அனுபவம் என்பது நாம் ஒவ்வொருவரும் சுயமாக அனுபவிக்க வேண்டியது. சிறு வயது முதல் நாம் அனுபவத்தின் மூலம் கற்கும் பாடமே வாழ்க்கை முழுதும் கை கொடுக்கும். நம்முடைய பெற்றோர் நமக்கு செய்த அதே தவறுகளை இன்று நாம் நம் பிள்ளைகளுக்குச் செய்கிறோம். “உனக்கு அனுபவம் பத்தாது நான் சொல்வதை கேள்” என்கிறோம். அடுத்தவர் அனுபவங்களைக் கொண்டு கற்கும் பாடங்கள் மனதில் காலந்தோறும் நிற்பதில்லை. “பட்டால் தான் புத்தி வரும்” என்பது தான் பல நேரங்களில் உண்மையாகிறது. பிறரின் அனுபவங்கள் நமக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாமே ஒழிய அதுவே நாம் பின்பற்றக்கூடிய வழியாக இருக்க முடியாது.
நான் என் மகனின் பின்னால் இருந்துகொண்டு “படி படி” என்று கூவியபடி இருப்பேன். என் சத்தத்திற்கு பயந்து அவனும் ஓர் அளவிற்கு படித்தான். ஓர் நாள் நான் யோசித்துப்பார்த்தேன். எதற்காக நான் என் தொண்டை தண்ணீர் வற்றும் அளவிற்கு கத்த வேண்டும்? ஓரு முறை விட்டுப் பார்ப்போம், என்று நினைத்து தலை தூக்கிய கடமை உணர்வை ஒரு தட்டு தட்டி பல்லை கடித்துக்கொண்டு இருந்து விட்டேன். ஒன்று மட்டும் கூறினேன். “இம்முறை நான் ஏதும் கூறப்போவது இல்லை. படித்தால் படி இல்லையென்றால் “மெக்டோனாடில்” வேலைக்கு சேர்ந்து விடலாம் கூடிய விரைவில். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன மதிப்பென் வாங்குவாய் என்று.” (நான் சிறுமியாக இருந்த பொழுது என் தந்தை படிக்கலைனா மாடு மேய்க்கலாம்” என்பார்.) Now we have a kind of sophisticated approach even in assigning a job for them!! அவனும் “விடுதலை,விடுதலை” என்று கத்தியவாறு சந்தோஷமாக விளையாடி திரிந்தான். பரீட்ச்சைக்குப் பின் மதிப்பென்னும் வந்தது. நான் கூறியது போல மிக குறைவான மதிப்பென்கள் எடுத்திருந்தான். கூனி குறுகிப் போனான். நான் எதுவும் கூறாமல் “அப்படியா சரி” என்றதோடு விட்டு விட்டேன். “அம்மா சாரி அம்மா. ப்ளீஸ் அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் சொல்வதை கேட்கிறேன்,” என்று என் வழிக்கு வந்தான். நான் கிணற்றுத் தவளையாய் கத்திய பொழுது உணராதவன் தானாக உணர்ந்தான்.
எல்லாவற்றையும் இப்படி அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்ளட்டும் என்று இருந்து விட முடியாது. அது நமக்கே விணையாக முடிந்துவிடும். என் நண்பரின் மகளுக்கு 15 வயது. பெற்றோர் எதிரியாக கண்களுக்கு தெரியும் பருவம். “அடங்கு” என்பதற்கு எதிர்மறையாகவே எல்லாவற்றையும் மனது செய்யத்தூண்டும் வயது. தகாத நண்பர்கள், செயல்கள். சொல்லி சொல்லி பார்த்துவிட்டு “எக்கேடாவது கெட்டுப்போ” என்று விட்டு விட்டார். ஆனால் அவர் மனைவி அப்படி விட்டுவிட்டால் பின்னாளில் துன்பப்படப்போவது அவள் மட்டும் அல்ல நாமும் தான் என்று கூறி கண்டிப்பாக இருந்து மகளை நல்வழிப்படுத்தினார். அடிபட்டுத் திருந்துவாள் என்று அவர்கள் விட்டு இருந்தால் பிற்காலத்தில் எல்லாமே கண்கெட்டப்பின் செய்யும் சூரிய நமஸ்காரமாக இருந்து இருக்கும்.
