Friday, October 25, 2019

மருதாணி எனும் மைலாஞ்சி......

தீபாவளிக்கு இன்னும் ஓர் நாள் தான் இருக்கிறது. ஊரில் இருந்திருந்தால் சொந்த பந்தங்களோடு கொண்டாடி இருக்கலாம். சரி பண்டிகை feel வரவேண்டுமே என்று தீபாவளி சந்தையை பார்க்க போய் இருந்தேன். ஒரே கூட்டம். தீபாவளிக்கு ஜவுளி வாங்குபவர்களும், தோரணங்கள், தீபங்கள், விளக்குகள், ப்ளாஸ்டிக் கோலங்கள் , என்று வித விதமாக தீபாவளிக்கு வேண்டிய பொருட்கள் வாங்க மக்கள் குவிந்து இருந்தார்கள். எங்கே திரும்பினாலும் மருதாணி cone விற்றுக்கொண்டு இருந்தார்கள். மருதாணி போட்டு விடுபவர்களும் இருந்தார்கள். அவர்களிடம் பெண்கள் தங்கள் கைகளில் மருதாணி போட்டுக்கொண்டிருந்தார்கள். பத்தே பத்து நிமிடங்களில் அழகாக இரண்டு கைகளிலும் மருதாணி கொண்டு ஓவியம் தீட்டி விடுகிறார்கள்.
தீபாவளி என்றாலே மருதாணி இட்டுக்கொள்வது ஒரு அத்தியாவசியத் தேவை போன்றது எனக்கு. எனக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் தான். அந்த மருதாணி குப்பிகளைப் பார்த்த பொழுது மனம் வாழ்க்கையின் பல பக்கங்களை திருப்பி பார்க்க ஆரம்பித்தது. தீபாவளிக்கு முதல் நாள் அம்மா மும்முரமாக பலகாரம் செய்து கொண்டு இருப்பார். நானும் என் தங்கையும் மருதாணி போட்டுக்கொள்ள தயாராகி விடுவோம். எங்கள் வீட்டு தோட்டத்திலேயே மருதாணி செடிகள் இருந்தது. அதில் இருந்து இலைகளைப் பறித்து கொண்டு வந்து விடுவோம். அடுத்தது அதை யார் அரைப்பது என்பது தான் பிரச்சனையே. நாங்கள் அரைத்தால் கை முழுதும் மருதாணி சாயம் பூசிக்கொள்ளும். அது நன்றாக இருக்காது. அம்மியில் வைத்துத்தான் அரைக்க வேண்டும். வீட்டில் வேலை செய்யும் விஜயாவை தாஜா செய்து அரைத்து தரச்சொல்வோம். அவள் பாவம், வேறு வழியின்றி ஒத்துக்கொள்வாள். கொஞ்சம் புளி சேர்த்து மையாக அந்த இலைகளை அரைத்து வாங்கி வைத்துக்கொள்வோம். அதில் கொஞ்சம் எலும்பிச்சை சாறும் கலந்து வைத்துக்கொள்வோம். பகல் நேரத்தில் போட மாட்டோம். ஓடி ஆடி விளையாட முடியாது. Bathroom போவது கஷ்டமாக இருக்கும். எனவே இரவு படுக்க போவதற்கு முன் போட்டுக்கொள்வோம்.
