Sunday, April 29, 2018

சித்ரா பெளர்ணமி!

Image result for picture of a full moon


சித்திரை மாதம் பிறந்ததிலிருந்தே சித்ரா பெளர்ணமிக்காக  காத்து இருந்தேன். சித்திரை என்றாலே அழகரும், வைகையும், மீனாட்சி -சுந்தரேசுவரரும் , திருவிழாக்களும் , பள்ளி விடுமுறையும், உறவினர் வருகையும், சுற்றுலாவும் ஞாபகத்திற்கு வராமல் இருப்பதில்லை. அழகர் வைகையாற்றில் இறங்குவதை நேரில் பார்த்தது இல்லைதான். ஆனாலும் அது நடக்கும் சித்திரை மாதத்தில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. வைகை வேண்டுமானால் வற்றிப்போய் இருக்கலாம் ,ஆனால் நினைவுகள் இன்று வரை வற்றிப்போகவில்லை.

சித்திரை மாதத்தில் ஊரெங்கும் திருவிழா எடுப்பதும், நாடகங்கள் போடுவதும், குல தெய்வங்களுக்கு பொங்கல் வைப்பதும் என்று கலை கட்டிவிடும். இப்பொழுது எல்லாம் இவை நடக்கின்றனவா என்று தெரியவில்லை. ஊரைவிட்டு வந்து வருடங்கள் பல ஆகிவிட்டதால் அதிகம் இவைப்பற்றிய செய்திகள் காதில் விழுவதில்லை. சித்திரை மாத பாதியில் பள்ளிகள் விடுமுறை விட்டுவிடுவார்கள்.  சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது ஒரு பெரிய திட்டமாகவே தீட்டப்படும். சுட்டெரிக்கும் வெயில் என்று கூட பார்க்காமல் வெட்ட வெளியில் விளையாடிய காலம் உண்டு. என் அம்மா,”ஊரு வெயில் எல்லாம் உன் தலையில தான் கொளுத்துது. அடிக்கற வெயில் வீணாக கூடாதுன்னா இப்படி ஆட்டம் போடுற,”என்று சத்தம் போடுவதும் உண்டு. அதற்காக எந்த விதத்திலும் ஆட்டப்பாட்டத்தை குறைத்துக்கொண்டது கிடையாது. பத்து தெரு தள்ளி விளையாடினாலும் மகள் பத்திரமாக வீடு திரும்பி விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தது பெற்றோருக்கு. அப்பொழுதெல்லாம் இப்படிப்பட்ட குழந்தைகளை குறிவைக்கும் ராட்சச கூட்டம் இருக்கவில்லை. 

இந்நாட்களில் விடுமுறை என்றாலே சொந்தபந்தங்கள் ஒன்று கூடுவது குறைந்து ஏதாவது holiday destinationனுக்கு போகலாம் என்று கிளம்பிவிடுகிறோம். யாருக்கும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் யாரும் நம்மை அப்படி வேண்டி விரும்பி அழைப்பதும் இல்லை . இதில் குழந்தைகளுக்கு peer pressure வேறு. ”விடுமுறைக்கு எந்த ஊருக்கு சென்றாய்?” என்பது போக இப்பொழுதெல்லாம் ”எந்த நாட்டிற்கு சென்றாய் ?”என்பதாகிவிட்டதாம். இதனால் கடன் வாங்கியாவது சுற்றுலா செல்லவேண்டிய கட்டாயத்திற்கு சில பெற்றோர்கள் தள்ளப்படுகிறார்கள்.

சித்ரா பெளர்ணமியை பற்றி பேச வந்துவிட்டு மாட்டை எங்கெங்கோ ஓட்டிச் சென்று கொண்டிருக்கிறேன். கொஞ்சம் பொருங்கள் மாட்டை கொண்டுவந்து கட்டிவிடுகிறேன். சித்ரா பெளர்ணமி என்றாலே எனக்கு சில விஷயங்கள் டக்கென்று ஞாயபகத்திற்கு வரும். ஒன்று கட்டுச்சோறு , இரண்டாவது  கோவலன், மாதவி  . இந்த நாளில் தான் இந்திர விழா கொண்டாடப்பட்டதாம்.   இதை தவிர வேரெதுவும் எனக்கு தெரியாது. பொதுவாகவே பெளர்ணமி நிலவு என்றாலே எனக்கு அலாதி பிரியம் உண்டு. சரி இந்த நாளுக்கு அப்படி என்ன விஷேசம் என்று தெரிந்து கொள்ளலாமே என்று என் தோழிகளிடம் கேட்டேன். இந்த நாளில் என்ன செய்ய வேண்டும், எப்படி பூஜை செய்ய வேண்டும்?  எந்த மாதிரி உணவு செய்து உண்ண வேண்டும்? என்றெல்லாம் கேட்டேன். இதில் இருந்தே தெரியவில்லையா வயதாகி கொண்டு போகிறதென்று!

