வினாயகர் சதுர்த்தி இதோ வந்து விட்டது. விழா காலம் தொடங்கி விட்டது. வானம் பொய்த்தாலும் விழாக்கள் பொய்க்காது நம் நாட்டில். டீசல் விலை ஏறினால் என்ன , மின்சாரம் இல்லாவிட்டால் என்ன, இது போன்ற விழாக்கள் தான் நமக்கு வாழ்க்கையின் மேல் ஒரு பற்று வர காரணமாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட பிரச்சினைகளை தூர வீசிவிட்டு அவரவர் வசதிக்கேற்ப எப்படியோ பண்டிகைகளை கொண்டாடி விடுகிறோம்.கடவுள்களை எப்படியாவது மகிழ்வித்து, குளிர்வித்து நமக்கு சாதமாக நடக்க வைக்க ஒரு முயற்சி. எது எப்படியோ விழாக்கள் என்றால், கூட சாப்பாடும் பெரும் அங்கமாகி விடும்பொழுது கொண்டாட நமக்கு என்ன கஷ்டம் இருக்கப்போகிறது. கரும்பு தின்ன கூலியா?? அதுவும் வினாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டை கிடைக்கும். அப்புறம் என்ன திருவிழாதான். தொந்தி வயிற்றனே என்று தொழுதுவிட்டு நம் தொந்தியை நிரப்ப வேண்டியது தானே?? சரி நான் என்னவோ கொளுக்கட்டைக்கு செய்முறை விளக்கம் கொடுக்கப் போகிறேன் என்று எண்ண வேண்டாம். கொழுக்கட்டை விஷயத்தில் நானும் ஒரு கத்துக்குட்டி தான். பிடிச்சா கொழுக்கட்டை கும்பிட்டா பிள்ளையார் எப்படி என் லாஜிக்?
விநாயகர் தான் என் இஷ்ட கடவுள். என்னை மாதிரியே??? ஒரு சாந்தமான கடவுள் என்பதால் எனக்கு அவரை ரொம்பவே பிடிக்கும். போன வருடம் இதே நாளில் தான் நாங்கள் இந்த வீட்டிற்கு குடிவந்தோம். ஒரு வருடம் போனதே தெரியவில்லை. புது வீட்டிற்கு வந்ததால் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. போன வருடம் எங்கள் வீட்டு விநாயகர் பாயசம் மட்டுமே சாப்பிட்டார். இந்த வருடம் விநாயகர் சிலை வாங்கி , கொழுக்கட்டை செய்து, சுண்டல் செய்து சாமி கும்பிட முடிவு செய்து இருக்கிறேன். ஒரு வாரமாகவே தெருக்கள் தோறும் வினாயகர் சிலைகள் விற்கப்படுகின்றன. வித விதமான விநாயகர் பொம்மைகள். பெயிண்ட் அடித்தது, பெயிண்ட் அடிக்காதது , களி மண்ணில் செய்தது, ப்ளாஸ்டராப் பாரிஸில் செய்தது , செம்மண்ணில் செய்தது என்று பல வகைகள். அதிலும் ஆர்கானிக் பெயிண்ட் அடிக்கப்பட்டவை, சாதாரண ரசாயண வண்ணம் பூசப்பட்டவை என்று வேறு தினுசுகள். பல வர்ணங்கள், பல சைசுகள், பல அவதாரங்கள் என்று கொட்டி குவித்து இருக்கிறார்கள். பார்க்கையில் இவை அத்துனையும் விலை போகுமா என்று எண்ணத் தோன்றுகிறது. கண் கூசும் அளவிற்கு வர்ணம் பூசப்பட்டிருக்கிறது. சாலை ஓரத்து நடைபாதை கடைகள் காளான் போல முளைத்து விட்டன. இந்த ஒரு வாரத்தில், காற்று உள்ள போதே தூற்றிக்கொள் என்று அவர்கள் நினைத்த விலையை வைத்து விற்கிறார்கள். மக்களும் வேறு வழியின்றி வாங்கி செல்கிறார்கள். வினாயகர் இத்துனை அவதாரங்களில் தோன்றி இருக்கிறார் என்பதே இந்த ஒரு வாரத்தில் நான் பார்த்த சிலைகள் மூலமாகத் தான் அறிந்து கொண்டேன்.
