Friday, March 4, 2016

தனித் தீவு

சனிக்கிழமை காலை. வழக்கம் போல் செல்வி எழுந்து விட்டாள். அவளை எழுப்ப சேவல் கூவத்தேவையில்லை. பழக்க தோஷம்,விடுமுறை நாள் என்றும் பாராமல் அவளை கண் விழிக்கச் செய்தது. வீட்டிற்கு ஒரு கடிகாரம் ,இருந்தது ஒரு காலம். இப்பொழுது தான் ஒரே அறையில் உறங்கினாலும் அவரவர் எழுவதற்கு அவரவருடைய கைத்தொலைபேசியில் அலாரம் வைத்து கொள்கிறார்களே. அவள் வீட்டிலும் அப்படித்தான். தினமும் எல்லா அறைகளிலும் ஒலிக்கும் அலாரத்தை பேசா மடந்தை ஆக்குவது அவள் வேலை. ஏனைன்றால் அதன் சத்தத்தை கேட்டு யாரும் எழுவது இல்லை. அவளின் சத்தத்தை கேட்டுத்தான் எழுவார்கள். சனிக்கிழமை என்றால் அதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு....

காலை வழக்கம் போல் எழுந்த செல்வி தன் வேலைகளை ஆரம்பித்தாள். மணி பத்தாகியும் வீட்டில் ஒரு சலனமும் இல்லாததால்,” குட் மார்னிங். மணி பத்தாகிறது. எல்லாரும் எழுந்திரிக்கிறீங்களா? “ என்று ஒவ்வொரு அறையாக சென்று கோர்ட் கவாளியைப்போல் எழுப்பினாள்.அவள் சிறுமியாக இருந்தபொழுது அவளின் தந்தையார் அவளையும் அவள் தங்கையையும் எழுப்ப கையாண்ட உத்தி அவளுக்கு நிணைவிற்கு வந்தது. முதலில் அவர் மின் விசிறியை அனைப்பார். சிறிது நேரம் பொறுமையாக இருப்பார். அப்படியும் எந்த அசைவும் இல்லையென்றால் சிறிது தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்துவிடுவார். பின் என்ன, ஏதும் சொல்ல முடியாமல் கண்களை கசக்கிக்கொண்டே கோவத்துடன் எழுந்து பல் துலக்க செல்லவேண்டும். அதையெல்லாம் அவள் தன் பிள்ளைகளிடம் கூறுவாளே தவிர ஒரு நாளும் செய்முறை விளக்கம் காண்பித்தது இல்லை.அவர்களை அவள் எழுப்புவது கோவிலில் ஒலிக்கும் சுப்ரபாதத்தை போன்றே அவர்களுக்கு ஒலிக்கும்.

ஒரு பத்து நிமிடம் பொறுத்திருந்து விட்டு மீண்டும், “ காலை டிபன் வேலை முடிந்தால் தானே நான் மதிய வேலையை ஆரம்பிக்க முடியும். இப்படி காலை டிபனே பதினோரு மணி வரை முடியாமல் இருந்தால் நான் நாள் முழுதும் அடுப்படியிலேயே படுத்துக்கொள்ள வேண்டியது தான்”, என்று புலம்பிக் கொண்டே கணவன் ராஜ் படுத்திருந்த அறைக்குள் பிரவேசித்தாள். இனியும் இவள் பாடும் சுப்ரபாதத்தை கேட்க முடியாது என்பது போலவும், “நீ பேசுவது எல்லாம் என் காதில் விழுந்தது, “ என்பது போலவும் அதுவரையில் அசையாமல் படுத்திருந்தவர் படுக்கையிலேயே அங்கப்பிரதட்சனம் சிறிது செய்யலானார்.

”ஏங்க கொஞ்சம் எழுந்திறீங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு ,” என்றாள் செல்வி.”சரி சரி ,ஒரு பத்து நிமிஷம் பொறு. நான் எழுந்துவிடுகிறேன்,” என்ற அவர் கண்விழித்து பக்கத்தில் இருந்த கைதொலைபேசியை எடுத்து துலாவ ஆரம்பித்தார். ஏதோ தூங்கும் போது ஒர் உடல் உறுப்பை கழற்றி வைத்துவிட்டு உறங்கியது போலவும் எழுந்தவுடன் அதை மீண்டும் எடுத்து மாட்டிகொண்டது போலவும் அது இருந்தது. அடுத்த அறையில் அப்பனுக்கு பிள்ளை தப்பாதவன் என்பதை நிரூபிப்பதை போல் மகன் ராகுலும்  தன் பங்கிற்கு படுக்கையில் உருண்ட படி “அம்மா, ஃபைவ் மோர் மினிட்ஸ் ,”என்றான். “எப்படியோ போங்க,” என்று கோபிப்பதை போல் சொல்லிவிட்டு வெளியேறினாள். போகும் போது,”எழுந்தவுடன் படுக்கையை ஒழுங்காக தட்டிப்போட்டுட்டு வா,” என்று சேர்த்துக்கொண்டாள்.

