குழந்தை வரம் வேண்டி ஏறாத கோவில் இல்லை வணங்காத தெய்வம் இல்லை. கிடைத்தது வரம் ஒன்பது வருடங்கள் கழித்து. பத்து மாதங்கள் நீண்ட பயணம் என்று நினைத்தோ என்னவோ எட்டு மாதங்களிலேயே இவ்வுலகை காண பிறந்துவிட்டான் என் மகன். குழந்தை பிறக்கப்போகிறது என்று அறிந்த நான் என் மகனின் முகத்தை பார்க்கவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின் மயக்க ஊசி போட்டு மயக்கமடைய செய்து விட்டார்கள் என்னை. விழிக்காத கண்களை விரித்து மறுநாள் தேடினேன் என் மகனை. காணவில்லை என்னருகில் அவனை. குழந்தை எங்கே என்று கேட்கக்கூடத் திரணியில்லை என்னிடம். “எங்கு குழந்தை , என்ன குழந்தை?” என்று திக்கித்திக்கி கேட்டேன். வரண்ட நாக்கும் உலர்ந்த உதடுகளும் வார்த்தைகளை வெளியில் விட மறுத்தன. அருகில் இருந்த என் தாய் “ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது” என்று கண்ணீர் மல்க கூறினாள். அது ஆனந்தக் கண்ணீர் என்று தான் நான் உடன் நினைத்தேன்.
என் கதகதப்பு போதவில்லை என்று மின்சார வெளிச்ச கதகதப்பில்(இன்குபேட்டரில்) வைத்திருக்கிறார்களாம். மன பாரம் , பால் பாரம் தாங்காமல் தனி அறையில் நான் உறங்க, அங்கே இங்க் பில்லரில் பால் அருந்தி , ஆயிரம் சொந்தங்கள் இருந்தும் தனியாக உறங்குகிறான் என் மகன். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பதைப் போல் ஒன்பது வருடங்கள் கழித்து எனக்கு கிடைத்த வரம் இன்னும் வந்து சேரவில்லை என் கைகளுக்கு. பார்க்க வந்தோர் யாவரும் குழந்தை எங்கே என்று கேட்டனர். பெற்ற நானே என் குழந்தையை பார்க்க இயலாத அவலத்தை யாரிடம் கூறுவது என்று கண்களை மூடிக்கொண்டு உறங்குவதாக நடித்தேன்.
உள்ளுக்குள் குமுறினேன். என்ன பாவம் செய்தேனோ நான் அறியவில்லை. நான்கு நாட்கள் ஆகியும் நான் என் குழந்தையை பார்க்கவில்லை. என்னை பார்க்க வந்தோர் மீது வந்தது எனக்கு கோபம். வந்தோம், பார்த்தோம் என்றில்லாமல் என் அறையில் உட்கார்ந்து கொண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருந்தனர்---குழந்தையை பற்றியே பேசிக்கொண்டு இருந்தனர். “யாரும் என் அறையில் இருக்க வேண்டாம்” என்று அறுவை சிகிச்சை வலியையும் தாங்கிக்கொண்டு அடி வயிற்றில் இருந்து கத்தினேன்.
வந்தவர்கள் கோபித்துக்கொள்வார்கள் என்று என்னை என் தாய் அடக்கினார். என் தவிப்பும் வேதனையும் யாருக்கும் புரியவில்லை. தனிமையை நான் விரும்பினேன். காலை,மதியம், மாலை இரவு என்று என் கணவரும் என் தந்தையும் போய் என் மகன் இருந்த மருத்துவமனையில் அவனை கண்ணாடி தடுப்புக்கு வெளியில் இருந்து பார்த்து விட்டு வந்தார்கள். குழந்தை எப்படி இருக்கிறான் என்று கேட்கக்கூட எனக்கு பயம். நான் சென்று பார்க்கும் நாளுக்காக காத்திருந்தேன். இப்படியே நான்கு நாட்கள் கழிந்தது.
நாளை தொடரும் என் ஒலி..............
10 comments:
இது உண்மைக்கதையா ...? ஏனென்றால் அக்குழந்தையின் முகத்தை பார்க்க ஏங்கும்... தாயின் முகம் எழுத்தில் தெரிகிறது...
கே.ஆர்.பி.செந்தில்--- ஆம் இது ஒரு உண்மை கதை. நன்றி.
நெகிழ்வான பதிவு.
ஆனால் இன்குபேட்டரில் இருந்தாலும், சிறிது நேரம் உங்கள் அருகில் மகனை படுக்க வைக்கலாமே (பத்து நிமிடங்கள்)
ராம்ஜி----குழந்தையும் தாயும் வெவ்வேறு மருத்துவமனையில் இருந்தார்கள். இது என் கதை அல்ல.நன்றி.
படிக்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க கீதா
இந்த அனுபவம் எங்களுக்கும் உண்டு. சற்று வேறு வடிவம். இரட்டையில் ஒன்று தொடக்க மூன்று நாட்கள் இன்குபேட்டர் தான்.
ப்ரியா----நன்றி
ஜோதிஜி----மிகவும் கஷ்டமாக இருந்திருக்குமே . குறைமாதத்தில் பிறந்தார்களா?
ஒருவர் 1,700 மற்றொருவர் 2,700,
அந்த சமயத்தில் இன்குபேட்டர் ரிப்பேர்.
வெயிட் குறைந்தவர் மூன்று நாட்களும் உடம்பு முழுக்க அத்தனைக்கும் ட்யூப்.
அற்புதமான கைராசியான காசு எதிர்பார்க்காத மருத்துவ பெண்மணி டாக்டர்.
ஆனால் இன்குபேட்டர் பிரச்சனையினால்அத்தனை பேர்களும் கையை விரித்து விட்டார்கள்.
டாக்டர் மனைவி முதல் அத்தனை உறவுகளும் ஒருத்தியை மட்டும் மறந்து விட வேண்டும் என்று சொல்ல நான் மட்டும் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
உங்கள் விஞ்ஞான அறிவை விட என் ஆன்மீக உணர்வு ஜெயிக்கும் என்றேன்.
எல்லோருமே சிரித்தார்கள்.
இரண்டு வருடத்திற்கு முன்பு காரில் அந்த மருத்துவரிடம் குடும்ப சகிதம் போய் ஆசி வாங்க சென்றோம்.
ஒரு நாளைக்கு 20 ஆப்ரேசன் செய்த நான் உங்கள் விசயத்தில் மட்டும் அத்தனையும் தலைகீழ் என்றார்.
ஆச்சரியம் விலகாமல் இரட்டையையும் தலைகோதி 5 நிமிடம் அப்படியே பார்த்துக் கொண்டுருந்தார்.
பிறந்த இடம் திருவண்ணாமலை.
புரிந்து இருக்குமே?
ஜோதிஜி--நீங்களும் உங்கள் மனைவியும் எத்தகைய துன்பத்தை அடைந்திருப்பீர்கள் என என்னால் உணர முடிகிறது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதுக்கு இது ஒரு எ.காட்டு. குழந்தைகள் வாழ்க பல்லாண்டு.
Very nice writings Akka.Written with life.A small doubt did u did M.Phil in English or Tamil.Tamil University kaathu adikuthu.Very nice and interesting Tamil and content.Will take a deep breath in your blog soon
Post a Comment