அப்பொழுதெல்லாம் , இப்பொழுது இட்டுக்கொள்வது போல அழகழகான designகள் போட்டுக்கொள்ளத் தெரியாது. உள்ளங்கையில் ஒரு பெரிய வட்டம். அதைச் சுற்றி சிறு சிறு வட்டங்கள் அவ்வளவு தான். பின் விரல் நுனிகளில் குப்பிகைகள் போல வைத்துக்கொள்வோம். மிகவும் சிறுமியாக இருந்தபொழுது கை நிறைய சிவக்க வேண்டும் என்ற பேராசையில் கை முழுதும் பூசிக்கொண்டதும் உண்டு. ஓர் வயது வந்த பின் அப்படி பூசிக்கொள்வது அழகல்ல என்று புரிந்து, வட்டங்கள் இட்டுக்கொள்ள ஆரம்பித்தோம். புள்ளிகள் வைத்துக்கொள்வதே அழகென்று நினைத்தோம். சிலர் புரங்கையில் வைத்திருப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு புரங்கையில் ஒரு சிறு வட்டம் வைத்ததும் உண்டு. நான் மாநிறம் என்பதால் அது எடுப்பாக தெரியாது. அதில் சிறு வருத்தம் இருக்கத்தான் செய்தது.
மருதாணி வைத்துக்கொண்ட பின் அத்தோடு அந்த கூத்து நிற்காது. அப்பொழுது தான் உடம்பில் அங்கங்கே அரிக்கும். இங்கே சொரி, அங்கே சொரி என்று விஜயாவை பாடாய் படுத்துவோம். நேரம் பார்த்து மூக்கு நுனியில் அரிக்கும் பாருங்கள் ! அப்பப்பா!ஆனாலும் ஆசை யாரை விட்டது. இரண்டு கைகளையும் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டி மூக்கை தோள் பட்டையில் உரசிக்கொள்வோம். சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு விரல் கொண்டு எங்காவது சொரிந்து விட்டால் மீண்டும் அந்த விரலில் மருதாணி போட வேண்டும். தங்கைக்கு சளி பிடிக்கும் என்பதால் அம்மா அவளை கொஞ்ச நேரம் வைத்து இருந்து விட்டு மருதாணியை கழுவி எடுக்க சொல்வாள். மருதாணி குளிர்ச்சியாம். ஆனால் அவள் கேட்க மாட்டாள். மருதாணி போட்டுக்கொள்ள வேண்டும் என்றால் இருப்பதிலேயே பழைய துணியை உடுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால் , மருதாணி கரை பட்டால் துணியிலிருந்து நீக்குவது கடினம். தண்ணீர் குடிக்க வேண்டுமானலும் யாரவது ஊட்டி விடவேண்டும்.

