Saturday, February 1, 2020

எண்ணங்களை தூய்மை செய்

மனமும் எண்ணமும் இப்படி வெண்மையாகவும், பளீரென்றும் எப்பொழுது தான் மாறுமோ??துணியை வெள்ளாவியில் வைத்து வெளுக்க முடிகிறது! மனதை , எண்ணங்களை எதை கொண்டு வெளுப்பது? கறை படிந்த நினைவுகளை வெளுக்கத்தான் முடியுமா? கார் மேகத்தை வெளுக்க முடியுமா?எண்ணம் பல வண்ணமாய் இருப்பதும் ஓர் அழகு தான். சிகரம் மேல் வெண் பூவாய் பூக்கும் பனியை போல் அப்பழுக்கு இன்றி தூய்மையாய் இருப்பது பேரழகு! புகை சூழ் மனமாய் இருத்தல் மூச்சுத்தினறலே!முயற்சிப்போம் எண்ணங்களை தூய்மை செய்ய!!
“யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
உன்ன வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தேங்களா
இல்ல வெயிலுக்கு காட்டாம
வளத்தாங்கெளா?
தலகாலு புரியாம
தரமேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே !!
—ஆடுகளம்

நம்பிக்கை

நம்பிக்கை
கோவில் பூசாரி
விரல் கொண்டு
சின்ன நெற்றியில்
அழுத்தி பூசும்
விபூதியின் துகள்கள்,
கண் உள்ளே விழுமோ
என்ற பயத்தில்
இறுக கண் மூடி
மூக்கினை சுழித்து
உதடுகள் திறக்கா வண்ணம்
பற்களை கடித்து,
அசையாமல்
பூசிக்கொள்ளும்
குட்டிச் சிறுவனின்
கடவுள் நம்பிக்கை
அழகானது மட்டுமல்ல
ஆழமானதும்
எந்த எதிர் பார்ப்பும்
இல்லாததும் ஆகும்.....

துளசி செடி

பாட்டி தோட்டத்தில்
துளசி செடி வளர்த்தாள்!
தோட்டத்தை சுற்றி சுற்றி
வந்தாள்
நற்காற்றினை
சுவாசிக்க !
அம்மா தொட்டியில்
வைத்து துளசியை வளர்த்தாள்!
மாடம் ஒன்று கட்டி
அதில் துளசியை
கொலுவேற்றி
தான் வணங்கும்
அம்மனென
சுற்றி வந்தாள்!
என் வீட்டிலோ
துளசி மாடத்தின்
மாதிரி மட்டுமே!
பாட்டி சாணம் தெளித்த
மண் வாசல் முழுதும்
நம் மனம் சிக்கிக்
கொள்ளும் அளவு
சிக்கு கோலம்
போட்டாள்!
அம்மா தன் சின்ன வாசலுக்கு
சிமெண்ட் பூசி
அதில் வண்ண கோலம்
போட்டாள்!
நானோ சின்னஞ்சிறு
டைலில் அடக்கமாய்
ஒரு கோலம் போட்டேன்
அதுவும்
தோன்றும் போது மட்டுமே!!!
மக்கும் மண் அகல் விளக்கும்
இங்கு மக்கா
அலுமினிய மெழுகுதிரியாய்
உறுமாறியதே!
கால ஓட்டத்தில்
எப்படி எல்லாம்
சிக்கி தவிக்கிறோம்!