Monday, October 8, 2018
பவளமல்லி
பவளமல்லி பல அழகிய நினைவுகளைத் தட்டி எழுப்புகிறது. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் சுற்றுச்சுவர் பக்கத்தில் வீட்டுக்கு முன் புறம் அழகிய பவளமல்லி மரம் ஒன்று இருந்தது. அதற்கு என்னை விட கனமான , தூக்க முடியாமல் ஒரு இரும்பு வாளியில் தண்ணீர் தூக்கி ஊற்றுவேன். நெடிய மரம். என்னை விட எது உயரம் என்றாலும் அது எனக்கு நெடியதாகவே தோன்றும். விடியற்காலை பார்த்தால் பூத்துக்குலுங்கும் பவளமல்லி பூக்களை பார்க்கலாம். இதழ்களுக்கு நடுவேயும் அதன் காம்பும் பவள நிறத்தில் இருப்பதால் அதற்கு பவளமல்லி என்று பெயராம். தமிழ்க் கடவுள் முருகனுக்கும் பவளநிறத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக அம்மா கூறி கேட்டு இருக்கிறேன். முருகன் பவள நிறம் கொண்டவனாம்.
வெயில் வர வர பூக்கள் எல்லாம் உதிர்ந்து மரத்தடியில் வெள்லை விரிப்பில் செந்நிற பூ தையற் வேலைப்பாடு செய்தது போல் ஒரே அளவில் அழக்காக படர்ந்திருக்கும். பவளமல்லி மரம் இல்லா கோவில் நந்தவனவே இருக்காது. ரம்மியமான அதன் வாசத்திற்கு பாம்பு வரும் என்று சொல்லி அம்மா சாயங்கால வேளைகளில் அந்த மரம் இருக்கும் இடத்திற்கு போக விட மாட்டாள். பூக்களை பறிக்க எட்டவில்லை என்றால் கீழே உதிர்ந்து கிடக்கும் பூக்களை எடுத்து தண்ணீரில் அலசி நூலில் கோர்த்து மாலையாக்கி சாமிக்கு போடுவோம். மரத்தை குலுக்கி பூமழை பெய்யச்செய்ததும் உண்டு. என் தோழி ஒருத்தி மரத்தை குலுக்கி நூறு பூக்களை பொறுக்கி மாலையாக கட்டி சாமிக்கு போடுவாளாம்.அவள் கணக்கில் நூறு மதிப்பெண் பெற்ற ரகசியத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். காலம் கடந்து நானும் யோசித்ததுண்டு,”ஆஹா நாமும் மரத்தை குலுக்கி இருக்கலாமே என்று!”
பவளமல்லியின் விதையை எடுத்து பொட்டாக வைத்துக்கொண்ட தோழியரும் உண்டு. நம்மை சுற்று இருந்த இயற்கையே அப்பொழுதெல்லாம் விளையாட்டுப் பொருட்கள். சில சமயங்களில் கோவிலுக்கு போகும் பொழுது அர்ச்சனைக்கூடையில் உதிரி பூக்களை அப்படியே எடுத்துப் போவதும் உண்டு. கூடையில் இருக்கும் பவளமல்லி நம்மை பார்த்து செவ்விதழ் விரித்து சிரிப்பது போன்றே தோன்றும். அதற்கு அவ்வளவு மகிழ்ச்சி , தான் அந்த இறைவனை அலங்கரிக்கப்போகிறோம் என்று. கொஞ்சம் கர்வத்துடனும் நம்மை பார்ப்பது போல் இருக்கும். அர்ச்சனைக்கூடையில், தேங்காய் , பழம், ஊதுபத்தி, சூடம், வெற்றிலை பாக்கு இவற்றிற்கு இடையில் பவளமல்லி அழகாய் புன் சிரிப்பு பூத்தப்படி மலர்ந்திருக்கும். இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் கூட மனதிற்குள் சொல்ல முடியாத ஒருவித பூரிப்பு.
மார்கழி மாத மூடு பனி! காலை வேளையில் கோலம் போட எழுந்திருக்கும் போது இரவு முழுதும் தூங்க அந்த நட்சத்திரங்கள் மரம் முழுதும் வந்து இறங்கியது போல பவளமல்லி மரம் காட்சி அளிக்கும். அந்த மூடு மனியும், எங்கயோ தூரத்தில் கேட்கும் ஐயப்பன் பாடலும், அந்த குளிர் காற்றும், பூத்துக்குலுங்கும் பவளமல்லி மரமும் , பூவாசமும், வாசல் நிறைய அழகிய வண்ணக் கோலம் போடும் பெண்களும், நேரம் ஆக ஆக பவளமல்லி மரத்தின் இலைகளின் ஊடே ஊடுறுவும் காலை கன்னி வெய்யிலின் ஒளிக்கீற்றும்....... ஆஹா என்ன ஒரு ரம்மியம் மனதிற்குள்ளே!! மூக்கு நுனியில் அதன் வாசம் உரசிவிட்டு கடந்து செல்கிறது........
Subscribe to:
Posts (Atom)