தாய்நாடாம் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இப்பொழுது வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தாய் எழுதி கொள்வது. தமிழ் நாட்டின் தற்போதைய நிலவரம் என் மனதிற்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்பதே எனக்கு தெரியவில்லை. டிவி,செய்தித்தாள், சமூக ஊடகங்கள், தொலைபேசி உரையாடல்கள் எல்லாமே சுற்றிச் சுற்றி என் தமிழ்நாடு எப்படி அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது. இது மனதிற்கு மிகுந்த கவலையயும், மன உளச்சலையுமே தருகிறது. என்ன இல்லை என் திருநாட்டில்? அறிவாளிகளுக்கு பஞ்சமா, விளைநிலங்களுக்கு பஞ்சமா, இயற்கை வளத்திற்கு பஞ்சமா? எல்லாம் இருந்தும் ஏன் இந்த அவல நிலை? ஒரு குடும்பத்தில் தந்தை சரி இல்லை என்றால் அந்த குடும்பமே சிதைந்து போய்விடும். ஒரு நாட்டின் ஆட்சியாளர்கள் சரியில்லை எனில் அந்த நாடே சின்னாபின்னமாகி விடும் என்பதற்கு இப்பொழுது நாம் எடுத்துக்காட்டாய் போய்விட்டோம். பக்கத்து மாநிலங்கள் எல்லாம் செழித்து சீர்பெற்று வளர்கையில் நாம் ஏன் அழிவை நோக்கி ஒவ்வொரு நாளும் அடி எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறோம்?
நினைத்து பாருங்கள்! யார் ஆட்சியை பிடிப்பது என்பதையே மாதக்கணக்கில் சரி செய்ய இயலாமல் தவிக்கிறீர்கள். உங்களுக்கு எங்கே மக்களின் ஆதங்கமும், தேவையும் தெரியப்போகிறது. எங்கும், எதற்கும், எப்பொழுதும் போராட்டமே இன்றைய சூழ்நிலை. சரி போராட்டம் தான் செய்கிறார்களே ஏதேனும் நல்ல தீர்வு கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை. போராடுகிறவன் போக்கத்தவன் போல் போராடிக்கொண்டே இருக்கிறான்! நீங்களோ உங்களின் நாற்காலி சண்டையிலேயே மூழ்கி கிடக்கிறீர்கள். தண்ணீர் பிரட்ச்சனை இப்படி பட்டி தொட்டி எங்கும் தலை விரித்து ஆடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கூட எந்த ஆறோ குளமோ , ஏரியோ தூர் வாரப்பட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இலவசம் கொடுப்பதிலும், நலத்திட்டங்கள் வாய் அளவில் கொடுப்பதிலுமே காலம் விரையமாகிறது.
நினைத்துப்பாருங்கள்! இன்றளவும் சோழனும், பாண்டியனும், சேரனும் நம் மனதில் நிற்கிறார்கள் என்றால் அவர்களின் நல்லாட்சியினால் தான். அவர்கள் மக்களுக்கு ஆற்றிய தொண்டினால் தான். ஆறு, குளம் குட்டையை தூர் வாரிய அரசர்களும், அணை கட்டியவர்களும், நீர் நிலைகளை காப்பாற்றியவர்களுமே காலம் காலமாய் போற்றப்படுகிறார்கள். இது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேன் என்கிறது? உங்கள் குடும்பத்தினருக்கும் தண்ணீர் தேவை தானே? மக்களுக்கு வேண்டியது எல்லாம், சுத்தமான சுகாதாரமான வாழ்வதற்கான சூழ்நிலை, நல்ல மருத்துவ வசதி, நல்ல குடிநீர், சீரான சாலை வசதிகள், தரமான பள்ளி கல்லூரிகள்,பாதுகாப்பான வாழ்வு ! இவை யாவும் அடிப்படை உரிமைகள். இதனையே நீங்கள் செய்து தர மறுத்தால் என்ன செய்வது? உங்களின் சொத்தை விற்றா இந்த வசதிகளை செய்யச் சொல்கிறார்கள்?
நினைத்துப்பாருங்கள்! நீங்கள் மட்டும் இப்படி சுரண்டுவதில் கவனம் செலுத்தாமல் மக்களுக்கு நல்லது செய்வதில் கவனத்தை திசை திருப்பினால் உங்கள் காலத்திற்கு பிறகும் போற்றப்படுவீர்கள். மக்களின் வெறுப்பை சம்பாதித்து என்ன பயன்? உங்கள் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்தால் பரவாயில்லை. இல்லை ஒரு படி மேலே சென்று உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு சேர்க்கலாம் . ஆனால் நீங்கள் எல்லோரும் உங்களின் பேரப்பிள்ளைகளின் பேரப்பிள்ளைகளுக்கும், நீங்கள் பார்க்கவே முடியாத உங்களுக்கு பின் வரப்போகும் , இல்லை வராமலே போகக்கூடிய சந்ததியருக்கு அல்லவா சொத்து சேர்க்கிறீர்கள். இப்பொழுது உங்களுடன் வாழும் சக மனிதனின் நன்மைக்கு நீங்கள் உழையுங்கள். அந்த புண்ணியமே உங்களின் பல சந்ததியரை வாழ வைக்கும். பாவ மூட்டையை சேர்க்காதீர்கள்!பாவ மூட்டைகளை சேர்த்தவர்களின் நிலை நீங்கள் அறிவீர்கள்.