படுக்கை கூட பாயில் தான். மெத்தையில் படுக்க முடியாது. தீபாவளி வேறு மழைகாலத்தில் வரும். இரவு நேரங்களில் குளிரும். ஆனாலும் போர்த்திக்கொள்ள பழைய போர்வை தான் தருவார் அம்மா. தூங்கும் பொழுது ஏசு நாதர் சிலுவையில் அரைந்ததைப் போல் இரண்டு கைகளையும் நீட்டி வைத்துக்கொண்டு படுப்போம். அதில் வேறு சண்டை வரும்--நீ என் மருதாணியை கலைத்து விட்டாய் என்று. படுத்தப் பின் போர்வையை போர்த்த ஓர் ஆள் வேண்டும். தூங்கும் பொழுது மருதாணி காய்ந்து, அங்கிங்கெங்கும் திரும்பும் பொழுது விழாமல் இருக்க சக்கரை கலந்த தண்ணீரை தெளித்து விடுவார் அம்மா. சக்கரைத் தண்ணீர் மருதாணியை காய்ந்தாலும் கீழே விழாதபடிக்கு பிடித்து வைத்திருக்கும். அப்பொழுது தான் கைகள் நன்றாக சிவக்கும். பாயில் படுப்பதால் சக்கரைத் தண்ணீருக்கு எங்கே எறும்புகள் மொய்த்து விடுமோ என்ற பயமும் இருக்கும். ஆனாலும் சக்கரைத் தண்ணீர் தெளிக்காமல் படுத்ததில்லை.காலையில் எழுந்தவுடன் முதலில் கைகளை விரித்து சிவந்து இருக்கிறதா என்று பார்ப்போம். இரண்டு கைகளையும் ஒன்று மேல் ஒன்று வைத்து உரசி காய்ந்து இருக்கும் சொச்ச மிச்ச மருதாணியை பாயிலேயே உதிரச் செய்து விட்டு கைகளை கழுவச் செல்வோம். கைககளை கழுவிய பின் யார் கை நன்றாக சிவந்து இருக்கிறது என்று வேறு ஒப்பீடு நடக்கும். பின் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை எடுத்து கைகளில் பூசிக்கொள்வோம். அப்பொழுது தான் மருதாணி சாயம் பளீர் என்று இருக்கும். எளிதில் மங்காது. எல்லாம் கேள்வி ஞானம் தான்.
ஆண்பிள்ளைகளும் மருதாணி வைத்துக்கொள்வார்கள். அவர்கள் உள்ளங்கைகளில் ஒரே ஒரு வட்டம் அவ்வளவு தான். இப்பொழுதெல்லாம் வட இந்தியர்களின் influenceஆல் அழகாக மருதாணி இட்டு விடுகிறார்கள். முழங்கை அளவிற்கு சித்திரங்கள் வரைந்து தள்ளுகிறார்கள். பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் , சிறுவர்களும் கூட இந்த கலையில் கை தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். coneகள் அறியப்படுவதற்கு முன் சில காலம் ஆவின் பால் வரும் பைகளை கழுவி அதனை ஒரு கோன் போல செய்து அடியில் ஒரு சிறு துளையிட்டு மருதாணியை கொண்டு நிரப்பி கோன்களாக பயன் படுத்தியதுண்டு.என் வலது கை கொண்டு இடது கையில் ஓரளவிற்கு ஏதோ ஒரு பூவை போட்டு விடுவேன். ஆனால் இடது கை கொண்டு வலது கையில் போட வராது. ஏதாவது ஒரு டிசைனை கிறுக்கிக் கொள்வேன். சில நேரங்களில் தோழிகளிடம் போட்டுக்கொள்வேன்.
இலைப் பறித்து அரைத்து இட்டுக்கொள்ளும் மருதாணி ஒரு வித ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு வெளுக்கும் பொழுது ஒரே சீராக வெளுக்கும். ஆனால் கோன் கொண்டு போட்டுக்கொள்ளும் மருதாணி அடர்ந்த வண்ணத்தில் சிவக்கும். அதே நேரம் ஓரிரு நாட்களிலேயே வெளுக்க துவங்கும். அப்படி வெளுக்கும் பொழுது அங்கங்கே சாயம் போனது போல் காட்சி அளிக்கும். பார்க்க அசிங்கமாக இருக்கும். இலை கொண்டு போடப்படும் மருதாணிக்கு மருத்துவ பயன்கள் உண்டு. இந்த கோன்களில் ரசாயனம் இருப்பதால் எந்த வித மருத்துவ பயனும் கிடையாது. ஆனால் இப்பொழுதெல்லாம் மருதாணி செடிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. எனவே வேரு வழியில்லாமல் கோன்களைத்தான் உபயோகப்படுத்தும்படி ஆகி விடுகிறது. எப்படியோ தீபாவளிக்கு பலகாரம் செய்து கைகள் சிவக்கிறதோ இல்லையோ, மருதாணி இட்டுக்கொள்வதால் சிவந்து போகும். இதோ நானும் இன்று இரவு மருதாணி இட்டுக்கொண்டு தீபாவளியை வரவேற்க ஆயத்தமாக போகிறேன்.

