Saturday, December 29, 2012

கும்கி

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்கள் எல்லோரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நேரமின்மையா, அல்லது சோம்பேரித்தனமா அல்லது நேரத்தை சாதுர்யமாக பயன்படுத்த தெரியாமல் போயிற்றா என்று தெரியவில்லை. பல மாதங்கள் ஓடிவிட்டன . இப்பொழுது மீண்டும் எழுத உட்கார்ந்தால் எழுத வருமோ என்ற சந்தேகத்தோடு தான் இந்த முயற்சி.  அதுவும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பொழுது, அம்மா, அம்மா என்ற BGM கேட்டுக் கொண்டே எழுதுவது என்றால் அது ஹிமாலய சாதனை தான் எனக்கு. முயற்சியும், பயிற்சியும் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று பத்தாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு அடிக்கடி நான் அறிவுரை வழங்குவதுண்டு. அறிவுரை ஒன்றுதானே காசில்லாமல் இவ்வுலகில் கிடைப்பது. ஒருவருக்கு இலவசமாக ஒன்றை கொடுத்துவிட்டு மீண்டும் பதிலுக்கு எதிர்பார்க்காமல் நாம் இருப்போமேயானால் அது அறிவுரை ஒன்றுதான். நானும் அந்த வழக்கத்திற்கு விதிவிலக்கல்ல. எழுதும் பயிற்சியை நான் பல மாதங்களாக கைவிட்டுவிட்டேன். எவ்வளவு தூரம் என் மூளை துரு பிடித்து இருக்கிறது என்பதற்கு இந்த முயற்சி ஒரு அளவு கோள். எழுத வந்த விஷயத்தை விட்டு விட்டு ”take diversion" எடுத்து எங்கோ சென்று கொண்டு இருக்கிறேன். சரி விஷயத்திற்கு வருவோம்....

பள்ளி விடுமுறை விட்டாகிவிட்டது. என் பெண் பத்தாம் வகுப்பு படிப்ஸ்சில் மும்முறமாக இருப்பதால் எனக்கும் House arrest. ஊருக்கு எங்கும் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பது ரொம்பவே கடினமாக இருந்தது. சரி எதாவது படம் போகலாம் என்றால் வழக்கம் போல் என் பிள்ளைகள் வர மறுத்துவிட்டார்கள். எனவே நானும் என் கணவரும் தனியாக படம் பார்க்க போகலாம் என்று முடிவு செய்தோம். அதுவும் second show படத்திற்கு. அப்பொழுதுதான் வேலை எல்லாவற்றையும் முடித்துவிட்டு பிள்ளைகளை தூங்க வைத்துவிட்டு ஆர அமர போய்வரலாம். Second show படம் பார்த்து எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது.  எப்படி பட்ட படம் என்றாலும் என்னால் பதினோரு மணிக்கு மேல் விழித்திருந்து பார்க்க முடியாது.  வீட்டில் டிவிடியில் படம் பார்க்கும் பொழுது கூட instalmentல் தான் பார்ப்பேன். முதல் நாள் பாதி மறு நாள் பாதி என்று. படம் போகலாம் என்று முடிவு செய்தாகி விட்டது  அடுத்து என்ன படம் என்ற அலசல்.பெங்களூரில்  தமிழ் படங்கள் வெளியாவது மிகவும் குறைவு.  எந்த எந்த படங்கள் ஓடுகின்றன என்று முதலில் பார்த்தோம் பின் எந்த படம் நம் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் அரங்கில்  ஓடுகின்றது என பார்த்தோம். கும்கி படம் பற்றி ஏற்கனவே விமர்சனங்கள் படித்து இருந்ததாலும், என் தங்கை பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறியதாலும் அதற்கு போக சம்மதித்தேன்.  Internetல் பத்து மணி ஷோவிற்கு டிக்கெட் புக்  செய்தோம். வீட்டிலிருந்து திரையரங்கம் கொஞ்சம் தூரம் தான். பிள்ளைகளை படுக்க சொல்லிவிட்டு (நாங்கள் இருக்கும் பொழுதே படு படு என்று பாட்டு பாட வேண்டும். நாங்கள் இல்லை என்றால் அவர்கள் ராஜியம் தான். கதை புத்தகங்களை படித்துவிட்டு எப்பொழுது படுப்பார்களோ தெரியாது.) வீட்டை பூட்டிவிட்டு ஒரு ஒன்பதரை மணிக்கு புறப்பட்டோம். மார்கழி மாத குளிர் வேறு. காரை நிறுத்திவிட்டு, டிக்கெட் கொடுக்கும் இடத்தில் சென்று டிக்கெட் ப்ரிண்ட் அவுட் கேட்டால் அவர்கள் தொலைபேசியில் ஒருக்கும் எஸ்.எம்.எஸ் காட்டினால் போதும் என்று சொல்லிவிட்டார்கள். பேப்பர் வீனாவதை தடுக்க நல்ல முயற்சி என்று நினைத்துக்கொண்டேன்.