நம் அனுபவங்களை கொண்டு எங்கு கற்க வேண்டும், பிறரது அனுபவங்களை கொண்டு எங்கெல்லாம் சுதாரித்துக்கொள்ள வேண்டும் என்பதே ஒரு தனி கலை. ஆயிரம் சமையல் நிகழ்ச்சிகள் பார்த்தாலும் நாமாக சமைக்கும் பொழுதுதான் நம் வண்டவாளம் தண்டவாளம் ஏறும். விளையாட்டு, சினிமா என்று எதுவானாலும் ஆயிரம் விமர்சனம் செய்யும் (அதிலும் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று குற்றம் மட்டுமே கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்) நாம் களத்தில் இறங்கி கோதாவில் பங்கெடுத்தால் தான் தெரியும் நாம் வீட்டிலே புலி வெளியிலே எலியா என்று. அடுத்தவர் பிரச்சினைக்கு வெளியில் இருந்து நாம் பல பல அறிவுரைகளை அள்ளி வீசலாம். But we cannot step into other's shoes. அவர்கள் நிலைமையில் இருப்பதாக கற்பனை மட்டுமே செய்ய இயலும். நாவ் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சூழ்நிலையில் எடுக்கும் தனிப்பட்ட முடிவுகளே ஓர் அனுபவம் தான். சந்தர்ப்ப சூழ்நிலைதான் அதை முடிவு செய்யும்.
அனுபவங்களை பெறுவதே ஓர் அனுபவம். எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிட்டுவதில்லை. பொத்தி பொத்தி வளர்க்கப்படுபவர்கள் எப்பொழுதும் ஓர் வட்டத்துக்குள் வாழ கற்றுக்கொள்கிறார்கள். என் தந்தை எப்பொழுதும் கூறுவார்,” சைக்கிள்ள போக தெரியனும், பஸ்ல போக தெரியனும், கார்ல போக தெரியனும் எதுவுமே இல்லையென்றால் நடந்தும் போக கற்றுக்கொள்ள வேண்டும் “ என்று. இவை எல்லாமே அனுபவங்களே. சிலருக்கு சில விஷயங்களை அனுபவித்து பார்க்க ஆசை இருந்தாலும் பயம் மேலோங்கும். பாத் டப்பில் குளிக்கும் குழந்தைக்கு ஆற்றில் குளிக்க ஆசை. ஆற்றில் குளிக்கும் குழந்தைக்கு பாத் டப்பில் குளிக்க ஆசை. முதலானவருக்கு வாய்ப்பு கிட்டினாலும் பயம். இரண்டாமவருக்கு வாய்ப்பு கிட்டுமா என்ற ஏக்கம்.
நல்லதோ கெட்டதோ ஒன்றை அனுபவித்து பார்க்க துணிச்சல் தேவை. இந்த துணிச்சல் நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இருக்க வேண்டும். Experience is what is left when you don't achieve what you tried to achieve என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். எத்துனை பயணக்கட்டுரைகள் படித்து மகிழ்ந்தாலும் நாமே அந்த இடங்களுக்குச் சென்று மகிழ்வதைப் போல் வராது. குற்றாலத்தில் குளித்தவர்களின் அனுபவத்தை கேட்டு அறிவதைவிட சில்லென்ற அந்த கொட்டும் அருவியில் கண் மூடி கண்ணங்களை கை வைத்து பொத்தி நாமே நணைவதே அலாதி இன்பம். வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு அடியும் ஓர் அனுபவமாக எடுத்து ரசிக்க வேண்டும். ஒரு புத்தகத்தின் விமர்சனத்தை மட்டுமே படித்து அறிந்து கொள்வதைவிட நாமே அப்புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவேண்டும். சில விஷயங்கள் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தை கொடுக்கும். புதுபுது அர்த்தங்கள் தோன்றும். ஒரே விஷயத்தை பல கோணல்களில் பார்க்கத்துண்டும். நான் முதன் முதலில் “விருமாண்டி” படம் பார்த்த பொழுது எனக்கு பிடிக்கவே இல்லை. உண்மையை சொல்லப் போனால் புரியவேயில்லை. அப்பொழுது என் அறிவு வளர்ச்சி அவ்வளவுதான். அதே படத்தை ஆறு ஏழு வருடங்கள் கழித்து பார்த்தபொழுது மிகவும் பிடித்திருந்தது. பார்வை வேறுபட்டது. அதற்காக அறிவு வெகுவாக நிரம்பி வழிந்துவிட்டது என்று கூறவில்லை. ஓரளவிற்கு வயதுக்கேற்ற அறிவு முதிர்ச்சியடைந்திருந்தது. வயது ஆக ஆக (ரொம்ப வயதானவளாக கற்பனை செய்யாதீர்கள்) சூழ்நிலைக்கேற்ப சரி தவறாகும், சில சமயங்களில் தவறுகூட சரியாகும். அனுபவங்கள் நம்மை பக்குவப்பட வைக்கின்றன.