Sunday, October 6, 2019

அசுரன் விமர்சனம்



அசுரன் படம் வெளிவந்த நாளிலேயே அசுர வேகத்தில் படம் பார்க்க சென்று விட்டோம். அடித்த அசுர காற்றில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. அருமையான படம். நிறைவான  கதாபாத்திரங்கள். அட்டகாசமான திறமைகளின் வெளிப்பாடு. மிரட்டும் ஒளிப்பதிவு, மனதை படக், படக் என அடித்து கொண்டே வைத்திருக்கும் இசை. ஆழமான திரைக்கதை மற்றும் இயக்கம். சிந்திக்க வைக்கும் கருத்து. ரசிக்க தூண்டும் வசனம். மொத்தத்தில் இது “அடி தூதூள்ள்”!

இப்படத்தில் ஒரு தந்தையாக தனுஷ் மின்னுகிறார். தந்தையாகவே வாழ்ந்திருக்கிறார். வெற்றிமாறன் போன்ற ஒரு இயக்குனர் கைகளில் களிமண்ணாக தனுஷ் மாறிவிடுகிறார். வெற்றிமாறன் அவரை அழகாக உருமாற்றுகிறார், உருவாக்குகிறார், உயிர் கொடுக்கிறார். அவரின் கைகளில் வளைந்து, நெளிந்து ஒத்துழைப்பு கொடுத்து அழகான வடிவம் பெறுகிறார் தனுஷ். தன் பிள்ளைகளின் நலனுக்காக எப்படி தான் கட்டிக் காத்த சூடு , சொரணை எல்லாவற்றையும் இழக்க பெற்றோர் தயங்குவதில்லை என்ற நிதர்சன உண்மையை அழகாக நடித்து காட்டி இருக்கிறார்.


இத்தருணத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என் வீட்டில் நடந்த சம்பவம் நினைவிற்கு வருகிறது. என் மகனின் ட்யூஷன் ஆசிரியருக்கும் எனக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாடு. அவர் எடுத்த வகுப்புகளின் எண்ணிக்கையும் நான் கணக்கு வைத்திருந்த எண்ணிகையும் ஒத்து போக வில்லை. நான் சொல்ல வந்த விஷயத்தை அவர் ஏற்றுக் கொள்ளும் மன நிலையிலும் இல்லை. அவர் மனதில் தோன்றியதை எல்லாம் message ஆக அனுப்பினார். எந்த விளக்கத்தையும் ஏற்க மறுத்து , இனி என் மகனுக்கு வகுப்புக்கள் எடுக்க போவது இல்லை என்று கடினமாக கூறிவிட்டார். எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. என் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்து இருந்தும் அவரிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டேன். என் சுய மரியாதையும் விட்டு விட்டு என் மகனுக்காக மன்னிப்பு கேட்டேன். அவன் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறான் அவனுக்கு அவரின் உதவி மிகவும் தேவை. இத்தருணத்தில் என் சுயமரியாதை எனக்கு பெரிதாக தெரியவில்லை. என் மகன் கூட,”அம்மா விடுங்கள் நான் சமாளித்துக் கொள்கிறேன். நீங்கள் எதற்காக தவறேதும் செய்யாமல் அவரிடம் மன்னிப்பு கேட்கிறீர்கள்?” என்றான். எனக்கு வேறு வழியே தெரியவில்லை. அந்த சூழ்நிலையில் அவனின் எதிர்காலமே கண் முன் தோன்றியது.

இப்படத்தில் தனுஷ் அப்படி மனம் , ரோஷம் பார்க்காமல், தன் மகனின் கடுஞ்சொல்லை கூட பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளின் நலனுக்காக பிறந்தது முதல் ஒட்டிக்கிடக்கும் மானம் ரோஷம் எல்லாவற்றையும் தள்ளி வைக்கும் பொழுது ஓர் பாசமிக்க தகப்பனாக, பொருப்புள்ள குடும்ப தலைவனாக மிளிர்கிறார்.