முந்தைய ஷோ அப்பொழுதுதான் முடிந்து அரங்கை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். எங்களை சிறிது நேரம் வெளியிலேயே காத்து இருக்க சொன்னார்கள். காத்து இருந்த நேரத்தில் என் கணவர் ஒரு ஸ்ப்ரைட் பாட்டில் வாங்கி வந்தார். தான் கெட்டது போதாது என்று நீயும் குடி என்று எனக்கும் தந்தார். இரவு சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வந்தபடியால் வேறு எதுவும் சாப்பிடும் ஆசை  இருக்கவில்லை. எதாவது வேண்டுமா என்று கேட்டவரிடம் ஒன்றும் வேண்டாம் என்று கூறினேன். இதுவே என் பிள்ளைகள் வந்து இருந்தால் முதலில் ஒரு பாப்கார்ன் பாக்கெட், ஒரு குளிர் பானம் என்று வாங்கி வைத்துக்கொண்டு தான் படம் பார்க்கவே வந்திருப்பார்கள்.  காத்து இருக்கும் நேரம் ஏன் வீணாக வேண்டும் என்று என் தந்தைக்கு போன் செய்து பேசினேன். பக்கத்தில் என் கணவர் அவர் போனில் “மெயில் செக்” என்ற பெயரில் எதையோ படித்துக்கொண்டிருந்தார்.   பிள்ளைகள் இன்றி தனியாக வந்திருந்தாலும் அவர் அவர் உலகில் அவரவர் விருப்பப்படிதான் நேரத்தை போக்கிக் கொண்டிருந்தோம்.  பத்து அடிக்க ஐந்து நிமிடங்கள் இருந்த பொழுது அரங்கினுள் அனுமதித்தார்கள்.  நாங்கள் தான் முதலில் உள்ளே சென்றோம். எங்கள் பின் சிலர் வந்தமர்ந்தார்கள்.  பால்கணி வகுப்பு , மொத்தமே ஒரு இருபது பேர் தான் இருந்திருப்போம்.  இவ்வளவு கூட்டம் கம்மியாக உள்ளதே படம் நல்லா இருக்குமோ இருக்காதோ என்ற சந்தேகம் வேறு எனக்கு.  அதற்கு என் கணவர் இல்லை கீழ் வகுப்பில் ஒரு நூறு பேர் இருப்பார்கள் என்றார்.


சரியாக மணி பத்து  அடித்தது , படம் போட்டார்கள். ஆஹா என்ன ஆச்சரியம் இந்தியாவில் இப்படி சரியாக ஒரு விஷயம் நேரத்திற்கு நடக்கிறதே என்ற வியப்பு எனக்கு.   புகை பிடிப்பது, மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்ற விளம்பரப் படத்துடன் படம் ஆரம்பித்தது.  பின் கும்கி படம் திரையிடப்பட்டது.  கும்கி என்ற பெயரே அழகாக யானையின் தந்தத்தினால் எழுதப்பட்டிருந்தது.  படம் ஆரம்பித்தது முதலே விருவிருப்பாக நகர ஆரம்பித்தது.  படத்தின் நாயகர்கள் இசையும், ஒளிப்பதிவும் தான் என்றால் அது மிகையில்லை.  ஆடுகளம் படத்திற்கு பின் எல்லா பாடல்களும் இப்படத்தில் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  படம் பார்க்க வரும் முன்பே நான் பலமுறை இப்படத்தின் பாடல்களை கேட்டு ரசித்து இருக்கிறேன்.  ஒவ்வொரு பாடலும் அருமையிலும் அருமை. எங்கோ நம்மை பறக்க வைப்பது போன்ற தோற்றம்.  ஒவ்வொரு முறை கேட்கும் போதும் நினைவலைகளை எங்கோ சிறகடித்து பறக்க வைக்கின்றன.  பாடலாசிரியர்களும் சரி, பாடியவர்களும் சரி, இசையும் சரி புல்லரிக்க வைக்கின்றது. பாடல்களில் அப்படி ஒரு நேட்டிவிட்டி. கேட்க கேட்க தெவிட்டாப் பாடல்கள். அதனை படம் பிடித்து இருந்த விதம் அதனை விட சிறப்பாக அமைந்து இருந்தது.யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பதற்கேற்ப அழகான பாடல்கள் வரும் முன்னே கும்கி வரும் பின்னே என்று ஆகிவிட்டது இப்படத்தில்.  இப்படத்தின் இசை எங்கோ எனக்குள் தூங்கி கொண்டிருந்த பழைய ஞியாபகங்களை தட்டி எழுப்பி உயிர் பெற செய்தது போன்ற நினைப்பு எனக்கு.

படத்தின் இரண்டாவது நாயகன் ஒளிப்பதிவு. கட்டிடங்களுக்கு நடுவிலும், வாகனங்களுக்கு நடுவிலும் அன்றாடும் உழலும் நமக்கு இப்படத்தின் ஒளிப்பதிவு ஒரு விருந்தாய் அமைகிறது.  காட்சிகள் அழகான வண்ணங்களில் படம் பிடித்து காட்டப்பட்டு இருக்கின்றன.  பசுமை என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு நகரங்களில் நரக வாழ்க்கை வாழும் நம் கண்களுக்கு இப்படத்தில் வரும் இயற்கை காட்சிகளும், காடும், மலைகளும், அருவிகளும்  விருந்தாய் இன்பமளிக்கின்றது. இந்த நகரத்தை விட்டு விட்டு எப்பொழுது இயற்கைக்கு அருகாமையில் நாம் அமைதியாக வாழப்போகிறோம் என்ற ஏக்கம் மனதில் தோன்றுகிறது. Consumer கலாச்சாரத்தில் மூழ்கிவிட்ட நம்மை இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் எளிமையான வாழ்க்கை  முறை கவர்ந்து இழுக்கின்றது. அடிப்படைத் தேவைகளை தவிர வேரெந்த  வசதிகளையும் எதிர்பார்க்காத அழகான வாழ்க்கை அவர்களுடையது.  நவீன உலகில் தாய் மொழியையே மறந்து வாழும் நாம் எங்கே? இருநூறு வருட பாரம்பரியத்தை கட்டிக்காப்பதில் பெருமை அடையும் இப்படத்தின் கதாபாத்திரங்கள் எங்கே?


