தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா--அன்று
தலை குணிந்து நில்லடா--இன்று
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்
ஜகத்தினை அழிப்போம் அன்று
எம் குலமே பசிப்பட்டினியில் அழிந்தாலும்
எங்களுக்கு வார இறுதியில்
‘யார் வீட்ல பார்ட்டி அட
நம்ம வீட்ல பார்ட்டி”
எம் நாட்டில் கோடையின்
தாக்கம் தாங்கவில்லை
எனவே நாங்கள் போகிறோம்
குடும்பத்துடன் கடற்கரைக்கு
மணல் வீடு கட்டி மகிழ
ஆனால் நீங்களோ குண்டடி காயத்திற்கு
மருந்தின்றி மணலை வைத்து
பூசிக்கொள்கிறீர்கள்.
தாயின் தாலாட்டில் துயில வேண்டிய
பச்சிளங் குழந்தைகள்
பீரங்கியின் ஓசையிடையே
திறந்த விழிகளுடன்.
ஆசிரியரின் போதனையை கேட்க வேண்டிய
மாணவ சிறார்கள் செவியில்
விழுவதெல்லாம்
ராணுவ அரக்கர்களின்
கட்டளைகள்,வெடிச்சத்தங்கள்.
பள்ளியின் மணி ஓசை வீட்டிற்குச் செல்ல
வெடியின் ஓசை பதுங்கு குழிக்குள் செல்ல.
யாவரும் ஒரு நாள் பூமிக்குள் போவோம் உறுதியாக
இதற்கு ஏன் இத்தனை முறை
செய்கிறீர்கள் ஒத்திகை?
நிலத்தின் மேல் வீடு கட்ட இடமில்லையோ
உங்களுக்கு?
அதனால் தான்
நிலத்தின் கீழ் நீங்கள்
வீடு கட்டுகிறீர்களா?
ஆடை விளம்பரத்திற்கு
பூனை நடை இங்கே.
மானத்தை காக்க
உடை தேடுகிறீர்கள் அங்கே.
நாங்கள் கண்டு மகிழ்கிறோம்
ஐபிஎல் போட்டியை.
அங்கு ராணுவத்திற்கும்
புலிகளுக்கும் நடக்கும் போட்டியில்
பந்தாடுகிறார்கள்
உங்கள் உயிர்களை.
அதை பார்த்து மகிழ்கிறார்கள்
உலக தலைவர்கள் யாவரும்.
பணத்தின் மேல் புரள்கிறார்கள் பலர் இங்கே
நீங்கள் பிணத்தின் ஊடே
புதைகிறீர்கள் உங்கள் உயிர்காத்திட.
உங்களை காக்க எங்களுக்கு
தெரிந்ததெல்லாம்
கடை அடைப்பு, பஸ் எரிப்பு,தீக்குளிப்பு
இதனால் என்ன பயன் உங்களுக்கு?
இத்தனை பேருக்குமா எழுதினான்
இறைவன் ஒரே விதியை?
என்னால் நம்ப முடியவில்லை
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு
விதி எழுத அவனுக்கு சோம்பல் போலும்
அவனும் எடுத்தானோ ஒரே
விதியின் நகலை பலருக்கு?
எப்படி கிடைத்தது எமனுக்கு
அத்துனை பாசக்கயிறு ஒரே சமயத்தில்?
எது கிழக்கு என்று தெரியாமலேயே
விடியலை தேடுகிறீர்கள்.
எட்டு திக்கும் பரவியும்
உங்கள் மரண ஓலங்கள்
யார் செவியிலும் விழாதது ஏன்?
சத்தமிலா ஓசையையா எழுப்புகிறீர்கள்?
அல்லது யாவரும் செவிடாகிப் போனோமா அறியேன்.
பலர் உங்கள் ஓலங்கள்
உங்கள் தேசிய கீதமென நினைத்து
எழுந்து நின்று மரியாதை மட்டுமே
செய்கிறார்கள்.
அவர்களுக்கு கூறுங்கள்
தேசமே இல்லாத உங்களுக்கு
ஏது தேசிய கீதம் என்ற ஒன்று??
உயிரற்ற சடலங்கள் மீதுதான்
ஈக்கள் மொய்க்குமென்று
யார் சொன்னது?
உங்கள் மீது அடிக்கும்
ரத்த வாடைக்கும்
உயிர் மட்டுமே ஊசலாடும்
உங்கள் உடலிலும் அவை
நடைபயிலும்.
தாயற்று, தந்தையற்று,
சேயற்று, அண்ணன்,தம்பி,
அக்காள்,தங்கை என்று
எல்லா உறவுகளையும் இழந்து
தனிக்தனி தீவுகளாக
ஒரு தீவுக்குள்ளேயே வாழும்
நீங்கள்
சேரப்போவது யாருடனோ?