ஒரு தோழி ,” அன்று எங்கள் வீட்டில் சங்கர நாராயணா பூஜை செய்வோம் ,” என்று கூறினாள். “அப்பூஜை எப்படி செய்வது ,”என்று கேட்டேன். அதற்கு அவள்,” நான் செய்வது கிடையாது. என் அம்மா செய்வார்கள். எனக்கு நேரம் இருப்பது இல்லை அதனால் சாதாரணமாக பூஜை செய்வதோடு சரி,”என்று கூறினாள். ஆமாம் , அவள் ஒரு மருத்துவர். அவளுக்கு நேரம் இருக்க வாய்ப்பே இல்லை. எனக்கு நேரம் இருந்தும் விளாவாரியான பூஜை செய்யும் அளவிற்கு எனக்கு பொறுமையும் இல்லை, அப்படியே செய்தாலும் என் மூளைக்குள் இருக்கும் ஆயிரம் சிந்தனைகளை என்னால் மூட்டை கட்டி அவ்வளவு எளிதில் ஓரமாக வைத்து விட முடியாது. மனமும், நினைவும் குரங்காம்சம் எனக்கு. 

நமக்கு ஏற்றமாதிரி  இராமயணம் மாதிரி நீண்டதாக இல்லாமல், திருக்குறள் மாதிரி சிக்கென்று சீக்கிரமாக சுருக்கமாக ஆனால் அதே பயன் தரக்கூடிய பூஜை ஏதாவது இருக்கா என்று கேட்டேன். அதற்கு என் மற்றொரு தோழி, “ சித்ரா பெளர்ணமி அன்று தான் சித்திர குப்தர் பிறந்தார். அன்று சக்கரைப் பொங்கலும், தயிர் சாதமும் செய்து வைத்து, புது நோட்டு புது பேனா வைத்து சாமி கும்பிட வேண்டும்.  அப்பொழுது, “மலையதன்னை பாவத்தை கடுதனையாக எழுதி எனக்கு அருள் புரி,” என்று சித்ரகுப்தரை வேண்ட வேண்டும் என்று கூறினாள். ”முன்பெல்லாம் கொத்தோடு மாங்காயும், குலையோடு தேங்காயும் வைத்து பூஜை செய்வோம். இப்பொழுதெல்லாம் அதற்கு எங்கே போவது. இப்படி செய்தால் போதும் ,”என்றும் கூறினாள். இது எனக்கு மிக எளிதான ஒன்றாக தோன்றியது. ஒரே ஒரு சந்தேகம் மட்டும் தோன்றியது. நோட்டு வைப்பது நம்முடைய பாவ புண்ணிய கணக்கை புது கணக்காக எழுதுவதற்கு. அப்போ வீட்டுக்கு ஒரு நோட்டா, இல்லை ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு நோட்டா ?? பரவாயில்லை ஒரு நோட்டை குடுப்ப பாவ புண்ணிய வரவு செலவு நோட்டாக அவர் வைத்துக் கொள்ளட்டும் இல்லையென்றால்  சித்ர குப்தரே ரொம்ப குழம்பி விடுவார் என்று முடிவு செய்தேன். 