மஞ்சு வாரியாரை பார்க்கும் பொழுது கதைகளில் படித்த, புலியை முறத்தால் அடித்து  விரட்டிய அந்த தமிழச்சியே ஞாபகத்திற்கு வருகிறார். பாசமான அதே சமயம் கண்டிப்பான , வீரமான, வீரத்தை தன் பிள்ளைகளுக்கு பாலாக ஊட்டி வளர்த்த தாயாக மின்னுகிறார். அவர் நடையிலேயே அவரின் மிடுக்கும், தைரியமும் தெரிகிறது. கணவன் மனைவி இடையே மிகுந்த ஈடுபாடு இருக்கும் பட்சத்தில் எப்படி அந்த அன்பை இருவரும் அழகாக பார்வை மூலமாகவும், வார்த்தை மூலமாகவும், கண்டிப்பு மூலமாகவும் , செய்கைகள் மூலமாகவும் ஓர் கவிதையாக பரிமாறிக்கொள்ள முடியும் என்பதற்கு தனுஷ், மஞ்சு வாரியார் ஜோடியே சாட்சி. தனுஷ் குடித்து விட்டு வாந்தி எடுக்கும் போது சளித்துக்கொள்ளாமல் சுத்தம் செய்வதாகட்டும், அவருக்கு அடிப்பட்டு ரத்தம் வரும் போது அதை தன் முந்தானை கொண்டு துடைப்பதில் ஆகட்டும், தன் கணவர் நடக்கும் அக்கிரமங்களுக்காக ஆத்திரம் கொண்டு எதிர் நோக்காமல் அமைதியாக கையாள்வதை பார்த்து கோபம் கொள்வதில் ஆகட்டும் , மஞ்சு வாரியார் ஓர் தாயாய், மனைவியாய் ஒளிர்கிறார். ஒரு குடும்ப தலைவி எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலைகுலையாமல் நிதானமாக கையாளுபவளாக இருக்கும் பொழுது எப்படிபட்ட சூழ்நிலையையும் அந்த குடும்ப தலைவனால் கையாள முடியும் என்பதற்கும் இந்த ஜோடி ஓர் எடுத்துக்காட்டு. தங்கள் குடும்பத்தில் நடந்த இழப்புகளுக்கு அழுது, கூப்பாடு போட்டு ஊரை கூட்டாமல் நிதானமாக ஒரு குடும்பமாக யோசித்து முடிவெடுக்கிறார்கள்.

இளம் கன்று பயம் அறியாது என்பதற்கு படத்தில் தனுஷின் மகன்களாக வரும் இருவராகட்டும், இளம் வயது தனுஷ் ஆகட்டும் இந்த கதாபாத்திரங்களே சான்று. ரத்தம் சூடாக இருக்கும் பொழுது ஒரு பிரச்சனையை அனுகும் விதமும் அதே ரத்தம் சுண்டும் பொழுது , வயதாக ஆக ஒருவன் ஓர் பிரச்சனையை அனுகும் முறையும் எப்படி வேறுபடுகிறது. ஆனால் சமயம் வரும் பொழுது கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது வெளிப்படத்தான் செய்கிறது. பின் விளைவுகளை யோசிக்காமல் மகன்கள் எடுக்கும் முடிவு எப்படி தன் குடும்பத்தை ஆட்டம் காணச்செய்தது என்பதை உணர்ந்து தன் உறவுகளை காக்க வயதான தனுஷ் நிதானமாக செயல் படுகிறார்.

சொத்து, ,சுகம், மானம், மரியாதை , எல்லாவற்றையும் விட ஒருவனுக்கு தன் குடும்பமே பெரிது என்பது தனுஷ் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுகிறது. அன்பும் அரவனைப்பும் மிகுந்த குடும்பங்கள் எப்பேற்பட்ட சூழ்நிலையிலும் நிலை குலைவதில்லை. இப்பொழுதெல்லாம் நமக்குத்தான் குடும்பத்துடன் நேரம் செலவழிக்க பாடம் கற்க வேண்டி இருக்கிறதே!. ஒரே வீட்டிற்குள் இருந்தாலும் ஆள் ஆளுக்கு கைத்தொலைபேசியுடன் உறவாடி, தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்கிருந்து பாசப்பிணைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது? குழந்தைகள் தவறான பாதையில் போனப்பின் கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் செய்ய விழைகிறோம். இவை எல்லாம் ஒரு வித பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதே ஆகும். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் திருமண வயது அடைந்த பிள்ளைகளை வைத்து இருக்கும் எனக்கு தெரிந்த நிறைய பெற்றோர்கள் ”என் பிள்ளையை அவரையே தனக்கு ஏற்ற துணையை தேடிக்கொள்ள சொல்லிவிட்டேன். நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாம் பொறுப்பாக வேண்டாம் இல்லையா?” என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். பொறுப்புக்களை தட்டிகழிக்க பழகி கொண்டு இருக்கிறோம்.