ஒருவழியாக இருவரும் எழுந்து வந்து வரவேற்பறையில் அமர்ந்தார்கள். உடனே ராஜ் டிவியை ஆன் செய்தார். ராகுல் லேப்டாப்பை திறந்து வைத்துக்கொண்டான். பின் அவர்களுக்கு பால், காபி , காலை டிபன் என்று தன் கடமையை  எந்த குறையும் இல்லாமல் செய்தாள். .“காலையில் எழுந்ததும் இதெல்லாம் பாக்காம வேறு ஏதாவது செய்யுங்களேன்,” என்றாள். அவள் கூறியதை யாரும் காதில் போட்டுக்கொண்டதாகவே தெரியவில்லை. டிவி பார்க்கையில் செல்பேசியில் பல விஷயம் நமக்கு தெரியாமல் நடந்தேரறிவிடுமோ என்ற ஐயத்தில் ராஜ் செல்பேசியையும் தொலாவிக்கொண்டே இருந்தார்.


செல்வி மதிய வேலை சமையலை முடித்துவிட்டு,”நீங்க ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க . அதுக்குள்ள நான் பாத்திரம் கழுவி, வீடு கூட்டி முடிச்சிடறேன். அப்புறம் நான் போய் குளிச்சிட்டு வந்தா ஒரு வேலையாவது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடலாம் ,”என்றாள். அவர்கள் இருவரும் குளித்துவிட்டு வந்து மீண்டும் டிவி, லாப்டாப்பில் லயித்து போனார்கள். செல்வி தான் போய் குளித்து, சாமி கும்பிட்டு பின் மதிய உணவை மேசை மேல் எடுத்து வைத்தாள். வைக்கும் போதே,”தம்பி நீ டம்ளரில் தண்ணி ஊற்றி வை. சாப்பிட தட்டு எடுத்து வை,” என்றாள். “ம் ஓகே மா, ம் ஓகே மா”, என்று கூறினானே தவிர அந்த தங்க கம்பி உட்கார்ந்த இடத்தை விட்டு இம்மி அளவும் நகரவில்லை. ஏதோ கோந்து போட்டு ஒட்ட வைத்தது போல் ஒரே இடத்தில் அம்ர்ந்திருந்தனர் தந்தை மகன் இருவரும். பொறுமை இழந்த செல்வி தண்ணீர், தட்டு, எல்லாம் தானே எடுத்து வைத்து விட்டு,” சாப்பிடவாவது இரண்டு பேரும் வரீங்களா இல்லை அதுவும் அங்கு கொண்டு வந்து தரணுமா,” என்றாள். குரலை சிறிது உயர்த்திவிட்டாள் போல. உடனே  ராஜ்,”எடுத்து வை. வருகிறோம். ஏன் கத்திக்கிட்டே இருக்க?” என்றார் கோபமாக.  சாப்பாட்டு மேஜையில் அமர்ந்த படி, “என்ன சாப்பாடு?”என்று ராஜ் கேட்டார். மகன் அவன் பங்கிற்கு,”வாட்ஸ் ஃபார் லன்ச்” என்றான். செல்வியும் தன் பங்கிற்கு, சாம்பார், வெண்டைக்காய் பொரியல், முட்டைகோஸ் கூட்டு, அப்பளம் ,”என்று கட கடவென்று  ஹோட்டல் சர்வர் போல் கூறி முடித்தாள். ராகுல், “ அம்மா, ஒய் காண்ட் யு குக் சம்திங் யம்மி?”என்ற படியே வந்தமர்ந்தான். ”உனக்கு என்ன வேண்டுமோ நீயே சமைத்து சாப்பிடலாம். நான் என்ன வேண்டாம் என்றா கூறப்போகிறேன் ,”என்று சொல்லிவிட்டு தானும் சாப்பிடத்தொடங்கினாள் செல்வி. சாப்பிட்டு முடித்தது தான் , உடனே விட்டதை பிடிக்க ஓடியவரைப் போன்று மகனும் தந்தையும் மீண்டும் ஹாலுக்கு சென்றுவிட்டனர். “டேபிளை யாராவது துடைங்களேன்,”என்று சொல்லிக்கொண்டே செல்வி தானே செய்ய ஆரம்பித்தாள். “ராகுல், போய் அம்மாவிற்கு ஹெல்ப் பண்ணு,”என்று சொல்லிவிட்டு தன் வேலையை தொடர்ந்தார் ராஜ். ராகுலும் கடனே என்று மேஜை மீது இருந்த இரண்டு தண்ணீர் குடித்த டம்ளரை பாத்திரம் கழுவும் இடத்திற்கு இடம் பெயர்த்தான்.  எல்லா வேலையையும் முடித்துவிட்டு களைத்து போய் செல்வி ஹாலில் வந்தமர்ந்தாள்.