படத்தில் வரும் காதாபாத்திரங்கள் யாவரும் அவரவருடைய பங்கை அழகாக அடக்கமாக செய்து இருக்கிறார்கள். நாயகன் விக்ரம் பிரபுவிற்கு இது முதல் படம் போல் இல்லை.  தன் பங்கை செவ்வனே செய்து இருக்கிறார். நாயகியின் தந்தை, பெரியப்பா, நாயகனின் மாமாவாக வரும் தம்பி ராமையா என்று யாவரும் நன்றாக நடித்து இருக்கின்றனர்.  ஒரு இடத்தில் தம்பி  ராமையா போர்வையை போர்த்தி யானை குட்டியை போல் குணிந்து இருக்கும் காட்சியில் நான் விடாமல் வயிறு வலிக்க இரண்டு நிமிடங்கள் சிரித்து மகிழ்ந்தேன்.  இயக்குனர் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக செதுக்கி உள்ளார்.

படத்தில் அருவருக்கத்தக்க நடனமோ, உடை அலங்காரமோ, இல்லை என்பதே இது தரமான படம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. காதல் உண்டு காமம் இல்லை, நகைச்சுவை உண்டு விரசம் இல்லை, சண்டை உண்டு, வக்கிரம் இல்லை. குழந்தைகளோடு சந்தோஷமாக பார்க்கக்கூடிய ஒரு படம்.  படத்தில்  கதை ஒன்றும் பெரிதாக எதிர் பார்க்காத திருப்பங்கள் உடையதாக இல்லை என்ற போதும் இயக்குனர் படத்தை விரு விருப்புடன் கொண்டு சென்றுள்ளார். ஒரு நிமிடம் கூட தூங்காமல் இப்படத்தை நான் பார்த்தேன் என்பதே படம் விரு விருப்பான படம் என்பதற்கு சான்றாக அமைகிறது.கண்களுக்கும்,  காதுகளுக்கும் விருந்தாக அமைந்துள்ள இப்படத்தை திரையரங்குகளில் தான் கண்டு ரசிக்க வேண்டும். அப்பொழுது தான்   முழு ஈடுபாட்டுடன் நம்மால் ரசிக்க முடியும்.  பல நாட்களுக்கு பிறகு ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தியுடன் காதுகளில் பாட்டுக்கள் ரீங்கரிக்க, கண்களில் பசுமையான காட்சிகள் வட்டமிட படம் ஏன்தான் முடிந்ததோ என்ற கணத்த மனதுடன் வீடு திரும்பினோம். Kumki value for money.


.


Tuesday, September 18, 2012

கணபதி பாபா மோரியா!!!!!!!!

வினாயகர் சதுர்த்தி இதோ வந்து விட்டது.  விழா காலம் தொடங்கி விட்டது. வானம் பொய்த்தாலும் விழாக்கள் பொய்க்காது நம் நாட்டில். டீசல் விலை ஏறினால் என்ன , மின்சாரம் இல்லாவிட்டால் என்ன, இது போன்ற விழாக்கள் தான் நமக்கு வாழ்க்கையின் மேல் ஒரு பற்று வர காரணமாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட பிரச்சினைகளை தூர வீசிவிட்டு அவரவர் வசதிக்கேற்ப எப்படியோ பண்டிகைகளை கொண்டாடி விடுகிறோம்.கடவுள்களை எப்படியாவது மகிழ்வித்து, குளிர்வித்து நமக்கு சாதமாக நடக்க வைக்க ஒரு முயற்சி. எது எப்படியோ விழாக்கள் என்றால், கூட சாப்பாடும் பெரும் அங்கமாகி விடும்பொழுது கொண்டாட  நமக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது. கரும்பு தின்ன கூலியா?? அதுவும் வினாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை கிடைக்கும். அப்புறம் என்ன திருவிழாதான். தொந்தி வயிற்றனே என்று தொழுதுவிட்டு நம் தொந்தியை நிரப்ப வேண்டியது தானே?? சரி நான் என்னவோ கொளுக்கட்டைக்கு செய்முறை விளக்கம் கொடுக்கப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். கொழுக்கட்டை விஷயத்தில் நானும் ஒரு கத்துக்குட்டி தான். பிடிச்சா கொழுக்கட்டை கும்பிட்டா பிள்ளையார் எப்படி என் லாஜிக்?


 விநாயகர் தான் என் இஷ்ட கடவுள். என்னை மாதிரியே??? ஒரு சாந்தமான கடவுள் என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும்.  போன வருடம் இதே நாளில் தான் நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தோம். ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புது வீட்டிற்கு வந்ததால்  பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போன வருடம் எங்கள் வீட்டு விநாயகர் பாயசம் மட்டுமே சாப்பிட்டார். இந்த வருடம் விநாயகர் சிலை வாங்கி , கொழுக்கட்டை செய்து, சுண்டல் செய்து  சாமி கும்பிட  முடிவு செய்து இருக்கிறேன். ஒரு வாரமாகவே தெருக்கள் தோறும் வினாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. வித விதமான விநாயகர் பொம்மைகள். பெயிண்ட் அடித்தது, பெயிண்ட் அடிக்காதது , களி மண்ணில் செய்தது, ப்ளாஸ்டராப் பாரிஸில் செய்தது , செம்மண்ணில் செய்தது  என்று பல வகைகள். அதிலும் ஆர்கானிக் பெயிண்ட் அடிக்கப்பட்டவை, சாதாரண ரசாயண வண்ணம் பூசப்பட்டவை என்று வேறு தினுசுகள்.  பல வர்ணங்கள், பல சைசுகள், பல அவதாரங்கள் என்று கொட்டி குவித்து இருக்கிறார்கள்.  பார்க்கையில் இவை அத்துனையும் விலை போகுமா என்று எண்ணத் தோன்றுகிறது. கண் கூசும் அளவிற்கு வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.  சாலை ஓரத்து நடைபாதை கடைகள் காளான் போல முளைத்து விட்டன. இந்த ஒரு வாரத்தில், காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்று அவர்கள் நினைத்த விலையை வைத்து விற்கிறார்கள். மக்களும் வேறு வழியின்றி வாங்கி செல்கிறார்கள். வினாயகர் இத்துனை அவதாரங்களில் தோன்றி இருக்கிறார் என்பதே இந்த ஒரு வாரத்தில் நான் பார்த்த சிலைகள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன்.


