Thursday, August 18, 2011

ஊழல் என்பது.....

கடந்த இரண்டு நாட்களாக எங்கும் அன்னா ஹஸாரே எதிலும் அன்னா ஹஸாரேவின் பெயர் தான் கேட்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை யாவரும் உட்ச்சரிக்கும் பெயர் “அன்னா ஹஸாரே”.  இதில் எத்துனை பேருக்கு எதற்காக அவர் போராடுகிறார் என்று உண்மையாக தெரியும்? லோக்பால் என்றால் என்ன என்று எத்துனை பேருக்கு தெரியும்.  ஒரு சராசரி இந்தியனுக்கு தெரிந்தது,  எல்லோரும் பேசுவது ஊழலை எதிர்த்து போராடுவோம் என்று.  அன்னாவிற்கு கிடைத்திருக்கும் ஆதரவை பார்க்கையில் புல்லரிக்கின்றது.  ஒரு வயதான முதியவருக்கு இவ்வளவு ஆதரவா என்று வியப்பளிக்கிறது.  அதுவும் அவருக்கு ஆதரவு தருவது பெரும்பாலும் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், படித்து பட்டம் பெற்றவர்கள், வேலையில் இருப்பவர்கள், இளம் வயதினர் தான்.  இந்தியாவில் மட்டுமல்லாது கடல் கடந்தும் வருகிறது, வலுக்கிறது அவருக்கான ஆதரவு.  இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் இந்தியர்கள் ஊழல் பேயிடம் எப்படி சிக்குண்டு தவிக்கிறார்கள் என்று.  அன்னாவிற்கு சேரும் கூட்டம் நம் அரசியல்வாதிகளுக்கு சேரும் பிரியாணி கும்பலோ, ஃகுவார்டர் கும்பலோ அல்ல. ஒரு சமூக மாற்றத்தை தேடும் சராசரி இந்தியர்கள். வெறும் பணக்காரர்கள் மட்டுமே முன்னேராமல், ஒவ்வொரு இந்தியனும் முன்னேரவேண்டும், அதற்கான ஒரு விடிவு பிறக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன், நம்பிக்கையுடன்  போராட்டத்தில் குதித்துள்ளனர். 


சுதந்திரம் அடைந்த பின் இவ்வளவு காலம் அமைதியாக இருந்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இந்த போராடும் தைரியம்? உலகில் இளம் வயதினரை அதிகமாக கொண்டுள்ள நம் நாடு எப்படி,எதற்காக ஒரு எழுபத்தி நான்கு முதியவருக்காக , அவரின் போராட்டத்திற்காக அவருடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்க வேண்டும்?? இப்படி பல கேள்விகள் என்னை துளைத்து எடுக்கிறது.  பதில் தேடுகையில் எனக்கு தோன்றியது என்ன தெரியுமா?  போராடும் குணம் இன்னும் அழியவில்லை. இவ்வளவு நாள் அது கிடப்பில் போடப்பட்டிருந்தது, ஒரு உண்மையான, நேர்மையான, சுயநலமில்லா அரசியல்வாதி இல்லா  தலைவனை காணாது இருந்ததினால் தான்.  இப்பொழுது அன்னாவின் உருவில் காந்தியை நாம் பார்க்கிறோம் . அதனால் தான் அவருக்கு நம் ஆதரவினை கேட்காமல் கொடுக்கிறோம்.  அவர் போராடுவது அவருக்காக அல்ல நம் ஒவ்வொருவருக்காக என்ற உண்மையை நாம் உணர்கிறோம். இன்றைய இளம் தலைமுறையினருக்கு தேவை ஒரு இளம் வழிகாட்டி அல்ல,generation gap எல்லாம் தாண்டி,  ஞானம் , பக்குவம், அனுபவம்  உடைய தொலை நோக்கு பார்வை உடைய ஒருவரின் வழிகாட்டல் தான்.  ஹாலிவுட் படங்களும் , ஆங்கில பாப் இசையும், pub,discothe  மட்டுமே நம் இளைஞர்களுக்கு தெரியும் என்ற கூற்று பொய்த்து விட்டது. அவர்களுக்குள்ளும் வேறூன்றி கிடக்கிறது தேசபக்தி. காந்தியை நாம் இன்னும் மறக்கவில்லை. காந்தியமும் சாகவில்லை.


