நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நேரமின்மையா, அல்லது சோம்பேரித்தனமா அல்லது நேரத்தை சாதுர்யமாக பயன்படுத்த தெரியாமல் போயிற்றா என்று தெரியவில்லை. பல மாதங்கள் ஓடிவிட்டன . இப்பொழுது மீண்டும் எழுத உட்கார்ந்தால் எழுத வருமோ என்ற சந்தேகத்தோடு தான் இந்த முயற்சி. அதுவும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பொழுது, அம்மா, அம்மா என்ற BGM கேட்டுக் கொண்டே எழுதுவது என்றால் அது ஹிமாலய சாதனை தான் எனக்கு. முயற்சியும், பயிற்சியும் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு அடிக்கடி நான் அறிவுரை வழங்குவதுண்டு. அறிவுரை ஒன்றுதானே காசில்லாமல் இவ்வுலகில் கிடைப்பது. ஒருவருக்கு இலவசமாக ஒன்றை கொடுத்துவிட்டு மீண்டும் பதிலுக்கு எதிர்பார்க்காமல் நாம் இருப்போமேயானால் அது அறிவுரை ஒன்றுதான். நானும் அந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல. எழுதும் பயிற்சியை நான் பல மாதங்களாக கைவிட்டுவிட்டேன். எவ்வளவு தூரம் என் மூளை துரு பிடித்து இருக்கிறது என்பதற்கு இந்த முயற்சி ஒரு அளவு கோள். எழுத வந்த விஷயத்தை விட்டு விட்டு ”take diversion" எடுத்து எங்கோ சென்று கொண்டு இருக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம்....
பள்ளி விடுமுறை விட்டாகிவிட்டது. என் பெண் பத்தாம் வகுப்பு படிப்ஸ்சில் மும்முறமாக இருப்பதால் எனக்கும் House arrest. ஊருக்கு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பது ரொம்பவே கடினமாக இருந்தது. சரி எதாவது படம் போகலாம் என்றால் வழக்கம் போல் என் பிள்ளைகள் வர மறுத்துவிட்டார்கள். எனவே நானும் என் கணவரும் தனியாக படம் பார்க்க போகலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் second show படத்திற்கு. அப்பொழுதுதான் வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு ஆர அமர போய்வரலாம். Second show படம் பார்த்து எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது. எப்படி பட்ட படம் என்றாலும் என்னால் பதினோரு மணிக்கு மேல் விழித்திருந்து பார்க்க முடியாது. வீட்டில் டிவிடியில் படம் பார்க்கும் பொழுது கூட instalmentல் தான் பார்ப்பேன். முதல் நாள் பாதி மறு நாள் பாதி என்று. படம் போகலாம் என்று முடிவு செய்தாகி விட்டது அடுத்து என்ன படம் என்ற அலசல்.பெங்களூரில் தமிழ் படங்கள் வெளியாவது மிகவும் குறைவு. எந்த எந்த படங்கள் ஓடுகின்றன என்று முதலில் பார்த்தோம் பின் எந்த படம் நம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அரங்கில் ஓடுகின்றது என பார்த்தோம். கும்கி படம் பற்றி ஏற்கனவே விமர்சனங்கள் படித்து இருந்ததாலும், என் தங்கை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியதாலும் அதற்கு போக சம்மதித்தேன். Internetல் பத்து மணி ஷோவிற்கு டிக்கெட் புக் செய்தோம். வீட்டிலிருந்து திரையரங்கம் கொஞ்சம் தூரம் தான். பிள்ளைகளை படுக்க சொல்லிவிட்டு (நாங்கள் இருக்கும் பொழுதே படு படு என்று பாட்டு பாட வேண்டும். நாங்கள் இல்லை என்றால் அவர்கள் ராஜியம் தான். கதை புத்தகங்களை படித்துவிட்டு எப்பொழுது படுப்பார்களோ தெரியாது.) வீட்டை பூட்டிவிட்டு ஒரு ஒன்பதரை மணிக்கு புறப்பட்டோம். மார்கழி மாத குளிர் வேறு. காரை நிறுத்திவிட்டு, டிக்கெட் கொடுக்கும் இடத்தில் சென்று டிக்கெட் ப்ரிண்ட் அவுட் கேட்டால் அவர்கள் தொலைபேசியில் ஒருக்கும் எஸ்.எம்.எஸ் காட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். பேப்பர் வீனாவதை தடுக்க நல்ல முயற்சி என்று நினைத்துக்கொண்டேன்.