சிலைகள் மட்டுமா விற்கிறார்கள், அதனை அலங்கரிக்க தோரணங்கள், வாழைமரங்கள்,  எருக்கம் பூ மாலைகள்,கதம்ப மாலைகள், மல்லிகை, ரோசாப்பூ, சம்மங்கி என்று பல விதமான பூக்கள், ஆடை அணிகலன்கள், என்று  பல வித பொருட்கள்.  விநாயகர் யானை முக கடவுள் இல்லையா அதனால் விற்கப்படும் பொருட்கள் யாவும்  யானை விலை.விநாயகருக்கு வெயில் அடிக்காமல் இருக்க குடை வேறு அதில் அத்துனை வகைகள்.முன்பெல்லாம் வீட்டில் அரிசியை ஊரவைத்து, காயவைத்து,  இடித்து மாவு செய்து கொளுக்கட்டை செய்வார்கள். இப்பொழுது இந்த அவசர உலகில் அதுவும் ரெடிமேடாக கிடைக்கிறது.  கொளுக்கட்டையே ரெடிமேடாக கிடைக்கும் பொழுது மாவு கிடைக்காதா என்ன.  A2B அதுதாங்க அடையார் ஆனந்த பவன் இருக்க பயமேன். எந்த விதமான கொளுக்கட்டை வேண்டுமானாலும் வாங்கி சென்று சாமிக்கு வைத்து நெய்வேத்தியம் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடுகிறது.நோகாமல் நொங்கு எடுக்க சொல்லியா கொடுக்கவேண்டும். சாமி என்ன “இது ரெடிமேடா அல்லது வீட்டில் செய்ததா என்றா கேட்கப்போகிறார். சாமி பெயரை சொல்லி நம் வயிற்றில் தான் போகப்போகிறது.


நாம் வீட்டில் கஷ்டப்பட்டு கொளுக்கட்டை பிடித்து  அது கடைசியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாவதற்கு இதுவே மேல் இல்லையா? ஆனாலும், எனக்கு என் கைகளால் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கவே பிடிக்கும். குரங்கானாலும் நான் செய்த குரங்காக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம். எப்படியோ என் பெண்  சாப்பிட போவது என்னவோ மேல் இருக்கும் அந்த வெள்ளை பகுதியை தான். என் பையனோ, “ அம்மா why dont you keep donuts for Ganesh and pray? என்று கேட்கும் ஜாதி. நம் பழக்க வழக்கங்களை , கலாசாரத்தை அவர்களுக்கு எப்படியாவது தினித்து விடவேண்டும் என்ற என் அடங்காத ஆசைதான் இப்படி எல்லா விழாக்களையும் நான் கொண்டாடுவதன் நோக்கம். பிற்காலத்தில் அவர்கள் செய்வார்களா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது என் நம்பிக்கை. ஆனால் அவர்கள் என்னமோ நான் வேலை வெட்டி இல்லாமல் இப்படி யெல்லாம் செய்கிறேன் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


முன்பு அவரவர் வீடுகளில் வைத்து தான் சாமி கும்மிட்டார்கள் இப்பொழுது கோவிலும் இல்லாமல், வீடும் இல்லாமல் விமர்சையாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீதிக்கே சாமியை கொண்டு வந்து விட்டார்கள். பணம் வசூல் செய்து, வெடி என்ன , வாண வேடிக்கை என்ன, ஆட்டம் என்ன, பாட்டம் என்ன என்று ஊரே அல்லோல படுகிறது. கணபதி ஒரு அமைதியான , பொறுமையான தெய்வம் அவருக்கு இந்த ஆரவாரம் தேவையா என்று தோன்றச் செய்கிறது.  தெரு முனைகளில் மேடை அமைத்து பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகிறது.  ரேடியோ செட் அமைத்து பாட்டுக்கள் தூள் பறக்கிறது. அடுத்தவருக்கு தொந்தரவாக இருக்குமே என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. பாட்டுச் சத்தம் காதுககளை கிழிக்கும்.  தெருக்களில் போகும் வாகணங்கள், மனிதர்கள் என்று அனைவருக்கும் கஷ்டம்.  இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம் தொந்தி தேவன்  நடுநாயகமாக அமைதியாக வீற்றிருப்பார்--- யான் அறியேன் பராபரமே என்று ! அவர் என்ன செய்வார் --பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம்  ....


