Sunday, January 26, 2020

Girl talk




Image result for drawing of two girls talking over the phone.
Girl talk
நேற்று அடித்த வெயிலுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம். தொலைப் பேசியில் அழைத்த தோழி சுஜாவிடம் என் ஒற்றை தலைவலியை பற்றி புலம்பி தள்ளிவிட்டு அப்படியே பேச்சை தொடர்ந்தோம். குளிர் காலம் முடிந்து முதல் வெயிலில் வெளியில் போனதால் தான் தலைவலி வந்தது என்று அவள் ஆராய்ந்து கூறினாள். சுஜா எது சொன்னாலும் அது சரியாகவே இருக்கும். கணவர் சொல்வதை கூட சில நேரங்களில் கேட்காமல் இருப்பேன் ஆனால் சுஜா சொன்னால் அது சுந்தரேசுவரர் வாக்கு. தட்டவே தட்ட மாட்டேன்.
தலை வலி தலைப்பிலிருந்து அப்படியே , முதல் வெயில், முதல் பூ, முதல் பனி, என்று சகல விதமான ”முதல் ”களையும் முத்து முத்தாய் கோர்த்து பார்த்துவிட்டு வாழ்க்கையின் பின் நோக்கி பயனித்தோம். எப்படி நேரம் போவதே தெரியாமல் மணிக்கணக்கில் காலையில் எழுந்தவுடனே தொலைபேசியில் பேசினோம் என்று நினைத்து பார்த்தோம். என்ன பேசினோம் என்று நினைத்தால் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. எல்லாமே sweet nothings் தான். ஒரு முறை cross talkல் ஒரு காதல் ஜோடி பேசுவதை கேட்க நேர்ந்தது. அந்த பெண் “என் தோழிகள் உங்க பேர கேட்டாங்க. நான் எப்படி சொன்னேன் தெரியுமா?” என்று ஒரு வித வெக்கத்துடன் கேட்க, அதற்கு அந்த ஆண், “ என்ன சொன்ன என்ன சொன்ன?” என்று ஆண்களுக்கே உரித்தான அவசரத்துடன் வினவினான். அதற்கு அவள்,” நான் சொன்னேன்,,அவர் பேர் ABCD ல வர்ற K வும் 1 2 3 ல வர்ற sevenம் சேர்ந்தது என்றேன்,” என்று கூறினாள். நான் இடையில் புகுந்து”ஆஹா அவர் பேர் கேசவனா?” என்று கேட்டுவிட்டேன். உடனே இரண்டு பேரும் சுதாரித்துக் கொண்டு,”அச்சோ யாரோ ஒட்டு கேக்கறாங்க வச்சுடுவோம்.”என்று அலறி அடித்துக் கொண்டு போனை வைத்து விட்டார்கள். Cross talk கேட்பதும், ஊடே நாம் பேசுவதும் ஜாலியாக இருக்கும்.
காதல் ஜோடியை பற்றிய செய்தி ஞாபகத்திற்கு வந்ததும், எப்படி கடைக்கு போய் வித விதமாக greeting card வாங்கி சேகரிப்போம் என்பதை பற்றி பேசினோம். பின்னர், பொங்கல், தீபாவளி என்றால் எவ்வளவு அழகழகான வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தோம். இப்பொழுது Whatsappல் வரும் வாழ்த்துச் செய்திகளையும் கொஞ்சம் திட்டி தீர்த்தோம். திடீரென்று பாடல்களை பற்றி அலச ஆரம்பித்தோம்.சித் ஸ்ரீராமின், “வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும்” பாடல் வரிகளை சேர்ந்தே ரசித்தோம்.