முந்தைய ஷோ அப்பொழுதுதான் முடிந்து அரங்கை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களை சிறிது நேரம் வெளியிலேயே காத்து இருக்க சொன்னார்கள். காத்து இருந்த நேரத்தில் என் கணவர் ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் வாங்கி வந்தார். தான் கெட்டது போதாது என்று நீயும் குடி என்று எனக்கும் தந்தார். இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வந்தபடியால் வேறு எதுவும் சாப்பிடும் ஆசை இருக்கவில்லை. எதாவது வேண்டுமா என்று கேட்டவரிடம் ஒன்றும் வேண்டாம் என்று கூறினேன். இதுவே என் பிள்ளைகள் வந்து இருந்தால் முதலில் ஒரு பாப்கார்ன் பாக்கெட், ஒரு குளிர் பானம் என்று வாங்கி வைத்துக்கொண்டு தான் படம் பார்க்கவே வந்திருப்பார்கள். காத்து இருக்கும் நேரம் ஏன் வீணாக வேண்டும் என்று என் தந்தைக்கு போன் செய்து பேசினேன். பக்கத்தில் என் கணவர் அவர் போனில் “மெயில் செக்” என்ற பெயரில் எதையோ படித்துக்கொண்டிருந்தார். பிள்ளைகள் இன்றி தனியாக வந்திருந்தாலும் அவர் அவர் உலகில் அவரவர் விருப்பப்படிதான் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தோம். பத்து அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது அரங்கினுள் அனுமதித்தார்கள். நாங்கள் தான் முதலில் உள்ளே சென்றோம். எங்கள் பின் சிலர் வந்தமர்ந்தார்கள். பால்கணி வகுப்பு , மொத்தமே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம். இவ்வளவு கூட்டம் கம்மியாக உள்ளதே படம் நல்லா இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகம் வேறு எனக்கு. அதற்கு என் கணவர் இல்லை கீழ் வகுப்பில் ஒரு நூறு பேர் இருப்பார்கள் என்றார்.
சரியாக மணி பத்து அடித்தது , படம் போட்டார்கள். ஆஹா என்ன ஆச்சரியம் இந்தியாவில் இப்படி சரியாக ஒரு விஷயம் நேரத்திற்கு நடக்கிறதே என்ற வியப்பு எனக்கு. புகை பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்ற விளம்பரப் படத்துடன் படம் ஆரம்பித்தது. பின் கும்கி படம் திரையிடப்பட்டது. கும்கி என்ற பெயரே அழகாக யானையின் தந்தத்தினால் எழுதப்பட்டிருந்தது. படம் ஆரம்பித்தது முதலே விருவிருப்பாக நகர ஆரம்பித்தது. படத்தின் நாயகர்கள் இசையும், ஒளிப்பதிவும் தான் என்றால் அது மிகையில்லை. ஆடுகளம் படத்திற்கு பின் எல்லா பாடல்களும் இப்படத்தில் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் பார்க்க வரும் முன்பே நான் பலமுறை இப்படத்தின் பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் அருமையிலும் அருமை. எங்கோ நம்மை பறக்க வைப்பது போன்ற தோற்றம். ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நினைவலைகளை எங்கோ சிறகடித்து பறக்க வைக்கின்றன. பாடலாசிரியர்களும் சரி, பாடியவர்களும் சரி, இசையும் சரி புல்லரிக்க வைக்கின்றது. பாடல்களில் அப்படி ஒரு நேட்டிவிட்டி. கேட்க கேட்க தெவிட்டாப் பாடல்கள். அதனை படம் பிடித்து இருந்த விதம் அதனை விட சிறப்பாக அமைந்து இருந்தது.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதற்கேற்ப அழகான பாடல்கள் வரும் முன்னே கும்கி வரும் பின்னே என்று ஆகிவிட்டது இப்படத்தில். இப்படத்தின் இசை எங்கோ எனக்குள் தூங்கி கொண்டிருந்த பழைய ஞியாபகங்களை தட்டி எழுப்பி உயிர் பெற செய்தது போன்ற நினைப்பு எனக்கு.