சரி இப்படியெல்லாம் ஊரார் மெச்ச ஒரு வாரகாலம் கொண்டாடி முடித்துவிட்டு பின் அந்த சிலைகளை என்ன செய்கிறார்கள் என்று   பார்ப்போம். அம்மை அப்பனே உலகம்  என்று நினைத்த கடவுளை வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகளில், மேள தாளத்துடன் ஊரெங்கும் ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். அப்படி எடுத்து செல்லும் பொழுது அவர்களுக்குள்ளோ அல்லது வேற்று மதத்தினருடனோ சண்டை சச்சரவுகள் வராதிருக்க போலீஸ் பாதுகாப்பு வேறு. அப்படி எதாவது சண்டை வந்து கலேபரமாகி போனால் சாமி சிலைகளை அங்கேயே இருந்த இடத்தில் விட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுபவர்களும் உண்டு.இப்படி பட்ட சூழ்நிலைகள் மத கலவரத்திற்கு வித்து விளைவிக்கின்றன.  சாமிக்கே போலீஸ் பாதுகாப்பு தேவை படுகிறது இந்த ஜனநாயக நாட்டில். என்ன கொடுமை சரவணனின் அண்ணா இது!!! இப்படியாக பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும் சிலைகள் அந்த அந்த ஊரில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பது நடைமுறை. கடல் இருக்கும் ஊர் என்றால் பிரச்சிணை ஒன்றும் இல்லை .எப்படி பட்ட சிலையையும் கரைத்துவிட்டு வந்து விடலாம். ஆனால் கடல் இல்லாத ஊர்களில் ஆற்றில், குளத்தில் என்று குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் இடங்களில் கரைக்கப்படுகிறது. களிமண் பிள்ளையார் என்றால் பரவாயில்லை ஆனால் ரசாயண சாயம் பூசப்பட்ட சிலைகளை , பிளாஸ்டராப் பாரிஸ் போன்றவற்றால் செய்த  சிலைகளை இந்த இடங்களில் கரைப்பதன் மூலம் அந்த குடிநீரே மாசுபடுகிறது. மேலும் பூக்கள், தோரணங்கள் என்று அத்துணை பொருட்களும் அந்த நீர் நிலைகளிலேயே வீசப்படுகிறது.  இவற்றில் மக்கும் பொருட்களும், மக்காத பிளாஸ்டிக், தெர்மா கோல் போன்றவையும் அடங்கும்.  நமக்கு வாழ்வாதாரமாக  இருக்கும் நீர்நிலைகளை நாமே அழித்து பாழ்படுத்துவது பால் தரும் பசுவின் மடியை துண்டிப்பதை போன்றது.


இதை விட கொடுமை என்ன வென்றால், சில இடங்களில், எப்படியோ தண்ணீரில் சிலையை கரைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அது எந்த மாதிரி தண்ணீர் என்று கவணிக்காது கொண்டு போய் சிலைகளை போட்டு விட்டு வந்து விடுகிறார்கள். பல இடங்களில் கழிவுநீர் சென்று அடையும் நீர் நிலைகளில் கலந்து விடுகிறார்கள். ஒரு வாரமாக போற்றி கொண்டாடிவிட்டு கடைசியில் இப்படி செய்வது புண்ணியம் என்று எந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.சாமியே ஆனாலும் விருந்தும் மருந்தும் நாலு நாள் தான் போலும் !! இப்படி அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை பார்க்கையில் எத்துனை பாரதி பிறந்தாலும் இவர்களை திறுத்த முடியாது என்று கோபம் வருகிறது. மதசார்பான விஷயங்களில் எவன் ஒருவன் மாற்றுக்கருத்து கூறுகிறானோ அவன் பயித்தியகாரனாகவே பார்க்கப்படுகிறான். சாமி சிலையில் ரத்தம் வடிகிறது, பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்புவதற்கு தான் இவர்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு தோன்றிய ஒரு யோசனையை நான் இங்கே பகிர்ந்து கொள்ளவே ஆசை படுகிறேன். என்னை போன்று ஒரு பத்து பேர் மாறினாலும் அது நன்மைக்கே!!


இப்படி பார்க்கும் நீர் நிலைகளில் எல்லாம் சிலைகளை கரைப்பதற்கு பதில் இப்படி செய்தால் என்ன? எல்லாவற்றிலும் recycle, and reuse என்று சொல்லும் நாம் ஏன் இதிலும் அதனை பின்பற்றக்கூடாது?? வருடா வருடம் புதிதாக சிலை வாங்குவதற்கு பதில் ஒரு பிள்ளையார் சிலையையே வருடாவருடம் வைத்து ஏன் பூசை செய்யக்கூடாது. ஒரு சிலைக்கு திரும்ப திரும்ப பூசை செய்வதால் அதன் சக்தியும் பெருகும் அல்லவா??  நான் சிறுமியாக இருந்த பொழுது பச்சை களிமண்ணில் செய்த வர்ணம் பூசாத பிள்ளையார் சிலை வாங்கி வந்து அதற்கு குண்டுமணி விதைகளை கண்களாக வைத்து, எருக்கம் பூ மாலை அணிவித்து, வீட்டில் இருக்கும் ஒரு வெள்ளை துண்டினை கட்டி, மணிகள் அணிவித்து அலங்கரித்து வழிபடுவது வழக்கம். பின் மூன்றாம் நாள் அதனை ஆற்றில் கரைத்து விடுவோம். அப்பொழுது தண்ணீருக்கா பஞ்சம்!! ஓடும் தண்ணீரில் கரைத்துவிடுவதால் அது கரைந்து விடும். பாரதி சொன்ன “பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா” என்பது போய் இப்பொழுதுதான் பார்க்கும் இடமெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக ஆகிவிட்டதே!! வீட்டிற்கு ஒரு பிள்ளையார் என்றால் கூட நினைத்து பாருங்கள் எத்துனை பிள்ளையார் சிலைகள். எங்கே இருக்கிறது தண்ணீர் இவற்றை கரைப்பதற்கு. இல்லை இல்லை நாங்கள் வருடாவருடம் பிள்ளையார் வாங்கி தான் கொண்டாடுவோம் என்று கூறுபவர்களுக்கு ஒரு மாற்று யோசனை... இப்படி பொது நீர்நிலைகளில் அது எப்படி பட்ட தண்ணீர் என்று கூட தெரியாமல் அதில் கரைப்பதற்கு பதில் வீட்டிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் கரைத்து அவரவரின் தொட்டதிலேயே அதனை கொட்டி விடலாம் இல்லையா??