தாய் காக்கவில்லை என்றால்
தாய் நாடு காக்கும் என்பர்
இரண்டும் இல்லா உங்களுக்கு
செவிலித்தாயாகப் போவது யாரோ?
வாரி அணைத்து,
ஆறுதல் கூறி
உறவொன்று அளித்து
உங்களை தழுவப்போகும்
கரங்கள் யாருடையதோ?
கிடைக்குமா உங்களுக்கு
ஓர் தாயின் மடி?
இழக்கப்பட்ட இழப்புக்கள்
இழக்கப்பட்டவையே!
மன்னிக்க இயலுமே தவிர
மறக்க முடியாது.
எந்த மனித உரிமைப் மீறல் சட்டம்
ஈடு செய்யும் இதனை?
எதிர்காலத்திலாவது
முட்கள் இல்லா பூக்கள்
மலரட்டும் உங்கள் வாழ்வில்
என கடவுளை வேண்டுகிறேன்.
வேண்டுவதை தவிர
வேறேதும் தெரியவில்லை
இந்த பேதைக்கு.
மன்னிக்கவும் வழக்கம் போல்
என் இயலாமையை.
12 comments:
சென்ற கவிதையை படித்த போது சற்று கோபம் வந்தது. ஆனால் ஈழம் குறித்து நான் மொத்தமாக எழுதியதை சத்தாக வந்த இந்த வாசகம் உங்கள் மேல் உள்ள மரியாதையை அதிகரிக்கச் செய்து விட்டது.
தேசமே இல்லாத உங்களுக்கு
ஏது தேசிய கீதமென்று??
வலையில் ஏற்றும் போது படித்துப் பார்த்து எழுத்துப் பிழைகளை தவிர்த்தால் இன்னும் படிப்பவர்களை கட்டுப் போட வைக்கும்.
தொடரட்டும்.
தார்மீக கோபம் ... ஆனால் யாரையும் மன்னிக்க முடியாது... முடியவே முடியாது ...
ஜோதிஜி---நன்றி. பிழையை திறுத்தி விட்டேன். பிழையின்றி எழுத முயற்சிக்கிறேன்.
நல்ல சமுக சிந்தனை உள்ள பகிர்வு
இயலாமை ஆற்றாமை கவிதையில் சொல்ல
பட்டு இருந்தாலும் இதற்கான தீர்வுகளையும்
படிப்பவர்களை யோசிக்க வைக்கிறது
அப்போதைக்கு அனுதாபம் காட்டி
அப்புறம் அடுத்த வேலையை பார்ப்பதை விட
நிரந்தர தீர்வுக்கு வேண்டிய வழியை
சான்றோர்களும் அறினர் பெரு மக்களும்
காண்பிக்க வேண்டும்
Thought provoking words...but I am the same "சாமான்யன்" as Ravi quoted...
அருமையான கவிதை. அனைத்து சாமான்யர்களையும் சிந்திக்க வைக்கும் கவிதை.
எழுத்துபிழைகளை சரி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
ஆத்மார்த்தமாக இருக்கு சகோ.
ம்ம்ம்... மெளனமாக கடந்து செல்கிறேன். கவிதையில் கனம் அதிகம்.
//இத்தனை பேருக்குமா எழுதினான்
இறைவன் ஒரே விதியை?//
இங்கிருந்து ஆரம்பிங்க...
என் ஆதங்கத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றி.
வெங்கட்---முடிந்தவரை பிழைகளை சரிபார்த்துள்ளேன். If any more pls let me know. thank you for ur suggestion.
//மன்னிக்கவும் வழக்கம் போல்
என் இயலாமையை.//
கனத்த இதயத்துடன் கடந்து போகிறேன் உங்கள் கவிதையை.
தனித்தனியாய் பார்த்த புகைப்படங்கள்,கேட்ட செய்திகள் எல்லாம் எழுந்துவந்து கேள்விகேட்கின்றன...உங்கள் கவிதயை படித்தபின்பு.
ஈழத்தைபற்றிய எழுத்துக்கள் காலம்கடந்ததாய் ஆகிவிட்ட இன்று இதை பதிப்பித்ததற்கு,மேலும் பாராட்டுக்கள்!
அனைத்துக் கொடுமைகளுக்கும் மத்தியில் உங்களைப் போன்றவர்களின் அன்பு தான் இன்னும் வாழ வைக்கின்றது. உணவில்லாமல், ஓடி ஒளிந்து மறைந்து வாழ்ந்து விடுதலைக்காக வாழ்ந்த, வாழும் நாட்கள் உங்கள் அன்பு இருக்கும் வரை வலியாக இருக்காது. எழுவோம். மீண்டும் எழுவோம்.
Post a Comment