ புதுசை நெளிச்சு கொண்டாராத”, என்று என் ஆத்தா கத்திக்கொண்டே இருப்பார். அது எதுவும் காதில் ஏறாது. ஒவ்வொரு வீடாக சென்று சாமி கும்பிடும் போது மாடுகள் மிரளுமளவிற்கு சத்தமாக எல்லோரும் சேர்ந்து கொட்டு கொட்டுவோம்.”பொங்கலோ பொங்கல், மாட்டுப் பொங்கல் “ என்று கத்துவோம். இன்று  நினைக்கையிலும் அந்த சத்தம் காதில் ஒலிக்கிறது. பொதுவாக இருட்டிய பின் தான் சாமி கும்பிடுவார்கள். வீட்டை விட்டு தள்ளி இருக்கும் மாட்டுக் கொட்டகை இருட்டாக இருக்கும். அங்கு சென்று சாம்பிராணி போட்டு, சூடம் ஏற்றி மாட்டுக் காலில் விழுந்து கும்மிட சொல்வார்கள். பயந்த  படியே அதை ஒவ்வொரு வருடமும் தயக்கத்துடன் செய்வேன். எங்கே மாடு முட்டிவிடுமோ என்ற அச்சம்.


அன்று வீட்டில் உள்ள ஆண்கள் எல்லோரும் மஃபில் மிதப்பார்கள். ஒரே பாச மழையாக பொழிவார்கள். ஊர்வன, பரப்பன, நடப்பன என எல்லா வகையான சாப்பாடும் இலை நிறைய பரிமாறப்பட்டிருக்கும். என் தந்தையை பார்க்க அவரின் நண்பர் குழாம் அன்று வருவார்கள். யார் வந்தாலும் சாப்பிட்டு செல்வது தான் வழக்கம். மறு நாள் கன்னிப் பொங்கலுக்கு கோவிலுக்கு செல்ல மாட்டுப் பொங்கல் அன்றே சிறுவர்களுக்கு பெரியவர்கள் காசு கொடுப்பார்கள். அன்று செமையாக கல்லாக் கட்டும். அன்று கிடைக்கும் அந்த ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு முப்பத்திரண்டு பல்லையும் காட்டுவோம். மகிழ்ச்சி கடலில் மிதப்போம். இன்று பிள்ளைகளுக்கு கிரெடிட் கார்டையே கொடுத்தாலும் பத்துவது இல்லை. இரவு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் உட்கார வைத்து என் தாத்தா திருஷ்டி சுத்தி போடுவார். நெல் அளக்கும் மரக்காவில் உப்பு , மிளகாய் போட்டு எறிய விட்டு சுற்றுவார்கள். நெடியேரும் அந்த காரம். ஆனாலும் எல்லோரும் அமைதியாக இருமிக்கொண்டே அமர்ந்திருப்போம்.


இரவு கோவிலில் நாடகம் நடக்கும். பெரும்பாலும் வள்ளித்திருமணம் நாடகம் தான்  நடக்கும்.  நாடகத்தை பார்க்க மாட்டு வண்டி  பூட்டி என் சித்தப்பா கூட்டிச் செல்வார். வண்டியில்  ஏறுவது முதலாவது  நான் தான். போர்வை ஒன்றை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவேன். நாடகம்  ஆரம்பிக்கும் முன் வண்டியிலேயே முதலாவதாக தூங்குவதும் நானாகத்தான் இருப்பேன். ஆனாலும் வருடா வருடம்  வண்டி ஏறி நாடகம் பார்க்கச் செல்வேன். விடியற்காலை நாடகம் முடிந்தவுடன் வீடு வந்து சேர்வோம். அந்த நாட்களை நினைக்கையில் ,வெட்ட  வெளியில் , பனி விழும் இரவில், அந்த மாட்டு வண்டியில் தூங்கிய தூக்கத்தின் மயக்கம் இன்றும் என் கண்களை தழுவுகின்றன.