பெங்களூரில் சிலைகளை கரைப்பதற்கென்றே பெரிய பெரிய தொட்டிகளை அரசாங்கம் குறிப்பிட்ட இடங்களில் வைத்துள்ளது. மாலைகள், தோரணங்கள் போன்றவற்றை போட தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருகின்றன.நாளேடுகளில் இதற்கான அறிவிப்புகளும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் இவையெல்லாம் ஒழுங்காக உபயோகப்படுத்தப்படுகிறதா அல்லது செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்குமா என்று இன்னும் சில தினங்களில் தெரிய வரும். இப்படி பட்ட சிறு சிறு விஷயங்களில் நாம் நம் பொறுப்புணர்ச்சியை காட்டி அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால் நன்மை அடையப்போகிறது நாம் தான்.  நான் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் வாங்கும் பிள்ளையார்  recycle and reuseதான். சரி சரி ஊருக்கு செய்த உபதேசம் போதும் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது, நான் போய் கொழுக்கட்டைக்கு வேண்டியவற்றை தயார் செய்கிறேன். நீங்களும் போய் ஆக வேண்டிய வேலையை பாருங்கள்.... கணபதி பாபா மோரியா..................................

Wednesday, June 27, 2012

இடியாப்பச் சிக்கல்

என்னடா இவள் ரொம்ப நாள் இடவெளிக்குப் பின் ஒரு சிக்கலுடன் வருகிறாளே என்று பார்க்கிறீர்களா? இது ஒன்றும் அப்படி ஒரு பெரிய குடும்ப சிக்கலோ அல்லது அரசியல் சிக்கலோ இல்லை. நேற்று இரவு நான் இடியாப்பம் செய்த கதை தான் இது.  வழக்கம் போல் இரவு உணவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தலையை பிய்த்துக்கொண்டு இருந்தேன். இட்லியோ அல்லது தோசையோ ஊற்றலாம் என்றால் வீட்டில் மாவும் இல்லை.  மாவு இல்லாதது எனக்கு கை உடைந்ததை போன்று இருந்தது. கடையில் சென்று ரெடிமேட் மாவு வாங்கலாம் என்றால் அதற்கும் அலுப்பு.  உடை மாற்றி செல்ல வேண்டுமே.. அதற்கு வீட்டில் இருக்கும் எதையாவது வைத்து சமாளிக்கலாம் என்று முடிவு செய்தேன்.  இரவில் சாதம் என்றால் என் வீட்டில் இருப்பவர்கள் காத தூரம் ஓடி விடுவார்கள்.  உப்புமா என்றால் பிடிக்காது, சப்பாத்தி மதிய உணவிற்கு கொடுத்தாகிவிட்டது.  ராகி தோசை ஊற்றலாம் என்றால் அதுவும் இறங்காது. சரி என்று வீட்டில் பதுங்கு குழி போல் இருக்கும் ஸ்டோர் ரூமிர்குள் நோட்டம் விட்டேன். 



எனக்கே தெரியாமல் பல பல மளிகை சாமான்கள் அதற்குள் ஒளிந்து கொண்டு இருந்தது. இருப்பது தெரியாமலேயே பல சாமான்களை மேலும் மேலும் வாங்கி வைத்துள்ளேன்.  தோண்ட தோண்ட புதையல் போல பல சாமான்கள் வெளியே வந்த மயமாக இருந்தது.  சில நேரங்களில் தேடி பார்க்க அலுப்படைந்து கடைக்குச் சென்றுவாங்கி வந்த சாமான்கள், ஒரு சாமான் வாங்க போய் எப்படியும் கடைக்கு வந்தாகி விட்டது , ஒரே அடியாக இன்னும் கொஞ்சம் சாமான்களையும் வாங்கி விடலாம் என்று வாங்கிய சாமான்கள், புதிதாக செய்து பார்க்கலாம் என்று சோதனைக்காக வாங்கி வந்த சாமான்கள், (என் சமையல் அறையே எனக்கு ஒரு சோதனைக்கூடம் தான். என் எலிகள் யார் என்பதை நான் சொல்லித்தெரிய வேண்டிய அவசியமில்லை. ) என்று ஒரு மினி மளிகை கடையே உள்ளே இருந்தது. தோண்ட தோண்ட பல கண்ணில படாத சாமான்கள் கைக்கு கிடைத்தது.  அதில், எக்ஸ்பயரி தேதி முடிந்த சாமான்கள், பூச்சி பிடித்த சாமான்களும் அடக்கம்.  வந்தது வந்தாகிவிட்டது அப்படியே சுத்தமும் செய்து விடுவோம் என்று நினைத்து கைக்கு எட்டிய தேவை படாத சாமான்களையும், வீனாகிவிட்ட சாமான்களையும் தூக்கி எறிந்தேன். முழு அறையும் சுத்தம் செய்வது என்றால் எனக்கு ஒரு நாள் தேவைப்படும். அதற்கு இப்பொழுது நேரம் இல்லை.  மணி எட்டு அடித்தால் என் பிள்ளைகளுக்கு வயிற்றில் மணி அடித்து விடும். அதற்குள் நான் ஏதாவது செய்தாக வேண்டும்.   எப்படியோ தேடிப்பார்த்ததில் டபுள் ஹார்ஸ் (இரட்டை குதிரை) ஒரு இடியாப்ப மாவு பாக்கெட் கைக்கு கிட்டியது.  சரி இடியாப்பம், கடலக்கறி செய்து விடலாம் என்று முடிவு செய்து அதை வெளியில் எடுத்து வந்தேன்.