சரி இப்படி எல்லோரும் ஊழலை எதிர்ப்போம், போராடுவோம் என்று பேசுகிறோமே நாம் உண்மையில் அதற்காக என்ன செய்கிறோம்?  அரசியல்வாதிகள் செய்தால் தான் ஊழல் என்பது இல்லை.  நாம் நம்முடைய அன்றாட வாழ்கையில் பல வழிகளில் ஊழலுக்கு சுயநலம் கருதி துணைபோகிறோம். அரசியல் வாதிகள் கோடிக்கணக்கில் ஊழல் செய்வதால் அது நமக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.  நோகாமல் நுங்கு எடுக்கலாம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.  நமக்கும் அவர்களைப் போல் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன செய்வோம் , எப்படி நடந்து கொள்வோம் என்பதை பொறுத்தது தான் நம்முடைய உண்மையான நிலை.    நம் வாழ்வில் நாம் சின்ன சின்ன வழிகளிலெல்லாம் ஊழலை ஒழிக்க முயற்சி செய்யலாம்.  சாமிக்கே லஞ்சம் கொடுக்க நாம் தயங்குவதில்லை.  சாமியை அருகில் சென்று தரிசிக்க காசு கொடுக்கிறோம். அருகில் சென்று தரிசித்தால் தான் சாமி அருள் தருமா என்ன?  ஒரு டாக்டர் ஆபீஸுக்கு போனால் க்யூவில் நிற்க பொருமை இன்றி அங்கிருக்கும் பையனின் கைகளில் சில நோட்டுகளை திணித்துவிட்டு முன்னே செல்ல முயல்கிறோம். நமக்கு வந்தால் தான் நோயா?  காசை வீசி வேலையை முடித்து கொள்ளும் மனோபாவம் எப்பொழுது நம்மிடையே ஒழிகிறதோ அப்பொழுது தான் ஊழல் ஒழியும். பிறக்கும் பொழுது நர்ஸுக்கு காசு, இறக்கும் பொழுது வெட்டியானுக்கு காசு. இல்லையென்றால் நம் பிணம் பாதிதான் எரியும்.  அதனால் தான் சொன்னார்கள் “பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்று”. அது மட்டுமா பணம் பாதாளம் வரை பாயும் என்றும் சொல்லி வைத்துள்ளனர் .  பணத்திற்கு கொடுக்கும் மதிப்பு  எப்பொழுது மனித மனங்களுக்கு கொடுக்கப்படுகிறதோ அன்று அழியும் இந்த ஊழல் பேய்.


தவற்றை நம்மிடையே வைத்துக்கொண்டு அடுத்தவரை குறைகூறுவது எந்த விதத்தில் நியாயம்?   எதற்காகவும் எந்த சூழ்நிலையிலும் ஊழலுக்கு  துணைபோக மாட்டோம் என்று உறுதி பூண வேண்டும்.  உண்ணாவிரதம் இருந்தால் மட்டும்  போதாது.  அதற்கான முயற்சியை செய்யவேண்டும்.  அப்படித்தான் உண்மையாக அன்னா ஹஸாரேவிற்கு நம் ஆதரவை தர வேண்டும்.  செயலில் காட்டவேண்டும். அது தான் அவரின் போராட்டத்திற்கான வெற்றி. நாம் மட்டும் வளர்ந்தால் பத்தாது நம்முடன் நம் சமூகமும் வளர வேண்டும். அது தான் நமக்கு பெருமை.  நமக்கு இருக்கும் மக்கள் சக்தியை வைத்துக்கொண்டு இந்த உலகையே ஆளலாம். இப்படி இருக்கையில் ஒரு வயதான முதியவருக்கு இருக்கும் போராடும் குணம் நாம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.  கொடுப்பவன் இருந்தால் தான் வாங்குவதற்கு கை நீளும். ஒட்டு மொத்தமாக லஞ்சம்  கொடுப்பதை நாம் நிறுத்துவோம் பின் எங்கிருந்து வாங்க கை நீளும்?  சமூக மாற்றத்தை கொண்டுவருவது அரசாங்கத்திடம் இல்லை நம் ஒருவரிடமும் தான் இருக்கிறது. கோவில்களில், ஆஸ்பத்திரியில், பள்ளியில்,கல்லூரியில்,காவல் நிலையங்களில்,கலெக்டர் அலுவலகத்தில்,என்று எந்த இடத்திலும் காசு கொடுத்து வேலையை முடித்துக்கொள்ளமாட்டேன் என்று நம்மால் சபதம் எடுக்க முடியுமா?  அப்படி செய்தால் “பிழைக்க தெரியாதவன்” என்ற பட்டம் கிட்டும்.  ஒருவருக்கு கிட்டினால் தான் அது விதிவிலக்காக இருக்கும். ஒரு சமூகமே ஒட்டு மொத்தமாக  ஒற் றுமையாக இதற்காக போராடினால் நிட்ச்சயம் ஒளி    வழி  பிறக்கும்.  லஞ்சம் வாங்குவது பிச்சை எடுப்பதற்கு சமானம் என்று புரிய வைப்போம்.  அப்துல் கலாமின் 2020 கனவை , ஊழல் இல்லா இந்தியாவை உருவாக்குவோம். நம்முடைய எதிர் கால சந்ததியருக்கு ஊழல் இல்லா இந்தியாவை பரிசாக கொடுப்போம்.  உலகில் தலை நிமிர்ந்து நிர்ப்போம்.     இதற்கான விதையை விதைத்தாகி விட்டது. அறுவடையை அனுபவிக்க நாம் இருக்க மாட்டோம் . ஆனால் நம் சந்ததியர் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஜெய் ஹிந்த்!!! வாழ்க காந்தியம்!!வாழ்க அன்னா!!!

1 comment:

அமுதா கிருஷ்ணா said...

மாற்றம் வரும் என்ற நம்பிக்கையில் இருப்போம்.