இங்கு தான் பிரச்சனை ஆரம்பமானது. இன்றோ ஞாயிற்றுக்கிழமை. காமாட்சி, மீனாட்சி இல்லாமல் சாப்பாடு வீட்டில் இருப்பவர்களுக்கு இறங்காது. இப்பொழுது நான் எப்படி இவர்களை சக்கரைப் பொங்கலுக்கும், தயிர் சாதத்திற்கும் சம்மதிக்க வைப்பது? முதலில் சித்ரா பெளர்ணமியை பற்றி ஒரு க்ளாஸ் எடுத்தேன். சித்ர குப்தர் யார்,  அவர் தொழில் என்ன என்பதெல்லாம் போகிற போக்கில் எனக்கு தெரிந்த ஓரிரு விஷயங்களை சொன்னேன். அப்புறம் இன்று எப்படி சாமி கும்பிட வேண்டும், எதற்காக புது நோட்டும் பேனாவும் வைத்து வணங்க வேண்டும் என்று எல்லா கதையும் கூறி , இன்று சைவ உணவு தான் செய்யப்போகிறேன் என்ற குண்டை தூக்கி போட்டேன். கணவர் அவ்வளவாக அதிர்ச்சி அடையவில்லை. மகன் தான், you disappointed me amma,” என்று சற்றே சுனக்கமாக கூறினான். நானும் , தேங்காய் சாதம், சக்கரைப்பொங்கல், தயிர் சாதம், அவரைக்காய் பொரியல், தேங்காய் துவையல் என்று செய்தேன். இந்த மாதிரி சாப்பாடு செய்தால் சித்ர குப்தருக்கே போர் அடித்து புது நோட்டில் நம் பாவக்கணக்கில் ஏதாவது எழுதி விடுவாரே என்று நினைத்து கொஞ்சம் மசால் வடையும் செய்தேன். சாமியும் குளிரும், வீட்டில் உள்ள ஆசாமிகளும் குளிரும்!

செய்த உணவை சாமிக்கு வைத்து சூடம் காண்பித்து நெய்வேத்தியம் செய்வதற்குள் மகனின் கை மசால் வடையை நோக்கி சென்றது. “சிறிது நேரம் பொறுடா, சித்ர குப்தரே இன்னும் இதை பார்த்து இருக்க மாட்டார். அவர் பார்க்கட்டும் அப்புறம் நீ சாப்பிடலாம்,”என்று கூறி அடக்கி வைத்தேன். நெய்வேத்தியம் செய்தப் பின் எல்லோரும் அமர்ந்து மதிய உணவை உண்டோம். பெளர்ணமி நிலவொளியில் உண்ண வேண்டியதை உச்சி வெயிலில் வீட்டிற்குள் அமர்ந்து உண்டோம். வெயிலும் பளீரென்று தான் இருந்தது . என்ன நிலவொளி போல் குளுமையாக இல்லை அவ்வளவுதான். தென்னை கீற்றிடை வரும் நிலவொளியாக இல்லாமல் சன்னல் திரைச்சீலை வழி வந்த சூரிய வெளிச்சமா இருந்தது. சித்ரா பெளர்ணமி கொண்டாட்டம் இனிதே முடிந்தது! 

இம்மாதிரி பண்டிகைகளே நம்  வாழ்க்கையை ருசியாக்குகின்றன. இல்லை என்றால் வாழ்க்கை சுவாரசியமே இல்லாமல் ஒரே சீராக போவது போல் இருக்கும். கடிகாரம் மட்டும் இல்லை, நாமும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறோம் . ஆனாலும் இது போன்ற நம்முடைய பழக்க வழக்கங்களை ஓரளவாவது செய்வதால் நமக்கு வாழ்வின் மீது ஒரு பிடித்தம் ஏற்படும். ஒரு எதிர்பார்ப்பு உண்டாகும். நேரம் இல்லை என்ற காரணத்தினால் இப்படி பட்ட சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைப்பதால் நம்முடைய சந்ததியருக்கும் நம் பழக்க வழக்கங்கள் தெரியாமல்  போகும் . அது மட்டுமில்லாமல் நமக்கும் இவை ஒட்டிய அழகிய நினைவுகளும் மறைந்து போகும். முடிந்த வரை நம்மால் முடிந்தவரை இவற்றை பின்பற்றுவதால் நம்முடைய கலாச்சாரம் மட்டுமல்ல, நம்முடைய சந்தோஷங்களும் காக்கப்படும்.

சாயங்காலம் உலா வரப்போகும் பெளர்ணமி நிலாவை பார்க்க காத்துக்கிடக்கிறேன் , அழகிய நினைவுகளோடு!!!!