இது வரையில் அம்மா வீட்டில் அரைத்து கொடுத்த மாவில் தான் இடியாப்பம் செய்து இருக்கிறேன்.  முதன் முறையாக ரெடிமேட் மாவு என்பதால் அதில் எழுதியிருந்த செய்முறை படி செய்ய ஆரம்பித்தேன்.  கெமிஸ்ட்ரி லேப்  போன்று இருந்தது.  நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு கலந்து மாவில் ஊற்றி கிண்டினேன்.  இது வரையில் நன்றாகத்தான் போனது.. இதற்கு பின் தான் சனி பிடித்தது . என்னிடம் இருந்த இடியாப்பம் பிழியும் கட்டை உடைந்து விட்டதால் என் அம்மாவின் இரும்பு கட்டையை வாங்கி வந்திருந்தேன்.  அதில் கிண்டிய மாவை உள்ளே வைத்து பிழியத்துவங்கினேன்.  கீழ் பக்கமாக இடியாப்பமாக விழவேண்டிய மாவு கட்டையின் மேல் பக்கமாக பிதுங்கி வழிந்தது.  கட்டையை எவ்வளவு அழுத்தி பிழிந்தாலும் மாவு மேல் பக்கமாகவே வெளியே வந்தது.  அடுப்பில் வேறு இதை வேக வைக்க தண்ணீர் கொதித்துக்கொண்டு இருந்தது.  எனக்கா கோவம் கோவமாக வந்தது.  எப்படியோ முக்கி  முனகி  இரு கட்டைகளை பிழிந்து வேகவைத்தேன். 



சரி  , ஒரு வேளை நாம் மாவை ரொம்ப கெட்டியாக கிண்டி விட்டோமோ என்று சந்தேகப்பட்டு இன்னும் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி கிண்டினேன்.  பின் அந்த மாவை கட்டைக்குள் வைத்து பிழியத்  துவங்கினேன்.  முன்னைவிட இப்பொழுது மோசமானது என் நிலைமை. மாவு கட்டையை விட்டு வெளியே வர முற்றிலுமாக மறுத்துவிட்டது. மோட்டார் பைக் ஸ்டார்ட் செய்வதை போன்று கட்டை மேல் ஏறி நின்று மிதிக்காதது தான் பாக்கி.  எனக்கு வேறு லொடுக்கு பாண்டி கைகள். அழுத்தி பிழிய முடியாது.  ஆஹா சரியாக மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று நொந்து நூடில்ஸ் ஆக நின்று கொண்டிருந்தேன். நான் படும் வேதனையை என் மகள் பார்த்துவிட்டு “அம்மா நான் கொஞ்சம் ட்ரை பண்றேன்” என்று ஆபத்பாண்டவன் போல் வந்தாள். வந்து அமுக்கி பார்த்தவள் வந்த வேகத்திலேயே ஓடிவிட்டாள். “அம்மா why do you want to trouble yourself like this? why dont you just make chapathi or give us some sandwich?" என்று இன்றைய தலைமுறைக்கே உரிய வேகத்துடன் கூறினாள்.  மீண்டும் என் பல பரீட்சையை நான் துவங்கினேன்.  என் மகன் சமையல் அறை பக்கமே வரவில்லை. எதற்கு அங்கு போகவேண்டும், போனால் அம்மா “ரிஷி இதை கொஞ்சம் ட்ரை  பண்ணூ என்பாள்,  வம்பை எதற்கு விலைகொடுத்து வாங்க வேண்டும் , எப்படியும் நமக்கு பிடித்த சாப்பாடு இல்லை என்று அவன் அறையை விட்டு வெளியே வரவே இல்லை.



 ஒரு கட்டத்தில், பேசாமல் இடியாப்பமாக பிழிவதற்கு பதில் கொழுக்கட்டையாக பிடித்து வைத்து விடலாமா என்று தோன்றியது. எப்படியும் மென்று முழுங்கும் பொழுது மாவாகத்தானே உள்ளே செல்லப்போகிறது.  ஆனால் என் வீராப்பு என்னை விடவில்லை.  நானா அல்லது மாவா இந்த போட்டியில் ஜெயிப்பது என்று நிணைத்து அழுத்தி பிழிந்தேன்.  அழுத்திய அழுத்தில் என் வயிற்றுக்குள் இருந்த சிறு குடல், பெருகுடல் எல்லாம் இடம் மாறி ஒரு இரண்டு இன்ச் கீழே இறங்கிவிட்டது போன்று எனக்கு தோன்றியது. எப்படியோ படாத பாடு பட்டு ஒரு வழியாக மாவையும் வீனாக்காமல் இடியாப்பமாக பிழிந்து எடுத்தேன். நூல் போன்று இல்லை என்றாலும் கொஞ்சம் தடியாக இடியாப்பம் இருந்தது. “எடுத்த சபதம் முடித்தேன் ”என்ற  ரஜினி பாட்டு தலைக்குள் ரீங்காரிக்க எனக்கு ஒரே பெறுமிதம். 



