சமீபத்தில் டிவி செய்தியில் ஒரு பெண்மணியிடம் கேள்வி கேட்டார்கள். அவரின் பெயர் “போதும் பொண்ணு”. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது என்னடா இப்படி ஒரு பெயர் என்று! அந்த அளவிற்கு பெண் பிள்ளை போதும் போதும் என்று அவர்கள் பெற்றோர் பெற்று தள்ளி விட்டார்களா என்ன என்று எனக்குள் கேள்வி எழுந்தது. ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்று சொல்லக்கேட்டு இருக்கிறேன். ஆனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை. என்னைப் பொறுத்தவரை எத்துனை பெண் பிள்ளைகளைப் பெறுகிறார்களோ அவர்கள் அத்துனை பாக்கியம் செய்தவர்கள் .ஆறாவதாக பிறந்த மகளுக்கு அழகாக அங்கையர்கன்னி என்று பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோரும் இருக்கிறார்கள்.
போதும் பொன்னு எனும் பெயர் ஒரு புறம் இருக்க வேறொரு நிகழ்ச்சியில் ஒரு சிறு பெண்பிள்ளைக்கு பெயர் “வரப்பிரசாதம்” என்று பெற்றோர் கூறினர். அந்த பெயரை கூறும் பொழுதே அந்த தாயின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு. எவ்வளவு தவம் இருந்து அக்குழந்தையை அவர் பெற்று இப்படி பெயர் வைத்து இருப்பார் என்று தோன்றியது. எப்படி இந்த பெயரை சுருக்கி அழைப்பார்கள் என்று எனக்கு சந்தேகம் வேறு!
எனக்கு ஏன் கீதா என்று பெயர் வைத்தீர்கள் என்று பல முறை என் தாயிடம் நான் கோவித்துக் கொண்டது உண்டு. ஏனென்றால் , நான் சிறுமியாக இருந்த பொழுது மூலைக்கு ஒரு கீதா கஃபே, கீதா ஹோட்டல், கீதா டிராவல்ஸ், கீதா காப்பி கடை என்று கீதா என்ற பெயர் சிரிப்பாய் சிரிக்கும். ஒரு வகுப்பில் எப்படியும் ஒரு மூன்று கீதா என்ற பெயர் கொண்டவர்களாவது இருப்பார்கள். அவ்வளவு பிரசித்தி பெற்றப் பெயர் . இதில் எனக்கு இனிஷியல் ”த”(ஆங்கிலத்தில் D) வேறு. கூப்பிடும் பொதே ”டீ கீதா “ என்பார்கள். மரியாதை கொடிகட்டி பறக்கும். என் தாய் வழி தாத்தா தான் எனக்கு ஆசையாக பெயர் சூட்டினாராம். கீதா உபதேசத்தை மனதில் வைத்துக் கொண்டு எனக்கு கீதா என்று பெயர் சூட்டினாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு நானே “கீதாஞ்சலி “ என்று சில காலம் கூறிக்கொண்டு அலைந்தேன். சப்பானி கதையாக யாரும் என்னை அப்பெயர் கொண்டு அழைக்கவில்லை. எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். ஆங்கிலத்தில் அழைக்கும் போதாவது கீத்தா என்பார்கள். தமிழில் கீதா என்றால் எனக்கு அவ்வளவு கோபம் வரும். ”கீ” க்கு அழுத்தம் கொடுத்து” தா” வை அழுத்தம் இல்லாமல் கூறுவார்கள். “கீ”(சாவி) ”தா” என்று சிலர் பரிகசித்ததும் உண்டு. எப்படியோ சாகும் வரை கீதா தான் என் பெயர் என்று ஆகிவிட்டது.
சமீபத்தில் ஒரு தோழி அவரது வீட்டில் நடந்த நவராத்திரி பூஜைக்கு என்னை அழைத்திருந்தார். அவரின் பெயர் “அழகு நிலா”. பெயருக்கு ஏற்றவாறு பளீர் என்ற சிரிப்புடன் அழகாக இருப்பார். நிலாவே அழகு தான் அதற்கும் மேலே அவரின் பெற்றோர் அவருக்கு அழகு நிலா என்று பெயர் சூட்டி இருந்தார்கள். எப்படியெல்லாம் பெண் பிள்ளை பிறந்ததை கொண்டாடி இருந்தால் இப்படி ஒரு அழகான பெயரை சூட்டி இருப்பார்கள். எப்பொழுதும் தங்களின் மகள் பெளர்ணமி நிலவாய் ஜொலிக்க வேண்டும் என்று இப்படி பெயர் வைத்து இருப்பார்கள் போல.