இப்படத்தில் மகனுக்காக தந்தையும், அண்ணனுக்காக தம்பியும், அம்மாவிற்காக மகனும், ஊருக்காக தலைவனும், தந்தைக்காக மகனும், தங்கைக்காக அண்ணனும், காதலிக்காக காதலனும் , உறவிற்காக உற்றாரும் என்று பிறர் நலனுக்காகவே வாழும் நிறைய கதாபாத்திரங்கள் நம் கண் முன் வாழ்கிறார்கள். இப்படிப்பட்ட சுயநலமில்லா உறவுகளை பார்க்கையில் மனம் இளகுகிறது. தனுஷின் மகன்களாக வரும் கென், டிஜே, மஞ்சு வாரியாரின் அண்ணனாக வரும் பசுபதி, ப்ரகாஷ் ராஜ், நரேன், அம்மு அபிராமி, மற்றும் எல்லா கதாபாத்திரங்களுமே மிக நன்றாக அவரவர் பங்கை செய்து இருக்கிறார்கள்.

படத்தில் சாதி ஆதிக்கம் ஆழமாக அழகாக கையாளப்பட்டிருக்கிறது. இப்படி பட்ட சமூகத்திலா நாம் வாழ்ந்தோம் , வாழ்கிறோம் என்று நினைக்கையில் மனதில் ஓர் வலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த வலி படம் பார்த்து முடித்து வீடு வந்தும் மனதிலேயே ஊரல் போட்டு ஓர் சளிப்பை, வெறுப்பை, ஓரு ரணத்தை ஏற்படுத்துகிறது. ஆண்டான் அடிமை, சாதிக்கொடுமைகள் அன்றிருந்த மாதிரி இப்பொழுது இல்லை என்பதை நினைக்கையில் நிம்மதி ஏற்படுகிறது. முற்றிலும் அவை களையப்பட இன்னும் சில காலங்கள் ஆகலாம். ஆனால் அதில் முன்னோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்பதில் ஓர் எள் அளவு மகிழ்ச்சி.

படத்தில் வரும் திருநெல்வேலி தமிழை கேட்கும்  பொழுது தாமிரபரணி தண்ணீரை அப்படியே எடுத்து பருகிய நிறைவு ! வசனங்களில் ஆழமும் உண்டு, விவேகமும் உண்டு, அர்த்தமும் உண்டு, நக்கலும் உண்டு, நையாண்டியும் உண்டு! அந்த காடுகளை படம் பிடித்திருக்கும் விதம் நாமும் அந்த காடுகளுக்கிடையே ஊடுருவி சென்று வந்ததை போன்ற அனுபவம். நம் ஊரிலே நம் சொத்தாக எவ்வளவோ காடுகளும் வனங்களும் இருக்கின்றன. கண்களுக்கெட்டா தூரத்தில் இருக்கும் அமேசான் காடுகள் பற்றி எரிவதை பற்றி ஆத்திரம் அடையும் நாம் , நம் கண் முன்னே கொட்டிக்கிடக்கும் இயற்கை வனங்கள் அழிக்கப்படுவதை பார்த்து பொங்கி எழுவதில்லை. அப்படியே கோபம் கொண்டு எழுந்தாலும் இங்கிருக்கும் அரசியலும், அரசியல்வாதிகளும் அதனை நீர் ஊற்றி அனைத்து விடுகிறார்கள்.