சிலைகள் மட்டுமா விற்கிறார்கள், அதனை அலங்கரிக்க தோரணங்கள், வாழைமரங்கள், எருக்கம் பூ மாலைகள்,கதம்ப மாலைகள், மல்லிகை, ரோசாப்பூ, சம்மங்கி என்று பல விதமான பூக்கள், ஆடை அணிகலன்கள், என்று பல வித பொருட்கள். விநாயகர் யானை முக கடவுள் இல்லையா அதனால் விற்கப்படும் பொருட்கள் யாவும் யானை விலை.விநாயகருக்கு வெயில் அடிக்காமல் இருக்க குடை வேறு அதில் அத்துனை வகைகள்.முன்பெல்லாம் வீட்டில் அரிசியை ஊரவைத்து, காயவைத்து, இடித்து மாவு செய்து கொளுக்கட்டை செய்வார்கள். இப்பொழுது இந்த அவசர உலகில் அதுவும் ரெடிமேடாக கிடைக்கிறது. கொளுக்கட்டையே ரெடிமேடாக கிடைக்கும் பொழுது மாவு கிடைக்காதா என்ன. A2B அதுதாங்க அடையார் ஆனந்த பவன் இருக்க பயமேன். எந்த விதமான கொளுக்கட்டை வேண்டுமானாலும் வாங்கி சென்று சாமிக்கு வைத்து நெய்வேத்தியம் செய்தால் வேலை சுலபமாக முடிந்து விடுகிறது.நோகாமல் நொங்கு எடுக்க சொல்லியா கொடுக்கவேண்டும். சாமி என்ன “இது ரெடிமேடா அல்லது வீட்டில் செய்ததா என்றா கேட்கப்போகிறார். சாமி பெயரை சொல்லி நம் வயிற்றில் தான் போகப்போகிறது.
நாம் வீட்டில் கஷ்டப்பட்டு கொளுக்கட்டை பிடித்து அது கடைசியில் பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாவதற்கு இதுவே மேல் இல்லையா? ஆனாலும், எனக்கு என் கைகளால் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கவே பிடிக்கும். குரங்கானாலும் நான் செய்த குரங்காக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல எண்ணம். எப்படியோ என் பெண் சாப்பிட போவது என்னவோ மேல் இருக்கும் அந்த வெள்ளை பகுதியை தான். என் பையனோ, “ அம்மா why dont you keep donuts for Ganesh and pray? என்று கேட்கும் ஜாதி. நம் பழக்க வழக்கங்களை , கலாசாரத்தை அவர்களுக்கு எப்படியாவது தினித்து விடவேண்டும் என்ற என் அடங்காத ஆசைதான் இப்படி எல்லா விழாக்களையும் நான் கொண்டாடுவதன் நோக்கம். பிற்காலத்தில் அவர்கள் செய்வார்களா இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி... தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பது என் நம்பிக்கை. ஆனால் அவர்கள் என்னமோ நான் வேலை வெட்டி இல்லாமல் இப்படி யெல்லாம் செய்கிறேன் என்றுதான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்பு அவரவர் வீடுகளில் வைத்து தான் சாமி கும்மிட்டார்கள் இப்பொழுது கோவிலும் இல்லாமல், வீடும் இல்லாமல் விமர்சையாக கொண்டாடுகிறோம் என்ற பெயரில் வீதிக்கே சாமியை கொண்டு வந்து விட்டார்கள். பணம் வசூல் செய்து, வெடி என்ன , வாண வேடிக்கை என்ன, ஆட்டம் என்ன, பாட்டம் என்ன என்று ஊரே அல்லோல படுகிறது. கணபதி ஒரு அமைதியான , பொறுமையான தெய்வம் அவருக்கு இந்த ஆரவாரம் தேவையா என்று தோன்றச் செய்கிறது. தெரு முனைகளில் மேடை அமைத்து பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து பூசைகள் செய்யப்படுகிறது. ரேடியோ செட் அமைத்து பாட்டுக்கள் தூள் பறக்கிறது. அடுத்தவருக்கு தொந்தரவாக இருக்குமே என்ற எண்ணம் சிறிது கூட கிடையாது. பாட்டுச் சத்தம் காதுககளை கிழிக்கும். தெருக்களில் போகும் வாகணங்கள், மனிதர்கள் என்று அனைவருக்கும் கஷ்டம். இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நம் தொந்தி தேவன் நடுநாயகமாக அமைதியாக வீற்றிருப்பார்--- யான் அறியேன் பராபரமே என்று ! அவர் என்ன செய்வார் --பாவம் ஒரு புறம் பழி ஒரு புறம் ....
சரி இப்படியெல்லாம் ஊரார் மெச்ச ஒரு வாரகாலம் கொண்டாடி முடித்துவிட்டு பின் அந்த சிலைகளை என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம். அம்மை அப்பனே உலகம் என்று நினைத்த கடவுளை வண்ண விளக்குகளால் அலங்காரிக்கப்பட்ட அலங்கார ஊர்திகளில், மேள தாளத்துடன் ஊரெங்கும் ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். அப்படி எடுத்து செல்லும் பொழுது அவர்களுக்குள்ளோ அல்லது வேற்று மதத்தினருடனோ சண்டை சச்சரவுகள் வராதிருக்க போலீஸ் பாதுகாப்பு வேறு. அப்படி எதாவது சண்டை வந்து கலேபரமாகி போனால் சாமி சிலைகளை அங்கேயே இருந்த இடத்தில் விட்டு விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுபவர்களும் உண்டு.இப்படி பட்ட சூழ்நிலைகள் மத கலவரத்திற்கு வித்து விளைவிக்கின்றன. சாமிக்கே போலீஸ் பாதுகாப்பு தேவை படுகிறது இந்த ஜனநாயக நாட்டில். என்ன கொடுமை சரவணனின் அண்ணா இது!!! இப்படியாக பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்படும் சிலைகள் அந்த அந்த ஊரில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பது நடைமுறை. கடல் இருக்கும் ஊர் என்றால் பிரச்சிணை ஒன்றும் இல்லை .எப்படி பட்ட சிலையையும் கரைத்துவிட்டு வந்து விடலாம். ஆனால் கடல் இல்லாத ஊர்களில் ஆற்றில், குளத்தில் என்று குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் இடங்களில் கரைக்கப்படுகிறது. களிமண் பிள்ளையார் என்றால் பரவாயில்லை ஆனால் ரசாயண சாயம் பூசப்பட்ட சிலைகளை , பிளாஸ்டராப் பாரிஸ் போன்றவற்றால் செய்த சிலைகளை இந்த இடங்களில் கரைப்பதன் மூலம் அந்த குடிநீரே மாசுபடுகிறது. மேலும் பூக்கள், தோரணங்கள் என்று அத்துணை பொருட்களும் அந்த நீர் நிலைகளிலேயே வீசப்படுகிறது. இவற்றில் மக்கும் பொருட்களும், மக்காத பிளாஸ்டிக், தெர்மா கோல் போன்றவையும் அடங்கும். நமக்கு வாழ்வாதாரமாக இருக்கும் நீர்நிலைகளை நாமே அழித்து பாழ்படுத்துவது பால் தரும் பசுவின் மடியை துண்டிப்பதை போன்றது.
இதை விட கொடுமை என்ன வென்றால், சில இடங்களில், எப்படியோ தண்ணீரில் சிலையை கரைக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் அது எந்த மாதிரி தண்ணீர் என்று கவணிக்காது கொண்டு போய் சிலைகளை போட்டு விட்டு வந்து விடுகிறார்கள். பல இடங்களில் கழிவுநீர் சென்று அடையும் நீர் நிலைகளில் கலந்து விடுகிறார்கள். ஒரு வாரமாக போற்றி கொண்டாடிவிட்டு கடைசியில் இப்படி செய்வது புண்ணியம் என்று எந்த சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.சாமியே ஆனாலும் விருந்தும் மருந்தும் நாலு நாள் தான் போலும் !! இப்படி அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை பார்க்கையில் எத்துனை பாரதி பிறந்தாலும் இவர்களை திறுத்த முடியாது என்று கோபம் வருகிறது. மதசார்பான விஷயங்களில் எவன் ஒருவன் மாற்றுக்கருத்து கூறுகிறானோ அவன் பயித்தியகாரனாகவே பார்க்கப்படுகிறான். சாமி சிலையில் ரத்தம் வடிகிறது, பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நம்புவதற்கு தான் இவர்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆனாலும் எனக்கு தோன்றிய ஒரு யோசனையை நான் இங்கே பகிர்ந்து கொள்ளவே ஆசை படுகிறேன். என்னை போன்று ஒரு பத்து பேர் மாறினாலும் அது நன்மைக்கே!!
இப்படி பார்க்கும் நீர் நிலைகளில் எல்லாம் சிலைகளை கரைப்பதற்கு பதில் இப்படி செய்தால் என்ன? எல்லாவற்றிலும் recycle, and reuse என்று சொல்லும் நாம் ஏன் இதிலும் அதனை பின்பற்றக்கூடாது?? வருடா வருடம் புதிதாக சிலை வாங்குவதற்கு பதில் ஒரு பிள்ளையார் சிலையையே வருடாவருடம் வைத்து ஏன் பூசை செய்யக்கூடாது. ஒரு சிலைக்கு திரும்ப திரும்ப பூசை செய்வதால் அதன் சக்தியும் பெருகும் அல்லவா?? நான் சிறுமியாக இருந்த பொழுது பச்சை களிமண்ணில் செய்த வர்ணம் பூசாத பிள்ளையார் சிலை வாங்கி வந்து அதற்கு குண்டுமணி விதைகளை கண்களாக வைத்து, எருக்கம் பூ மாலை அணிவித்து, வீட்டில் இருக்கும் ஒரு வெள்ளை துண்டினை கட்டி, மணிகள் அணிவித்து அலங்கரித்து வழிபடுவது வழக்கம். பின் மூன்றாம் நாள் அதனை ஆற்றில் கரைத்து விடுவோம். அப்பொழுது தண்ணீருக்கா பஞ்சம்!! ஓடும் தண்ணீரில் கரைத்துவிடுவதால் அது கரைந்து விடும். பாரதி சொன்ன “பார்க்கும் இடமெல்லாம் நந்தலாலா” என்பது போய் இப்பொழுதுதான் பார்க்கும் இடமெல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகளாக ஆகிவிட்டதே!! வீட்டிற்கு ஒரு பிள்ளையார் என்றால் கூட நினைத்து பாருங்கள் எத்துனை பிள்ளையார் சிலைகள். எங்கே இருக்கிறது தண்ணீர் இவற்றை கரைப்பதற்கு. இல்லை இல்லை நாங்கள் வருடாவருடம் பிள்ளையார் வாங்கி தான் கொண்டாடுவோம் என்று கூறுபவர்களுக்கு ஒரு மாற்று யோசனை... இப்படி பொது நீர்நிலைகளில் அது எப்படி பட்ட தண்ணீர் என்று கூட தெரியாமல் அதில் கரைப்பதற்கு பதில் வீட்டிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் கரைத்து அவரவரின் தொட்டதிலேயே அதனை கொட்டி விடலாம் இல்லையா??
பெங்களூரில் சிலைகளை கரைப்பதற்கென்றே பெரிய பெரிய தொட்டிகளை அரசாங்கம் குறிப்பிட்ட இடங்களில் வைத்துள்ளது. மாலைகள், தோரணங்கள் போன்றவற்றை போட தனியாக குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருகின்றன.நாளேடுகளில் இதற்கான அறிவிப்புகளும் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பொறுத்து இருந்து பார்க்க வேண்டும் இவையெல்லாம் ஒழுங்காக உபயோகப்படுத்தப்படுகிறதா அல்லது செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்குமா என்று இன்னும் சில தினங்களில் தெரிய வரும். இப்படி பட்ட சிறு சிறு விஷயங்களில் நாம் நம் பொறுப்புணர்ச்சியை காட்டி அரசாங்கத்துடன் ஒத்துழைத்தால் நன்மை அடையப்போகிறது நாம் தான். நான் முடிவு செய்து விட்டேன் இந்த வருடம் வாங்கும் பிள்ளையார் recycle and reuseதான். சரி சரி ஊருக்கு செய்த உபதேசம் போதும் என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது, நான் போய் கொழுக்கட்டைக்கு வேண்டியவற்றை தயார் செய்கிறேன். நீங்களும் போய் ஆக வேண்டிய வேலையை பாருங்கள்.... கணபதி பாபா மோரியா..................................