திருமணம் என்பது எப்படிபட்ட இடியாப்பச் சிக்கல் என்பதை நாம் அனைவரும் உணர்வோம். ஒவ்வொரு திருமணமானவரும் கூறுவது, “என் திருமண நாள் தான் என் சுதந்திரம் பறிபோன நாள் “ என்று-என் கணவரையும் சேர்த்துக்தான். எத்துனை பேர் இந்த உண்மையை கூறினாலும் நாம் ஒவ்வொருவரும் அதை அனுபவித்து பார்ப்போமே என்று துணிச்சலாக அந்த ஆழ்கடலில் குதிக்க துணிகிறோம். நாம் பெற்ற இன்பத்தை (துன்பத்தை) நம் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் , அனுபவிக்க ஆசை படுகிறோம். அப்படி துணிந்து குதிப்பதால் தான் குடும்பம், குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரப்பிள்ளைகள், எள்ளுப்பேரப்பிள்ளைகள், கொளுந்தன், அண்ணி, மச்சினி என்ற அழகான பிணைப்புகள் உருவாகிறது. இந்த நேரத்தில் என் தோழி கூறுயது என் நினைவிற்கு வருகிறது. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவள் ,”முதல் குழந்தை பிறந்து அதை வளர்க்க பாடுபட்ட போதே பிள்ளை வளர்ப்பு எவ்வளவு கடினமானது என்று தெரிந்தது. ஆனாலும் சொந்த செலவிலேயே சூன்யம் வைத்துக் கொள்வதைப்போல் இரண்டாவதையும் பெற்றுக்கொண்டு இப்பொழுது குத்துது, குடையுது என்றால் அது என் தப்புத்தானே” என்று விளையாட்டாக கூறுவாள். அவள் குழந்தைகள் அவளிடம் காட்டும் அன்பை நினைத்து இப்பொழுது ஆனந்தமாக இருக்கிறாள். இதுவும் ஒரு அனுபவமே.
சில விஷயங்களில் நான் அனுபவப்பட்டுத்தான் திருந்துவேன் என்று பிடிவாதம் கூடாது. தண்ணி அடிப்பது (தெரு முணை அடி பம்ப் அல்ல) ,புகை பிடிப்பது உடலுக்கு கேடு என தெரிந்தும் அனுபவப்பட்டு தெரிந்து கொள்வது என்பது சுயமாக சூடு வைத்துக்கொள்வதைப் போன்ற முட்டாள்தனம். இவ்வுலகில் மரணம் ஒன்றைப் பற்றித் தான் யாரும் அனுபவித்து பிறருக்கு தன் அனுபவங்களை கூறியது கிடையாது, கூறவும் முடியாது. அதில் கூட “மனதளவில் செத்துவிட்டேன்” என்று மனதால் நொந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். மரண வாயிலை எட்டிப்பார்த்தவர்கள் “மரண வேதனையை “ விவரிக்க கேட்டு இருக்கிறோம். மரணத்துக்குப் பின் யாரேனும் அப்படி கூற நேர்ந்தால் அது பேய் பிசாசுகளின் கூற்றாகிவிடும். எப்பேர்பட்ட மகானுக்கும் அந்த சக்தி இல்லை.
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் முழு ஈடுபாட்டுடன், ரசித்து, அனுபவித்து செய்ய வேண்டும். என் தாய் ,”உணவை ரசித்து ருசித்து அனுபவித்து சாப்பிடு. நாளைக்கு இன்று போல் உணவின் சுவை இருக்குமா அல்லது அதை உட்கார்ந்து உண்ண உனக்கு நேரம் கிடைக்குமா என்று தெரியாது” என்று கூறுவார்கள். இதில் உள்ள உண்மை அறிந்திருந்தும் நான் என் தந்தையின் ”வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக்கூடாது” கோட்பாட்டை பின்பற்றுபவள். என்ன செய்வது ஊருக்குதான் உபதேசம். எந்த ஒரு படைப்பாளியின் படைப்பாக இருந்தாலும் அது புத்தகமாயிருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், சிற்பமாக இருக்கட்டும், ஓவியமாக இருக்கட்டும், நகைசுவையாக இருக்கட்டும், சமையலாக இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் நம் மனதை தொடுமானால் நாம் முதலில் கூறுவது,”அனுபவித்து படைத்து இருக்கிறார்” என்று தான். அனுபவத்திற்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது.