படம் முழுதும் அரிவாளின் உரசலும், கத்திகளில் இருந்து வெளிவரும்  தீப்பொறிகளும், குத்தீட்டிகளின் பாய்ச்சலும் , கிழிக்கப்பட்ட சதையும், சிந்திக் கிடக்கும் ரத்தமும், எரிந்த சாம்பலும், மனிதம் மீது ஒரு வித பயத்தை ஏற்படுத்துகிறது. குத்தீட்டிகளும், வீச்சு அரிவாளும் இப்பொழுது அவ்வளவாக இல்லை என்றாலும் அதை விட பயங்கரமான ஆயுதங்கள் சத்தம் இன்றி ரத்தம் இன்றி நம்மை தாக்கிக்கொண்டு இருக்கின்றன. கதிர் வீச்சுகளும், புகை நச்சுக்களும், பூச்சி கொல்லிகளும் நம்மை நாலா பக்கத்திலிருந்தும் தினம் தினம் அனு அனுவாக கொன்றுக்கொண்டிருக்கின்றது. கத்தியும் அரிவாளும் கொண்டு தாக்குவது மட்டுமே வன்முறை இல்லை. சுத்தமான காற்றும், தண்ணீரும் , பசிக்கு உணவில்லா சமூகத்தில் வாழ்வதும், சுகாதரமற்ற சூழ்நிலையில் வாழ நேரிடுவதும், ஒருவரை ஒருவர் அக்கிரமாகவும், வக்கிரமாகவும் வார்த்தைகளால் தாக்கிக்கொள்(ல்)வதும் ,
சுயநலத்திற்காக பொதுநலத்தை காவு கொடுப்பதும், சுய லாபத்திற்காக ஒரு சமூகத்தையே போதைக்கும் ,புகழுக்கும் அடிமையாக்குவதும், பெண்களை, குழந்தைகளை வியாபாரப் பொருளாய் ஆக்குவதும், சுற்றுச் சூழலை கெடுத்து குட்டிச்சுவராக்குவதும், இவற்றிற்கெல்லாம் ஈடு கொடுப்பதும் , தூண்டு கோளாய் இருப்பதும், வன்முறையே! அப்படி பார்க்கையில் இப்பொழுது நாம் ஆயுதம் இல்லா பலவித வன்முறைகளை எதிர் நோக்குகிறோம், நாமும் நம்மை அறியாமல் ஓர் காரணியாகிவிடுகிறோம். இதை எல்லாம் யோசிக்கும் பொழுது படத்தில் வரும் சண்டை காட்சிகள் நமக்கு உண்மை இல்லை , அவை படத்திற்காக படம் ஆக்கப்பட்ட காட்சிகள் என்பதை எங்கோ உணர்த்திக் கொண்டு இருக்கிறது.தனுஷின் ஒவ்வொரு முக பாவத்தையும் படம் பிடித்த ஒளிப்பதிவாளருக்கும் , அழகாக எடிட் செய்த எடிட்டருக்கும் ஒரு பலத்த கைத்தட்டல்.

படத்தின் முடிவில் ஆழமான கருத்து முன் வைக்கப்படுகிறது. கல்வி ஒன்றே ஒருவனை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்பது வலி உருத்தப்படுகிறது. அதை கொண்டு வாழ்வில் மேன்மை அடைவது மட்டும் இல்லை முன்னேறுவது என்பது. அதையும் தாண்டி, அந்த உயர் நிலையை அடைந்த பின் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிறருக்கு செய்யாதிருத்தலே உண்மையான சமூக முன்னேற்றம் என்னும் கருத்தை இயக்குனர் முன் வைக்கிறார்.

சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி, உயர்ந்தமதிகல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்.” என்ற பாரதியின் வரிகளை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து வாழ்ந்தால் அழகான ஒரு சமுதாயமாக நம் சமுதாயம் மாறும். நம் வருங்கால சந்ததியர் நலமாக வளமாக வாழ வழி வகுக்கும்.



 ஊர் கூடி தேர் இழுந்தால் எப்படி இருக்கும் என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் அவரவர் பங்கை பாங்குடன் செய்து இருக்கிறார்கள். நவராத்திரியில் வந்திருக்கும் அசுரன் ஒவ்வொரு மனிதனுள்ளும் மறைந்திருக்கும் அசுரனை வெளிக்கொணர்வதோடு மட்டும் அல்லாது அந்த அசுரனை வதம் செய்யவும் தூண்டுகிறது. நமக்குள் இருக்கும் அசுரனை கொல்வதற்கு ஒரு மகிஷாஷ மர்த்தினி தேவை இல்லை நாம் மனது வைத்தால் நாமே “மனிதனும் தெய்வமாகலாம்” என்பது போல் கூட வேண்டாம் , மனிதன் மனிதனாகவே வாழலாம். நீ வாழ்ந்து பிறரையும் வாழவிடு என்பதை மந்திரமாக கொண்டு வாழ்ந்தாலே போதும். மனிதம் தழைக்கும் மகிழ்ச்சி பெருகும்!!!

"அசுரன்" கட்டாயம் பார்க்க வேண்டிய நல்ல படம் !!!