அமர்ந்த சிறிது நேரத்தில் ஏதோ நெஞ்சுக் குழியில் சுருக் சுருக் என்று குத்துவதைப் போன்று இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்தாள். குறைவதாக தெரியவில்லை. “ராகுல் கொஞ்சம் தண்ணீ எடுத்துட்டு வா. அம்மாக்கு கேஸ் ட்ரபுள் மாதிரி வலிக்குது,”என்றாள். பக்கத்தில் உட்கார்ந்து இருந்தவனை தட்டி கேட்டும் பலன் இல்லை . கோபத்தில் தானே எழுந்து அடுக்களைக்குள் செய்றாள். சிறிது வெந்தயத்தை எடுத்து முழுங்கினாள். வலி அதிகமாகவே வாயு மாத்திரை சாப்பிடுவதே மேல் என்று நினைத்து இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டாள். அது ஒன்றும் சிறிய மாத்திரை அல்ல. ஐந்து செண்ட் காசைவிட சிறிது பெரியதுதான். கடித்து அல்லது சப்பித்தான் சாப்பிட வேண்டும். வலியின் கொடுமையில் வாயில் போட்ட இரண்டு மாத்திரையையும் கடிக்காமல் தண்ணீர் குடித்து முழுங்க முற்பட்டாள். தண்ணீரை வாயில் ஊற்றியது தான் தாமதம். உள்ளே போன மாத்திரைகள் அப்படியே உணவுக்குழாயில் குறுக்கே சிக்கி விட்டது. தொண்டையை யாரோ பிடித்து இருக்குவது போன்ற உணர்வு. கத்தி யாரையும் கூப்பிட கூட திராணியில்லை. கண்களிலிருந்து கண்ணீர் கொட்டி விழி பிதுங்குவது போல் இருந்தது. நெஞ்சின் மீது யாரோ ஏறி நின்று அமுக்குவது போன்ற உணர்வு. வாந்தி எடுத்தால் பரவாயில்லை என்று தோன்றியது. கையை விட்டு வாந்தியை வரவழைத்தாள்.அதிலும் தோல்வி. உள்ளேயும் போகவில்லை, வெளியேயும் வரவில்லை. திரிசங்கு உலகத்தில் இருப்பது போன்று நடுவிலேயே சிக்கிக் கொண்டு துன்புறுத்தியது. மீண்டும் தண்ணீர் எடுத்து கஷ்டப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்தாள். ஏதோ பூர்வ ஜென்மத்தில் கொஞ்சம் புண்ணியம் செய்து இருந்தாள் போலும். மாத்திரைகள் கரைந்து தொண்டையிலிருந்து நழுவி உள்ளே சென்றுவிட்டது.