அடுப்பு மேடையை பார்த்தால் என்னவோ ஒரு இருபது பேருக்கு சமைத்ததை போன்று ஒரே மாவு. பாத்திரத்தில் எல்லாம் மாவு, என் கைகள், மேடை, பாத்திரம் கழுவும் இடம் என்று ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஒரே மாவு.  மறு நாள் வேலையாள் வரும்வரை நான் போட்டு வைக்க முடியாது . எல்லாம் காய்ந்து போய் விடும், என்று கையோடு கையாக எல்லா வற்றையும் சுத்தம் செய்து முடித்தேன்.  கடலக் கறியும் செய்து சாப்பாட்டு மேசை மேல் எல்லாவற்றையும் வைத்து மூடிவிட்டு சிறிது நேரம் அப்படியே சோபாவில் சாய்ந்து உட்கார்ந்து விட்டேன்.  தோள் பட்டை இரண்டும் ஏதோ ஒரு பத்து பத்து கிலோவை சுமப்பது போல் வலி. விரல்கள் எல்லாம் ஒரே வலி. நீட்டி மடக்க முடியவில்லை. கழுத்து கேட்கவே வேண்டாம். சுளுக்கி கொண்டது போன்று வலி.  இப்படி பிள்ளையார் பிடிக்க போய் குரங்கான கதையாகி விட்டது.  வாழ்க்கையில் இனி இடியாப்பமே செய்ய கூடாது என்று எனக்குள் சபதம் எடுத்தேன்.  இடியாப்பம் சரியாக வராததற்கு மாவு காரணமா அல்லது எனக்கு செய்யதெரியவில்லையா என்று எனக்கு விளங்கவில்லை.  ஆடத்தெரியாத நாட்டியகாரி மேடை கோணல் என்றாளாம்.  எப்படியோ இரவு உணவு ரெடியாகிவிட்டது. 




மணி எட்டு அடித்தது. என் மகளும், மகனும் சாப்பிட அமர்ந்தார்கள். தட்டில் இடியாப்பத்தை வைத்து கடலைக்கறியை ஊற்றினேன். என் மகள், “அம்மா, will this taste good?” என்று கேட்டபடியே சந்தேகத்துடன் வாயில் எடுத்து வைத்தாள். அவள் கேட்ட கேள்வியை கேட்ட என் மகன் முகம் சுளித்த படியே இடியாப்பத்தை வாயில் எடுத்து வைத்தான். ம்ம்ம்ம்ம் என்ற படி என் மகள் சாப்பிட ஆரம்பித்தாள்.  பின் சாப்பிட்டு முடித்தப்பின் “ அம்மா, it tasted really good. I never expected it to be so tasty. had a good dinner mama." என்றாள்.  எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்த என் மகன் “ mama can I have some more of the gravy? என்றான்.  என் கை வலி, கழுத்து வலி, தொள் பட்டை வலி எல்லாம் பறந்து போனது மனது சந்தோஷத்தில் மிதந்தது.  சாப்பிடுபவர்கள் சாப்பாடு நன்றாக உள்ளது என்று சொல்வதை  கேட்கும் பொழுது சமைத்த பயனை அடைந்து விட்ட மகிழ்ச்கி. அதுவும் என் மகள் நன்றாக இருக்கிறது என்று கூறிவிட்டால் அது எனக்கு வஷிஷ்டர் வாயில் ப்ரம்ம ரிஷி பட்டம் கிடைத்ததை போன்றது.  நீங்கள் உடனே சரி என் மகள் பெரிய சமையலில் கை தேர்ந்தவள் என்று என்னவேண்டாம். அவள் ருசி பார்ப்பதில் கெட்டிக்காரி. ருசித்து உண்ட என் பிள்ளைகளுக்காகவே    கண்டிப்பாக என் இடியாப்பச் சிக்கல் தொடரும். இது தான் தாய்மையோ??




பி.கு  :::    மணி ஒன்பது. அலுவலகத்தில் இருந்து வந்த என் கணவர் கை கால் முகம் கழுவி விட்டு சாப்பிட வந்தார்.  வழக்கம் போல் டிவி முன் அமர்ந்து கொண்டு,” என்ன டின்னர்?” என்றார். இடியாப்பம், கடலக்கறி என்றேன்.  “எனக்குத்தான் ஆப்பம் என்று முடியும் எதுவும் பிடிக்காது இல்லையா, ஆப்பம்,இடியாப்பம், ஊத்தப்பம் எல்லாம்” என்றார். பின் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு அமைதியாக சாப்பிட்டு முடித்தார்.  பிடித்து சாப்பிட்டாரா, அல்லது, டிவியில் லயித்த படியே சாப்பிட்டாரா, அல்லது அவருக்கு பிடித்த கடலை குழம்பு என்பதால் சாப்பிட்டாரா, அல்லது எப்படியும் இது தான் இன்றைக்கு உணவு வேறு வழியில்லை என்ற உண்மை உணர்ந்து சாப்பிடாரா  யான் அறியேன் பராபரமே?? எதற்கு அந்த ஆராய்ச்சி என்று நான் மீதமிருந்த கொஞ்சம் இடியாப்பத்தை கொட்ட மனமில்லாமல் ஒரு கிண்ணத்தில் போட்டு பிரிட்ஜில் வைத்தேன்.  மறு நாள் அதில் கொஞ்சம் போல் தேங்காய் துருவி போட்டு, சர்க்கரை ஏலக்காய் போட்டு நான் காலை உணவிற்கு சாப்பிட்டுவிடுவேன்.  அதை பிழிய நான் பட்ட கஷ்டம் கொஞ்மா நஞ்சமா???