மறு நாள் கன்னிப் பொங்கலுக்கு கோவிலில்  திருவிழா நடக்கும்.  எல்லோரும் ஒன்றாக புத்தாடை அணிந்து கிளம்புவோம். எங்கள் அத்தைகள் இருவரும் அவரவர் குடும்பத்துடன் அன்று என் பாட்டி வீட்டிற்கு வருவார்கள். எல்லா பிள்ளைகளுமாக சேர்ந்து ஒரே ஆட்டம் பாட்டமாக இருக்கும்.  கோவிலில் இனிப்பு சேவு, பஞ்சு மிட்டாய் எல்லாம் வாங்கி சாப்பிட்டுவிட்டு சாமிக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு , பின் சாமிக்கு படைக்கப்படும்  மாவிலக்கையும் பலாச்சுளையுடன் தேங்காய் வெல்லம் கலந்த கலவையும் சாப்பிட்டு விட்டு அடுத்தது கோவில் கடையில் என்ன என்ன வாங்கலாம் என்று கண்கள் அலையும். .சாமி கும்பிடப்போகும் பொழுது கோவில் பூசாரி விபூதியை எடுத்து நெற்றி நிறைய பூசி விட்டு , பின் தலையிலும் கொஞ்சம் தெளித்து , வாயிலும் கொஞ்சத்தை போடுவார். இன்று போல் விபூதி பூசும் பொழுது கண்களை கைகளைக் கொண்டு குடை பிடிக்க யாருக்கும் அன்று தெரிந்திருக்கவில்லை. என் பிள்ளைகளுக்கு இன்றும் விபூதி பூசினால் கண்களை மறைத்து ஊதிவிடவேண்டும் கண்களுக்குள் அத்துகள்கள் செல்லாதவாறு. அது மட்டுமல்ல ஒரு சிரு கோடு தான் பூச வேண்டும் . கோவிலில்   சிறு ராட்டிணம்  ஒன்று இருக்கும் . அதில் ஏறாமல் வருவதில்லை. அந்த ராட்டிணத்தை சுற்றி விட ஆள் இருப்பார்கள். வேகமாக சுற்றச்சொல்லி கத்துவேன். கீழே நிற்கும் என் சித்தப்பாக்களும் ராட்டிணம் சுற்றும் ஆளுடன் சேர்ந்து வேகமாக சுற்றுவார்கள். ராட்டிணம் நிற்கையில் கொண்டாட்டங்களும் நிற்கும்.


எல்லாக் கொண்டாட்டங்களும் முடிந்து  அவரவர் ஊருக்கு பயணம் தொடரும். மனதிற்குள் அடுத்த வருட பொங்கலுக்கான காத்திருப்பு தொடங்கும்.

இன்றும் பொங்கல், மாட்டுப் பொங்கல் வருகிறது. அன்று போல் இன்று இல்லை....

உறவுகள் பல தூரம்   போய்விட்டன. நினைவுகள்  மட்டுமே மிஞ்சி நிற்கின்றன. அந்த நினைவுகளை மனதில் சுமந்தபடி நான் ஒவ்வொரு வருடமும் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டே வீட்டு சாமியை கும்பிடுகிறேன். எனக்காவது நினைத்து பார்க்க நினைவலைகள் உள்ளன. என் பிள்ளைகளுக்கு அதுவும் இல்லை. ஆண்டி, அங்கிள்களே அவர்களின் உலகம் ஆகிப்போனது........

சரி சரி நான் போய் நாளைக்கு பொங்கலுக்கான வேலையை பார்க்கிறேன்..... இப்படியே பழசை அசை போட்டுக்கொண்டிருந்தால் விடிந்துவிடும்.....

Friday, January 6, 2017

பொய்யான உறவு

நான் வாழ்ந்த போது
நீ வந்திருந்தால்
வாசல் வரை வந்து
வரவேற்றிருப்பேன்
நான் இறந்தபின் வந்துவிட்டாயே !!

என் வாழ்வில்
பங்கு பெற ஆசையில்லா
உனக்கு, என் சாவில்
பங்கு கொள்வதில்
என்ன பயன்?
ஊருக்கு பயந்தா,
உறவுக்கு பயந்தா,
வந்தாய்?

உயிர் இருந்தபொழுது
பாசமாக அணைக்காத நீ
உயிர் நீத்த என் கூட்டை
அணைத்து
எந்த பாவத்திற்கு
பரிகாரம் தேடுகிறாய்??

மூச்சிருக்கும் போது
நம் உறவே உதிர்ந்தபின்
இன்று மூச்சடங்கிய நான்
நீ போடும் இந்த
ஒற்றை மாலைக்கா
எழப்போகிறேன்??

நீ விடும் கண்ணீர்
உனக்கு வேண்டுமானால்
பாவ மன்னிப்பாய் இருக்கலாம்
எனக்கு அது
வெறும் உப்புக் கரைச்சலே!!
மனம் மக்கி
வருடங்கள் பல மடிந்தன!
உடல் மட்டுமே
இப்பொழுது பாக்கி!!!

நம் இரத்த பந்த உறவே
பொய்யாகி போன நிலையில்
எந்த பந்தத்தை புதுப்பிக்க
இன்று வந்தாய்??

சாவு வீட்டில்
புதிப்பிக்கப்படும் உறவுகள் மேல்
எனக்கு நம்பிக்கை இல்லை
ஏனெனில் அந்த உணர்வுகளில்
மெய்யில்லை!!
என்னைப் போலவே
நம் உறவும் மடிந்ததாகவே
இருக்கட்டும்!!