படத்தின் இரண்டாவது நாயகன் ஒளிப்பதிவு. கட்டிடங்களுக்கு நடுவிலும், வாகனங்களுக்கு நடுவிலும் அன்றாடும் உழலும் நமக்கு இப்படத்தின் ஒளிப்பதிவு ஒரு விருந்தாய் அமைகிறது. காட்சிகள் அழகான வண்ணங்களில் படம் பிடித்து காட்டப்பட்டு இருக்கின்றன. பசுமை என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு நகரங்களில் நரக வாழ்க்கை வாழும் நம் கண்களுக்கு இப்படத்தில் வரும் இயற்கை காட்சிகளும், காடும், மலைகளும், அருவிகளும் விருந்தாய் இன்பமளிக்கின்றது. இந்த நகரத்தை விட்டு விட்டு எப்பொழுது இயற்கைக்கு அருகாமையில் நாம் அமைதியாக வாழப்போகிறோம் என்ற ஏக்கம் மனதில் தோன்றுகிறது. Consumer கலாச்சாரத்தில் மூழ்கிவிட்ட நம்மை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் எளிமையான வாழ்க்கை முறை கவர்ந்து இழுக்கின்றது. அடிப்படைத் தேவைகளை தவிர வேரெந்த வசதிகளையும் எதிர்பார்க்காத அழகான வாழ்க்கை அவர்களுடையது. நவீன உலகில் தாய் மொழியையே மறந்து வாழும் நாம் எங்கே? இருநூறு வருட பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் பெருமை அடையும் இப்படத்தின் கதாபாத்திரங்கள் எங்கே?
படத்தில் வரும் காதாபாத்திரங்கள் யாவரும் அவரவருடைய பங்கை அழகாக அடக்கமாக செய்து இருக்கிறார்கள். நாயகன் விக்ரம் பிரபுவிற்கு இது முதல் படம் போல் இல்லை. தன் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார். நாயகியின் தந்தை, பெரியப்பா, நாயகனின் மாமாவாக வரும் தம்பி ராமையா என்று யாவரும் நன்றாக நடித்து இருக்கின்றனர். ஒரு இடத்தில் தம்பி ராமையா போர்வையை போர்த்தி யானை குட்டியை போல் குணிந்து இருக்கும் காட்சியில் நான் விடாமல் வயிறு வலிக்க இரண்டு நிமிடங்கள் சிரித்து மகிழ்ந்தேன். இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி உள்ளார்.
படத்தில் அருவருக்கத்தக்க நடனமோ, உடை அலங்காரமோ, இல்லை என்பதே இது தரமான படம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. காதல் உண்டு காமம் இல்லை, நகைச்சுவை உண்டு விரசம் இல்லை, சண்டை உண்டு, வக்கிரம் இல்லை. குழந்தைகளோடு சந்தோஷமாக பார்க்கக்கூடிய ஒரு படம். படத்தில் கதை ஒன்றும் பெரிதாக எதிர் பார்க்காத திருப்பங்கள் உடையதாக இல்லை என்ற போதும் இயக்குனர் படத்தை விரு விருப்புடன் கொண்டு சென்றுள்ளார். ஒரு நிமிடம் கூட தூங்காமல் இப்படத்தை நான் பார்த்தேன் என்பதே படம் விரு விருப்பான படம் என்பதற்கு சான்றாக அமைகிறது.கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ள இப்படத்தை திரையரங்குகளில் தான் கண்டு ரசிக்க வேண்டும். அப்பொழுது தான் முழு ஈடுபாட்டுடன் நம்மால் ரசிக்க முடியும். பல நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தியுடன் காதுகளில் பாட்டுக்கள் ரீங்கரிக்க, கண்களில் பசுமையான காட்சிகள் வட்டமிட படம் ஏன்தான் முடிந்ததோ என்ற கணத்த மனதுடன் வீடு திரும்பினோம். Kumki value for money.
.
4 comments:
I like your position.. CEO of Ravichandarn Family.. :) nice blog.. And nice review of Kumki.. Thanks.. and look forward to more..
Nice Blog.. and a nice review.. might want to check Kimki on screen.. Keep blogging..
very nice review! :-)
Thank you all for your support.
Post a Comment