ஒரு காலத்தில் பாட்டு புத்தகம் வாங்கி பாடல்களை மனப்பாடம் செய்தது நினைவிற்கு வந்தது. அப்பொழுது எல்லாம் அப்பா கூறுவார்,”இந்த பாழாப்போன பாட்டு புக்க வாங்கி மனப்பாடம் பன்றதுக்கு பாட புத்தகத்தில இருக்கற பாடத்த மனப்பாடம் செஞ்சாலாவது உருப்பட வழி இருக்கு.ரேடியோக்குள்ள காத வச்சு கேட்டு ஒன்னுத்துக்கும் உருப்பட போவதில்ல,” என்று திட்டுவார். என்ன திட்டினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கு தான். இப்பொழுது இருக்கும் என் பிள்ளைகள் காதில் எந்நேரமும் ஒரு வண்டை மாட்டிக்கொண்டு அலைவதை பார்க்கும் பொழுதெல்லாம் என் அப்பாவிற்கு கோபம் ஜிவ்வ்வ்வ் என்று தலைக்கேறும் . ஆனால் “எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன ”என்று கோவத்தை அடக்கிக் கொண்டு போய்விடுகிறார்.
பாட்டு பற்றிய தலைப்பு முடிந்ததும் யாராவது தலையை உருட்டும் நேரம் வந்தது. மூன்று தலைமுறை பின்னோக்கி நீளம் தாண்டி சுஜாவின் கொள்ளு பாட்டி , தாத்தாவின் தலைகளை கொஞ்சம் உருட்டி விளையாடினோம். அந்த கால கதைகள் சுவையாகத்தான் இருந்திருக்கின்றது. பழங்கதைகள் கூறினால் இக்கால குழந்தைகள், soooo boring” என்று கூறுவது போல் இல்லை. சுவாரசியமான கதையாக இருந்தது. கொள்ளு பாட்டி கதையில் இருந்து தாவி குதித்து நயந்தாராவின் அழகு எப்படி மெருகு ஏறிக்கொண்டே போகிறது என்று நயந்தாராவின் தலையை உருட்டி விட்டு. கொஞ்சமாக சோர்ந்து போனோம்.
அதிலிருந்து எப்படி நாங்கள் அரை சதம் அடிக்க போகும் நாள் நெருங்குகிறது , அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் என்ன என்ன மாற்றங்கள் உணர முடிகிறது என்று அங்குமிங்குமாய் சின்ன சின்ன அலசல்கள் செய்தோம். என்ன தான் வயதென்பது ஒரு எண் என்று சொல்லிக்கொண்டாலும், வயதாவதை பற்றி நினைக்கையில் கொஞ்சம் சோர்வாகத் தான் போய்விடுகிறது. இன்னும் இருக்கும் கடமைகளும், பொறுப்புக்களும் கண் முன்னே நர்தனம் ஆட ஆரம்பிக்கிறது.
சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. வாயும் வலித்தது, பசியில் வயிறும் வலித்தது. இன்றைக்கு இது போதும் என்று முடிவு செய்து, சாப்பிட்டு விட்டு ஒரு face pack போட்டுக்கொண்டு நயந்தாரா அளவிற்கு அழகாக முடியாவிட்டாலும், ஒரு நாக்காயி, மூக்காயி அளவிற்காவது அழகாக முயற்சிப்போம் என்று, சாவும் தருவாயில் இருந்த தொலைபேசியை உயிர்ப்பிக்க அதில் wire சொருகி விட்டு chargeல் போட்டுவிட்டு அவரவர் வேலையை தொடர ஆரம்பித்தோம். ......வாயாலயே பயணம் செய்த களைப்பு மிகுதியாகிய படியால் கண்களை உறக்கம் கவ்விக்கொண்டது.கச்சேரி நாளை தொடரும்......
பிகு” நான் Girl talk என்று ஏதோ எழுதுவதை பார்த்த ரிஷி, தமிழ் படிக்க தெரியாததால் நான் என்ன எழுதுகிறேன் என்று தெரியாமல் அது என்ன என்று கேட்டான். நானும் பதிலுக்கு ”நானும் சுஜா auntyம் நேற்று பேசியதை சும்மா எழுதுகிறேன் என்றேன். அதற்கு அவன், ”ஓ இன்றைக்கு உனக்கு சுஜா aunty தான் மாட்டினாங்களா mince செய்ய ?” என்று கேட்டு விட்டு ”அப்பாடா நான் தப்பிச்சேன்” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டான்.......பய புள்ள இப்போ எல்லாம் சுதாரிச்சுருச்சு. வயசு ஆகுதில்ல.........