நினைத்துப்பாருங்கள்! என் தமிழ்நாட்டின் நிலை எதிர் காலத்தில் என்ன ஆகுமோ என்ற கவலை என்னைப்போன்ற பலரை வாட்டி வதைக்கிறது. . என் சொந்தங்களும், பந்தங்களும் எப்படி எல்லாம் துன்பப்படுகிறார்கள் அன்றாட வாழ்விற்கு என்று நினைக்கும் பொழுது மிகவும் வேதனையாக உள்ளது. என் கையாளாக தனத்தை எண்ணி வருந்துகிறேன். ஒரு வகையில் நானும் சுய நலமாக வாழ்கிறேனோ என்ற எண்ணம் தோன்றுகிறது.நீங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒரு நல்லாட்சியை வழங்கினால் அந்த நாளை எண்ணிப்பாருங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் என்று நீங்கள் செய்யும் பாவங்களின் பயனை உங்களின் சந்ததியரின் மேல் ஏற்றாதீர்கள்.
நினைத்துப்பாருங்கள்! நீங்கள் மக்களுக்காக உண்மையாக தொண்டாற்ற துவங்கினால் அதன் பின் வரும் காட்சிகளை கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுது உங்களை போற்றுவது உங்களை சுற்றி இருக்கும் ஓநாய் கூட்டமும், கழுகு கூட்டமுமே! நீங்கள் நம் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக பாடு பட துவங்கினால் நினைத்துப்பாருங்கள் நீங்கள் எவ்வாறு மக்களால் போற்றப்படுவீர்கள் , கொண்டாடப்படுவீர்கள் என்று. உங்கள் குடும்பம் பெருமையாக நடமாடலாம். நீங்கள் தலை நிமிர்ந்து நடக்கலாம். சொத்து சேர்ப்பதில் போட்டி போடுவதை விட்டு விட்டு யார் தன் தொகுதிக்கு வேண்டிய நல்லதை செய்ய முடியும் என்று போட்டி போட்டு செய்யுங்கள். அதனால் வரும் சந்தோஷத்தை ஓர் முறையாவது உணர்ந்து பாருங்கள் . அப்படி உணர்ந்து விட்டீர்களானால் அந்த வழியில் உங்கள் மனம் உங்களை தானாகவே இழுத்துச் செல்லும்.
நினைத்துப்பாருங்கள்!இந்த வாழ்க்கை யாருக்கும் நிரந்தரம் அல்ல. வாழும் வரை நல்லதை செய்து விட்டு போகலாமே! அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே நஞ்சாகும் பொழுது நீங்கள் சேர்க்கும் இந்த சொத்தும் சுகமும் மட்டும் என்ன விதிவிலக்கா? விதியை யாராலும் வெல்ல முடியாது. பக்கத்து மாநிலங்களை பார்த்தாவது இனியாவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள். தமிழன் முதுகெலும்பு இல்லாதவன் ஆகிவிடுவான் என்ற பயம் வருகிறது. இப்படியே போனால் தமிழினம் அழிந்து விடும். அடுத்த சந்ததியர் யாரும் அங்கு வாழ நினைக்க மாட்டார்கள். உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டுமானால் என்னைபோன்ற பலருக்கு சில வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டிற்கு வந்து செட்டில் ஆகிவிடுவோம் என்ற எண்ணம் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் நடப்பவற்றை பார்த்தால் எங்கள் முடிவு சரியானதாக இருக்குமா என்ற சந்தேகமே எழுகிறது. செல்வச் செழிப்பு மிகுந்து இருந்த எம் தமிழ்நாட்டை பாலை வனமாக ஆக்கி பார்ப்பதில் உங்களுக்கு என்ன மகிழ்ச்சி?
நினைத்துப்பாருங்கள்!அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பது எல்லாம் பழைய மொழி. தெய்வமும், அரசனும் அன்றே கொன்று விடுகிறார்கள். கைமீறி போனால் மக்களே கொன்று விடும் நாள் தூரத்தில் இல்லை. போனது போகட்டும் இனியாவது பதவிக்கும், சொத்துக்கும், புகழுக்கும் போட்டி போடாமல் நம் தமிழ்நாட்டின் நலனுக்காக உண்மையாக உழையுங்கள்.
வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். நல்லதை விதையுங்கள் ,மக்கள் உங்களை வாழ்த்துவார்கள்.தலைமை ஒன்று இல்லை என்றாலும் எங்களால் நல்லாட்சியை கொடுக்க முடியும் என்று நிரூபியுங்கள். இன்னும் நான்கு வருடங்கள் என் மக்களின் தலை எழுத்தை எழுதப்போவது நீங்கள் என்றாகி விட்ட நிலையில் அது நல் எழுத்தாக இருக்கட்டும்.
தமிழனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கும் இன்றைய நிலையை நினைத்தால் மனம் கனமாக இருக்கிறது. ஒரு வித பய உணர்வு மனதை கவ்வுகிறது.. நமக்கு இருப்பது ஒரு ஜான் வயிறு தான் .அதன் கொள்ளளவு மீறி அதில் வைத்து எதையும் திணிக்க முடியாது. எவ்வளவு தான் ஸ்விஸ் வங்கியிலும் , பினாமி பேரிலும் சேர்த்து வைத்து இருந்தாலும் கடைசியில் மிஞ்சுவது ஒரு பிடி சாம்பலே பிற்கால சந்ததியருக்கு !இவ்வளவு சொத்து சேர்த்து வைக்கும் உங்களின் சாம்பலை எத்துனை தலைமுறை சொத்தாக வைத்துக்கொள்ளும் என்று நினைக்கிறீர்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய அதை தண்ணீரில் கரைத்து விட்டு தான் அமைதி ஆவார்கள். இல்லையேல் உங்கள் ஆவி அவர்களை சுற்றும் என்ற பயம் ! எனவே எடுத்துக்காட்டாய் வாழுங்கள் எட்டிக்காயாய் கசக்காதீர்கள்