அப்பாடா என்று மூச்சு விட்டு விட்டு சில நிமிடங்கள் நெஞ்சை பிடித்துகொண்டு நின்று விட்டு பின் வேர்க்க விறுவிறுக்க ஹாலுக்கு வந்தமர்ந்தாள். அங்கே, எந்த ராஜா எந்த பட்டிணம் போனால் என்ன என்று கணவர் ராஜ் டிவி பார்த்துகொண்டே படுத்திருந்தார். ராகுல் லாப்டாப்பில் மூழ்கி இருந்தான். யாரும் அவளை கவனித்ததாக தெரியவில்லை. இது வரையில் பொறுமையாக இருந்த செல்விக்கு அவளின் ஆற்றாமை கோபமாக வெளிவரத்தொடங்கியது.”ஏங்க அந்த டிவிய கொஞ்சம் நிறுத்தறீங்களா? ராகுல் அந்த செவிட்டு மெஷினை (இயர் போனை அவள் அப்படித்தான் கூறுவாள்) காதுல இருந்து கழட்டு. ஒருத்தி இங்க செத்து போற மாதிரி மூச்சி முட்டி உட்கார்ந்து இருக்கேன், நீங்க ரெண்டு பேரும் அப்படியே டிவி, லாப்டாப்ன்னு உங்கள மறந்து உட்கார்ந்து இருக்கீங்க,’என்று மூச்சு வாங்க கத்தினாள். உடனே ராஜ்,” ஏன் என்ன ஆச்சு ? நல்லா தானே இருக்க?”என்றார். “இப்ப நல்லா இருக்கேன் ஆனா கொஞ்ச சேரத்துக்கு முன்னாடி சாவின் விளிம்பிற்கே போய்ட்டு வந்தது போல் இருந்துச்சு. உள்ளே ஒருத்தி போனாளே ரொம்ம நேரமாகியும் வரவேயில்லையே, என்ன ஆச்சோனு யாராவது வந்து பாத்தீங்களா? என்று  ஆவேசத்துடன் கேட்டாள். கேஸ் மாத்திரை முழுங்கிய போது அது தொண்டையில் சிக்கி விட்டது, என்றாள்.“உனக்கு ஏதாவது பிரச்சனைனா கூப்பிட வேண்டியதுதானே. ஏன் அப்படி சிக்கிக் கொண்டது. மாத்திரை கூடவா ஒழுங்கா சாப்பிட தெரியாது ?”என்று தன் பங்கிற்கு தன் செயலை நியாயப்படுத்தினார்.


“ஆமாம் நான் வேண்டும் என்றே தான் சிக்கிக்க வைச்சுக்கிட்டேன். நான் இருந்தாலும், இறந்தாலும் உங்களுக்கெல்லாம் ஒன்னு தான். இந்த செல் போனை , கம்ப்யூட்டரை கண்டு பிடித்தவனை சொல்லனும். இதெல்லாம் வந்ததில் இருந்து தான் எல்லாம் தான் தான் என்று ஆகிட்டீங்க. ஒரே வீட்ல இருந்தாலும் தனி தனி தீவு மாதிரி வாழ்றோம்,”. என்று தன் கோபத்தை கண்ணுக்கு தெரியாத அந்த கண்டு பிடிப்பாளர்களின் மேல் பாய்ச்சினாள். ” நீயும் தானே இதெல்லாம் யூஸ் பண்ற பின்ன என்ன திட்ற,”என்றார் ராஜ். “ ஆனா நான் அது தான் என் உலகம்னு இருபத்தினான்ங்கு மணி நேரமும் அதில் மூழ்கி கிடக்கவில்லையே. ஒரு அளவு பயன் படுத்தினால் சரி. எழுந்திரிச்சது முதல் படுக்க போகும் வரை அதுவே கதி என்றால் என்ன பண்ணுவது. உங்களை சொல்லி குற்றமில்லை. எல்லாத்தையும் இழுத்து போட்டு நான் செய்யறேன் பாருங்க என்ன சொல்லனும். நானும் உங்களைப்போல அக்கடானு இருந்தா பின்ன தெரியும். உங்க வாரிசு இருக்கே, எனக்கு விக்கல் எடுத்தால் தண்ணிர் தர வரமாட்டான். விக்கி செத்தப்பின் பால் ஊத்தத்தான் வருவான். என்னவோ போங்க. உங்களையெல்லாம் மாத்தவே முடியாது. நான் கத்துறது எல்லாம் வேஸ்ட். நான் போய் கொஞ்சம் படுக்கிறேன்,”என்று நீட்டி முழக்கி நடந்த எல்லாவற்றிற்கும்  யாரையெல்லாம் குற்றவாளி ஆக்க முடியுமோ ஆக்கிவிட்டு கடைசியில் மாற்றம் ஒன்று தான் மாறாதது என்று முடிவுக்கு வந்தவளாய் படுக்கச் சென்றாள். அப்பொழுது தான் அவள் தோழியிடமிருந்து அவளுக்கு வைபரில் அழைப்பு வந்தது. பின் நடந்தது என்ன என்று உங்களுக்கே தெரியும்.....

No comments: