அன்று சனிக்கிழமை இரவு மணி பத்து இருக்கும். எப்பொழுதும் போல் அடுத்த வாரத்திற்கான காய்கறிகளை வாங்கிக்கொண்டு இரவு உணவை வெளியில் சாப்பிட்டுவிட்டு வீட்டை அடைந்திருந்தோம். குழந்தைகளை உடைமாற்றி, பல்துலக்கி விட்டு படுக்க சொல்லிவிட்டு வாங்கி வந்த சாமான்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தேன். வெளியில் போய்வந்த களைப்பில் என் கணவர் வழக்கம்போல் தொலைக்காட்சி பெட்டிக்கு முன் ஆனந்தமாக லயித்து இருந்தார். எங்கு வெளியில் போய்விட்டு வந்தாலும் நான் மட்டும் போவதற்குமுன்பும் சரி, வந்த பின்பும் சரி வேலை செய்ய வேண்டி இருக்கிறது என்று மனதில் நொந்துக்கொண்டு என் வேலையை
தொடர்ந்தேன். அப்பொழுது தொலைபேசி மணி ஒலித்தது. இந்த இரவு நேரத்தில் யார் கூப்பிடுகிறார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில் என் கணவர் தொலைப்பேசியை கையில் எடுத்து “ஹலோ” என்றார். பின்னர், “சொல்லுன்னே,எப்படி இருக்க?” என்றார். பின்னர் “அப்படியா, எப்போ? என்னாச்சு? என்று வெறும் கேள்விகளையே கேட்டார். இதை கேட்டவுடனேயே என் மனதில் திக்கென்று பயம் கவ்விக்கொண்டது. யாருக்கு என்ன ஆச்சோ தெரியவில்லையே என்று மனம் படபடத்தது. தூர தேசத்தில் இருக்கும் பொழுது நடு இரவில் அல்லது எதிர் பாராத நேரத்தில் ஊரில் இருந்து போன் வந்தாலே மனம் நடுங்கும். தந்தி என்றாலே கெட்ட செய்திதான் என்று ஒரு காலத்தில் இருந்ததை போன்று இருக்கும் இரவில் வரும் தொலைபேசி அழைப்பு.
என் கணவர் பேசிக்கொண்டிருக்கையில் நடுவில் குறுக்கிடவும் முடியாது. ஆனால் அவருடைய பேச்சு தோரணையிலேயே ஏதோ விபரீதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்தேன். என்னால் வேலையை தொடரமுடியவில்லை. போட்டது போட்ட படி விட்டு விட்டு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தேன். அவர் பேசி முடித்தப்பின் யாருக்கு என்ன ஆனது என்று கேட்டேன். “கீழையூர் அக்காவின் கணவர் இறந்து விட்டாராம்.” என்றார். எனக்கு தூக்கி வாரிப்போட்டது. “என்ன ஆனது, எப்படி என்று கேட்டேன். “உடம்பு சரியில்லாமல் திடீரென்று இறந்து விட்டாராம் “ என்றார். மனம் மிகவும் வலித்தது. அவருக்கு ஐம்பத்து ஐந்து வயது தான் இருக்கும். அவரின் மனைவி எனக்கு நாத்தனார். மிகவும் பாசமாக இருப்பார். நான் ஊருக்கு போகும் பொழுது எனக்கு வத்தல், வடகம் எல்லாம் போட்டுக்கொடுப்பார். அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒருவருக்குக் கூட திருமணம் ஆகவில்லை. மனம் முழுதும் வேதனை கவ்விக்கொண்டது. அந்த இரவு வேலையில் யாரிடம் இந்த சோகத்தை பகிர்ந்து கொள்வது? நானும் என் கணவரும் அமைதியாக அமர்ந்திருந்தோம். கடந்த மூன்று வருடங்களாக குடும்பத்தில் ஏற்பட்ட அகால துர்மரணங்கள் எங்களை மிகவும் பாதித்திருந்தது. இதை எழுதும் பொழுது கூட என் கண்களில் நீர் தழும்புகிறது. தனிமையில் அழ மிகவும் பழகிப்போனது. உடனே ஊருக்கு தொலைபேசியில் அழைப்பதால் என்ன பயன்? யாரும் பேசும் நிலையில் இருக்க மாட்டார்கள். அப்படியே அழைத்தாலும் இரு முனையிலும் நிசப்தமும், விசும்பலும், அழுகையினால் மூக்கை உரிஞ்சும் சப்தமுமே மிஞ்சும். ஆறுதலாக பேசக்கூடிய மனநிலையில் நாங்களும் இல்லை. சரி இரண்டு நாட்கள் கழித்து பேசிகொள்ளலாம் என்று முடிவு செய்தோம். எவ்வளவு தூரம் நம்மால் தொலைபேசியில் ஆறுதல் கூறமுடியும்? உற்றார் உறவினர் சூழ தங்கள் துக்கத்தை அவர்கள் அங்கே பகிர்ந்துகொள்ள , இங்கே யாரும் இன்றி நாங்கள் மனதுக்குள் மட்டுமே அழ முடிந்தது. உடனே ஊருக்கு போக முடியாத சூழ்நிலை. யாரிடம் இதை கூறி புரியவைக்க முடியும். நம் மனதில் ஏற்படும் போராட்டங்கள் நமக்கு மட்டுமே தெரியும். இரவு படுத்தப்பின்னும் தூக்கம் வரவில்லை. அழுகை ஓலங்கள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.
மறுநாள் எல்லோரும், அலுவலகம், பள்ளி என்று சென்றப்பின் நான் தனியாக வீட்டில் இருந்தேன். அந்த தனிமை என்னை கொன்றது. ஊரில் எப்படி இருக்கிறார்களோ? என்ன நடந்ததோ என்று மனம் ஊரை நோக்கி பறந்து கொண்டே இருந்தது. மனதில் பட படப்பு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அங்கு இருப்பவர்களுக்கு நம் வேதனை புரிய வாய்ப்பில்லை. நாம் இத்தகைய துக்கங்களை ஒரு தினசரியில் படிக்கும் செய்தியாகத்தான் எடுத்துக்கொள்வோம் என்று நினைக்கிறார்கள். இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்? நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. சந்தோஷமான விஷயங்களை எளிதாக நாம் மற்றவர்களுடன் தொலைபேசியில் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் பேசி பகிர்ந்து கொள்ளமுடியும். ஆனால் மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே. ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் பொழுது சென்ற முறை சந்தித்த யாராவது ஒருவர் இம்முறை இல்லை எனும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே அது கொடுமையிலும் கொடுமை. அவர்களின் நினைவுகள் நம்மை தாக்கி கொண்டே இருக்கும். மரணம் என்பது தவிர்க்க முடியாததுதான். நேரில் சென்று உடலை பார்க்காதவரையிலும் மனம் உண்மையை ஏற்க மறுக்கும். ஆனால் அதனை தூரத்தில் இருந்து கேட்டும் பொழுது மனதின் ஓரத்தில் அது நடக்காமல் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கும். நேரில் பார்ப்பவர்கள் கூட சடங்குளை முடித்த பின் நிதர்சனத்தை நோக்கி நடக்கத்துவங்குகிறார்கள். ஆனால் தூரத்தில் இருந்து கொண்டு செய்தி மட்டுமே கேட்டறியும் நம் மனம் உண்மையை ஏற்கொள்ள மறுக்கிறது. ஊருக்கு சென்று பார்க்கும் வரை இது எதுவுமே நடக்கவில்லை என்று இறந்தவர் கண் முன் மீண்டும் தோன்றுவாரா என்று ஒரு நினைப்பு மனதின் ஓரத்தில் தொற்றிக்கொண்டே இருக்கும். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் இழப்பு இழப்புதான். மனதில் ஏற்படும் துக்கமும், தாக்கமும் ஒன்றுதான்.