அவர்கள் வீட்டிற்கு இன்னும் பல பேர் அன்று பூஜைக்காக வந்திருந்தார்கள். பூஜை முடிந்து போகும் போது ஒரு பெண்மணி அவரின் மகளை,”மஹாலக்ஷ்மி வா வீட்டுக்கு போலாம்” என்று அழைத்தார்கள். அக்குழந்தைக்கு ஒரு ஆறு அல்லது ஏழு வயது இருக்கும். பட்டு பாவாடை உடுத்தி, அழகாக இரு பின்னல்கள் போட்டுக்கொண்டு அதில் மல்லிகை பூ வைத்துகொண்டு , கை நிறைய வளையல் அணிந்து கொண்டு, காலில் கொலுசு போட்டுக்கொண்டு ஒரு குட்டி மஹாலக்ஷ்மியாகவே இருந்தாள். . தாய் அழைத்ததை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் ஒரு ஐந்து முறையாவது அப்பெண்மணி அக்குழந்தையை,”மஹாலக்ஷ்மி, மஹாலக்ஷ்மி,” என்று அழைத்தார்கள். நான் உடனே அவரிடம்,”ஏங்க உங்க பொண்ண நீங்க மஹாலக்ஷ்மினு தான் கூப்பிடுவீங்களா? மஹா இல்லை லக்ஷ்மினு கூப்பிட மாட்டீங்களா,?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள்,”இல்லைங்க ஆசையா சாமி பேர வச்சோம் அதனால எப்ப கூப்பிட்டாலும் மஹாலக்ஷ்மினு தான் கூப்பிடுவோம்,”என்றார். கேட்கவே ஆசையாக இருந்தது. நம்மில் எத்துனை பேர் ஆசையாக வைத்த பெயரை முழுவதுமாக் சொல்லி அழைக்கின்றோம்? பாப்பா, புஜ்ஜி, பாப்பு, அம்மு, கன்னு, தங்கம்... இப்படி பல செல்லப் பெயர்கள் கூறியே அழைக்கின்றோம். எங்கள் அத்தைகள் இருவரையும் இன்று வரை என் தந்தை, பெரிய பாப்பா, சின்ன பாப்பா என்றே அழைப்பார்கள். மலர்கொடி, விஜயா என்ற அழகான பெயர்கள் அவர்களுக்கு உண்டு . ஆனால் கூப்பிடுவது எல்லாம் பெரிய பாப்பா ,சின்ன பாப்பா என்று தான். ஆண் பிள்ளை என்றால் தம்பி என்று கூப்பிடும் பழக்கமும் நம்மில் பலருக்கு உண்டு. தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை பெயர் சொல்லி கூப்பிடுவது இல்லை. தம்பி என்றே அழைப்பார்கள்.
இப்பொழுது இன்னொரு பழக்கம் நடைமுறையில் உள்ளது. கீதா என்றால் கீத்ஸ், ராம் என்றால் ராம்ஸ், இப்படி ஒரு ”ஸ்” போட்டு அழைப்பது. அது உரிமையோடு , செல்லமாக அழைப்பது என்பதே பொருள் . நண்பர்கள் இடையே நம் இயர் பெயர் சில சமயங்களில் மறைந்தே போகிறது. என் தோழி கூறுவாள், “ என் முழு பெயரைக் கூறி என் கணவர் என்னை அழைத்தால் அவர் மிகவும் கோபமாக இருக்கிறார் என்று அர்த்தம்,” பல வீடுகளில் இதை நாம் கேட்க முடியும். முழு பெயர் கூறி அழைக்கப்பட்டால் ஏதோ எங்கோ தப்பு நடந்து இருக்கிறது. மாட்டிக்கொண்டோம் என்றே அடித்து பிடித்து ஓடி வருவார்கள். ”ரிஷி கணேஷ்” என்று என் மகனை நான் கூப்பிட்டால், ”என்ன அம்மா?” என்று கேட்க மாட்டான்,”What did I do wrong?" என்றே பதறி அடித்துக் கொண்டு ஓடி வருவான். வெறும் ரிஷி ரிஷி என்று பத்து முறை கூவினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குமாதிரி தான்.
ஒரு குழந்தையை பெற்று அதற்கு ஆசை ஆசையாக சொந்த பந்தங்களைக்கூட்டி பெயர் சூட்டி மகிழ்ந்து பின்னர் அப்பெயரை கொண்டு அழைக்காமல் ,ஒன்று அப்பெயரை சுருக்கியோ அல்லது செல்லமாக கூப்பிடுகிறேன் என்று வேறு பெயரைக் கொண்டு அழைப்பதும் எவ்வளவு சரியான செயல் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை. ”மஹாலக்ஷ்மி “ என்று வாய் நிறைய சலிப்பு இல்லாமல் இன்புற்று அழைத்த அந்த தாயை நான் வணங்குகின்றேன். எதிர்காலத்தில் என் பேரன் பேத்திகளை முழு பெயர் சொல்லியே அழைக்க வேண்டும் என்று முடிவிற்கு வந்துவிட்டேன்.