எத்தகைய அனுபவமாயினும் அதில் இருக்கும் அழகையும், ஆழத்தையும், சுவையையும்,சுகத்தையும், எடுத்துக்கொண்டு அதில் உள்ள சோகத்தையும், வலியையும், வேதனையையும், சோர்வையும், தூர வீசி விட முயற்சிக்க வேண்டும். சில நேரங்களில் வலியும், வேதனையும் கூட சுகமே!! அனுபவம் என்பது பாடம் புகட்ட மட்டுமெ அல்ல. It can just be a plain nice experience. அது நம் மனதுக்கு பிடித்தமானதாக, இதமளிப்பதாக, இனிமையானதாக, வானவில்லைப் போன்றதாக கூட இருக்கலாம். கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு. எனவே அனுபவங்களை அனுபவித்துப் பாருங்கள் உங்கள் வானம் விரிவடையும்.
11 comments:
எங்கள் வீட்டிலும் மனைவி அப்படித்தான் பையனை கத்துவாங்க... நான் எதையும் கண்டுக்கிறது இல்ல.. ஒரு கட்டத்தில் இப்ப அவங்களும் ரொம்ப சொல்றது இல்ல..
அன்பவங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரிதான்... அதனைப் புரிந்து கொண்டால் வாழ்வை கொஞ்சம் எளிதாக கடக்கலாம்தான்...
நல்ல பதிவு ....
கே.ஆர்.பி.செந்தில்---வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் கீதா..
சமுக சிந்தனை உள்ள பதிவு .,நல்லா இருக்குங்க..
சிறுவர் உலகத்தில் உங்கள் பின்னூட்டத்தை வைத்து உங்கள் ப்ளாக் வந்து
படித்து நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது .
குழந்தை ,இளம் வயது ,பள்ளி கல்லூரி வயது,பெற்றோர்கள் என இனம் பிரித்து
அந்த அந்த வயது அனுபவங்களை சொல்லிய விதம் ரொம்ப நன்றாக இருந்தது.
ஆமாம் கீதா;மற்றவர்களுக்கு எளிதாக அறிவுரை சொல்ல முடிகிறது .அவரவர் பிரட்சனை என்று வரும் போது
முடிவெடுப்பதில் சற்று குழப்பமாக தான் இருக்கிறது.நன்றாக எழுதி இருக்கீங்க பா
நல்ல பதிவு .,வாழ்த்துக்கள் கீதா..
Muthulakshmi----Thank you very much.
Priya----Very happy to read your comments. Felt a personal touch in your approach. THank You very much.
அருமையான பதிவுங்க...
மனசுல இருக்கிற எண்ணங்களை மிக துல்லியமா வரிபடுத்துற கலை எல்லோருக்கு அமைந்து விடுவதில்லை.
உங்களுக்கு அமைந்திருக்கிறது. சில வரிகளை சட்டென்று கடந்து போய் விட முடியாமல் தேக்கி வைக்கிறது.ஆழமான தேடல்.
we cannot step into other's shoes. தேர்ந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.
கமலேஷ்--மிகவும் நன்றி.
குழந்தைகளை வளர்ப்பது கத்தி மேல நடக்கிற காரியம். அதுவும் பதின்ம வயது வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
ஒரு புத்திசாலியாகவும் சாதுர்யமாகவும் நடக்கத் தெரிந்த அம்மாக்கள் அவசியம்.
வல்லி சிம்ஹந்-நன்றி . ஆம் கத்தி மேல் நடப்பது போன்றது தான்.
அனுபவம் என்ற கப்பல் ஏறித்தானே வாழ்க்கைக்
கடலை நாம் கடந்து செல்லவேண்டி உள்ளது.
அனுபவங்களை நல்ல அனுபவங்களாக மாற்றி
பயணம் நல்லபடியாக அமைவது
நம் கையில்தானே உள்ளது. இயல்பான
எழுத்து நடை. வாழ்த்துக்கள் கீதா.
நல்ல பதிவு !
Post a Comment